இப்போதெல்லாம் குழந்தைக்கும் நேரம் ஒதுக்கத் துவங்கியிருந்தான் அதிரூபன். ரூபிணியின் அன்றைய ஏக்கப் பார்வை மனதை மிகவும் பலமாகத் தாக்கிவிட்டிருந்தது.
அவள் அவனது மிருணாவின் குழந்தை. இந்தக் குழந்தைக்காக எவ்வளவு ஏங்கினாள் மிருணா என்று அவனுக்குத் தெரியும். என்னவெல்லாம் செய்தாள் என்றும் தெரியும். அவன் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை அவள் உருவாக்கியதும் அவனுடைய குழந்தையைக் கையில் ஏந்திவிட வேண்டும் என்பதற்காகத்தானே!
கடைசியில் நடந்தது என்ன? தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கருவண்டு விழிகளால் வீதியைச் சுற்றிச் சுற்றிப் பார்த்த மகளைப் பார்த்தான்.
‘உன்னப் பாக்கவேணும் எண்டு அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டவள். கடைசில தன்ர உயிரைக் குடுத்து உன்னப் பெத்துத் தந்திட்டுப் போய்ட்டாள்..’ மனதில் ஏறிய அழுத்தம் தாங்காமல் ரூபிணியின் உச்சந்தலையில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தான்.
தகப்பனின் துயர் அறியாத மகளோ, கடந்த சில நாட்களாகப் போகும் அந்தப் பூங்காவுக்குள் இன்றும் நுழைந்ததும் அவனிடமிருந்து நழுவிக்கொண்டு ஓடினாள்.
இவனைப்போலவே, பலர் தங்கள் குழந்தைகளோடு அங்கே விளையாட வருவதில், ரூபிணியும் சில தோழர் தோழிகளை அதற்குள் பிடித்து வைத்திருந்தாள்.
அவளைத் தன் பார்வை வட்டத்துக்குள் வைத்திருக்கும் வகையில் ஒரு இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொண்டான் அதிரூபன்.
‘மிருணாளினியின் மகள்’ என்று சொல்லும்வகையில் இப்போதுதான் ரூபிணியிடம் கொஞ்சமே கொஞ்சம் துள்ளலும் சிரிப்பும் வரத் துவங்கியிருந்தது. அவனுடைய மிருணா இங்கிருக்கும் அத்தனை குழந்தைகளை விடவும் மோசம். ஒரு இடத்தில் இருக்கமாட்டாள். அவனையும் இருக்க விடமாட்டாள்.
“கொஞ்ச நேரமாவது சும்மா இரனடி!” என்று அவன் சினந்துவிட்டால் போதும்,
“என்ன புரஃபசர்? கம்பசில சின்னன் சிறுசுகள் ஏதும் சிறகடிக்குதோ? சினமெல்லாம் வருது?” என்று ஆரம்பித்துவிடுவாள்.
“அடிதான் வாங்கப்போறாய். படிக்கிற பிள்ளைகள பற்றி என்ன கதை இது?” என்று அவன் கோபப்பட்டாலும்,
“அடிப்பீங்களோ? எங்க அடிங்க? தைரியம் இருந்தா அடிங்க பாப்பம்!” என்று அவள் கன்னங்களைக் காட்டுகையில், முத்தமிட மட்டுமே அவனால் முடிந்திருக்கிறது.
“அடிக்கப்போறன் எண்டு சொன்னீங்க?” அவன் கைகளுக்குள் வாகாகப் பொருந்தியபடி வேண்டுமென்றே சீண்டுவாள்.
“நான் எப்ப சொன்னனான்?” என்று அவள் காதோரமாய் ஆரம்பிக்கும் விளையாட்டு சந்தோசத்தின் உச்சத்தைத் தொட்டாலும் முடியாது.
“சொறி சொறி!” மனைவியின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனைத் திடீரென ஒலித்த அந்தக் குரல் மீட்டுக்கொண்டு வந்தது.
யார் என்று பார்த்தால் ஒரு பெண். அவனது காலில் வந்து மோதிய பந்தினை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் குட்டிச் சிறுவன் ஒருவன், அவள் தன்னைத் தொடர்ந்து துறத்துகிறாளா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.
இவள் ஓடிப்போய் அவனை நோக்கி அந்தப் பந்தை வீச, அதுவும் சரியாக அவன்மீது பட்டு உருண்டது. இப்போது அவன் அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு இவளை நோக்கி வேகமாக ஓடிவர, இவளோ அவனிடமிருந்து தப்ப ஓடிக்கொண்டிருந்தாள். இதுவே, மாறி மாறி நடந்துகொண்டிருந்தது. வெகு தீவிரமாக வேர்க்க விறுவிறுக்க இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவனைப் போலவே அவன் மகளையும் அவர்கள் கவர்ந்துவிட்டார்கள் போலும். அவளும் அவர்களின் பின்னே காரணமே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். சின்னப் புன்னகையோடு பார்த்திருந்தான். அந்தப் பந்து ஒருமுறை ரூபிணியின் காலடிக்கு உருண்டு வந்துவிடவும், விளையாட்டின் விதியை விளங்கிக்கொள்ளும் வயதில்லையாதலால் அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு அவள் இவர்களை விட்டு வேறொரு புறமாக ஓடத்துவங்கினாள். அதிரூபனுக்குப் போலவே பார்த்திருந்த அந்த இருவர் முகத்திலும் அகன்ற புன்னகை.
