அன்று ரூபிணியின் இரண்டாவது பிறந்தநாள். அதைக் கொண்டாடும் நிலையில் யாருமே இல்லை. மிருணாவின் இழப்பைக் கலைவாணியாலுமே தாங்க முடியவில்லை. எவ்வளவு அருமையான பெண்? அவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்றுதான் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. அங்கே புகைப்படத்தில் மகனோடு நின்றவள் இல்லை என்பதை இன்னுமே நம்ப முடியவில்லை. ஐயோ ஐயோ என்று மனம் பரிதவித்தது.
அவருக்கே அப்படி என்றால், அதிரூபனின் நிலை? சொல்லவே வேண்டாம். மிகவும் மோசமாயிருந்தது. அறையை விட்டு வெளியே வரவேயில்லை. இதில் வானதியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எடுத்த முடிவு, அதுவேறு நெஞ்சுக்குள் கிடந்து இன்னுமே வருத்தியது.
முதன்முதலாகக் கோயிலில் வைத்து முத்தமிட்டவள், மணமேடையில் தன் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு வலம் வந்தவள், குடத்திலிருந்து மோதிரத்தை எடுத்துவிட்டு அவனைப் பார்த்துத் தலையைச் சரித்துச் சிரித்தவள், அவனையே திக்குமுக்காட வைப்பவளை முதலிரவில் முகம் சிவக்க வைத்து, அவன் மார்புக்குள் முகத்தை மறைத்துக்கொண்டவளின் வெட்கம், வாழ்ந்த வாழ்க்கை, குழந்தைக்காக அவள் பட்ட பரிதவிப்பு, கடைசியாக ‘காலம் முழுக்க மலடியா நான் இருக்கோணும் எண்டு ஆசைப்படுறீங்க என்ன?’ என்று அவள் கேட்ட கேள்வி. ஆனால், ஒன்று, அவனுடைய மிருணா மலடியாகப் போகவில்லை. அந்தக் குறையை அவன் வைக்கவில்லை. ஆனால், போகும் வயதா என்ன அவளுக்கு?
கடைசியாக உயிரற்ற சடலமாக அவள் படுத்திருந்த கோலம்.. கண்களை இறுக்கி மூடிக்கொண்டான் அதிரூபன். அன்றுபோலவே இன்றும் தேற்றுவார் இல்லாமல் துடித்துக்கொண்டிருந்தான் அந்தக் கணவன்.
வானதிக்கும் கண்ணீர் கன்னங்களை நனைத்துக்கொண்டே இருந்தது. குழந்தைகள் இவளோடே இருந்ததில் அவர்களுக்காக அடக்கிக்கொண்டு இருந்தாளே தவிர, அதிரூபனுக்காகவாவது கடவுள் அவளை விட்டிருக்கலாம் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இன்றையநாள் அதிரூபனின் உள்ளம் என்ன பாடுபடும் என்கிற யோசனை வேறு நெஞ்சைப் பிசைந்தது. அவனை அணைத்துக்கொண்டு தேற்றவேண்டும் போல் உடலின் ஒவ்வோர் அணுவும் துடித்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றாள்.
சின்னவள் பிறந்தநாளை அப்படியே விட மனமற்று, பிள்ளைகளோடு தயாராகி, கலைவாணி அம்மாவிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று அவள் பெயரில் சின்னதாக ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வந்தாள்.
காலையில் இருந்தே அவன் வெளியே வரவேயில்லை. காலைத் தேநீரும் இல்லை, உணவுமில்லை. கலைவாணி அம்மாவையாவது அவர் விழுங்கும் மாத்திரைகளைக் காட்டி சாப்பிட வைத்திருந்தாள்.
கூப்பிடுவோமா? கூப்பிட்டால் வருவானா? என்று அறை வாசலிலேயே சுழன்றவள் உள்ளே செல்லப் பெரிதாகத் தயங்கினாள்.
பொழுது மத்தியானத்தை நெருங்க, சாப்பாட்டையே கொடுப்போம் என்று வேகமாகச் சமைத்தாள். பிள்ளைகளுக்கும் கொடுத்து, வேண்டாம் வேண்டாம் என்றவருக்கும் சிரமப்பட்டுக் கொடுத்துவிட்டு, “அவர்… இன்னும் சாப்பிடேல்லை ஆன்ட்டி.” என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“நீயே போய்க் கேளம்மா.”
