நேசம் கொண்ட நெஞ்சமிது 29 – 3

அவன் பேச்சை கேட்பதற்கு அவர்கள் இந்த உலகில் இருக்கவேண்டுமே. கண்ணாலேயே கதை பேசிக்கொண்டது அந்தக் காதல் ஜோடி!

திருமணத்திற்கு தேவையானவைகள் பற்றி பொதுவாக பேசிக்கொண்டவர்கள், வைதேகி, கதிரவன் எல்லோரிடமும் தொலைபேசியில் பேசிகொண்டார்கள்.

அனைவருக்கும் மிகுந்த சந்தோசம். வைதேகிக்கோ கண்களில் கண்ணீரே வழிந்தோடியது. அவரின் செல்லச் சின்ன மகனின் வாழ்வல்லவா….. அது மலர்ந்ததில் அவருக்கு பெருத்த நிம்மதி.

வதனியிடமும் கதைத்தவர், இரவு சாப்பாட்டுக்கு அவளையும் அழைத்தார். பெற்றவர்களின் சம்மதத்தோடு சம்மதித்தவள், இளாவோடு சந்தோசமாக அவள் வாழப்போகும் வீட்டுக்கு சென்றாள்.

அவனுடன் கைகோர்த்து வந்த வதனியைப் பார்த்ததும் வைதேகியின் கண்கள் கலங்கியது.

அவளை வாரியணைத்து, “நீங்கள் இருவரும் என்றும் சந்தோசமாக வாழவேண்டுமடா….” என்று அன்போடு வாழ்த்தினார்.

கதிரவன் குடும்பம், மாதங்கி குடும்பம் எல்லோருமே அங்கே கூடி இருந்தனர். சிரிப்பு, மகிழ்ச்சி, சந்தோசம்… இவை மட்டுமே அந்த வீடு அறிந்த மொழியாக இருந்தது.

அடுத்தடுத்து வந்த நாட்களில் இளாவின் மொத்தக் குடும்பமும் வதனி வீட்டுக்கும், வதனியின் சிறு குடும்பம் இளா வீட்டுக்கும் என்று சென்றுவந்து சொந்தத்தை இன்னும் நெருக்கம் ஆக்கிக்கொண்டார்கள்.

இந்த சந்தோஷச் செய்தியை சங்கரன் மூலம் அறிந்த மணிவண்ணன், நித்தி நேசன் சகிதம் உடனேயே புறப்பட்டு வந்துவிட்டார். தன் தோழியின் வாழ்க்கையும், அவள் மனம் போல அமைந்ததில் நித்திக்கு மிகுந்த மகிழ்ச்சி.

மணிவண்ணனை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவ்வளவு சந்தோசம் அவர் முகத்தில். அவரின் பெறா மகளை அணைத்துக்கொண்டவர், இளாவை மிகுந்த அன்போடு தழுவி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.

“நன்றி மாமா…” என்றவனிடம்,

“என்னை அப்பா என்றே சொல். எத்தனையோ தடவை நினைத்திருக்கிறேன், எனக்கொரு மகன் இருந்திருக்க, என் செல்லம் என் வீட்டு மருமகளாக வந்திருப்பாளே என்று. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. நீயும் என் மகனே. அதனால் அப்பா என்றே அழை…” என்றவரின் அன்பில் நெகிழ்ந்து அவரை ஆரத் தழுவிக்கொண்டான் அவன்.

“சரிப்பா…” என்றான் அன்புடன்.

எப்படி நாட்கள் நகர்ந்தது என்றே தெரியாமல், திருமண நாளும் திருநாளாய் வந்து சேர்ந்தது அவர்களுக்கு.

சித்தி விநாயகர் ஆலயத்தில், அருள் கொஞ்சும் விநாயகரின் முன்னிலையில், சொந்தபந்தம் சூழ, சுற்றம் வாழ்த்த, அனைவரின் நல்லாசியுடன், அன்பே உருவானவளின் சங்குக் கழுத்தில் மங்களநாணைப் பூட்டி, மதியை அவன் திருமதி ஆக்கிக்கொண்டான் இளவழகன்.

