கோவிலில் வைத்து எளிமையாகத் திருமணம் முடிந்திருந்தது. அவளின் குடும்பம், அக்காக்கள், சங்கரி எல்லோருமே வந்திருந்தனர்.
சங்கரிக்கு மிகப்பெரிய மனநிறைவு. சரி பிழை யார் மீதிருந்தாலும், ஒரு பெண்பிள்ளையைத் தனியாக நிற்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கிவிட்டோமோ என்று எண்ணிக் கலங்கியவர் இப்போதுதான் நிம்மதியானார். குழந்தைகளும் ஆளுக்கொரு திசையில் சிதறாமல், அவளும் நிர்கதியாக நிற்காமல் எல்லோரையும் ஒன்றாக இணைத்த பரவசம் அவருக்கு. மிருணாவின் இழப்பு வேதனைதான். ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான். ஆனால், நம்மையும் மீறிய ஒன்றினால் நடாத்தப்படும் எந்தச் செய்கைக்கும் யார் பொறுப்பாவது?
அன்று அதிரூபன் போட்ட போட்டில் அவனருகில் பெட்டிப்பாம்பாக அடங்கினாலும், மற்றும்படி தன் குணத்தையே காட்டிக்கொண்டிருந்தார் கதிரேசன்.
“அம்மா, காசு சும்மா சும்மா அனுப்பேலாது. மாதச் செலவுக்கு கணக்குப் பாத்துத்தான் தருவன். அதைக் குடிச்சுக் கெடுப்பன் எண்டு நிண்டார் எண்டு வைங்க, நீங்க வெளிக்கிட்டு சின்னக்காவையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்க. அவரின்ர பிழைப்பை அவரே பாக்கட்டும். தானும் உழைக்கமாட்டாராம், கொடுக்கிற காசையும் நாசமாக்குவார் எண்டால் சரிவராதம்மா! கொஞ்சநாளைக்குத் தனியா விட்டா எல்லாரும் திருந்தி வழிக்கு வருவீனம்.”
கணவன் அருகில் நிற்கிற தெம்பில், தகப்பனையும் வைத்துக்கொண்டு வானதி தாயிடம் சொல்ல, உள்ளே திகில் பரவினாலும் நல்லபிள்ளையாக பெட்டிப் பாம்பாக அடங்கி நின்றிருந்தார் கதிரேசன்.
அதிரூபன் வேறு அடிக்கடி அவரைப் பார்வையால் மேலும் கீழுமாய் அளந்துகொண்டிருந்தான்.
திருமணமாகி இரண்டு நாட்களாகியும் கலைவாணியோடுதான் உறங்கிக்கொண்டிருந்தாள் வானதி. தாய் வீட்டினரை தங்கிப்போகச் சொன்னதில், அவளின் கட்டிலை அவனது அறைக்கு மாற்றவில்லை.
திருமணம் நடந்த இரவு, “பிள்ளைகளை நாங்க பாப்போம், நீ அங்க போம்மா!” என்று நாசுக்காகச் சொல்லிப்பார்த்தார் கலைவாணி.
“இல்ல மாமி. நான் இங்கேயே படுக்கிறன்.” என்றுவிட்டாள் வானதி.
பக்குவப்பட்ட பெண் அவள். அவன் மீது நேசமிருந்தாலும், தாலி காட்டுவதற்காகவே காத்திருந்ததுபோல் அவனிடம் ஓடுவதில் விருப்பமில்லை. அதில் ஆர்வமும் இல்லை. அதெல்லாம் அதன் பாட்டுக்கு இயல்பாக நடப்பதைத்தான் மனம் விரும்பியது.
மகனிடமும் சொல்ல, “அம்மா, அதுதான் தாலி கட்டியாச்சு எல்லோ. இனியும் மனதைப்போட்டுக் குழப்பமா நிம்மதியா இருங்கோ. நாங்க எங்கயும் போகப்போறேல்ல!” என்றுவிட்டான் அவன்.
‘உண்மைதானே! இந்தளவுக்கு அவர் சொன்னதே போதும். அது அவர்களின் அந்தரங்கம். அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். பக்கத்தில தானே இருக்கப்போறன்.’ என்று அவரும் விட்டுவிட்டார்.
எல்லோரும் போனபிறகும், அவள் அவர் அறையிலேயே தங்க, அவனும் வேலைக்கு ஆயத்தமாக, “தம்பி, இந்தக் கட்டிலை உன்ர அறைக்கு மாத்து!” என்றார் அவர்.
எதுவாக இருந்தாலும் கணவன் மனைவி ஒன்றாக இருந்து ஒன்றாகப் பேசிச் செய்யட்டும் என்பது அவர் எண்ணமாயிருந்தது!
குறும்புடன் அவளிடம் பாய்ந்த அவன் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் சமையலறைக்குள் நழுவியிருந்தாள் வானதி.
சற்றுநேரத்தில் அவனுடைய வலிய கரங்கள் பின்னிருந்து அணைக்க, “மாத்தவா?” என்றான், காதுக்குள்.
ஒருகணம் உதட்டைக் கடித்தவளுக்கு முகம் நிமிர்த்தவே முடியவில்லை. பின்னிருந்து அணைத்தபடி, காதோரமாய் விளையாடிக்கொண்டிருந்தவனுக்கு தன் நிலை தெரியவராது என்பதில், “மாத்துங்கோ.. அப்பதான், பிள்ளைகளும் அப்பாவோட படுக்கலாம்..!” என்றாள் வேண்டுமென்றே.
“ஆகா! பிள்ளைகள் மட்டும் தான் அப்பாவுக்குப் பக்கத்தில படுக்கவேணுமோ? அம்மாக்காரிக்கு அந்த ஆசையெல்லாம் இல்லையோ?”
அவனுடைய கேள்வியில் அவன் கைகளுக்குள்ளேயே திரும்பிநின்று முறைத்தாள் வானதி.
“அதுசரி! உன்னை நான் தொடவே இல்ல. பிறகு எப்படி என்ர ரெண்டு பிள்ளைகளுக்கும் அம்மா ஆனாய்?” சந்தேகம் கேட்டான் அவன்.
“ரூபன்!” அதட்டியவளுக்கு முறைக்க முடியாமல் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. வெட்கமே இல்லாமல் என்ன கேள்வி கேட்கிறான்?
“நீங்க ஒரு வாத்தி. வாத்தி மாதிரியா கதைக்கிறீங்க? முதல் இங்க இருந்து வெளில நடவுங்கோ!”
“அறிவுக்கொழுந்தடி நீ! நான் வாத்தி இல்ல புரஃபஸர்!” என்றான் அவன் அவள் நெற்றியில் முட்டி.
“எங்களுக்கு எல்லாம் வாத்திதான், இப்ப நடவுங்க. நான் வேலைய முடிக்கோணும். பிறகு நீங்கதான், நேரமாச்சு சாப்பாட்டைக் கொண்டுவா எண்டு நிப்பீங்க!” என்று அவனைத் தள்ளினாள்.
“இப்பயெல்லாம் உனக்கு வெக்கமே வாறேல்ல வானதி.” என்று பெரும் குறையாகச் சொன்னவனை மீண்டும் முறைத்தாள் வானதி.
வெளியேதான். உள்ளே மிக அழகாக வெட்கம் கொண்டாள். உண்மையிலேயே புதிதாக மணமான ஒரு எண்ணம் இல்லவே இல்லை. காலம் காலமாக அவனோடே வாழ்ந்த உணர்வு!
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” பொய் முறைப்புடன் கேட்டாள்.
“வெக்கம் வேணும்!” என்றான் அவன்.
என்னவோ சின்னப்பிள்ளை மிட்டாய் வேணும் என்பதுபோல நின்றவனை என்ன செய்ய என்றே தெரியவில்லை.
நன்றாக ஒருமுறை முறைத்துவிடுவோம் என்றால் எங்கே? சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தான் அவன்.
“எங்க? முதல் நீங்க வெக்கப்பட்டுக் காட்டுங்கோ?” இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவள் கேட்க,
“நீ என்ன வெட்கப்பட வைக்கோணும்!” என்றான் அவனும் அசராமல்.
“உங்களை..” என்றவளுக்கு அவனை என்ன செய்வது என்றே தெரியவில்லை. தள்ளியிருக்கும் வரைக்கும் நல்ல கனவானாக இருந்தவன், கணவனானதும் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
அவனை ஒன்றும் செய்யமுடியாமல் திணறியவள் படும் பாட்டை ரசித்தவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் முகம் சிவப்பது போலிருக்க, வேகமாகத் திரும்பப் பார்க்க, தடுத்துப் பிடித்தான் அவன்.
“இப்ப நீ வெக்கப்படுறாய் தானே..”
“இல்ல..!”
“பொய் சொல்லாத! எங்க என்ர கண்ணைப்பார். பாரடி..” அவன் விடாமல் வம்பு வளர்க்க, அகப்பைக் காம்பை எட்டிக் கையில் எடுத்தாள் வானதி.
“இப்ப வெளில போகப் போறீங்களா இல்ல ரெண்டு போடவா?”
வேகமாகத் தள்ளி நின்றான் அவன். அவளெல்லாம் சும்மா மிரட்டுகிற ஆள் இல்லை.
“அடிப்பாவி! இப்ப நீதான் பக்கா வாத்தியார் மாதிரி நிக்கிறாய்.”
“பின்ன! வாத்தி வாத்தி வேல பாக்காட்டி நாங்க பாப்பம்! ஒடுங்க!” என்று துரத்திவிட்டாள்.