பூவே பூச்சூட வா 12(1)

கலைவாணி அம்மா வரவேற்பறைச் சோபாவிலேயே சரிந்திருந்தார். உள்ளே கேட்ட பேச்சுச் சத்தத்திலிருந்து, வானதி பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று விளங்கியது. தாயின் அருகில் சென்று அமர்ந்தான் அதிரூபன். அதில் உறக்கம் கலைந்து, சற்றே தலையை உயர்த்தி, கேள்வியாகப் பார்த்தார் அவர். அழுததில் முகம் வீங்கியிருந்தது.

“உள்ளுக்குப்போய் படுங்கோவன்!” என்று, மென்மையாகச் சொன்னான் மகன்.

“ப்ச்! என்னத்த படுக்க? அப்படியே இருந்தாப்போல சரிஞ்சிட்டன்!” என்றபடி எழுந்து அமர்ந்து, சோர்வுடன் முதுகில் விழுந்திருந்த முடியை மீண்டும் கொண்டையிட்டுக்கொண்டார்.

வெள்ளையும் கறுப்புமாய்க் கலந்திருந்த முடி அவரின் முதுமையைப் பறைசாற்றினாலும், வாடிப்போயிருந்த முகம் இன்னுமே மூப்பை உணர்த்திக்கொண்டிருந்தது.

இளமையில் கணவரைப் பறிகொடுத்துவிட்டு ஒற்றைப் பெண்ணாய்ப் போராடியது போதாதென்று, வயதான காலத்திலும் அவரை அழவிட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறேனே, நான் என்ன மகன் என்றுதான் அந்தக்கணம் உணர்ந்தான்.

மூப்பிலாவது நிம்மதி வேண்டாமா? அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து, நல்லதொரு வேலையில் அமர்த்தி, நல்ல பெண்ணாகப் பார்த்து மணமுடித்து வைத்து என்று அவனுக்கு எந்தக் குறையுமே வைத்ததில்லை. அப்படியானவரின் கவலையைக்கூட போக்கமுடியாமல் நிற்பது மனதைப் பிசைந்தது.

“தேத்தண்ணி ஏதும் வேணுமாம்மா?” ஆதரவாய் வினவினான்.

அதற்குப் பதில் சொல்லாமல் வானதி எங்கே என்பதுபோல் தேட, “கிட்சனுக்கதான் நிக்கிறாள்.” என்றவன் எழுந்து உள்ளே சென்றான்.

‘எங்க போறான்’ என்று பார்க்க அவன் சமையலறைக்குள் நுழைவது தெரிந்தது. அவர் முகத்தில் சின்னதாய் ஒரு ஆச்சரியம் கலந்த மலர்ச்சி. மனதை மாற்றிக் கொண்டானோ? ஆவலோடு காதைத் தீட்டிக்கொண்டிருந்தார்.

பிள்ளைகள் இருவரையும் சமையலறைக் கட்டிலேயே ஏற்றி இருத்திவிட்டு உணவு கொடுத்துக்கொண்டிருந்தாள் வானதி. காலடி ஓசையில் கலைவாணி அம்மாவாக்கும் என்று சின்னச் சங்கடத்துடன் திரும்ப, வாசலில் வந்து நின்றவனைக் கண்டு விழிகளை விரித்தாள். இப்படியெல்லாம் அவன் வந்ததேயில்லை. அப்படியே வரநேர்ந்தாலும் தன் வேலையை முடித்துக்கொண்டு நகர்ந்துவிடுவான். இப்படி நிலையில் சாய்ந்து நின்று அவளைப் பார்ப்பதெல்லாம்.. என்ன நடக்கிறது? இதயத்தில் படபடப்புத் தொற்றிக்கொண்டது. அவனிடமிருந்து பார்வையை அகற்றவேண்டும் என்பதைக்கூட உணராமல் அப்படியே நின்றிருந்தாள் வானதி.

கிட்சனுக்குள் வந்தவன், கேற்றிலை எடுத்து நீர் கொதிக்க வைத்தான். எதற்கு என்று உணர்ந்து, “நான் கொண்டுவாறன். நீங்க போங்கோ!” என்றாள் வேகமாக.

அவனோ, அங்கேயே சாய்ந்துகொண்டு பிள்ளைகளைப் பார்த்தான். கிட்சன் மேசையில் அமர்ந்திருந்தனர் இருவரும். தாரகன் கொஞ்சம் பரவாயில்லை. ரூபிணி முகம் முழுவதிலும் உணவைப் பெயிண்ட் போல பூசியிருந்தாள். அதிரூபனின் உதடுகளில் சின்னதாய் நகைப்பு அரும்பிற்று!

“என்ன நடக்குது இங்க?” சிரிப்புடனேயே மகளிடம் கேட்டான்.

“சோச்சா சாப்பிடுதன்..” என்றவள் கைகளை ஊன்றி எழும்பித் தகப்பனிடம் வர முனைய, விழுந்துவிடப் போகிறாள் என்று பயந்து, “ரூபி எழும்பாத!” என்று அவசரமாக வானதி அருகில் வர அதைவிட வேகமாகக் கிட்டவந்து மகளைத் தூக்கிக்கொண்டான் அவன்.