“அம்மா! அவா பந்தையும் கொண்டு ஓடுறா..” சின்னவன் சிரித்துக்கொண்டு சொல்லவும், ‘அம்மாவா?’ என்று அதிர்ந்தான் அதிரூபன்.
இவளே குட்டிப்பெண். எப்படி? அவளை ஆராய்ந்தன அவன் விழிகள். விளையாட்டுக்குணம் முற்றிலும் அகன்றிடாத முகம். இருபதுகளைத் தாண்டி ஒன்றிரண்டு வருடங்கள் கடந்திருக்கக் கூடும்.
சகோதரர்கள் அல்லது உறவுக்காரர் யாரினதோ குழந்தையாக இருக்கும் என்றுதான் நினைத்தான். அந்தளவில் அந்தச் சிறுவனுக்கு ஈடுகொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால்.. இப்போதுதானே கண்டதும் நடக்கிறது. இல்லை! அந்தளவுக்கு அசட்டுப்பெண் போலும் அவளில்லை. சிறுவனோடு சரிசமமாக விளையாடினாலும், அவனில் வெகு கவனமாகத்தான் இருந்தாள்.
அந்த முரணே, அவர்கள் இருவரையும் கவனிக்க வைக்க, ‘என்ன நடக்கிறது பார்க்கலாம்..’ என்று காத்திருந்தான்.
“வா! அவவ நாங்க பிடிப்போம். ஆனா, வேகமா துறத்தாத, விழுந்திடுவா.” என்றவள் மகனோடு ரூபிணியைப் பிடிக்க ஓடினாள்.
அதன்பிறகு எதற்கு ஓடுகிறார்கள், யார் யாரைப் பிடிக்கிறார்கள், விளையாட்டின் விதிமுறை என்ன என்று பார்த்திருந்த அவனாலேயே விளங்கிக்கொள்ள முடியாத அளவில் தாறுமாறாக இருந்தது அந்த மூவரின் விளையாட்டு. மொத்தத்தில் அவன் மகள் போதும் போதும் என்கிற அளவில் உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவனுடைய வறண்ட உதடுகளிலும் கோடாகப் புன்னகை அரும்பிக் கிடப்பதை அவன் உணரவேயில்லை.
போகும் நேரம் தாண்டியும் மகளின் மகிழ்ச்சியைக் குலைக்க மனமில்லாமல் அவன் அமர்ந்திருக்க, அவர்கள் போகும் நேரம் வந்துவிட்டது போலும், ரூபிணியைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, “அம்மா எங்க செல்லம்?” என்று கேட்டாள் அவள்.
அவனும் விளங்கியவனாக அவர்களை நோக்கி நடக்க ஆரம்பிக்க, மகளும் இவன் புறமாகக் கையை நீட்டினாள்.
அவன் புறமாகத் திரும்பியவளின் விழிகளில் அவனது முகத்தைக் கண்டதும் அதிர்ச்சி படர்ந்தது. முகத்தை நிறைத்த தாடியும், சோகம் அப்பிய விழிகளும், வறண்ட உதடுகளும், காய்ந்த முகமுமாக இருந்தான். தோற்றம் மட்டும் மதிக்கும் படியாக இருக்க, சட்டென்று தன் அதிர்வை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.
அவளின் முகபாவனைகளை உள்வாங்கிக்கொண்டாலும் காட்டிக்கொள்ளவில்லை அதிரூபன்.
ரூபிணியை அவனிடம் கொடுத்துவிட்டு, “இருட்டப்போகுது, நாங்க வாறம்.” என்று அவள் மகனோடு விடைபெற்றாள். அந்தச் சின்னவன் ரூபிணிக்கு ‘டாட்டா’ காட்ட, இவளும் காட்டினாள்.
நான்கடி நடந்திருப்பார்கள். “நாங்க நாளைக்கும் வருவம்; நீங்களும் வருவீங்களா அங்கிள்?” என்று ஆவலுடன் கேட்டான் சிறுவன்.
“பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் வருவோம்.”
“நாங்களும் தான். என்னம்மா?” அதிரூபனின் பதிலைக் கேட்டதும் வேகமாகச் சொன்னான் சின்னவன்.
ஆம் என்பதாகத் தலையசைத்துவிட்டு, “அப்ப நாளைக்கும் விளையாடுவம் குட்டி.” என்று ரூபிணிக்குச் சொல்லிவிட்டு, அவனிடம் தலையசைத்துவிட்டு மகனோடு நடந்தாள் அவள்.
அதன்பிறகு அதுவே வாடிக்கையாயிற்று!