நேசம் கொண்ட நெஞ்சமிது 8 – 1

குழந்தை உள்ளத்துடன் குறும்புகளை விரும்பிச் செய்பவள்தான் வதனி. ஆனாலும் குழந்தை அல்லவே. குழந்தை உள்ளம் கொண்ட குமரி அல்லவா. குமரிக்கான சிந்தனைகள் இல்லாமல்போய்விடுமா?

கம்பீரமான ஆண்மகனின் தன்மீதான மையல் அவளுக்கு பிடித்தபோதும், பிடித்தது என்பதற்காகவே காதலைச் சொல்லிவிடவோ அல்லது வாழ்க்கையை அவனுடன்தான் என்று முடிவு செய்திடவோ முடியுமா?

பிடிதிருக்கிறதுதான்.. ஆனால் எவ்வளவு ஆழத்திற்கு?

அவனுக்கு காதலாக இருந்தபோதும், எனக்கு இது இனக்கவர்ச்சியாக இருந்துவிட்டால்? ஈர்ப்பாக இருந்துவிட்டால்? எத்தனை நாட்களுக்கு இந்த பற்றுதல் நிலைக்கும்?

முதன் முதலில் என்னிடம் அன்பைச் சொன்னவன் என்பதற்காகக் கூட எனக்கு அவனை பிடித்திருக்கலாம். அதற்காக அதைக் காதல் என்று சொல்லிவிட முடியுமா?

எப்படி புரிந்து கொள்வது? இவனின் ஓயாத இந்தக் கேள்விக்கு என்ன பதிலை சொல்வது? தலை மறுபடியும் வலிப்பதுபோல் இருந்தது வதனிக்கு.

பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

அவள் விழிகளில் தெரிந்த இயலாமை அவனை என்ன செய்ததோ, “உன்னை மிகவும் வதைக்கிறேனா வனி? என்னால் புரிந்துகொள்ள முடிகிறதுடா. ஆனால் என்னுடைய தவிப்பைப் போக்கும் வழிதான் புரிய மாட்டேன் என்கிறது…” என்றான் அவனும் தவித்த மனதுடன்.

அவனுக்குமே அவனின் நிலை ஆயாசமாக இருந்தது. அவளை வருத்துவதும் விளங்காமலில்லை. வாணியில் நடந்துகொண்ட விதமே அளவுக்கு அதிகமானது என்பது தெரியாதவனல்ல அவன்.

கோவிலில் நடந்தது அதிகப்படியின் உச்சம் என்பதும் விளங்கியது.

மூளையினால் புரிந்துகொண்ட அனைத்தையும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதுவே போதாது என்றது இதயம். அவளை தன்னவளாக ஆக்கியே தீரவேண்டும் என்கிற வைராக்கியமே வந்தது. சம்மதத்தை இப்போதே சொல்லிவிட மாட்டாளா என்று தவித்தது காதலில் சிக்குண்ட நெஞ்சம்.

சைக்கிளை உருட்டும் தெம்பைக்கூட இழந்தவனாக அதனை நிறுத்தியவன், குளத்தின்பக்கம் திரும்பி இரண்டு கைகளினாலும் தன்னுடைய அடர்ந்த சிகையினை கோதிக்கொண்டான்.

கண்ணுக்கு எட்டியவரை தெரிந்த நீரின்அழகு, அங்கே கொட்டிக்கிடந்த பசுமை எதுவுமே அவன் பார்வையில் விழவில்லை. எங்கேயோ வெறித்தபடி நின்றான்.

இப்படியே எவ்வளவு நேரம் நிற்பது. அம்மா தேடுவார்களே என்று நினைத்தவள்,

“வந்து… போவோமா? அம்மா பயந்துவிடுவார்கள். நடக்கவும் சிரமம் அவர்களுக்கு. நான் போகவேண்டும்.” என்றாள் மெதுவாக.

சிந்தனைகளை எங்கேயோ தொலைத்து நின்றவனுக்கு அவள் சொன்னது புரிய கொஞ்ச நேரமெடுத்தது. அது புரிந்ததும் தன்னுடைய தாயாரின் நினைவும் வந்தது. தான் செய்துகொண்டிருக்கும் செயலும் புரிந்தது.

