அவன் “உன் அழகன்” என்று சொன்னது மயிலிறகாய் மனதை வருடியபோதும், “என்னைப் பார்த்தால் குட்டி மாதிரியா தெரிகிறது. நீங்கள்தான் பனைமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறீர்கள். நான் ஒன்றும் குட்டி கிடையாது. எங்கள் வகுப்பில் நான்தான் உயரம் தெரியுமா?” என்றாள் ரோசமாக.
கோபத்தில் கத்தப் போகிறாள் என்று எதிர்பார்த்த இளா சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை. அடக்க முயன்றும் முடியாமல் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினான்.
சைக்கிளில் இருந்தபடியே ஒரு காலை பெடலிலும் மற்றக்காலை நிலத்திலும் ஊன்றியபடி பெரிதாக வாய் விட்டு சிரித்தவனுக்கு, ‘இவன் ஏன் சிரிக்கிறான்…’ என்று யோசனையுடன் பார்த்தவளின் முகம் மனதைக் கொள்ளை கொள்ள, அவளின் கையை எட்டிபிடித்து தன்னருகே இழுத்தான்.
அவன் இழுப்புக்கு இழுபட்டுக்கொண்டே அதிர்ச்சியுடன் விழி விரிய பார்த்தவளின் மூக்கோடு மூக்கை உரசி,
“குழந்தையைப்போல் இருக்கும் குமரியாடா நீ…” என்று கண்களில் காதல் பொங்கக் கேட்டவனின் குரலோ கனிந்து கவி பாடியது.
அவனின் அருகாமை அவளை என்னவோ செய்ய, அவனின் காதல் ததும்பும் பார்வையையும் அருகாமையையும் எதிர்கொள்ள முடியாது முகம் திருப்பிய வதனிக்கு, தான் இருக்கும் சூழல் படவே அவனிடமிருந்து திமிறி விலகினாள்.
“தயவு செய்து இப்படி என்னைத் தொடும் வேலை வைத்துக்கொள்ளாதீர்கள். எனக்குப் பிடிக்கவில்லை.” என்றாள் கோபத்துடன்.
அவளை விட்டவன், “நீ சொல்வது சரிதான். நானும் வேண்டுமென்று உன்னைத் தொடவில்லை. இதெல்லாம் என்னைக் கட்டுபடுத்த முடியாமல் நடப்பவை. முதலிலேயே சொன்னேனே உன் விடயத்தில் நான் நானாக இருப்பதில்லை. அதேபோல் உனக்குப் பிடிக்கவில்லை என்றும் பொய் சொல்லாதே!” என்றான் அவளை அறிந்துகொண்ட சிரிப்புடன்.
பிடிபட்ட உணர்வை மறைத்தபடி, இந்த சிரிப்பிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதில் நினைத்தவள்,
“இனியாவது நான் என் வீட்டுக்கு போகலாமா?” என்றாள் நக்கலாக.
“என் வீட்டுக்கு வந்துவிடேன்…” என்றான் அவன் கண்களை சிமிட்டி.
அவனின் கண்சிமிட்டலில் தொலையப் பார்த்த இதயத்தை கைப்பற்றியபடி, “நான் வருகிறேன்.” என்று முணுமுணுத்தவளுக்கு பதிலாக தலையை ஆட்டியபோதும்,
“நாளை வாணிக்கு வருவாய் தானே…?” என்றான் கேள்வியாக.
“இல்லை. வார இறுதி நாட்களில் அப்பா வீட்டில் இருப்பார். அதனால் வரமாட்டேன்.” என்றவளை ஏமாற்றமாகப் பார்த்தான் இளா.
அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தபோதும், பேசாமலேயே நின்றாள் வதனி.
“அப்போ திங்கள்தான் மறுபடியும் உன்னைப் பார்க்க முடியுமா….” என்று இழுத்தவன்,
“அப்படியானால் திங்கள் அன்று எனக்கு உன் பதில் கட்டாயம் வேண்டும்.” என்றான் அழுத்தமாக.
இப்போது விட்டால் போதும் என்று மனதில் நினைத்தாலும் சரி என்பதாக தலையை அசைத்துவிட்டு அவள் சைக்கிளை மிதிக்கத் தொடங்கவும்,
“நீ முன்னே செல். நானும் உன் பின்னால் வருகிறேன். வேகமாக மிதிக்காதே…” என்றபடி அவளை பின்தொடர்ந்தான் இளவழகன்.
பூந்தோட்ட சந்திவரை வந்தவள், அந்தச் சந்தியில் அவன் சாந்தசோலைக்கும் தான் பூந்தோட்டத்துக்கும் செல்லும் பாதைகளில் திரும்ப வேண்டும் என்று நினைத்தவளாய், அவனைப் பார்த்து ‘போய்வருகிறேன்’ என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்துவிட்டு தன் பாதையில் சைக்கிளை திருப்பினாள்.
சற்று தூரத்தில் தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்து திரும்பி பார்த்தவள் இளா வருவதைக் கண்டுவிட்டு வியப்புடன் விழிகளை விரித்து வேகத்தைக் குறைத்தாள்.
அவள் வேகத்தைக் குறைக்கவும் அவளுக்கு பக்கத்தில் தன்னுடைய சைக்கிளை கொண்டு சென்றவன், “என்ன?” என்றான் கேள்வியாக.
“இங்கு எங்கு நீங்கள் வருகிறீர்கள்?”
“இருட்டிவிட்டது. நீ தனியாகச் செல்வது நல்லதில்லை. நீ உன் வீட்டிற்குள் போனதும் நான் என்வீட்டிற்குப் போகிறேன…” என்றான் இளா.
அவனின் அந்தக் கரிசனம், அவளுக்கு அவன் மீதான நெருக்கத்தை விதைக்க,
“நீங்கள் போங்கள். இந்த வீதியில் இருப்பவர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்.. அதனால் பயமில்லை…” என்றாள் கனிவாக.
அவளின் அந்தக் கனிவு அவனின் மனதை இன்னும் அசைக்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் தன் சைக்கிளை அவளுடனே மிதித்தான்.
அவளின் வீட்டு முனை வரவும், “அதுதான் எங்கள் வீடு. இனியாவது நீங்கள் போங்கள்…” என்றவளை விட்டுப் பிரியவே மனமற்றவன் போல தன்னுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு அவளையே பார்த்திருந்தான் இளா.
அவன் நின்ற நிலை அவளின் மனதை தாக்க, “என்..ன போகவில்லையா…” என்று திக்கியவளின் அருகே சைக்கிளை கொணர்ந்து நிறுத்தினான்.
“ப்ளீஸ் குட்டிமா என்னை தவிக்க விடாதே. திங்கள் அன்று உன் பதில் எனக்கு வந்தே ஆகவேண்டும். அதுவும் சம்மதம் என்பதாக. இப்போது போய்வா.” என்று கரகரத்த குரலில் கூறியவன், அவள் அவளுடைய வீட்டுக்குள் நுழையும்வரை பார்த்திருந்துவிட்டு தன் வீட்டை நோக்கி சைக்கிளை திருப்பினான்.


