ஒரு வழியாக விழா முடிவுக்கு வரவும், மாணவர்கள் தங்கள் வீடு செல்ல ஆயத்தமாகினர். வனிக்கும் மற்றைய தோழிகளுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது. இனி அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப மேல் படிப்புக்கள் முடிவாக, அவரவர் அவரவர் பாதையில் செல்வர். இன்னும் சிலர் இத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு திருமண வாழ்வில் விரும்பியும் விரும்பாமலும் இணைந்துகொள்வார்கள்.
மறுபடியும் இப்படி ஒரு நாள் அமையுமா? அப்படியே அமைந்தாலும் இப்போதுபோல அப்போதும் கூடிக் கழிக்க முடியுமா?
ஆக, அவர்களுக்கான அழகிய பள்ளிக்காலம் முடிந்தது என்பதை விருப்பு இல்லாமலே ஏற்றுக்கொண்டனர்.
வருடாவருடம் எல்லா மாணவர்களுக்கும் நடப்பதுதான். இருந்தாலும் ஒவ்வரு வருடமும் பிரிவைச் சந்திக்கும் மாணவர்களின் தவிப்புக்கள் மட்டும் ஒரேமாதிரியானவை. எனவே கண்களில் கண்ணீரும் உதடுகளில் புன்னகையுமாக ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைச் சொல்லி அணைப்புக்களை இறுக்கி பிரியாவிடைக்கு வழிவகுத்தனர்.
வதனியையே பார்த்துக்கொண்டிருந்த இளாவிற்கு, அவளைத் தோளோடு சாய்த்து ஆறுதல் சொல்லவேண்டும்போல் ஓர் உந்துதல். இதுவரை புன்னகையை தன்னுடைய ஆபரணமாக அணிந்திருந்த அந்தத் தாமரை முகம், இப்போது கலங்கிய கண்களும் சிவந்த மூக்கும் பிதுங்கிய உதடுமாகப் பார்க்கவே முடியவில்லை.
‘என் கண்மணி, எதற்காகக் கலங்குகிறாய். எல்லாமாக உனக்கு நான் இருப்பேன் இறுதிவரை.’ என்று மனம் சொல்லவும் திகைத்துப்போனான்.
‘கடவுளே! பார்த்த நிமிடத்தில் இப்படி ஒரு பெண்ணின் மேல் பித்து பிடிக்க முடியுமா? என்ன ஆனது எனக்கு? அவள் மட்டுமா, அங்கிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும்தானே கண் கலங்கி நிற்கின்றனர். அவர்களை என் கண்கள் காணவே இல்லையே….’
இதென்ன என்று மனம் அதிரத்தொடங்கவும் அவளிடமிருந்து திரும்பிக்கொண்டான்.
சரியாக வராது என்று தெரிந்த ஒன்றை நீ நினைப்பது பிழை என்று தன்னை தானே சமாதானப்படுத்த முயன்றான்.
ஆனால், அவனின் சமாளிப்பில் அவனே பரிதாபகரமாகத் தோற்றுப்போனான்.
தன்னால் ஒருவன் நிலை தடுமாறி நிற்கிறான் என்பதை அறியாத வதனி கண்களில் நீருடன் கலங்கி நின்றாள்.
மீண்டும் மீண்டும் கண்ணீரோடு நிற்பவள் முகத்திடமே அவன் விழிகள் ஓட, தன்னையும் அறியாது அவளருகில் சென்றான். “ஹே குட்டிம்மா, எதற்கு இந்த அழுகை? பார்க்கச் சகிக்கவில்லை. முதலில் கண்ணைத் துடை.” என மிக மெல்லிய ஆனால் அதட்டலான குரலில் கூறியவன், தன்னுடைய கைக்குட்டையை எடுத்து அவனே அவளின் கண்களைத் துடைக்கப் போனான்.
மனம் கலங்கிய அந்த நிலையிலும் அனிச்சையாய் சற்றே பின் நகர்ந்து, அவனுடைய கைக்குட்டையை வாங்கி தானே தன் கண்களைத் துடைத்தாள் வதனி.
கைக்குட்டையை அவனிடம் நீட்டியபடி தலையை உயர்த்தி அவனை அவள் பார்க்க, அவளின் கண்களைச் சந்தித்தவனின் மனமும் முகமும் கனிந்தது.
“அழக்கூடாதுடா, எப்பவும் சிரித்தமுகமாக இரு. அதுதான் என்குட்டிக்கு அழகு.” என்றான் தன்னை மறந்து.
அவன் கூறியதை கேட்ட வதனியின் உதடுகளில் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது.
