அது அவன் நிறுத்திய இடத்திலேயே நிற்கவும், நிம்மதி அடைந்தவள், பார்வையை சுழற்றியபோது, அவளுக்கு எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ,அப்போதெல்லாம் சாய்ந்துகொள்ளும் வேப்ப மரத்தடியில் கைகளைக் கட்டியபடி சாய்ந்திருந்தான் இளவழகன்.
அவனைப் பார்க்க மனம் கனத்தது அவளுக்கு. ஒரு பிழையைச் செய்துவிட்டு அவன் படும் பாடு..
அவனருகில் விரைந்தவள், “அத்தான்…..” என்றாள் மிக மிக மென்மையாக.
அவள் புறமாகத் திரும்பியவனின் கண்களில் அப்படி ஒரு சோகம்…
“அன்று செய்ததைத் தவிர வேறு எந்தப் பிழையும் நான் செய்தது இல்லை வது. என்னை நீ நம்பவேண்டும்…” என்றான் வேதனையுடன்.
தந்தையின் வார்த்தைகள் அவன் மனதைப் புண்படுத்தி இருப்பது தெரிந்தது.
“அத்தான்… அவர் என்னுடைய அப்பா. நீங்கள் நடந்துகொண்டதில் அவருக்கு கோபம் இருப்பது நியாயம் தானே. அந்தக் கோபத்தில் கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டார். எனக்காக அதை நீங்கள் மன்னிக்க கூடாதா…..”
கெஞ்சலாகக் கேட்டவளின் கைகளை பிடித்தவன், “என்ன வது மன்னிப்பெல்லாம் கேட்கிறாய். உனக்காக அல்ல, மாமாவுக்காகவே எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும் என்னால். அதோடு ஒரு அப்பாவாக அவரின் மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய அப்பா என்னோடு கோபித்துக்கொண்டால் நானும் கோபிப்பேனா. இல்லைதானே. அப்படி நினைத்துக்கொள்கிறேன்…” என்றவனின் கண்ணில் அவளின் கன்றிச் சிவந்திருந்த கன்னங்கள் படத் துடித்தே போனான்.
“வதும்மா, என்னடா நடந்தது? அடித்தார்களா..? நான் தானே பிழை செய்தவன், என்னை விட்டு விட்டு உன்னை எதற்கு அடித்தார்கள்..” என்று துடித்தவனின் தோளில் வாகாய்ச் சாய்ந்துகொண்டாள் வதனி.
“அம்மாதான் அடித்தார்கள் அத்தான். எனக்கு வலிக்கவே இல்லை. விடுங்கள்..” என்று அவனைப் பார்த்துச் சிரித்தவளின் கன்னங்களில் மிக மிக மெதுவாய் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
“வலிக்கிறதா கண்ணம்மா… என்னால் தானே. என்னால் உனக்கு எப்போதுமே கஷ்டம் தான், இல்லையாடா…..” என்று தன்னையே நொந்தவனின் உதடுகளோ அவளின் கன்னங்களை கவனித்துக்கொள்ள மறக்கவில்லை.
“அத்தான்.. அப்பாவை நீங்கள் தவறாக நினைக்கவில்லையே…” என்று மெதுவாகக் கேட்டவளை அன்போடு பார்த்தவன், “என்னுடைய தந்தையை நான் தவறாக நினைப்பேனா வது…” என்று கேட்டான்.
“தம்பி……” அந்த நெகிழ்ச்சியான அழைப்பு அவர்கள் இருவரையும் ஆர்வத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது.
சிறு கலவரத்துடன் பார்த்தவனிடம், “என்னை மன்னி….”என்று அவர் ஆரம்பிக்கவும்,
“தயவு செய்து அப்படி எதுவும் கேட்டுவிடாதீர்கள் மாமா. என்னை நீங்கள் தான் மன்னிக்க வேண்டும். தெரியாமல் செய்துவிட்டேன். உங்கள் மகனாய் நினைத்து எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். இனிமேல் வதுவை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறேன்…..” என்று அவரைப் பேசவிடாது பேசியவனை ஆதுரத்துடன் தழுவிக்கொண்டார் அவர்.