“இறக்கி விட்டுடாதைங்கோ! பிறகு பிடிக்கவே ஏலாது!” தன்னை மறந்து அவசரமாகச் சொன்னாள் வானதி.

மலர்ந்த சிரிப்புடன், “ம்? இறக்கி விட்டா செல்லக்குட்டி ஓடிடுவாளா?” மகளின் முகம் பார்த்துக் கேட்டான் அவன்.

அவளும் கிழுக்கிச் சிரித்தபடி செல்லமாக, “ம்ம்..” என்று தலையசைத்தாள்.

ரூபியின் கைகள் அதிரூபனின் தாடிக்காட்டில் அளைந்து விளையாடத் துவங்க, வானதிக்கு அங்கே ஓடிய கண்களைப் பிரிப்பது பெரும் சிரமமாய்ப் போயிற்று!

எப்படியாவது அந்தத் தாடிக்காட்டை அழித்துவிட வேண்டுமென்பது வானதியின் பெரும் விருப்பம். முந்தைய வானதியாக இருந்தால் தயக்கமே இல்லாமல், “இந்தப் பத்தையை எப்ப செருக்கப் போறீங்க?” என்று கேட்டே இருப்பாள்.

இன்றோ நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு நின்றாள்.

ரூபிணி வெளியே தகப்பனை இழுக்க, “கள்ளி! அம்மாட்ட வாங்கு!” என்று மகளை அவளருகில் கொண்டுவந்தான் அவன். இவளுக்குள் ஒரே படபடப்பு. அந்த அருகாமையையே ஏற்க முடியாமல் தடுமாறினாள்.

அவனது சிரிப்பு ஒன்றே போதுமாயிருந்தது அவளின் இயல்பைப் பிடுங்கிக்கொள்ள.

இதில் அம்மா என்றானே! அவன் வாயால் கேட்டது என்னவோ செய்தது. படபடப்பை மறைத்துக்கொண்டு மகளுக்கு உணவைக் கொடுத்தாள்.

கவனமாகத் தன்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறவளின் முகத்தில் படிந்தது அவன் விழிகள். அவளுக்கோ இன்னும் பதற்றமாகிப் போயிற்று! வெகு அருகில் நின்றுகொண்டு இப்படிப் பார்க்கிறானே? நெஞ்சில் வைத்து நேசிக்கும் முகம் வெகு அருகாமையில் தெரிந்தபோது அவளால் இயல்பாக இருக்கமுடியவில்லை. ரூபிணி வாங்கியதும் வேகமாகத் தாரகனுக்கு ஊட்டுவதுபோலத் திரும்பி முகத்தை மறைத்துக்கொண்டாள்.

ஒருகாலத்தில், “விளையாட வாங்கோ!” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக இயல்பாக அழைத்தவள். இன்று தான் யார் என்று தெரிந்ததில் இருந்து தன்னிடமிருந்து தள்ளியே இருக்கிறாள். யோசனையோடு அடிக்கடி அவள் மீது படிந்து விலகியது அவன் விழிகள்.

உணவைக் கொடுத்து முடிக்கும்வரை அவன் அகலவேயில்லை. ரூபிணியை வைத்துக்கொண்டு அங்கேயே நின்றான். ரூபிணி வேறு உண்பதற்குள் அவளை ஒருவழியாக்கி முடித்தாள்.

அவளுக்கு முகம் கழுவி சுத்தமாக்கிவிட என்று வானதி வாங்கிக்கொண்டதும் போவானாக்கும் என்று நினைக்க, அவனோ தேநீர் ஊற்றக் கோப்பைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

“நீங்க விடுங்கோ, நான் செய்றன்!” என்றாள் அவசரமாக.

‘என்ன இவன் இங்கேயே நிற்கிறான், ஆன்ட்டி என்ன நினைப்பா?’ என்று அதுவேறு அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, எப்படியாவது அவனை அனுப்பினால் போதும் போலிருந்தது.

“மூண்டுபேருக்கும் கொண்டுவா!” என்றுவிட்டுப் பிள்ளைகளோடு வெளியேற, ‘மூன்றுபேருக்குமா?’ என்று அப்படியே நின்றுவிட்டாள் வானதி.

அவளுக்கும் வேண்டும்போல் இருந்ததுதான். ஆனால், மூன்றுபேருக்கும் அங்கே கொண்டுபோவதா? அவளுடையதைச் சமையலறையிலேயே வைத்துவிட்டு அவர்களுக்கு மட்டும் கொண்டுபோனாள்.

கலைவாணியிடம் நீட்டிவிட்டு அவனிடம் கொடுக்க, இரண்டு கோப்பைகள் மட்டுமே இருக்கக் கண்டு கண்களில் அழுத்தத்தைச் சேர்த்து, “எங்க உனக்கு?” என்று கேட்டான் அவன்.

“இருக்கு..”

“இங்க கொண்டுவா!” என்றான் அவளையே பார்த்து.

இதையெல்லாம் கவனித்தும் கவனியாததுபோல பார்த்துக்கொண்டிருந்தார் கலைவாணி.

அவரைச் சங்கடமாகப் பார்த்துவிட்டுப் போய் எடுத்துக்கொண்டு வந்து, கலைவாணி அம்மாவின் அருகே அமர்ந்து அருந்தினாள் வானதி.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock