கலைவாணி அம்மாவுக்குக் காத்திருந்து காத்திருந்து பொறுமையே போயிற்று! வளர்ந்த மனிதன். பொறுப்பான பிள்ளை. நான்கையும் யோசித்து நல்ல முடிவெடுப்பான் என்று எவ்வளவு நாட்களுக்குத்தான் பேசாமல் இருப்பது? சங்கரி வந்து போனபிறகாவது மாற்றம் வரும் என்று நினைத்தார். முன்னேற்றம் வந்ததே தவிர மாற்றத்தைக் காணோம். வானதியோ, இவன் ஓரடி எடுத்துவைத்தால் ஐந்தடி பின்னுக்கு ஓடினாள். எதற்கு அவள் இப்படி ஓடுகிறாள்? அதுவும் விளங்கவில்லை.
ஊமைப்படம் பார்ப்பதுபோல, அவர்களின் நடவடிக்கைகளை வெறுமனே பார்த்திருந்து முடியாமல் போக, அன்று எதிர்ப்பட்ட மகனிடம் ஆரம்பித்துவிட்டார்.
“எப்ப தம்பி திருமணத்தை வைக்கப்போறாய்?” வைக்கிறாயா சம்மதமா என்றெல்லாம் கேட்கவேயில்லை.
அவனும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டுதான் இருக்கிறான். இத்தனை நாட்களாக அந்த நினைவையே ஏற்கமறுத்த மனம் அதைப்பற்றிச் சிந்திக்கத் துவங்கியிருக்கிறது. அவளை ஏற்கவும் தயாராகிக்கொண்டிருந்தது. என்றாலும், அவரின் இந்த அதிரடி சற்றே அதிர்ச்சிதான்.
அதிரூபனுக்கே சற்று அதிர்ச்சியென்றால் வானதிக்கு? அவருக்குப் பின்னால் எதேர்ச்சையாக வந்தவள் பதறிப்போய் அவனைத்தான் பார்த்தாள்.
அவள் பார்வையை உள்வாங்கிக்கொண்டு, “என்னம்மா திடீரெண்டு?” என்று கேட்டான் அவன்.
“இனியும் இப்படியே இருக்கிறது சரியா வராது தம்பி! நாலுபேர் நாலுவிதமாக் கதைக்கமுதல் ஏதாவது செய்யவேணும். ரெண்டுபேரும் வளந்த பிள்ளைகள்; கதைச்சுப் பேசி முடிவெடுப்பீங்க எண்டு பாத்தால், ஒண்டும் நடக்குது இல்ல! அண்டைக்கு சங்கரி சொன்ன மாதிரி ஒண்டில் திருமணத்தை வை இல்ல அவளை அனுப்பு!” அழுத்தமாக இதுதான் முடிவு என்பதுபோலச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் அவர்.
அவனுக்குத் தெரியும்; அவர் இப்படி ஒன்றைச் சொன்னால் இனி மாறமாட்டார் என்று. வானதியோடு கதைப்போமா என்று பார்க்க, அவள் இருந்த இடத்தில் ஆளே இல்லை.
அறைக்குள் புகுந்துகொண்டிருந்தவளுக்கு கண்கள் கலங்கிப் போயிற்று! அவள் வெளியேறவேண்டும் அல்லது அவனைத் திருமணம் செய்யவேண்டும். இரண்டில் ஒன்று! தனக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. காரணம், அவனது குழந்தையை அபகரித்த குற்றவாளி அவள். ஆனால், குற்றவாளிக்குமே இதயம் என்கிற ஒன்று உண்டுதானே! அதிலே விருப்பு வெறுப்புக்களும் உண்டுதானே!
ஏன்தான் இவர்களின் கண்களில் பட்டாளோ. இப்படிப் பந்தாடுகிறார்களே. அவனை மணப்பதா? எப்படி முடியும்? அவளே அவன் மனைவின் மரணத்துக்கு முழுமையான காரணமாக இருந்துவிட்டு எப்படி அந்த இடத்துக்கு வரமுடியும்?
இதில், அவளுக்கு அவளோடேயே போறாடவேண்டியிருந்தது.
தாடியோடும் சோகத்தைச் சுமந்த விழிகளோடும் இருந்தவனை, மிருணாவின் கணவன் என்று தள்ளிவைக்க முடிந்தவளால் தாடியை எடுத்தபிறகு, முற்றிலுமாக மாறி மனதை அள்ளும் அழகனாக, குழந்தைகளின் பாசமிகு தகப்பனாக கண்ணுக்கு முன்னே நடமாடுகிறவனை மனதளவில் தள்ளிவைப்பதே அவளின் தினச் சோதனையாகப் போயிற்று! இதில் அவனது பார்வை அவள்மீது யோசனையோடு அவ்வப்போது படிவதையும் உணரமுடிந்ததில் தடுமாறிக்கொண்டிருந்தாள்.
‘அவன் மிருணாவின் கணவன்’ என்று உருப்போட்டுப் போட்டே ஓய்ந்துபோனாள்.
என்ன வேதனை இது? அவனையே கணவனாக வரித்து வாழும் அதே நெஞ்சினால் தான் அவனைக் கணவனாக ஏற்கவும் முடியவில்லை.
யாரையோ, “வாங்கோ!” என்று கலைவாணி அம்மா வரவேற்கும் குரல் கேட்டது.
வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு எட்டிப்பார்த்தவள் அதிர்ந்துபோனாள்.
வந்திருந்தது கதிரேசன். அவளின் அப்பா.
‘இவர் எங்க இங்க? நான் இருக்கிறது தெரிஞ்சிருக்குமோ? சங்கரி டாக்டர் சொல்லி இருப்பாவோ.’ சிந்தனை அதுபாட்டுக்கு ஓடினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைக் கண்டதில் விழிகள் கசிய அப்படியே நின்றுவிட்டாள்.
அவர் வந்தது அறிந்து, வரவேற்பறைக்கு வந்த அதிரூபனின் முகம் இறுகிப்போயிருந்தது. ஏன் இப்படி இருக்கிறான்? என்று அவள் பார்வை இப்போது அவனிடம் திரும்பியிருந்தது.
“இந்த மாதம் காசு வரயில்ல! அனுப்புற திகதி பிந்தாம அனுப்பினா தானே எங்களுக்கு வசதி! சும்மா அங்கேயும் இங்கயும் அலையேலாது!” என்னவோ கொடுத்து வைத்தவர் போன்று அவர் அதட்டலாகக் கேட்டதில் திகைத்துப்போனாள்.
யாரை யார் அதட்டுவது? சட்டெனச் சினமேறியது
அவர் ஒரு பொறுப்பில்லாத மனிதன். மூன்று பெண் பிள்ளைகளின் தகப்பன். இருந்தபோதிலும், உழைப்பு என்பது அவருக்குத் தெரியுமா தெரியாது! அப்படியானவருக்கு அதிரூபன் என்ன கொடுக்குமதி?
இதில், அவன் முன்னே கால் மேல் கால்போட்டு அலட்சியமாக அமர்ந்திருக்கிறார். அவன் முன்னால் நிற்கக்கூடத் தகுதி இல்லாத மனிதன்! ஒன்றும் விளங்காமல் அதிரூபனைப் பார்த்தாள்.
“கொஞ்சம் வேலைல மறந்துட்டன்.” இறுகிப்போன குரலில் சொன்னான் அவன்.
இவன் எதுக்கு அடங்கிப் பதில் சொல்லுறான். சினம் மிகுந்தது அவளுக்கு. ஓடு என்று துரத்துவதை விட்டுவிட்டு, இருத்திவைத்துப் பதில் சொல்லுகிறானே. சற்று முதல் அவரைக் கண்டதும் இளகிய உள்ளம் இறுகியது.
“என்ர பிள்ளையை எங்க எண்டே தெரியாத தூரத்துக்குத் துரத்திப்போட்டுக் காசு அனுப்ப மறந்தாச்சோ? அவளை எவ்வளவு செல்லமா வளத்தனான் எண்டு தெரியுமா? இண்டைக்கு அவள் எங்க என்ன நிலைல இருக்கிறாளோ தெரியாது. ராப்பகலா நித்திரை இல்லாம நான் துடிக்க, நீங்க மறந்தாச்சி?” நக்கலும் நையாண்டியுமாகக் குரலை உயர்த்தினார் அவர்.
அதற்குமேல் பொறுக்க முடியவில்லை அவளால்.
“எவ்வளவு செல்லமா வளத்தீங்க? நீங்க மூக்கு முட்டக் குடிச்சிட்டு வந்து அடிப்பீங்களே.. அந்தளவு செல்லமாவோ?” நக்கலாய்க் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பினார் கதிரேசன்.