“இல்லை தம்பி. நானும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். நிதானமாக யோசித்திருக்க எல்லாமே புரிந்திருக்கும். பதிவுத்திருமணம் நடந்ததில் இருந்து இன்றுவரை, அவளின் படிப்புக்காக, உடைக்காக, ஏன் வாணியின் வளர்ச்சிக்காக என்று அத்தனை பண உதவிகளையும் செய்தவர் நீங்கள். லண்டனில் இருந்தாலும் உங்கள் நண்பர்கள் துணையுடன் அவளை கவனித்துக்கொண்டவரின் அன்பு பொய்யாகாது.” என்றவரை இது என்ன புதுக் கதை என்பதாகப் பார்த்தாள் வதனி.
அவளின் பார்வையை உணராது தொடர்ந்து பேசினார் அவர்.
“இதை நான் முதலே யோசித்திருக்க, இப்படி கோபப்பட்டிருக்க தேவை இல்லை. நீங்கள் அதை சொன்னவுடன், அன்று என் மகள் பட்ட வேதனைதான் கண் முன்னால் வந்தது. அதனால் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன்…” என்றவரின் கையை ஆதரவுடன் பற்றிக்கொண்டான் இளா.
“அதுக்கென்ன மாமா. என்னிடம் தானே கோபப்பட்டீர்கள்.” என்றவாறே அமைதியாக இருந்த வதனியை பார்த்தவனுக்கு அவளின் நினைவு இங்கு இல்லை என்பது புரிந்தது.
அவன் வதனியை பார்ப்பதை பார்த்த சங்கரன், அவர்கள் இனியாவது சந்தோசமாக பேசிக்கொள்ளட்டும் என்று நினைத்து, “சரி தம்பி, நீங்கள் வனியுடன் பேசிக்கொண்டிருங்கள். நான் கலையிடம் சமையலுக்கு ஏதாவது தேவையா என்று கேட்கிறேன்…” என்றவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“வதூ……”
அந்த ஒற்றைச் சொல் அழைப்பில் காதல், நேசம், பாசம், தேடல், தவிப்பு, எதிர்பார்ப்பு அத்தனையும் நிறைந்திருந்தது.
அந்த அழைப்புக்கு செவி கொடுக்காது, விறு விறுவென்று நடந்து தனது அறைக்குள் நுழைந்துகொண்டாள் வதனி. சில நொடிகள் விக்கித்து நின்ற இளாவும் வேகமாக அவளைப் பின் தொடர்ந்தான்.
இளா விறாந்தைக்குள் நுழையவும் சங்கரன் சமையலறையில் இருந்து அங்கே வரவும் அவனின் நடை தடைப்பட்டது.
அவரின் முன்னால் வதனியின் அறைக்குள் செல்ல சங்கடப்பட்டவனைக் கண்டும் காணாதது போல் கண்டவர், உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்.
அவனிடம், “அதுதான் வனிம்மாவின் அறை. போய்க் கதையுங்கள் தம்பி. இது உங்கள் வீடு. எதற்கு தயக்கம்.. நான் கடைவரை போய்வருகிறேன்…” என்றவர் விறாந்தையை கடந்து வெளியே போகவும் மின்னலாய் வதனியின் அறைக்குள் புகுந்தான் இளா.
மேசைக்கு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்திருந்தவளின் தலை குனிந்திருக்க, கைகளோ ஒன்றை ஒன்று பிசைந்தபடி இருந்தது.
“வது.. என்னடா..” தவிப்புடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் அவள்.
“என்னடா.. என்ன தப்பு செய்தேன். சொன்னால் தானே தெரியும்….”
“எல்லாவற்றையும் ஏன் மறைத்தீர்கள்…?”
“எதை மறைத்தேன்…” என்றான் குழப்பமாக.
“எனக்கு, வாணிக்கு எல்லாம் நீங்கள் தான் செலவு செய்ததை எதற்கு என்னிடம் சொல்லவில்லை…..”
“இதுதானா.. மறைக்கும் எண்ணம் இல்லைடா. அதைச் சொல்லும் அளவுக்கு முக்கியமாகத் தோன்றவில்லை…”
“ஏன் அத்தான் இதெல்லாம் செய்தீர்கள்…?” தவிப்புடன் கேட்டவளின் கன்னங்கள் இரண்டையும் மிக மென்மையாகப் பற்றி, அவளின் கண்களோடு தனது கண்களை உறவாட விட்டான்.