குடும்பப்பொறுப்பு, அவனின் கடமைகள், இவற்றை மறந்து தான் நடந்துகொள்ளும்முறை…. போதாக்குறைக்கு இவற்றை மறந்து காதலைச் சொல்லியும் அதற்கான பதில் இல்லாது போன விரக்தி அனைத்துமே அவனை கோபம்கொள்ள வைத்தது.

“அம்மாதேடுவார்களா? போ. போய் அவர்களையாவது நன்கு கவனி. எப்போதாவது என்னுடைய நினைவு வந்தால் என்னைப்பற்றியும் கொஞ்சம் யோசி.” என்றவன்,

வேகமாக தன்னுடைய சைக்கிளில் ஏறி அமர்ந்தபடி “போவோமா…” என்றான் கோபம் தீராமலே.

திகைத்து விழித்தாள் வதனி. என்ன சொன்னோம்… அம்மா தேடுவார் என்று சொன்னதில் என்ன பிழை கண்டான் என்று யோசித்தவளுக்கும் கோபம் எட்டி பார்த்தது.

நிதானமாக அவனின் முகத்தை பார்த்து, “இப்போது நேரம் ஆறு முப்பது. இரவாகிறது. உங்களை உங்கள் அம்மா காணவில்லையே என்று தேடமாட்டார்களா?ஆண்பிள்ளையையே தேடும்போது என்னை என் வீட்டில் தேடமாட்டார்களா? இதற்கே இந்தக் குதி குதிக்கிறீர்கள். இதில் உங்களை நம்பி என் வாழ்க்கையை உங்கள் கையில் தந்தால் என் நிலைமை என்னாகிறது?” என்றவள் தன்னுடைய சைக்கிளை வேகமாக மிதித்தபடி முன்னால் சென்றுவிட்டாள்.

ஒருகணம் அசையாமல் நின்றுவிட்டான் இளா. தன்னுடைய இயலாமையை அவள்மீது கோபமாகக் காட்டியது புரிந்தது. அதோடு எதோடு எதை ஒப்பிடுகிறாள் என்று தோன்றியபோதும், தன்னையே குற்றவாளி ஆக்கிய அவளின் சாமர்த்தியம் மிகவும் பிடித்தது.

பிடித்திருக்கிறதா என்று கேட்டால் மட்டும் வாயே திறக்கமாட்டாள். மற்றும்படி வங்காள விரிகுடாவையும் தாண்டும் அவளின் வாய் என்று நினைத்து தனக்குள்ளேயே சிரித்தபடி, அவளுடன் சேர்ந்துகொள்ள சைக்கிளை எட்டி மிதித்தான்.

வரும்போது இருந்தது போலவே போகும்போதும் கோபம் இருக்கவே வேகமாக பறந்தது அவளின் சைக்கிள்.

தானும் வேகமாக மிதித்து அவளை எட்டிய இளா, “சாரிமா. கொஞ்சம் சைக்கிளை நிறுத்தேன்…” என்றவனை முறைத்தவள் தொடர்ந்து நிறுத்தாது மிதித்தாள்.

அவன் மறுபடியும் கெஞ்சிய போதும் அவள் கேட்காது மிதிக்கவும், “இப்போது நீ நிறுத்தாவிட்டால் உன் சைக்கிளில் இருக்கும் உன்னை அப்படியே தூக்கி என் சைக்கிளில் இருத்திவிடுவேன். செய்யவா?” எனவும் சடாரென பிரேக்கை பிடித்து சைக்கிளை நிறுத்தியது மட்டுமல்லாமல் அதை விட்டு இறங்கியும் விட்டாள் வதனி.

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்கிற்று! கோபத்தில் முகம் சிவக்க அவனை முறைத்தாள்.

அவளின் முறைப்பை பார்த்தவனின் உதடுகள் சிரிக்கத் துடித்தபோதும் அதை அவள் அறியாது அடக்கினான்.

“ஏதோ கோபத்தை உன்மீது காட்டிவிட்டேன். சாரிடா குட்டி.” என்றவனை அவள் தொடர்ந்து முறைக்கவும்,

“அதுதான் மன்னிப்பு கேட்டுவிட்டேனே. உன் அழகனை மன்னிக்க மாட்டாயா…” என்றான் அவளை கவரும் ஒரு பளீர் புன்னகையோடு.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock