அவளோடு நடந்துவந்தபோது ஏனோ மனம் ஒட்ட மறுத்தது அதிரூபனுக்கு. மாற்றம் வேண்டும் என்று முதல் அடியை எடுத்து வைத்தது அவன்தான். ஆனால், அது அவ்வளவு இலகுவாய் இருக்கவில்லை. ஒரு நடைப்பயணத்தில் கூட அவளோடு சோடியாக வரமுடியாமல் மனம் முரண்டியது.

ரூபிணியை நடக்கவைப்பதுபோல செய்து, அவளின் சின்ன நடைக்கு ஏற்ப தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டான்.

தாரகனோடு நடந்தவள் அவர்களுக்காக நிற்க, “நீ நட, பின்னால வாறன்!” என்றான் மனதை மறைத்து.

அவன் மனதிலிருப்பதை அறியாதவளோ தலையை ஆட்டிவிட்டு நடந்தாள். அந்தச் செய்கையில் மனதில் பாரமேறிப் போனது அவனுக்கு. நிர்ச்சலனமாய் அவனை நம்புகிறாளே. அவனோ அவளிடம் பொய்யாக நடக்க முனைகிறான். பாவமில்லையா?

ஒரு சின்னப்பெண்ணின் மனச்சலனத்துக்குக் காரணமாய் இருந்துவிட்டு, வாழ்வின் சிக்கலை மாற்றுகிறேன் என்று ஆரம்பித்துவிட்டு இப்போது பின்னடிக்கிறதே அவன் இதயம்!

முடிவு செய்துதான் ஆரம்பித்தான். ஆனால், மிருணாவிலிருந்து வெளிவரவும் முடியவில்லை. மிருணா நிறைந்திருக்கும் உள்ளத்தோடு அவளருகில் மனதளவில் கூட நகரமுடியவில்லை. சற்றுமுன் அவளைத் தொட்டதிலேயே அவன் போராட்டம் ஆரம்பித்திருந்தது.

‘மிருணா.! மிருணா..! மிருணா..!’ ஓலமிட்ட மனதுக்கு உயிரைப் பலியாகக் கொடுத்துவிட்டால் இந்தச் சிக்கல் எல்லாம் தீர்ந்துவிடாதா? ஒரே ஒருகணம் அவன் உள்ளம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டது! பின் குழந்தைகள்? தன் கைப்பற்றி நடந்துவரும் இந்தச் சின்ன மொட்டின் நிலை என்ன? சற்று முன்னே நடந்துசெல்லும் அவனது மகனின் நிலை என்ன? ஏதோ ஒரு வகையில் அவனை மனதில் சுமந்திருக்கும் அவளின் நிலை என்ன? அவனைப் பெற்றெடுத்த தாய் என்னாவார்?

அவன் தான் மாறியாகவேண்டும்! சற்று நேரத்தில் காணப்போகும் சங்கரியும் அதைச் சொல்வதற்காகத்தான் வருகிறார். எல்லாம் புரிகிறது மூளைக்கு. அது சொல்வதன்படி நடக்க முடியாமல் மனம் தடுமாறிக்கொண்டிருந்தது.

காலம் வகுத்த கணக்கில் கனகச்சிதமாக மாட்டிக்கொண்டவனின் உள்ளத்தில் பெரும் புயல் அடித்துக்கொண்டிருந்தது.

வீடு வந்துவிட, வானதியின் கால்கள் தானாகவே நின்று அவனுக்காய்க் காத்திருந்தது. சங்கரியைத் தனியே எதிர்கொள்ளத் தைரியமின்றித் தடுமாறுகிறாள் என்று உணர்ந்தாலும், மிருணாவின் ஆட்சி அதிகரித்துவிட்டிருந்த அந்த நிலையில் அதிரூபனால் அவளுக்குக் கைகொடுக்க முடியாமல் போயிற்று!

அவள் முகம் பாராமல் முன்னே நடக்க, ஒருகணம் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னே வந்தாள் வானதி.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, சங்கரி வந்திருந்தார். “வாங்கோ டாக்டர்!” முறையாக வரவேற்றவனுக்கு அவரிடம் புன்னகைப்பதே சிரமமாயிருந்தது.

“இருங்க வாறன்!” என்றவன் மகளைத் தாயிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்துகொண்டான். அவனுக்குத் தன்னைச் சமாளித்து ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்கு நேரம் தேவைப்பட்டது.

இதை எதிர்பாராத வானதி, அவனது செயலில் அதிர்ந்து அப்படியே மகனோடு வாசலில் நின்றுவிட்டாள். சூடான கண்ணீர் கண்களுக்குள் நிறைந்துபோயிற்று. நான் இருக்கிறேன் என்றானே?

அவளைக் கண்டுவிட்ட சங்கரியின் பார்வை நெருப்பாய் எரித்ததில், துணைக்கு யாருமற்று வாசலில் நின்ற அந்தக் கணத்தில் நெஞ்சிலோர் வேதனை வெகு ஆழமாய்த் தாக்கிற்று!

கண்கள் கலங்க அவரைப் பார்த்தாள். உதடுகள் துடிக்க, ‘ப்ளீஸ் டாக்டர்.. நான் செய்தது பிழைதான்..’ அவள் கண்கள் அவரிடம் இறைஞ்சின!

அதை அலட்சியம் செய்தவரின் பார்வை இப்போது, தான் உருவாக்கிய தாரகனிடம் தாவியிருக்க, பதறிப்போன அவள் கைகள் தானாக மகனை அள்ளிக்கொண்டிருந்தது. யாருக்கும் தரமாட்டேன் என்பதுபோல்!

சங்கிரியின் கோபம் அந்தச் செயலில் அதிகரித்துவிட, “உன்ன நம்பினதுக்கு நல்ல காரியம் செய்திட்டாய் என்ன?” என்றார் மிகுந்த கோபத்தோடு.

“சாரி டாக்டர்!” தலை குனிந்தவளின் கண்ணீர் தரையில் விழுந்து சிதறியது.

அந்தக் கணத்தில் அவளையும் மீறித் துணைக்கு அவனை எதிர்பார்த்தாள். நடக்காத அந்த ஏமாற்றம் வேறு மனதை உடைத்தது! அவளுக்குத் தாரகன் மட்டும் தான்!

“உனக்கு எல்லாத்தையும் தெளிவா விளக்கித்தானே செய்தனான். ஏதாவது ஒளிச்சு மறைச்சேனா? ஓம் ஓம் எண்டு எல்லாத்துக்கும் தலையை ஆட்டிப்போட்டு நீ செய்த காரியம் சரியா? என்ர தொழிலையே என்ன வெறுக்க வச்சிட்டியே! உங்கட குடும்பத்துக்கு உதவி செய்ய நினைச்ச எனக்கு நல்ல கைம்மாறு செய்திட்டாய் என்ன?” அத்தனை நாட்களும் தேக்கி வைத்திருந்த கோபத்தை அவர் வெளிக்காட்டியபோது அவளால் தலைகுனிந்து நின்று கண்ணீர் உகுக்க மட்டுமே முடிந்தது.

பயந்துபோன தாரகனோ தாயை இறுக்கி அணைக்க, அந்த அணைப்பில் யாருக்குமே என் மகனைக் கொடுக்கமாட்டேன் என்கிற எண்ணம் இன்னுமே வலுப்பெற அப்படியே நின்றாள்.

“யாரையுமே நம்பக்கூடாது என்ற பாடத்தை நல்லாவே படிப்பிச்சுப்போட்டாய். நீயெல்லாம்.. இதுல அவனைத் தூக்கி வேற வச்சிருக்கிறாய் என்ன? முதல் அவனை இறக்கிவிடு! அவனுக்கும் உனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல! இங்கால கொண்டுவா!” ஆத்திரத்தில் படபடத்தவர், வேகமாக எழுந்து குழந்தையை வாங்கப்போனார்.

“இல்ல! நான் தரமாட்டன்! அவன் என்ர மகன்!” என்று பதறியவள் மகனை இறுக்கி அணைத்துக்கொண்டு வாசலைத் தாண்டி ஓட முனைய அவளைப் பற்றியது ஒரு கரம்!

ஒருமுறை நடுங்கியது வானதியின் தேகம்! மகனைப் பறித்தே விடப்போகிறார்களா?

அச்சத்துடன் சரக்கென்று திரும்பியவள், அதிரூபனைக் கண்டதும் அப்படியே உடைந்தாள். அவனன்றி வேறு யார் அவளுக்குத் துணை? விழிகளில் உயிரைத் தேக்கி, “அவன் என்ர மகன் ரூபன்! என்னட்ட இருந்து பிரிச்சுப்போடாதீங்கோ.. ப்ளீ..ஸ்..” என்று கெஞ்சியவள், நிற்க வலுவற்றுப்போய் மகனோடு சரிய ஏந்திக்கொண்டது அவனது கரங்கள்!

“மகனை வாங்குங்கோ அதிரூபன்! இவளுக்கு அப்படிச் செய்தாத்தான் சரி! எவ்வளவு தைரியமா எல்லாரையும் சுத்திக்கொண்டு போனவள்!” என்றவரின் பேச்சைக் கேட்டு, துடித்து நிமிர்ந்தாள் வானதி.

அச்சம் நிறைந்த அகன்ற விழிகளில் கண்ணீர் வழிய, பறித்துவிடுவாயா என்கிற தவிப்போடு அவன் முகம் பார்த்தவளைக் கண்டு நெஞ்சு கனத்துப்போனது அவனுக்கு.

“ப்..ளீஸ்.. வேண்டாம்!” நிற்கமுடியாமல் அவன் கைகளில் துவன்றபோதிலும் நடுங்கிய உதடுகள் அவனிடம் இறைஞ்சியபோது, உயிரின் ஆழத்தில் அவனுக்கு வலித்தது. அவனது மிருணாவும் இதே குழந்தைக்காகத்தானே போகாத எல்லைக்கும் போனாள்!

அதே மகனுக்காக இவளும் இந்தத் துடி துடிக்கிறாளே! அவன் கண்ணோரமும் கரித்தது! அவளின் துன்பத்தை இந்தக் கணமே போக்கு என்று உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி ஆணையிட்டது!

“வானதி! இங்க பார்! அவன் உன்ர மகன்தான்! உன்னட்ட இருந்து ஒருத்தரும் பறிக்கமாட்டினம்! அதுக்கு நான் விடமாட்டன்! விளங்குதா!” அவளின் கன்னத்தை அழுத்தமாகத் தட்டிச் சொன்னான் அதிரூபன்.

சட்டென்று விழிகளில் உயிர் வந்தது அவளுக்கு. “உ..ண்மையாத்தானே சொல்லுறீங்க?” ஆவலாய் கேட்டவள், “சத்தியம்.. சத்தியம் பண்ணுங்கோ!” என்று கையை வேகமாக நீட்டினாள்.

அவன் செய்யப்போகும் அந்தச் சத்தியத்தில்தான் தன் உயிரே இருப்பதுபோல தவித்தவளின் நிலையைப் பார்க்க முடியாமல் அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுத்தினான் அதிரூபன்.

“சத்தியமா பறிக்கமாட்டம்! நீ முதல் அமைதியா இரு!” என்றவன், அவளை அழைத்துச் சென்று தாயின் அருகே அமர்த்திவிட்டுத் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான்.

தாரகனை வாங்கப்போக, ஒரு கையால் அணைத்திருந்தவள் அப்போதும் விடமறுத்தாள். நடந்த களோபரத்தில் பயந்துபோயிருந்த தாரகனும் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வரமறுத்தான்.

“விடு வானதி! அதுதான் சத்தியம் செய்து தந்தாச்சு எல்லோ!” என்று அதட்டியபிறகுதான் அவளது கை சற்றே தளர்ந்தது.