“நீ வச்சிருக்கிற இந்தப் பொட்டு? யாரை நினச்சு வச்சிருக்கிறாய்?”
“ரூபன் ப்ளீஸ்..!” கண்ணீருடன் கெஞ்சின அவள் உதடுகள்.
“விடு விடு எண்டுறவள் திரும்பத் திரும்ப ஏனடி ரூபன் ரூபன் எண்டு சொல்லுறாய்? அத சொல்லேக்க எவ்வளவு உரிமையா சொல்லுறாய் எண்டு உனக்கு விளங்குதோ இலையோ எனக்கு விளங்குது. பிறகு என்னத்துக்கு விடச்சொல்லுறாய்?”
அவன் விடுவதாக இல்லை. இன்றோடு அவள் மனதிலிருப்பதை வெளியே கொண்டுவந்தே ஆகவேண்டும்!
“நானும் இல்லாம குழந்தையும் இல்லாம உயிர்வாழ மாட்டன் எண்டு சொன்னியே? அது பொய்யா?”
“ரூபன் ப்ளீஸ்.. இந்தக் கதையே வேண்டாம்..” அவன் முகம் பார்க்க மறுத்தபடி சொன்னாள்.
அவள் கழுத்தில் கிடந்த தாலியை அவன் விரல்கள் பற்றியது. பதறிப்போய்ப் பார்த்தாள் அவள். பார்வையால் கூட அத்து மீறாதவன். இன்று என்ன செய்கிறான்?
“இதை யாரை நினச்சுப் போட்டிருக்கிறாய்?”
‘ஐயோ விடுகிறான் இல்லையே..’ உள்ளம் பரிதவித்தது.
“ஒருத்தரையும் நினைச்சுப் போடேல்ல!” அழுகைவெடிக்கச் சொன்னாள்.
“அப்ப கழட்டவா?”
“ஐயோ!” பதறிப்போய் அவன் கையோடு சேர்த்துப் பற்றினாள் அவள். அவளே போட்டுக்கொண்டாலும், அது அவனை எண்ணி அணிந்தது. அதைக் கழட்டுவதென்றால்? கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது அவளுக்கு.
“நான் இல்லாம நீ இருப்ப எண்டால் போ! எனக்கு என்னவோ இனி நீ இல்லாம நான் இருப்பன் மாதிரி தெரியேல்ல!” அதுவரை நேரமும் அவளைப் பற்றியிருந்தவன் விட்டபோது, ‘விடுங்கோ விடுங்கோ’ என்று விடுபடப் போராடியவள்
முற்றிலுமாக உடைந்து அவன் மார்பிலேயே விழுந்து கதறித்தீர்த்தாள்.
“உங்களைச் சந்திப்பன் எண்டு சத்தியமா நினைக்கவே இல்லை ரூபன். அந்தத் தைரியத்திலதான் அதையெல்லாம் எழுதினான். நானும் வேற யாருட்டத்தான் சொல்ல முடியும் சொல்லுங்கோ? உங்களிட்ட சொன்னாலாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கும் எண்டு நினைச்சன். நாங்க சந்திக்கவே மாட்டம் என்ற தைரியம் வேற. கடைசில..”
“சரி! இப்ப என்ன? என்னட்டத்தானே சொன்னாய். விடு!” ஆறுதலாய் அவள் முதுகை வருடியபடி சொன்னான்.
“தாரகனை நான் உங்களிட்ட தந்திருந்தா அவவுக்கு இன்னொரு பிள்ளை பெறவேனும் எண்டுற ஆசை வந்திருக்காது. அவவும் உயிரோட இருந்திருப்பா. உங்களுக்கும் இவ்வளவு துன்பம் வந்திருக்காது. நீங்க அவ இல்லாமல் துடிச்சு துடிப்பை நான் பாத்திருக்கிறன். அது எல்லாம் என்னாலதான்.. கடவுளே அவவின்ர சாவுக்கு நானே காரணமா இருந்திட்டு என்னெண்டு அவவின்ர இடத்துக்கு வந்து என்னால வாழமுடியும் சொல்லுங்கோ?” கண்ணீருடன் தன் முகம் பார்த்து நியாயம் கேட்டவள் முகம் மனதை வதைத்தது அவனுக்கு.
“அது விதி வானதி. இப்படியெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்கு. அதுக்கு நீ காரணமில்லை!” அவன் சொன்ன எந்த ஆறுதலும் அவளிடம் எடுபடவில்லை.
“இல்ல. மிருணாவ நானே கொண்டுட்டன். உங்கட வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டன். நான் நினைக்கேல்ல ரூபன். இப்படியெல்லாம் நடக்கும் எண்டு சத்தியமா நினைக்கேல்ல. என்னாலதான் எல்லாம்..!” எவ்வளவு ஆறுதல் சொல்லியும் கேட்காமல் தன்னையே வருத்திக்கொண்டு துடித்தவளைக் கண்டு கோபம்தான் வந்தது.
“போதும் வானதி!” அவன் போட்ட அதட்டலில் சரக்கென்று கண்ணீர் நிற்க, அழுத முகத்தோடு அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள்.
கண்ணீரில் நனைந்த விழிகள். அழுததில் சிவந்துவிட்ட முகம், அப்போதும் துடித்த உதடுகள்.. நெஞ்சம் உருக, “ப்ச்! என்னம்மா நீ!” அவள் முகத்தைத் தன் கைகளால் துடைத்துவிட்டான்.
“ரூபிணி உருவான நேரம் வேண்டாம் எண்டு சங்கரி டாக்டர் சொல்லியும் வேணும் எண்டு பிடிவாதமா நிண்டது மிருணா. இயற்கையிலேயே அவளின்ர உடம்பு பலகீனமா இருந்ததும் ஒரு காரணம். அதுக்கும் நீயா காரணம்?” என்றான் அவளையே நோக்கி.
தலை தானாக மறுப்பாக அசைய, “பிறகு? அதெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்கு! நடந்திட்டுது! முடிந்ததைக் கதைக்காத! இப்ப நீ நான் நமக்கு ரெண்டு பிள்ளைகள். அதை மட்டும் நினை!” என்றான் அதட்டலாகவே.
அவள் தலையும் வேகமாகச் சரி என்று ஆட, அவன் உதட்டினில் சின்னதாய்ப் புன்னகை அரும்பிற்று! “எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுறாய்?” குறும்புடன் கேட்டான்.
‘அதுதானே.. எதுக்கு ஆட்டினோம்?’ என்று அவளும் குழம்ப, அது அவள் விழிகளிலும் தெரிய சிரிப்பு வந்தது அவனுக்கு.
ஆசையோடு அவளையே பார்த்தான். அவன் கண்களை எதிர்கொள்ள இயலாமல் அழுத முகத்தில் சின்ன வெட்கப் புன்னகை பூத்தது. பார்வையைத் தளைத்துக்கொண்டவளின் முகத்தை மென்மையாகப் பற்றி நெற்றியில் இதழ்களைப் பதித்தான்.
நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தாள் வானதி! நெஞ்சில் நேசம் சுரக்க அணைத்துக்கொண்டான்.
அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்திருக்கையில் மிருணாவின் நினைவுகள் வராமலில்லை. இப்படித் தன் கையில் கரைந்தவள் கற்பூரமாகக் கரைந்து காற்றோடு காற்றாக மறைந்துபோனாளே என்கிற வேதனைதான் வந்தது.
ஒருத்தியை இழந்துவிட்டான். மற்றவளையாவது காலம் முழுக்கக் காதலோடு கொஞ்சி வாழவைக்கும் ஆவலும் எழுந்தது. அந்த ஆவல் கொடுத்த உந்துதலோடு மீண்டும் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தபோது, ஏதோ ஒரு வித்தியாசத்தை வானதி உணர்ந்தாள்.
இதுவரை நேரமும் இல்லாத ஒரு உணர்வு.. தேகமெங்கும் சிலிர்க்கவைத்துக்கொண்டு உயிரைச் சென்று தொட்டது. நிமிர்ந்து அவள் பார்க்க, கசிந்த விழிகளில் கனிவோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
‘என்ன?’ அந்தப் பார்வை உயிரைத் தொடக் கேட்டாள்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான் அவன்.
அன்றைக்குப் பிறகெல்லாம் அவன் முன்னாலேயே அவள் வருவதில்லை. அவன் கண்களைச் சந்திக்கவே மறுத்தாள். அவனுக்குச் சிரிப்பாயிருந்தது. பிள்ளைகளை அரணாக வைத்து அவனையும் நெருங்கவிடாமல் ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால், அவனுடைய பொருட்கள் எல்லாம் இது வேண்டும் என்று நினைக்கமுதல் அவனுக்காகக் காத்திருந்தது.
‘இவளை இப்படியே விட்டா சரிவராது. காலம் முழுக்க ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவாள்.’
அன்று காலையில் குளித்துவிட்டு வந்து பல்கலைக்கழகத்துக்குத் தயாரானவேளையில், “வானதி!” என்று சத்தமாக அழைத்தான்.
அவளுக்குப் பக் என்றது. வேகமாகத் திரும்பிக் கலைவாணி அம்மாவைப் பார்த்தாள்.
அவருக்கும் பெரும் சந்தோசம். என்றாலும், ஒன்றையுமே உணராதவர் போலத் தாரகனுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தார்.
‘கடவுளே.. ஆன்ட்டியும் இருக்கேக்க இப்படிக் கூப்பிட்டா என்ன நினைப்பா?’ தனக்கும் கேட்கவில்லை என்பதுபோல, படபடக்கும் நெஞ்சோடு வேலைகளைப் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தாள்.
சற்றுநேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “வானதி! கூப்பிட்டது கேக்கல்லையா? வந்திட்டுப் போ!” என்று மீண்டும் சத்தமாகக் குரல் கொடுத்தான் அவன்.