வைதேகியும் இளாவும் தங்களின் நினைவுகளில் இருந்ததில் திருமண பேச்சை எடுத்தாலே எப்போதும் தாம் தூம் என்று குதிக்கும் மாதவி இன்று அமைதியாக இருப்பதை கவனிக்க தவறினார்கள்.
மூவரும் அருகருகே இருந்தபோதும் மூவரினதும் நினைவும் வேறு வேறாக இருந்தது. இதுதான் வாழ்க்கையின் விசித்திரமோ?
மகளின் கல்யாண கனவிலிருந்து நிகழகாலத்துக்குத் திரும்பிய வைதேகி, “மூர்த்தி என்ன சொன்னார் தம்பி? வேலைக்கு வருவதாகச் சொன்னாயா?” என்று கேட்டார்.
“அவர் என்னம்மா சொல்ல இருக்கு. நான் சம்மதித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நம் நிலைமை? எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது? அடுத்த நிலைக்கு எப்போ போவது? மாதிக்கு சிறப்பாகத் திருமணம் செய்யவேண்டுமே அம்மா? தலையே வெடித்துவிடும் போல இருக்கு.” என்றான் இளா.
இதைக் கேட்டவர் உள்ளூரக் கலங்கிப்போனார். அவரின் சின்ன மகன் இப்படி தவிக்கிறானே… தங்களை வாழவைக்க நினைக்கும் அவனுக்கு ஒரு வழி கிடைக்காதா?
கலங்கிய கண்களை அவனுக்குத் தெரியாது துடைத்தவர், “உன் தங்கையின் திருமணத்தை மட்டும் உன்னால் முடிந்தவரை சிறப்பாக முடித்துவிடு கண்ணா. அதுவே போதும். என்னைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம். நான் நன்றாக வாழ்ந்தவள். இப்போதும் எனக்கு ஒரு குறையும் இல்லை. அந்தக் காலத்தில் இந்த ஊரிலேயே முதலில் பெரிய வீடு கட்டிய குடும்பம் நம் குடும்பம். என்னை எல்லோரும் பெரிய வீடு கட்டியவரின் மனைவி என்பதால் பெரியவீட்டக்கா என்றுதான் கூப்பிடுவார்கள்.அப்போதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?” என்றவர் சிறிது நேரம் அமைதியானார்.
இறந்துவிட்ட அருமைக் கணவரின் நினைவுகளில் தன்னை மறந்து மூழ்கியவர் ஒரு பெருமூச்சினை வெளியேற்றி, மனதின் பாரத்தை சற்றே இறக்கினார்.
“என்னுடைய இப்போதைய ஆசைகள் என்றால் அது உங்கள் இருவரினதும் திருமணத்தைக் கண்கள் நிறையப் பார்க்க வேண்டும்.அவ்வளவுதான்! பிறகு உங்கள் நால்வரிடமும் மாறி மாறி இருந்து என் காலத்தைக் கழித்துவிடுவேன்.” என்றார் தொடர்ந்து.
எப்போதும் இப்படி கதைப்பவர் அல்ல அவர். இன்று அவனின் மனக்குழப்பத்தால் அவனுமே தன்னுடைய தவிப்புக்களை வாய்தவறி தாயிடம் கொட்டியதில் அவரையும் வருத்தி விட்டிருப்பது நன்கு புரிந்தது.
தான் செய்த மோட்டுதனத்தை நினைத்து மனதில் நொந்தபடி,”அம்மா, அது அப்பாவிடம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை. இனி உங்கள் மகனின் மூலம் நீங்கள் சந்தோசமாக வாழவேண்டாமா? பிறகு எதற்கு நான் உங்கள் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு இருக்க? உங்களை நல்ல இடத்தில் மறுபடியும் இருத்துவேன். இந்தச் சின்னனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைப்பேன். நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருங்கள். அதுதான் எனக்கு முக்கியம். வீட்டுப் பொறுப்புகளைச் செய்ய நான் இருக்கும் வரை நீங்கள் எதற்காகவும் கலங்க கூடாது.” என்றான் உறுதியான குரலில்.
“அப்பாவின் நினைவுகளைக் கிளறி விட்டேனா?” என்று மெல்லக் கேட்டான் கவலையுடன்.
மிக மெதுவாகச் சிரிப்பதுபோல் இதழ்களைப் பிரித்தவர், “மறக்கும் சொந்தமா எனக்கு உன் அப்பா. என் உயிரோடு கலந்த சொந்தத்தை நான் மறந்தால் தானேடா நீ நினைவு படுத்த.” என்றவர்,
“எங்கிருந்தாலும் எங்களோடுதான் அவர் இருப்பார். என்ன, நம்மால்தான் அவரைப் பார்க்க முடியாது.” என்றார் தொண்டை அடைக்க.
சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது.
பேச்சை மாற்றும் விதமாக, “என்னடா, இவ்வளவு நேரம் இந்தச் சின்னவள் வாய் மூடி இருக்கமாட்டாளே.” என்றபடி மாதவியின் முகத்தை முன்னே குனிந்து பார்த்தார் வைதேகி.
“தூங்கிவிட்டாள் அம்மா. இதுவே தினமும் இவளுக்கு வேலையாகப் போனது.” என்றான் இளா கைகளால் அவளின் தலையைத் தடவியபடி.
தன் மடிமீது தூங்கும் தங்கையின் முகத்தைப் பார்த்தவன் மனதில், தன் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்தே ஆக வேண்டும் என்கிற வெறியே எழுந்தது.
எந்தக் கவலையும் இன்றித் தூங்கும் மகளையும், பாசத்துடன் கைகளால் அவள் தலையை வருடிக்கொடுக்கும் மகனையும் பார்த்த வைதேகியின் மனம் நிறைந்தது. என்றும்போல இன்றும் தன் சின்ன மகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை அவர் மனதில் வந்தது.
அப்போதுதான் நேரத்தைப் பார்த்தவர், “தம்பி, நேரம் ஒன்பது மணியாகிறது. நாளையிலிருந்து உனக்கு இரண்டு வேலை.ஓய்வும் இருக்காது. அதனால் நேரத்துக்குத் தூங்க போ.” என்றார்.
“இனி இவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தும் வேலை எல்லாம் வேண்டாம். இருபது வயதாகியும் இன்னும் உன் மடியில் தூங்குவதும், நீ தூக்கிக் கிடத்துவதும், சிறுபிள்ளை போலவே நடக்கிறாள். அவளை நான் எழுப்புகிறேன். நீ போய்த் தூங்கு.”என்றார் தொடர்ந்து.
மாதவியை எழுப்ப முனைந்தவரின் கையைப் பிடித்துத் தடுத்தவன், “சும்மா இருங்கம்மா. இரண்டு வேலைக்குச் செல்வதற்கும் என் தங்கையை நான் தூக்குவதற்கும் என்ன சம்மந்தம்.” என்றபடி அவளின் தூக்கம் கலையாது தலையணையுடன் அவளின் தலையை மிக மெதுவாகக் கீழே வைத்தவன், எழுந்து அவளைத் தூக்கினான்.
தூகியவளை கட்டிலில் கிடத்தி போர்வையை எடுத்துக் கழுத்துவரை போர்த்திவிட்டான். அப்போதும் தூக்கம் கலையாதவளை பார்த்தவனின் மனம் ‘சரியான கும்பகர்ணி’ என்று செல்லமாகத் தங்கையைச் சீராட்டிக்கொண்டது.
தங்கையின் அறையிலிருந்து வெளியே வந்து, “நீங்களும் போய்த் தூங்குங்கள் அம்மா.” என்றுவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான் இளா.
அறைக்குச் சென்ற இளாவின் மனதில் மறுபடியும் வதனியின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. மனதில் புதிதாய் புகுந்துகொண்ட ஆசையை வரவேற்பதா அல்லது அடியோடு அழிப்பதா என்று தெரியாமல் போராடினான்.
தாயுடன் இருக்கும்வரை எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருந்த மனம், தனியிடம் கண்டதும் அவளின் நினைவாகவே துடிக்கிறதே.
முதன் முதலில் அவனுக்கென்று அவனிடம் தோன்றிய ஒரு தேடல். மனதை மயக்கிய மங்கையை மறக்கும் வழி தெரியாமல் தவித்தான்.


