அவளின் திகைத்த முகம், இளாவிற்கு அவளின் நிலையை உணர்த்தியது.
“நான் செய்த பிழைக்கு நீ செய்தது மிக ச் ரியானது. அதனால் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. பெருமையே! என்னவளை நினைத்து!” என்றான் கனிவுடன் காதலையும் கலந்த குரலில்.
மலைத்துப்போனாள் வதனி. இவனின் காதல் எத்தகையது? புரிந்துகொள்ள முடியவில்லை அவளால்.
தன்னுடைய கையினை அவனிடம் இருந்து மீட்டவள் சற்றே தயங்கி, “அடித்ததற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் செய்ததும் தவறே.” என்றுவிட்டு,
“வருகிறேன்.” என்றவாறே எழுந்துகொண்டாள்.
“எதற்கு மன்னிப்பு கேட்கிறாய் வனி? நீ செய்தது பிழை கிடையாது. அதனால் அதை மறந்துவிடு.” என்றவன் தொடர்ந்து,
“நான் மட்டும் இங்கிருந்து என்ன செய்ய. உன்னுடன் கதைக்கும் ஆவலில் தான் வந்தேன். நானும் வருகிறேன்.” என்றபடி அவனும் எழுந்துகொண்டான்.
‘என்ன…. என்னுடன் கதைக்கவா இவ்வளவு தூரம் வந்தான்…’ அவளின் மனம் இன்னும் பாரமானது.
“வீட்டுக்கு சென்றதும் மறக்காமல் கைக்கு கிறீம் அல்லது எண்ணை தடவிக்கொள்.” என்றான் அன்புடன்.
எதுவுமே பேசாமல் நகர்ந்தவளை பின் தொடர்ந்தான் இளா.
சைக்கிளை வீதியின் புறம் அவள் திருப்பவும், “வனி, குளக்கட்டால் போவோமா…” என்றான் ஆவலுடன்.
“குளக்கட்டு வழியாகவா. எனக்கு பயம்…. வேண்டாமே…”
“என்ன பயம்? நான் ஏதும் செய்து விடுவேன் என்றா…?” என்றான் கோபமாக.
“உங்களிடம் பயம் என்று நான் சொன்னேனா? அங்கே குடித்துவிட்டு நிற்பார்கள். அதைத்தான் பயம் என்றேன். எதையும் புரிந்துகொள்ளாமல் நீங்களாக ஏதோ ஒன்றை உளறாதீர்கள்” என்றாள் பட்டென்று.
என் கோபம் அவளுக்கு உளறலாகத் தெரிகிறதா என்று சிரிப்பு வந்தபோதும், மனதுக்கு இனியவளின் திட்டுக்களை கூட அப்படியே சேகரித்துக்கொண்டது அவனின் இதயம்.
“உன் விடயங்களில் நான் அடிக்கடி நிலை தடுமாறி விடுகிறேன். என்னை அறியாமலே.. அந்தளவுக்கு உன் மீது பைத்தியமாகிப்போனேன்.” என்றான் வெளிப்படையாகவே.
இதென்ன இப்படிச் சொல்கிறான் என்று பார்த்தாள் வதனி.
தரம் கெட்டவள் என்று நினைத்தாயா என்று கேட்டால் என்னிடம் எனக்காகவே கோபம் கொள்கிறான். அவனை ஒரு வார்த்தை சொன்னால் பணிந்து போகிறான். இதற்கு என்ன அர்த்தம்… விடை காண முடியாது மனம் அடித்துகொண்டது அவளுக்கு.
குளக்கட்டில் இருவரும் அமைதியாக தங்கள் தங்களின் சைக்கிள்களை உருட்டியபடி நடந்தனர்.
கிடைத்த தனிமையை நழுவ விட்டுவிட விரும்பாதவனாய், “உன்னைப் பார்த்தபோது, உன் கண்கள்தான் என்னை முதன் முதலில் கவர்ந்தது. ஆயிரம் விண்மீன்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒளி வீசியது போல அப்படி ஒரு பிரகாசம், அழகு, கவர்ச்சி எல்லாமே கொட்டிக்கிடக்கும் அழகிய கண்கள் உன்னுடையவை…. ” என்றவன்,
“அவை எப்போது இங்கே பதிந்தன என்பது எனக்கு தெரியாது….” என்றான் தன்னுடைய நெஞ்சை சுட்டிக்காட்டி.
அவனின் செயல் மனதை அள்ளிய போதும், சிவந்த முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள் வதனி. செவிகளோ அவனின் வார்த்தைகளை வரவேற்க ஆயத்தமாகவே இருந்தது.
“நீ செய்யும் குறும்பகளை பார்த்தபோது கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.”
“கோபம் வந்ததா? நான் அப்படி என்ன செய்தேன். சும்மா கேலி கிண்டல்தானே…” என்றவளை பார்த்து இதமாக சிரித்தவன்,
“நீ ஒன்றும் செய்யவில்லை வனி. எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. அதுதான்!” என்றான் விளக்கமாக.
தொடர்ச்சியாக, “முதலில் எதுவும் தோன்றவில்லை. ஆனால் பிரியாவிடையின் போது உன் கண்களில் கண்ணீரைக் கண்டதும் என் மனம் துடித்த துடிப்பிருக்கே. எனக்கே அது அதிர்ச்சிதான். இதுவரை அப்படியான துடிப்பை நான் அனுபவித்தது கிடையாது. என்னை மறந்துதான் உன்னருகில் வந்து கைக்குட்டையை தந்தேன்…”
“இது ஈர்ப்பாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் திங்கள் அன்று என்னை அண்ணா என்று அழைத்தாயே அப்போதுதான் எனக்கே தெளிவாகப் புரிந்தது. நான் கற்பிக்கும் மாணவர்களைக்கூட அண்ணா என்று அழையுங்கள் எனக்கூறிய என்னால் உன்னுடைய அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொல்லக்கூடாத எதையோ நீ சொல்லிவிட்டதாகத்தான் எனக்கு இருந்தது.” என்றவன் தொடர்ந்து,
“பிறகு நீ மூன்று நாட்களாக வரவில்லையா…. எவ்வளவு தவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்லவே முடியாது வனி. இது காதல்தான் என்பதையும், அதன் ஆழத்தையும் அந்த மூன்று நாட்களில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.” என்றான் ஆழமான குரலில்.
“நான் நானாகவே இல்லை வனி. ஏன் என்றே தெரியாத தவிப்பு. எதையோ இழந்துவிட்ட துடிப்பு. ஆனாலும் மனதில் ஓர் ரகசிய கனவு. எப்படி சொல்ல.. புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு…” அவளுக்கு தன்னை தன் நிலையை புரியவைக்க முயன்றான்.
“உன்னை எப்போதடா பார்ப்போம் என்று தவித்தபடி வந்தவனின் கண் முன்னால் தேவதைபோல நீ நிற்கிறாய். மூன்று நாட்களின் தவிப்புத்தான் உன்னை பார்த்தவுடன் என்னை மறந்து வாணியில் நிகழ்ந்தது…” என கூறியபடி அவளின் முகத்தை சிறு சங்ககடத்துடன் பார்த்தவன் அவளின் முகச்சிவப்பில் மகிழ்வாக சிரித்தான்.
அந்த முகச்சிவப்பு ஆர்வத்தை தூண்ட, “என்னை பிடித்திருக்கிறதா வனி? சொல்லிவிடேன். என்னால் இன்று இரவு தூங்க முடியும் போல் தோன்றவில்லை…” என்றான் தவிப்புடன்.
அவனின், அவளின் மீதான தவிப்பு இதமான இனிமையாக அவளை தாக்கியபோதும் பதில் சொல்லத் தயங்கினாள் வதனி.


