திகைத்துப்போனார் கலைவாணி. வானதி அவருக்கு நன்றாகக் கொடுத்தபோது, அவருக்குத் திருப்தியாகத்தான் இருந்தது. பணம் கொடுத்துப் பழக்காதே என்று மகனிடம் சொன்னால் அவன் காதிலேயே விழுத்துவதில்லை. இவளாவது ஒரு முடிவு கட்டட்டும் என்று பார்த்திருக்க, அவளைக் கூட்டிக்கொண்டு போகப்போகிறேன் என்று அவர் சொன்னதும், பயந்துபோய் மகனைப்பார்த்தார்.
“வந்தா கூட்டிக்கொண்டு போங்க!” அமர்த்தலாகச் சொன்னான் அதிரூபன்.
“என்ன சொல்லி மிரட்டி அவளை இந்த வீட்டுக்க அடைச்சு வச்சிருக்கிறாய்? உன்ர மிரட்டலுக்கெல்லாம் அவள் பயப்படுவாள். நானில்லை. போலீஸோட வருவன்! சட்டப்படி என்ன செய்யவேணுமோ எல்லாம் செய்வன்! உன்ர குடும்ப மானமும் பிள்ளைட பிறப்பும் சந்தி சிரிக்கும். முதல் என்ன உரிமைல அவளை இந்த வீட்டில வச்சிருக்கிறாய் நீ? வெளில படிச்ச மனுசன் உள்ளுக்கு.. ” அவர் என்ன சொல்ல வருகிறார் என்று உணர்ந்து வேகமாகத் தாயைத் திரும்பிப் பார்த்தான்.
அவரும் அதை உணர்ந்தவராக துடித்துப்போய் அவனைப் பார்க்க, அதற்குமேல் கதைக்க விடாமல் அவரை ஒரே இழுப்பாக இழுத்துக்கொண்டு வெளியே நடந்தான்!
“விடு..! விடுடா என்னை!” அவர் திமிரத் திமிர இழுத்துச் சென்று வீட்டின் கரைச் சுவரோடு கொண்டுபோய்ச் சாத்தினான்.
“என்ன? படிச்சவன் புரஃபஸரா இருக்கிறான். மானம் மரியாதைக்கு அஞ்சி சண்டித்தனத்துக்கு வரமாட்டான் எண்டு நினச்சு துள்ளுறீங்களா? ஒரு வார்த்த மாறி வந்திச்சு.. தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவன்!” என்றவனின் உறுமலில் சர்வமும் அடங்கி நின்றார் கதிரேசன்.
“என்ர மகனைப் பெத்தவள் எனக்கு யாரு எண்டு தெரியாதா? என்ர பிள்ளைகளுக்கு அம்மா. என்ர மனுசி! இது எண்டைக்கும் நல்லா நினைவு இருக்கோணும். இனியும் அவளைக் குத்துற மாதிரி ஒரு வார்த்த வந்திச்சு… அவளின்ர அப்பா என்றுகூடிப் பாக்கமாட்டன்! ஓடிப்போய்டுங்க!” அவன் உறுமிய உறுமலில் அடுத்த கணமே விட்டால் போதுமென்று ஓடியிருந்தார் கதிரேசன்.
உடம்பு நோகாமல் வாழ்ந்தவர், திடகாத்திரமான அவனிடம் வாங்கிக்கட்டி உடம்பைப் புண்ணாக்கத் தயாராயில்லை.
தலையைக் கோதிக்கொண்டு வீட்டின் உள்ளே வந்தவன், அங்கேயே அமர்ந்திருந்த தாயிடம், “எங்கம்மா வானதி?” என்று கேட்டான்.
“வெளில வரவேயில்லை. அழுதுகொண்டே இருக்கிறாள்!”
“இவளுக்கு விசர்! அந்தாள் எதையாவது கதைச்சா அழுவாளா!” என்றபடி, அவள் வந்தபிறகு போகாத தாயின் அறைக்குள் முதன்முறையாக நுழைகிறோம் என்கிற உணர்வேயில்லாமல் நுழைந்தான்.
அழுதழுது சிவந்துபோயிருந்த முகத்துடன் இருந்தவள் இவனை எதிர்பாராததில் அதிர்ந்து பார்த்தாள். ஒரு வினாடிதான். முகம் கன்ற சட்டென்று திரும்பி நின்றுகொண்டாள்.
“இப்ப என்ன நடந்தது எண்டு அழுறாய்?” கோபமாக அதட்டினான் அவன்.
அவனே அவளை ஒருவார்த்தை சொன்னதில்லை. அவர் சொன்னால் அழுவாளா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா? அவளின் அழுகை அவனை அசைத்துப்பார்த்தது!
அவளோ அவன் முகம்கூடப் பார்க்க முடியாமல் அவமானத்தில் குறுகிப்போய் நின்றாள். பிள்ளை பெற்றுத் தருகிறேன் என்றுவிட்டு ஓடி வந்துவிட்டாள். அப்பாவோ இதுதான் சாக்கு என்று ஒட்டுண்ணியாக அவனிடம் பணம் கறக்கிறார். போதாதற்கு அவளும் அவன் வீட்டில் வந்து குந்திக்கொண்டு இருக்கிறாள். தாரகனால் அவளையும் அவன் சகிக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் பொறுப்பான் அவனும்? மிக மிகக் கேவலமாகத் தன்னை உணர்ந்தாள் வானதி.
“எப்பவும் என்னால உங்களுக்குப் பிரச்சனைதான் இல்லையா?” தொடர்ந்து கதைத்தால் உடைந்துவிடுவோம் என்று தெரிய உதட்டைப் பல்லால் கடித்துக்கொண்டாள்.
“விசரி மாதிரிக் கதைக்காத. உன்னாலதான் இண்டைக்கு நான் நிம்மதியா இருக்கிறன். பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாம வேலைக்குப் போறன். அம்மாவைப் பார்க்க நீயிருக்கிறாய் எண்டுறது எவ்வளவு பெரிய நிம்மதி தெரியுமா? என்ர பிள்ளைகள் இண்டைக்கு துடிப்பா, ஓடியாடி, சந்தோசமா விளையாடி மற்றப்பிள்ளைகள் மாதிரி இருக்க நீதான் காரணம். இதெல்லாம் தெரியாம சும்மா நீயா ஒண்ட நினைச்சுக் கவலைப்படாத. உன்ர அப்பாவைப்பற்றி என்னை விட உனக்குத்தான் நல்லாத் தெரியும். அவர் சொன்னதையெல்லாம் பெருசா நினைக்காத!” அவனுடைய வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலை அவளுக்குக் கொடுத்தது. சுமையாக இருக்கிறோமோ என்றெண்ணி மருகியவளுக்கு துணையாகத்தான் இருக்கிறாய் என்று அவன் உணர்த்தியபோது, மனம் கொஞ்சம் ஆறியது.
கண்களைத் துடைத்துக்கொண்டு அவன் புறமாகத் திரும்பினாள்.
“நான் குடுக்கவேணாம் எண்டு சொல்லியும் ஏன் காசு குடுத்தீங்க? நீங்க சொன்ன பேச்சு மாறாம காசு தந்திட்டிங்க. ஆனா நான்..” சட்டென்று பேச்சை நிறுத்தினாள். “பிறகும் ஏன் குடுக்கோணும்? அவருக்கெல்லாம் எவ்வளவு குடுத்தாலும் கட்டாது. இனிக் குடுக்கவேணாம். அக்கா கட்டிட்டாளாம். நானும் இல்ல. சின்னக்கா மட்டும் தான். அவளுக்காவது பொறுப்பா அவரே ஏதாவது செய்து கட்டி வைக்கட்டும்!” என்றாள் அவள்.
“அது.. சரியா வராது வானதி.” அவள் மீதே பார்வையிருக்கச் சொன்னான் அவன்.
அந்தப்பார்வை என்னவோ செய்தது அவளை. ஒரு அறைக்குள் நின்று அவனோடு கதைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதும் அப்போதுதான் பிடிபட, உள்ளம் தடுமாற ஆரம்பித்தது. காட்டிக்கொள்ளாமல் அவன் முகம் பார்த்துக் கதைக்க முயன்றாள்.
“ஏன் சரி வராது? என்ன உரிமைல கேட்டு வாறார். என்னத்துக்காக நீங்க குடுக்கிறீங்க?”
படபடத்தவளின் முகத்தையே பார்த்தான் அவன்.
“என்ன எண்டு சொல்லுங்கோவன்!”
“என்ர மனுசின்ர குடும்பத்த எப்படியோ போகட்டும் எண்டு என்னால விடேலாது வானதி!” நிதானமாகச் சொன்னவன், அதிர்ந்து நின்றவள் தோற்றத்தை முழுமையாக உள்வாங்கியபடி அங்கிருந்து நகர்ந்தான்.