தன்னுடைய அறையிலிருந்த மிருணாவின் முன் நின்றிருந்தான் அதிரூபன். விழிகள் அவள் மீதிருந்தாலும் சிந்தனைகள் வானதியிடம் சிக்கியிருந்தன. சற்றுமுன் எதையும் வேண்டுமென்றும் சொல்லவில்லை, விருப்பமில்லாமலும் சொல்லவில்லை. அவளின் கண்ணீர் அவனை அசைத்தது உண்மை! கதிரேசனிடமும், அவளிடமும் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அத்தனையும் நெஞ்சிலிருந்து வந்தவை. வானதியை அவன் உள்ளம் மனைவியாக ஏற்றுக்கொண்டே விட்டது! அதற்காக மிருணா அவனுடையவள் இல்லை என்று ஆகிடாதே!
“செல்லம்மா! நீ எப்படி என்ர இதயத்திலே இருந்து நீங்கமாட்டியோ, அதேமாதிரி அவளும் இனி நீங்கமாட்டாள். என்னைவிட என்னைப்பற்றி உனக்குத்தான் நல்லாத் தெரியும். உன்ர மனுசன் உன்னைத்தவிர வேற எந்தப் பொம்பிளையையும் ஏறெடுத்துப் பாக்கிறவன் இல்ல. ஆனா, அவளின்ர கடிதத்தை படிச்ச நாள்ல இருந்து அவளைப் பற்றியும் யோசிச்சிருக்கிறன், கவலைப்பட்டு இருக்கிறன், பிள்ளையோட என்ன பாடு படுறாளோ எண்டு தவிச்சு இருக்கிறன். அதெல்லாம் பிழையான எண்ணத்தோட இல்ல, என்ர பிள்ளையைக் கொண்டுபோனவள் என்னையும் சேர்த்து மனதுல கொண்டு போயிருக்கிறாளே என்ற கவலைல யோசிச்சது. ஆனா, அவளைப்பற்றின எண்ணம் அண்டிலிருந்து எனக்குள்ள இருந்துகொண்டே தான் இருந்திருக்கு. அவளுக்கும் எல்லாமே நான்தான். இன்னொரு வாழ்க்கையை தேடப்போறது இல்ல. அப்படி இருந்தும் நான் வேண்டாமாம். என்ர குடும்பத்துக்காக எல்லாம் செய்தாலும் உறவு மட்டும் வேண்டவே வேண்டாம் எண்டு ஒதுங்கிப்போறவள் மேல பாசம் தானா வந்திட்டுது என்றதும் உண்மைதான். சண்டை சச்சரவு எண்டாலே ஒதுங்கிப்போற நானே அவளின்ர அப்பாட சட்டையை பிடிச்சிருக்கிறன் எண்டால், அவளுக்காகத்தான்.” என்றவன் மிருணாவைக் கையில் எடுத்துக்கொண்டான்.
“இனியும் அவளை யாரோவா இந்த வீட்டில வச்சிருந்து எல்லாரும் கேள்வி கேக்கிற இடத்துல நிப்பாட்ட மனமில்லை செல்லம். எனக்காக அவளின்ர அப்பாட்ட சண்டை பிடிச்சவள் தனக்காக ஒரு வார்த்தை கூடிக் கதைக்கேல்ல. அப்ப அவளை நானும் நல்லா வச்சிருக்க வேணும் தானே.” என்றவன் குறும்புடன் புன்னகைத்துக்கொண்டிருந்தவளை நெஞ்சோடு ஒருமுறை ஆத்மார்த்தமாக அணைத்தான். அவளை சுவாமி அறையில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தான்.
மனதிலோர் தெளிவு! தன் உள்ளமும் என்ன என்று அறிந்த உணர்வு!
வானதியின் கோபம், அதைத் தான் ரசித்தது, அவளின் கண்ணீர், அதைக் கண்டதும் கோபப்பட்டது என்று நினைவுகள் நடந்தவற்றை எண்ணிச் சுழற போய்க் குளித்துவிட்டு வந்தான்.
அதுவரையிலும் அதிர்ச்சி தீராமல் நின்ற வானதி, புயலென அவனுடைய அறைக்குள் நுழைந்தாள். அதுநாள் வரை மிருணா ஆட்சி செய்த அவனுடைய உள்ளத்தில் எப்படி வானதியின் ஆட்சி வந்ததோ, அப்படியே மிருணா வெளியேறிய அந்த அறைக்குள் வானதி நுழைந்திருந்தாள்.
ஆச்சரியமாகப் புருவங்களை உயர்த்தினான் அதிரூபன்.
“இங்க பாருங்கோ! கண்டதையும் இனிக் கதைக்க வேண்டாம், சொல்லிபோட்டன்! நீங்க மிருணாளினியின்ர கணவர். அத மறந்தா நீங்க செய்றது துரோகம். உங்களை உயிரா நேசிச்ச அவவுக்குத் துரோகம் செய்யாம நல்ல மனுசனா இருங்கோ!” உத்தரவுபோல சொல்லிவிட்டு அதே வேகத்தில் திரும்பினாள்.
ஒரே எட்டில் அவள் கையைப் பற்றிப் பிடித்தான் அதிரூபன். அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது அவளுக்கு. “புயல் மாதிரி நீயா வந்த, என்னென்னவோ சொன்ன, நீயா போறாய்? என்ன விசயம்?” உதட்டில் முளைத்துவிட்ட சிரிப்புடன் கேட்டான்.
அவளின் பேச்சு செயல் எல்லாம் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது.
“முதல் கைய விடுங்கோ!” பதறிக்கொண்டு சொன்னாள் அவள். சற்றுமுன்னர் அவன் சொன்ன விசயத்தால் உண்டான அதிர்ச்சியே அவளில் இருந்து முற்றிலுமாக நீங்கவில்லை. அதற்குள் கையைப் பிடித்தால்?
“ஏன்?” நிதானமாகக் கேள்வி எழுப்பியவன், அதைவிட நிதானமாகப் பிடித்திருந்த கையைத் தன்னை நோக்கி இழுத்து அவளைத் தன்னருகே கொணர்ந்தான்.
“சொல்லு ஏன்?”
என்ன கேள்வி இது? அவளுக்குப் படபடவென்று அடித்துக்கொண்டது. அடிவயிற்றில் ஏதோ கலவரம். இவ்வளவு அருகே அவன் கண்களைப் பார்த்து எப்படிக் கதைப்பது?
“சொல்லு, இப்ப கையப் பிடிச்சதுக்கே இந்தப் பாடு படுற நீ, அண்டைக்கு நான் இன்னொருத்திட மனுசன் எண்டு தெரிஞ்சும் என்னை மனதில நினைச்சது சரியா.” என்றான் நிதானமாக.
திகைத்துப்போனாள் வானதி. அப்போ தவறாமல் அவனுடைய கைக்கு அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்துதான் இருக்கிறது!
“அது.. சும்..” தன் ரகசியம் எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்று அறிந்ததில் வார்த்தைகள் தந்தி அடித்தன.
இன்னும் அருகே அவளைக் கொணர்ந்திருந்தான் அவன். “அழுதழுது அந்தக் கடிதம் சும்மாவா எழுதின?”
கூர்மையான அந்த விழிகள் நெஞ்சுக்குள் புகுந்து ஆழ்மனதின் ரகசியங்களை எல்லாம் அலசுவது போலிருந்தது. அது வேண்டாமே அவளது விழிகள் அவனிடம் இறைஞ்சின.
அவனோ விடுவதாயில்லை. “சொல்லுறதை என்ர முகத்தைப் பாத்துச் சொல்லு!” என்றான்.
விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் முகம் இன்னுமின்னும் அவளருகே வருவது போலிருக்க, “முதல் விடுங்கோ நீங்க..” என்றாள் அவசரமாக.
அவனிடமிருந்து தள்ளி நின்றால் மட்டுமே அவளால் சிந்திக்க முடியும். அவனது அருகாமை பனிக்கட்டியாக மாறி அவளை உறைய வைத்து, அந்தக் கண்களுக்குள் இழுத்துக்கொள்வது போலிருந்தது.
“நீ சொல்லு நான் விடுறன்..” இதமானவனாகத் தெரிந்தாலும் அவனுக்குள்ளும் இருக்கும் பிடிவாதத்தை இரண்டாவது முறையாக உணர்கிறாள் வானதி!
“ரூபன்!”
அந்த அழைப்பில் அவன் விழிகள் மின்னியது. அவன் பிடி இறுகியது. அவர்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைத்தான்.
“என்ன உரிமைல என்ர பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாய்? அதுவும் ரூபன் எண்டு. அவளே அப்படிக் கூப்பிட்டது இல்ல.” மனதுக்கு நெருக்கமான குரலில் அவன் கேட்டபோது அவள் இதயத்தில் நடுக்கம் ஆரம்பித்திருந்தது.
“இனிக் கூப்பிடேல்ல, விடுங்கோ.” அவள் அவனிடமிருந்து தப்பித்துப் போக முயன்றாள். அவன் விடவில்லை.
“விடுங்கோ விடுங்கோ எண்டு சொல்லுறியே என்னை விட்டுட்டு எங்க போகப்போறாய் வானதி? நான் இல்லாம இருப்பியா?” அந்தக் கேள்வியில் அவளின் அசைவுகள் எல்லாம் நின்றது.
அவனிடம் விடுபட முயன்றுகொண்டிருந்தவள் இயலாமையோடு அவனைப் பார்த்தாள்.
நீரில்லாமல் மீன் வாழுமா? காற்றில்லாமல் ஜீவன் சுவாசிக்குமா? அவனில்லாமல் அவள் எப்படி?அவன்தான் அவளுக்கு எல்லாம். ஆனால், அவனோடு ஒன்ற முடியாமல் முணுமுணுக்கும் இதயத்தை என்ன செய்வாள்? விழிகளில் நீர் கோர்த்தது.
“தெரியாது! ஆனா உங்களோடையும் இருக்கேலாது!”
“ஏன்? ஏன் இருக்க முடியாது? என்ர மனுசியா என்ர பிள்ளைகளுக்கு அம்மாவா ஏன் இருக்க ஏலாது உன்னால?”
பதிலற்று அவள் உதட்டைக் கடித்துத் தலைகுனிய
நாடியைப் பற்றித் தன் முகம் நோக்கி உயர்த்தினான்.
“அந்தக் கடிதத்தில நீ எழுதி இருந்தது எல்லாமே சும்மாவோ? ‘உள்ளம் சொல்லிக்கொண்டா ஒருவரை மனதில நினைத்துவிடுகிறது?’ எண்டு கேட்டிருந்தியே, அது? அந்தப் பாட்டு?” அவனின் ஒவ்வொரு கேள்வியிலும் அவளின் கட்டுப்பாடுகள் ஆட்டம் காணத் துவங்கியிருந்தது.