அவருக்கு மகனின் முகத்தைப் பார்த்தால் தான் இன்னுமே உடைந்து அவனை மேலும் வருத்திவிடுவோமோ என்றிருந்தது. சாப்பிட வருவான் என்கிற நம்பிக்கை இல்லை. ஆரம்ப நாட்களில் அவனுக்கு ஒரு நாளில் ஒரு நேர உணவை.. இரண்டு வாய் கொடுப்பதற்குள்ளேயே அவருக்குச் சீவன் போய்விடும். அவன் உடைந்துபோயிருந்ததில் அவனைத் தேற்றுவதில் கவனமாக இருந்தவர், தானே அறியாமல் தன்னைத் தேற்றியிருந்தார்.
வானதிக்கு அவனுடைய அறைக்குள் போக அப்போதும் தயக்கம் தான். பட்டினியாகக் கிடக்கிறான் என்று தயக்கத்தை உடைத்துக்கொண்டு மெல்ல எட்டிப்பார்த்தாள்.
முகட்டைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தான். நெஞ்சின்மீது மிருணாவின் போட்டோ கிடக்க, அதனை ஒரு கை அணைத்திருக்க, மறுகை முகத்தின் மேலே கிடந்தது.
கதவைத் தட்டினாள். இரண்டு மூன்றுதரம் தட்டியும் பிரயோசனம் இல்லை.
“உள்ள வரலாமா?” துணிவைத் திரட்டிக்கொண்டு சத்தமாகக் கேட்டுவிட்டாள். திடுக்கிட்டுத் திரும்பியவன், உணர்வற்று அவளைப் பார்த்தான்.
கண்ணெல்லாம் சிவந்து, முகம் முழுவதும் சோகம் அப்பிக்கிடக்க, அவனைப் பார்க்கவே முடியவில்லை. என்னவோ தொலைந்துபோன குழந்தை போல. அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
“சாப்பாடு.. விடியவும் ஒண்டுமில்ல.. ரெண்டுமணி தாண்டிட்டுது.”
“வேண்டாம்!” என்றான்.
“வெறும் வயித்தோட இருந்தா கூடாதெல்லோ..” மென்மையாக அவள் எடுத்துரைக்க வேகமாகத் திரும்பினான் அவன்.
“ஒரு நாள் இருக்கிறதால ஒண்டும் நடந்திடாது! என்னைக்கொஞ்சம் தனியா விடு!” வார்த்தைகள் இறுக்கமாய் வந்தாலும், அவன் விழிகளில் தென்பட்ட வலியிலும் பரிதவிப்பில் அவளுக்கும் அழுகை வரும்போலிருந்து.
“சரிசரி. பாலாவது குடிங்கோவன்..” கெஞ்சலாகக் கேட்க, இதென்ன தொல்லை என்கிற மெல்லிய சினத்தோடு திரும்பியவனிடம், “ ப்ளீஸ் எனக்காக.” என்றாள் வேகமாக.
ஒருமுறை கண்களை முடித்த திறந்தவன், “கொண்டுவா!” என்றான். ஓடிப்போய்ப் பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தவளைக் கண்டு, “வச்சிட்டுப்போ!” என்றான் அவன்.
வைத்துவிட்டுப்போனால் குடிக்கவே மாட்டான் என்று உணர்ந்து, “இதமான சூட்டில் இருக்கு. டக்கென்று வாய்க்க ஊத்திப்போட்டுத் தந்தீங்க எண்டா கையோட கழுவி வச்சிடுவன்!” என்று அவனிடமே நீட்ட, விட்டால் இங்கேயே நின்று தொணதொணப்பாள் என்று எழுந்து, அவள் சொன்னதுபோல வேகமாக வாங்கி வாய்க்குள் அப்படியே கவிட்டுவிட்டுக் கொடுத்தான்.
அதுவே அப்போதைக்குப் போதுமாக இருக்க, வாங்கிக்கொண்டு போனவள் அதன்பிறகு அவனை உண்மையிலேயே தொந்தரவு செய்யவில்லை. பிள்ளைகளையும் விடவில்லை.
