குடியிருப்பு பிள்ளையார் கோவிலை நோக்கி செல்லும் வீதியின் இருமருங்கிலும் நெற்கதிர்கள் காடாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிரித்தபடி நின்றது.
எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கும் அந்த வீதியில், சைக்கிளில் செல்ல எப்போதுமே வதனிக்கு பிடிக்கும். காரணம் அவ்வளவு அழகு இருமருங்கிலும் கொட்டிகிடக்கும். பச்சை நிற அலைகள்தானோ என்கிற அளவுக்கு நெற்கதிர்கள் அசைந்தாடும் அழகை வார்த்தையில் வடிக்க முடியாது.
இன்று அந்த அழகு கூட அவளின் மனதை சாந்தப்படுத்த முடியாது தோற்றுப் போனது.
ஏன் செய்தான்? எப்படி அப்படிச் செய்யலாம்? என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது அவனுக்கு? இதைத் தவிர அவளின் மண்டைக்குள் வேறு எதுவுமே தோன்ற மறுத்தது.
வாகனம் ஒன்று எதிரே வரவும், பிரேக்கை அழுத்த நினைத்த போது கை எரிந்தது வதனிக்கு.
‘ப்ச்! இந்தக் கைக்கு என்ன நடந்தது…’ என்று தூக்கி பார்த்தவளுக்கு சிவந்து கண்டியிருந்த கையை பார்க்க்கவுமேதான், தான் அவனுக்கு அறைந்தது நினைவில் வந்தது.
இதுவரை கோபத்தில் சிவந்திருந்த அவளின் முகம் இப்போது கன்றிச் சிவந்தது. அவளுக்குத் தெரிந்து யாரிடமும் அவள் கோபமே கொண்டது இல்லை. அவள் கொள்ளும் கோபம் அனைத்தும் செல்லக் கோபமே. இதனை, அவளை அறிந்த அனைவருமே அறிவர்.
இன்று கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டியதும் அல்லாமல் கையை வேறு நீட்டிவிட்டாளே.
‘நான் அடித்தது தப்போ’ என்று கலங்கியது அவளின் பூமனம்.
‘கோபம் கொண்டு எதுவும் செய்துவிடுவானோ. அப்பாவுக்கு தெரிந்தால் என்னிடம் கோபித்து கொள்வாரோ. சிறு பொய் சொன்னாலே வேதனைப்படும் அப்பா, இது தெரியவந்தால் எவ்வளவு கவலைப்படுவார். அம்மாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்….’
இந்த நினைவுகளே அவளை வதைத்தது.
எல்லாவற்றிற்கும் அவனே காரணம் என்று அவன் மீது கொண்ட கோபத்தில், எப்போதும் இருபது நிமிடம் பிடிக்கும் தூரத்தை இன்று பத்து நிமிடத்திலேயே ஓடி முடித்தாள் வதனி.
கோவிலுக்குள் நுழைந்தவளுக்கு சிறிது நேரத்திற்கு அங்கு என்ன செய்யவேண்டும் என்பதே புரிய மறுத்தது. பழக்கதோசத்தில் கைகள் இரண்டையும் விநாயகரை நோக்கி கூப்பினாலும், மனதில் எதுவுமே தோன்றவில்லை. படபடப்பும் அடங்கவில்லை.
ஆழ மூசுக்களை எடுத்து விட்டவள், ‘கடவுளே எனக்கு நிதானத்தை தா…’ என்றுதான் வேண்டினாள். தன்னை நாடிவரும் அனைவருக்கும் சாந்திகொடுக்கும் விநாயகரின் அருள் தவழும் முகம், வதனியின் மனதை சற்றே மட்டுப்படுத்தியது.
கோவிலைச் சுற்றி வந்தவள் ஒரு தூணின் அருகே அமர்ந்து கொண்டாள். இப்போது மனம் ஓரளவுக்கு அமைதி அடைந்திருந்தது.