“இதுதான் உனக்கு நல்லாருக்கு. சரி…. இருட்டுகிறது. வீட்டுக்குக் கிளம்பு.” என்றுவிட்டு திரும்பி நடந்தான்.
நடந்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான். என்ன நடந்தது இப்போது? நானா இதையெல்லாம் செய்தேன்? அதிர்ச்சியோடு திரும்பி வதனியை பார்க்க, அவளும் அவனையே பார்த்தபடி நின்றாள்.
அப்போதும், அழுது சிவந்திருந்த அவளின் விழிகளிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் தவித்துப் பின்னர் தலையை உலுக்கி தன்னை மீட்டெடுத்தவன், விறு விறுவென நடந்து சென்றுவிட்டான்.
அதன்பிறகு அவள் பக்கமே வரவில்லை அவன். ஆனால், அப்படி இருப்பதற்கும் படாத பாடுபட்டுப் போனான்.
ஒரு வழியாக மாணவர்கள் கிளம்ப, வனியும் நித்தியும் கூடக் கிளம்பினர். மூர்த்தி வாணி தம்பதியரிடம் அவர்கள் விடைபெற்றபோது,
“நாளையிலிருந்து முடிந்தவரை இங்கு வந்து சாதாரண தரம் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார் வாணி.
தமக்கும் இந்த வாணிக்குமான தொடர்பு இன்றுடன் முடிந்துவிட்டதே என்று தவித்துப்போய் இருந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து விடைபெற்றனர்.
அவள் சென்றுவிட்டாள் என்று அறிந்துகொண்டதும் இளாவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. இனி அவளை எப்போது எங்குக் காண்போமோ என்று மனது தவித்தது.
அவன் எடுத்திருந்த முடிவுகள் அனைத்தும் அவனுக்கே மறந்து போனது.
அவன் நண்பன் காந்தனை அழைத்து, “கிளம்புவோமா காந்தி? நான்கு கிலோமீற்றர்கள் சைக்கிள் மிதிக்க வேண்டுமேடா….”என்றான்.
காந்தனும் “நானும் அதைத்தாண்டா நினைத்தேன். வா மூர்த்தி அண்ணாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவோம்.” என்று மற்றைய நண்பர்கள், ஆசிரியர்களிடம் சொல்லிக்கொண்டும், மூர்த்தி தம்பதியரிடம் நாளையிலிருந்து வேலைக்கு வருவதாகச் சொல்லி வீடு நோக்கிக் கிளம்பினர்.
காந்தனும் இளவழகனும் சாந்தசோலை என்கிற கிராமத்தில் வசிக்கின்றனர்.
வவுனியா நகரின் குடியிருப்பு என்கிற சந்தியிலிருந்து வரும் ஒரே ஒரு பிரதான வீதி பூந்தோட்ட சந்தியை அடைகிறது. அங்கிருந்து ஒரு பாதை சாந்த சோலையை நோக்கியும் மற்றைய பாதை பூந்தோட்டம் கிராமத்துக்கும் செல்கிறது. இந்த இரண்டு கிராமங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் பூந்தோட்ட சந்தியைக் கடந்தே பிரதான வீதி வழியே வவுனியாவின் நகர்பகுதிக்கு செல்ல வேண்டும்.
இந்தக் கிராமங்களுக்குச் செல்லும் அந்தப் பிரதான வீதியின் ஆரம்பத்திலேயே சித்திவிநாயகர் வீற்றிருக்கிறார். தெய்வீகம் நிறைந்த சித்திவிநாயகர் ஆலயமும் அவரின் பாதங்களைத் தழுவும் குளமும் அந்த ஊரின் அழகை இன்னும் அழகாய் காட்டுபவை.
‘இந்த ஊரில்தான் இருக்கின்றேன் ஆனாலும் அவளைச் சந்தித்ததே இல்லையே…’ என்று யோசித்தபடி சைக்கிளை மிதித்தவனை காந்தன் தான் நினைவுலகத்துக்கு மீட்டு வந்தான்.
“என்னடா இன்று நீ சரியில்லையே. என்ன நடந்தது?” என்று அவன் கேட்கவும், ‘எனக்கே என்ன நடந்தது என்று தெரியாமல் எதை என்று உன்னிடம் சொல்ல’ என்று மனதில் நினைத்த இளா, “நாமும் இப்படித்தானே படிக்கும் காலத்தில் இருந்தோம், அதை நினைத்தேனடா.” என்றான்.
காந்தனும் சிரித்தபடி, “உண்மைதான்டா, அதுவும் அந்த வதனி என்கிற பெண்… நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. மிகவும் சுட்டியாக இருக்கிறாள். அவளின் வீட்டில் அவளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ தெரியாது.” என்றான்.
‘மறுபடியும் அவளின் பேச்சா?’