குழந்தையோடு தனியாக வந்த நாட்களில் இதே மாதிரியான வேதனைகளை அவளும் அனுபவித்து இருக்கிறாளே!
இரவானதும், அவித்த பிட்டோடு மரக்கறிகளை ஒன்றாகப் போட்டுக் குழைத்து, அப்பளம் மிளகாய்ப் பொரியலையும் சேர்த்து கரண்டியும் போட்டு தாரகனின் கையில் கொடுத்து ரூபிணியோடு அவனின் அறைக்குள் அனுப்பிவிட்டாள்.
பிள்ளைகளிடம் அவளிடம் போல் மறுக்க முடியாதே.
“அப்பா வேண்டாம் எண்டு சொன்னாலும், அம்மா உங்களுக்கு எப்படி ஊட்டி விடுவேனோ அப்படி அப்பாக்குக் குடுங்கோ. கட்டில்ல கொட்டக்கூடாது!” என்று அனுப்பியவள், அவர்கள் வெளியே வரும்வரையில் அங்கே வாசலிலேயே நடை பயின்றாள்.
அவள் நினைத்தது போலவே சுட்டிக் குழந்தைகள் அவனை உண்ண வைத்துவிட்டே வந்தார்கள். வெறும் தட்டைக் கண்டதும் மனம் நிறைய, அவர்களின் உயரத்துக்குக் குனிந்து இருவரையும் இரு கைகளாலும் அணைத்து, “அப்பா சாப்பிட்டவரா?” என்று கேட்டாள்.
தான் ஊட்டியதைத் தாரகன் சொல்ல, “நானும் புத்து அப்பாக்கு..” என்று தன் மொழியில் ரூபிணியும் சொல்ல, “அச்சா செல்லங்கள்!” என்று அவர்கள் இருவர் கன்னங்களிலும் அழுத்தமாக முத்தம் பதித்து அப்படியே இரண்டு கைகளிலும் இருவரையும் அள்ளிக்கொண்டு போனாள். பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தவன் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டான்.
சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டான். அன்று முழுக்க மிருணாவின் ஆட்சி ஓங்கியிருந்த அவனிடத்தில் முற்றிலுமாக ஒருகணமேனும் வானதி ஆட்சி செய்திருந்தாள்.
குழந்தைகள் உணவோடு வந்ததும், தான் மறுத்ததும், அவர்கள் ஊட்ட முனைந்ததும் உண்மையாகவே ஆறுதலாக உணர்ந்தான் அதிரூபன். அதுவும் ரூபிணி அவன் சாப்பிடச் சாப்பிடத் தட்டை எட்டிப்பார்த்துக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காது உண்ண வைத்திருந்தாள். இதெல்லாம் யார் வேலை என்று எண்ணியவனுக்கு பெரும் இதமாகத்தான் இருந்தது.
பழையபடி முடங்கப்பார்த்த அதிரூபனைக் குழந்தைகள் தான் மீட்டெடுத்தனர் என்று சொல்லவேண்டும். அவர்களைத் தூண்டி விடுவது வானதி என்று தெரியாமலில்லை. அவன் அறைக்குள் வழமையாக இருக்கும் நேரத்தை விட அதிகமாக இருந்துவிட்டால் பிள்ளைகள் ஒருவர் பின் மற்றவராக வந்துவிடுவார்கள். அவன் பார்வை அவர்களிடம் சென்றுவிடும். பிறகு என்ன அவர்களே அவனை வெளியே இழுத்து வந்துவிடுவார்கள்.
அடுத்தவாரம் தமிழர் திருநாள் தைப்பொங்கல். தையல் வேலையை விட்டுவிட்டாலும் கையிலிருந்த காசில் தாரகனுக்குச் சிவப்பில் குட்டியாகக் கரைவைத்த வேட்டியம் சிவப்பு நிறத்தில் பட்டுச் சட்டையும் எடுத்திருந்தாள் வானதி. அதே சிவப்பில் சின்னவளுக்குத் துணி எடுத்துப் பட்டுப் பாவாடை சட்டை அவளே தைத்துக்கொண்டாள்.
அதிரூபனுக்கும் தாரகனைப் போல எடுப்போமா வேண்டாமா என்று பெரிய பட்டிமன்றமே நடத்திவிட்டு, ‘எடுப்போம். போட்டால் போடட்டும் இல்லாட்டி விடட்டும்’ என்று எடுத்துக்கொண்டாள்.
அவர்கள் மூவருக்கும் சிவப்பில் எடுத்தபோதும், கவனமாக அவளுக்கு வாங்கிய சுடிதாரில் சிவப்பே இல்லாமல் பார்த்துக்கொண்டாள். கலைவாணி அம்மாவுக்கும் அவருக்கு ஏற்ற விதத்தில் மெல்லிய நிறத்தில் ஒரு சாரி வாங்கி, சாரிபிளவுஸ் தானே தைத்துவைத்தாள்.
பொங்கலுக்கு இவள் தயாராவதைக் கவனித்துவிட்டு, “பொங்கல் வருதப்பு! இந்தவருசமாவது நல்லது நடக்கோணும். பொங்குவம்!” என்றார் கலைவாணி.
அவனும் சம்மதித்ததும் சட்டென்று வீட்டுக்குள் தைப்பொங்கல் கலகலப்பு தொற்றிக்கொண்டது. வீடு முழுக்க இழுத்துப்போட்டு துப்பரவு செய்தாள் வானதி. கலைவாணிக்கு அந்தளவுக்கு முடியாததால், “சும்மா கஷ்டப்படாம விடம்மா!” என்று சொன்னதைக் காதில் விழுத்தவேயில்லை அவள்.
ஒருநாள் மாலை வேலை முடிந்து வந்தவன், வரவேற்பறையின் நிறமே மெல்லிய ஊதாவுக்கு மாறிப்போயிருக்க, அதோடு, புதிதாக வண்ணப் படங்கள் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டு இருக்கவும் அப்படியே நின்றுவிட்டான்.
‘காலைல தானே இந்த வீட்டில இருந்து போனோம்? என்னடா இது?’ என்று அவன் பார்க்க, மகன் முகத்தைப் பார்த்து கலைவாணிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“வானதியின்ர வேலை தம்பி. வேண்டாம் எண்டு சொல்லியும் கேக்காம சின்ன வண்டுகள் ரெண்டையும் வச்சுக்கொண்டு செய்தவள்!” என்றார் புன்னகை முகமாக. அவருக்கும் அவளின் உற்சாகம் தொற்றியிருந்தது.
தை பிறந்தால் வழி பிறக்கும் தானே!
“உங்க எல்லாருக்கும் சக்கரைப்பொங்கல், எனக்குக் கொஞ்சமா வெண்பொங்கல். அப்படியே சாம்பாரும் வச்சுவிட்டா மத்தியானத்துக்கும் சாப்பிடலாம். வானதி மோதகத்துக்கு வாங்கின பயறு எங்கயம்மா? வறுத்து வச்சுவிட்டா சுகம்..” என்றபடி நகர்ந்தார் அவர்.
குழந்தைகளும் ஓடிவந்து அவர்கள் செய்த வேலைகளைக் கதை கதையாகச் சொல்ல, அவன் முகம் புன்னகையைப் பூசிக்கொண்டது.
‘என்ர குடும்பத்துக்காக இவ்வளவும் செய்றாளே, புது உடுப்பு எடுப்போம்’ என்று எண்ணித் தாயிடம் கேட்க, “அதெல்லாம் வானதி எடுத்திட்டாள் தம்பி!” என்றார் அவர்.
‘எனக்குமா?’ அந்தப் பக்கமாய் வந்தவளிடம் கேள்வியாக அவன் நோக்க, ஏனோ முகம் சூடாவது போலிருந்தது அவளுக்கு. வேகமாக அறைக்குள் விரைந்து நடந்தவள், தாரகனைக் கூப்பிட்டு அவனிடம் கொடுத்துவிட்டாள்.
வாங்கிப் பார்த்தான். பட்டுச் சட்டையைப் பிரித்து அளவு பார்க்க, அவனுடைய சைசில் சரியாக எடுத்திருந்தாள் வானதி.
ஏதும் சொல்வானோ என்று காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தாள் வானதி. மடியில் வைத்துக்கொண்டு இருந்தானே தவிர ஒன்றும் சொல்லவில்லை.