அவன் தாலியை தாங்கியவளின் கண்களும், அந்தப் பொன்தாலியை தந்தவனின் கண்களும் ஒன்றாகக் கலங்கியபோதும்,அவை சந்தோஷக் கதை பேசிக்கொண்டன

நம் வாழ்வில் மறுக்கப்பட்ட ஒன்று என்று இருவருமே நினைத்திருந்த அந்த அழகிய தருணம் அழகாய் அரங்கேறியது.

வதனியின் பள்ளி ஆசிரியர்கள், வாணிநிலையத்தின் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை, பூந்தோட்டத்தில் வாழும் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்று கூடியிருந்த மக்களைப் பார்க்க, ஏதோ திருவிழாதான் கோவிலில் நடக்கிறதோ என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது.

அவ்வளவு அழகாய் திருமணம் நிறைவாய் நடந்தேறியதில், பெரியவர்கள் அனைவருக்குமே மனதெல்லாம் நிறைந்துபோயிற்று!

இளம் வயதினரோ இளாவையும் வதனியையும் கிண்டல் கேலி என்று படுத்தி எடுத்தனர். ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்த்து, அடுத்தவரின் அழகை ரசிக்கக் கூட விட்டார்கள் இல்லை.

இதில் கோபாலனினதும் வாசனினதும் அட்டகாசம் தாங்க முடியாமல் இருந்ததில், “ஒரு அரை மணித்தியாலம் எங்காவது வெளியில் காற்றாட நடந்துவிட்டு வாருங்களடா…..” என்று சொல்லி தேவையில்லாமல் அவர்களிடம் மாட்டிக்கொண்டான் இளா. அவனின் தவிப்பு அவனுக்கு.

நண்பனினதும் தோழியினதும் வாழ்க்கை மலர்ந்ததில், மகிழ்ச்சி கொண்டிருந்த அந்த உண்மை நண்பர்களோ அவர்களின் நிலையை புரிந்துகொண்டாலும், விடாது கூத்தடித்தனர்.

அனைத்து சடங்குகளும் ஒரு வழியாக நடந்தேற, ஐந்து வருடங்களாய் காத்திருந்த அந்தப் பொன்னான வேளையும் மிக மெதுவாக விரைந்தோடி வந்தது.

அழகு சாதனங்களின் உதவி இல்லாமல், தனது பார்வையால் வதனியின் தாமரை முகத்தை சிவக்க வைத்திருந்தான் அவளின் கணவன்!

சிவந்த கன்னங்களுடனும், கனவுகள் நிரம்பிய கண்களுடனும், இரவானபோதும் காலைத்தாமரையாய் பூத்திருந்தவளை பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை வைதேகிக்கும் கலைமகளுக்கும்.

அவர்களுக்கே இப்படி என்றால் இளாவின் நிலை……

வதனியாலேயே முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகள், அவள் கிடைக்கமாட்டாள் என்று நினைத்து அவனுக்குள்ளேயே புதைக்கப்பட்டவை இன்று அவளாலேயே எழுப்பப்பட்டு, அவனை தடுமாற வைத்தது.

அவர்களுக்கான அறையில் அவளுக்காக காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்தவன், முடியாமல் மஞ்சத்தில் சாய்ந்துகொண்டான்.

மஞ்சத்தில் சாய்ந்தவனின் கைகள் தனது நெஞ்சைத் தடவியது. அவன் நெஞ்சை மஞ்சமாக்கி, அவனோடு கொஞ்சி விளையாட வரப்போகும் வஞ்சிக்காக, காத்திருந்தவனுக்கு ஒவ்வொரு நொடிகளும் நீண்டு தெரிந்தது.

பெருமூச்சை விட்டவனின் விழிகளோ, கதவோரம் காத்திருந்தது அவன் காதலிக்காக.