அவனைக் கெட்டவன் என்றும் நினைக்க முடியவில்லை. காரணம் மூர்த்தி ஒருவரை வாணிக்குள் அனுமதிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் நல்லவராகவே இருக்கவேண்டும். அதிலெல்லாம் வலு கவனமாக இருப்பார் மூர்த்தி. அதோடு அவளுக்குமே அவனைப் பெண் பித்தனாக நினைக்கத் தோன்றவில்லை.
அப்படியானால் அவன் நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று நினைத்தவள், அவன் பேசியவைகளை அசை போட்டாள்.
நிதானமாக யோசித்த போது அவனின் செயல் உணர்த்திய விடயம் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனோ மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவிதமான கலவையான உணர்வில் மீண்டும் நெஞ்சு படபடக்கத் தொடங்கிற்று!
‘அப்படி என்றால்.. அப்படி என்றால்.. அவன் என்னை விரும்புகிறானா??? அது எப்படி சாத்தியப்படும். இரண்டு நாட்கள் பார்த்துக்கொண்டதில் காதல் வருமா? எனக்கு வரவில்லையே. இந்த வயதில் காதல் தேவைதானா?’ என்று நினைத்தவளுக்கு அவன் காதலைச் சொல்லவே இல்லை, அதற்குள் நானாகவே பலதையும் நினைக்கிறேனே என்று தோன்றியது.
‘காதலை சொல்வானா? சொன்னால் அதற்கு நான் என்ன சொல்வது….’ மண்டை காய்ந்தது.
‘இல்லை சொல்லமாட்டானோ? சொல்லாமல் மட்டும் இருக்கட்டும். அவனை கட்டிவைத்து உதைக்க வேண்டும்..’
பின்னே காதல் இல்லாமல் ஒரு பெண்ணை ஒருவன் தொட்டால் அதற்கான பெயர் வேறல்லவா!
பொழுது போக்கிற்கு செய்கிறானோ? அதற்கு நானா கிடைத்தேன் என்று கோபம் வந்தாலும், அவனின் செயல் பார்வை எதுவும் நடிப்பாக தெரியவில்லை.
‘கடவுளே.. இப்படி என்னை குழம்பித் தவிக்க விட்டுவிட்டானே. வீதியில் போகும்போது அவனுக்கு மாடு முட்டட்டும். இல்லை சைக்கிள் பிரேக் பிடிக்காமல் மரத்தில் போய் மோதட்டும். விசரன் விசரன்! என்னை இப்படி புலம்ப வைத்துவிட்டானே…’ என்று அவனை வைதபடி நிமிர்ந்தவள் தன் முன்னே நின்றவனைப் பார்த்து அதிர்ந்து விழித்தாள்.
உண்மையாகவே முன்னால் நிற்கிறானா இல்லை நான் கனவு காண்கிறேனா என்று தோன்றவும், கண்களை நன்றாக கைகளினால் தேய்த்து விட்டு மறுபடியும் நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான் கையினை அவள் முன்பாக நீட்டியபடி நின்றான்.
‘ஏன் கைகளை நீட்டியபடி நிற்கிறான். ஒரு வேலை கோவிலில் பிச்சை ஏதும் எடுக்கிறானோ..’ என்று நினைத்தபடி அவனின் கைகளை பார்த்தவளுக்கு விஷயம் புரியவே அவனை முறைத்தாள்.
ஏனெனில் அவள் சுவாமி கும்பிட்ட லட்சணம் அப்படி. கோபத்தில் வந்தவள் கோவிலை சுற்றி கும்பிட்ட போதும், திருநீறோ சந்தனம் குங்குமமோ நெற்றியில் வைக்க மறந்துபோனாள்.
அதற்கும் அவன் தானே காரணம் என்கிற எண்ணம் தோன்றவே அவனை இன்னும் நன்கு முறைத்தாள்.
“அவ்வளவு அழகாகவா இருக்கிறேன் வதனி. வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாய். இனி எப்போதும் பார்க்கத்தானே போகிறாய்.. அதனால் இப்போது திருநீறு சந்தனம் பூசிக்கொள்.” என்று கூறியபடி அவளுக்கு அருகில் இளா வரவும், முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் வதனி.


