அன்று மாலை என்றுமில்லாத வழக்கமாய் தன்னில் கவனமெடுத்து தயாரானான் இளா.
அவனைப் பார்த்த மாதவிகூட, “என்னண்ணா நேற்றுத்தானே சவரம் செய்தீர்கள். இன்றும் செய்திருப்பதுபோல் இருக்கே. என்ன விசேசம்..?” என்று கேட்டுவிட்டாள்.
உன் அண்ணா காதலெனும் கடலில் மூழ்கித் தவிக்கிறேன் என்று சொல்லவா முடியும். என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிவிட்டு,
“நாளை நேரம் கிடைக்குமா தெரியாது. அதுதான் இன்றே செய்துவிட்டேன். இது ஒரு விஷயம் என்று கேட்கிறாயா?” என்று அவளை அதட்டிவிட்டு, நின்றால் இன்னும் என்ன கேட்பாளோ என்று பயந்து தாயிடமும் சொல்லிக்கொண்டு வாணிக்கு புறப்பட்டான்.
வெளியே வந்தபிறகு நேரத்தை பார்த்தவனுக்கு தன்னை நினைத்து சிரிப்பு வந்தது. புறப்பட வேண்டிய நேரத்தை விட இருபது நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டிருந்தான்.
வேலை அதை விட்டால் வீடு என்று இருந்தவனின் நினைவு முதல் கனவு வரை ஆட்கொண்டிருக்கும் பெண்ணை நினைத்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெண்ணினால் ஆண்மகன் ஒருவனை பித்தனாக மாற்ற முடியுமா? மாற்றி விட்டாளே…..!
போகும் பாதையெங்கும் தன்னை ஆட்கொண்டிருக்கும் இந்த புதுவிதமான உணர்வைப் பற்றியே சிந்தனை ஓடியது. முதலில் அவனுக்கு தெரிந்துகொள்ள வேண்டி இருந்த விடயம், இதுதான் காதலா?
பார்த்தவுடன் வந்தால்… அது இனக்கவர்ச்சி இல்லையா?
இரண்டே நாட்களில் சில மணித்துளிகள் மட்டுமே பார்த்த ஒரு பெண்ணின் மேல் காதல் வந்துவிடுமா? அல்லது இந்த உணர்வுக்கு பெயர் ஈர்ப்பா?
எத்தனை கேள்விகள்…. படிக்கும் காலத்தில் கூட இப்படி சந்தேகங்கள் வந்தது இல்லையே என்று தோன்றியது அவனுக்கு.
என்னதான் குழப்பமாக இருந்தாலும் அவனின் மனம் சிறகில்லாமல் வானத்தில் பறந்தது. புதிதாக பிறந்ததை போல இதயம் இனிதாக இசைத்தது. எதுவும் என்னால் முடியும் என்கிற எண்ணம் இன்னும் வலுவானது.
இந்த உணர்வுக்கு இத்தனை சக்தியா? என்று அதுகூட ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.
இப்படி, தனக்குள்ளேயே தன்னுடைய மாற்றத்தைப் பற்றி அசைபோட்டபடி ஒருவழியாக வாணியை வந்தடைந்தவனின் விழிகள், தன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவளை ஆர்வத்துடன் தேடியது.
எங்கு தேடியும் அவளைக் காண முடியவில்லை என்றதும், எவ்வளவு மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் வந்தானோ அந்தளவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
‘நேற்று ஐந்தரைக்கு தானே கண்டேன். இன்னும் நேரம் இருக்கிறதே…’ என்று நினைத்தபடி வாணியின் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
அவனை கண்டவுடன் மகிழ்ந்த வாணி, “இளா உங்களுக்கு ஐந்தரைக்கு தானே முதல் வகுப்பு. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே. அதுவரை பத்தாம் வகுப்பு மாணவர்களின் கொட்டகைக்குள் இருக்க முடியுமா?” என கேட்டார்.
“இருக்கிறேன் வாணி அக்கா. ஆனால், ஏன் யாராவது ஆசிரியர்கள் வரவில்லையா?”
“ஆசிரியர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். இந்த வனிக்குத்தான் இன்று வரமுடியாதாம். அவள் வந்து பார்த்துக்கொள்வாள் என நினைத்து நான் மாணவர்களுக்கு பரீட்சைப் பேப்பர்களை கொடுத்து விட்டேன். இனி திரும்ப வாங்கவும் முடியாது. எனக்கும் இன்று வகுப்பு இருக்கிறது. அதுதான் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்க நீங்கள் வருகிறீர்கள்.” என்றார் தன் பிரச்சினை தீர்ந்துவிட்ட மகிழ்வுடன்.
வாணியின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. ஆனால் இளாவின் பிரச்சினை அல்லவா ஆரம்பித்துவிட்டது. அவனுக்கோ மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
இது எதுவும் அறியாத வாணி, “என்ன இளா, பார்த்துகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
எதைப் பார்த்துக்கொள்ள கேட்கிறார்கள் என்று முழித்துவிட்டு சற்று யோசித்து சம்மதமாக தலையை அசைத்தான். வாயை திறந்து பதில் சொல்லகூடிய நிலையில் கூட அவன் இல்லை.
வதனி ஏன் வரவில்லை, நாளை தன்னும் வருவாளா என்று அறிந்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் இருந்தான் அவன்.
‘எப்படி இவர்களிடம் இருந்து விஷயத்தைப் பிடுங்குவது…’
“என்ன வாணியக்கா, இப்படி பொறுப்பில்லாத விளையாட்டுப் பிள்ளையை நம்பி, நீங்கள் அதுவும் பரீட்சையை வைக்கலாமா?” என்று கேட்டான்.
“அவள் காதில் நீங்கள் கேட்டது மட்டும் விழுந்தால் உங்கள் நிலை என்னாகிறது..” என்று சிரித்தார் அவர்.
தன்னவள் தன்னுடன் எப்படியெல்லாம் சண்டைக்கு வருவாள், அதுவும் வாயாடும்போது அந்த பெரிய கண்கள் படும்பாட்டை மனக்கண்ணில் கண்ட இளாவுக்கும் சிரிப்பு தன்னாலே வந்தது.
“விளையாட்டுப்பிள்ளை போல இருந்தாலும் மிகவும் பொறுப்பானவள் வதனி. அவளின் அம்மா கலைமாமி கிணற்றடியில் வழுக்கி விழுந்துவிட்டாராம். கால் வீங்கி நடக்கமுடியாமல் இருக்கிறாராம். அதுதான் அவள் வரவில்லை இளா. இல்லாவிட்டால் அவளாவது இங்கு வராமல் இருப்பதாவது. எங்கள் எல்லோரையும் அவளுக்கு பிடிக்கும். அதுவும் வாணியை மிகவும் பிடிக்கும்.”என்று நீளமாக வதனியை பற்றி அவர் சொல்லிக்கொண்டே போக, வாணிக்கு வதனி மேல் தனிப்பிரியம் உண்டு என்பதை புரிந்துகொண்டான் அவன்.
அவளைப் பற்றி அறிந்துகொண்ட விடயம் கூட அவனை சந்தோசப்படுத்தியது.
மலர்ந்த முகத்துடன், “என்னை மன்னித்துகொள்ளுங்கள் அக்கா. தெரியாமல் உங்கள் செல்லப் பெண்ணை பற்றி குறையாகச் சொல்லிவிட்டேன்.” என்றான் கேலியாக.
வாணியும், “முதல் தடவை என்பதால் உங்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கின்றேன்.” என்றார் சிரிப்புடன்.
“சரிக்கா. அப்போ நான் பத்தாம் வகுப்புக்கு போகிறேன்.”
பத்தாம் வகுப்பு மாணவர்களின் கொட்டகைக்குள் நுழைந்தவன், அவர்கள் அமைதியாக பரீட்சையினை எழுதுவதைப் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். அவர்களை கண்காணிப்பது மட்டுமே அவனின் வேலை என்பதால், கண்கள் அதனை செய்தபோதும் மனமோ மந்திரித்துவிட்ட கோழி போல தன்னவளை தாங்கி நின்றது.
அவளைக் கண்டே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் தவியாய் தவித்துப்போனான்.
‘அத்தைக்கு நடக்க முடியாவிட்டால் மாமாவை பார்க்கச் சொல்லிவிட்டு இவள் வந்திருக்கலாமே. அங்கிருந்து மட்டும் என்ன செய்யப்போகிறான்? அத்தைக்கு பதிலாக இவள் நடக்கப் போகிறாளாமா. இப்படி என்னை பைத்தியம்போல் புலம்ப வைத்துவிட்டாளே. அவள் சொன்னதுபோல் லூசாகித்தான் போனேன்..’
வேலையில் ஏன் என்றே தெரியாது எரிச்சல் வந்தது. எங்கு என்ன நடந்தாலும் வீட்டினுள் நுழைந்துவிட்டால் அமைதி கிடைத்துவிடும் அவனுக்கு. அதுவே இதுவரை வழக்கமாக இருந்த விடயம்.
இன்றோ, சோலையாகக் காட்சியளிக்கும் அந்த வீட்டில் கூட அவனுக்கு மூச்சு முட்டியது.
வீடு வந்தவனுக்கு உடை மாற்றப் பிடிக்கவில்லை. ஒரு வழியாக உடை மாற்றினால் முகம் கழுவப் பிடிக்கவில்லை. வைதேகி சாப்பிட அழைக்கவும், அமர்ந்தவனுக்கு பசி என்கிற ஒன்றையே காணவில்லை.