பார்த்திருந்தவனின் கண்களுக்கு கதவின் அசைவு, அவன் காதலைக் களவாடியவள் வருகிறாள் என்பதை உணர்த்தியது. உடலில் உணர்சிகள் உயிர்த்தெழ, எழுந்து அமர்ந்தவனின் கண்கள் வதனியின் தரிசனத்திற்காகக் காத்திருந்தது.

மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வந்தவளின் குங்கும நிறம் கொண்ட முகமோ நிலம் பார்த்திருந்தது. அழகிய சேலை அணிந்து, அழகின் மொத்தமாக, பொன் தாலி அணிந்து பொலிவோடு வந்தவளை, விழி வழியே விழுங்கிக்கொண்டிருந்தான் அவன்.

அறையின் நடுவரை வந்தவளின் கால்கள் தொடர்ந்து நடக்க மறுக்கவும், பார்த்திருந்தவனின் கால்கள் அவளை நோக்கி நகர்ந்தது. முகம் இன்னுமே வெட்கத்தில் சிவக்கக் குனிந்திருந்தவளின் அருகில் வந்தவன், “வது……” என்றான் மொத்த ஆசையையும் அந்த அழைப்பில் குழைத்து.

அசைவே இல்லை வதனியிடம். அவள் கையில் இருந்த பால் செம்பை வாங்கி மேசையில் வைத்துவிட்டு அவள் கைகளைத் தன் கைகளால் தாங்கி, “வது….” என்றான் மறுபடியும்.

பேச்சு வருவேனா என்று அடம்பிடித்தது அவளுக்கு.

குரலில் குறும்பைச் சேர்த்து, “குட்டிம்மா.. என் குட்டிக்கு என்ன நடந்தது. சின்னக் குட்டி பேசமாட்டாங்களாமா……” என்று அவன் போட்ட அத்தனை குட்டிகளில், இதுவரை பூனைக்குட்டியாக இருந்தவள், புலிக்குட்டியாக மாறிச் சீறினாள்.

“உங்களிடம் எத்தனை தடவை சொல்வது. குட்டியென்று என்னைக் கூப்பிடாதீர்கள் என்று…” என்று பொரிந்தவள் அவனின் கள்ளச்சிரிப்பில் மயங்கி, “அத்தான்…” என்று சிணுங்கியபடி அவன் தோள் சாய்ந்தாள்.

“பிறகு என்னடா.. இப்படி வெட்கப்படுகிறாயே. உன்னைப் பேசவைக்கத்தான் அப்படி செய்தேன்…” என்றவன் அவளோடு சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டான்.

“வது.. என்னை முழுதாக நம்புகிறாய் தானே…..” என்று ஆரம்பித்தவனை பார்த்து முறைத்தாள் அவள்.

“இனிமேல் நடந்துமுடிந்தவைகளைப் பற்றி பேசினீர்கள் என்றால் உங்களுடன் நான் பேசமாட்டேன்…” என்றாள் கண்டிப்பான குரலில்.

அவளின் அதட்டலில் வாயை மூடியவனின் கண்கள் அவளைக் காதலுடன் அரவணைக்க, கைகளோ அவளை அருகிழுத்துக்கொண்டது.

“அத்தான்…” என்ற அவளின் கெஞ்சல், சிணுங்கலாய் மாறி அவனுக்கு அழைப்பு விடுத்தது.

அவள் மேனியை வீணையாக மாற்றி, அவன் கைகள் அவளுடலை மீட்டியத்தில், அதைத் தாங்கமுடியாத மென்மை கொண்ட அந்தப் பெண்மை அவன் நெஞ்சிலே தஞ்சம் கொண்டது.

நெஞ்சில் மஞ்சம் கொண்டவளை அவன் உதடுகள் கொஞ்சத் துவங்க, வஞ்சியவளின் கெஞ்சலோ கஞ்சத்தனமாய் காணாமல் போனது.

கொஞ்சலும் கெஞ்சலும் மிஞ்சலும் அந்த மஞ்சத்திலே மிக அழகாய் நடந்தேற அவர்கள் வாழ்வின் இல்லறம் இனிதாய் மலர்ந்தது.

முற்றும்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock