“உன்ன வெட்கப்பட வைக்கிறனா இல்லையா எண்டு பார்!” சூளுரைத்தபடி நகர்ந்தான் அவன்.
கட்டிலும் அவன் அறைக்கு மாறியது! அவளும் பிள்ளைகளோடு இடம்பெயர்ந்தாள். மனதுக்குள் ஒரு பயம், ஒரு தடுமாற்றம். எதுவும் விளங்காத சின்னப்பிள்ளை அல்லதான். என்றாலும் ஒரு படபடப்பு! வெட்கப்பட வைக்கிறேன் என்றவனும், சிரிக்கும் கண்களால் அவளைச் சீண்டிக்கொண்டே இருக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் முடியாமல், “ரூபன்!” என்றாள் சிரிப்பும் முறைப்புமாக.
வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தான் அவன்.
“ஐயோ! பிள்ளைகள் நித்திரை! சத்தம் போடாதிங்கோ!” என்று அவன் வாயைப் பொத்த, சொன்னதுபோலவே ரூபிணி பிரண்டு படுத்துச் சிணுங்கத் துவங்கினாள்.
“சாரி சாரி..” சிரிப்புடன் உதட்டசைவில் சொன்னவனை முறைத்துவிட்டு, “சரி சரி.. செல்லம் நீங்க படுங்க!” என்று மகளருகில் படுத்துத் தட்டிக்கொடுத்தாள்.
பிள்ளை உறங்கியதும், அவளருகில் அவன் வர மிரட்சியோடு பார்த்தாள் வானதி. கனிவோடு புன்னகைத்தான் அவன். அவள் நெற்றியில் முத்தமிட்டு, “படு! கொஞ்சநாள் போகட்டும்!” என்றான்.
உண்மையாகவே அந்த நிமிடம் அவள் உள்ளம் வெகுவாக அமைதியானது. கரைவதே தெரியாமல் அவனுக்குள் கரைந்து, தொலைவதே தெரியாமல் அவனுக்குள் தொலையத்தான் அவளுள்ளம் விரும்பியது. உணர்ந்து நடந்தவன் மீது நேசம் பிறக்க, தானும் அவன் கழுத்தை வளைத்து தன்னருகே இழுத்து அவன் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தெடுத்தாள்.
அன்று, அங்கே யாழ்ப்பாணத்தில் இருக்கிறவர்கள் அழைத்து வீடு விடப்போவதாகக் கலைவாணியிடம் சொல்லியிருந்தனர். மாலை வேலை முடிந்து வந்தவனிடம், “என்ன எண்டு போய்ப் பாத்துக் கதைச்சுக்கொண்டு வா தம்பி. வீட்டையும் பாத்து நிறைய நாளாச்சு!” என்றார் கலைவாணி.
போவோமா என்பதுபோல் அவன் அவள் முகம் பார்க்க, சம்மதமாகத் தலையை அசைத்தாள் வானதி. அடுத்தநாள் புறப்பட்டனர் இருவரும். பிள்ளைகளையும் வெளிக்கிடுத்த, “இப்ப போயிட்டு பின்னேரம் வாறதுதானே. நானே பாக்கிறன்.” என்றார் கலைவாணி அம்மா.
“ரூபிணிய மட்டுமாவது கூட்டிக்கொண்டு போறன் மாமி. அவள் உங்களை இருத்தி எழுப்புவாள்.”
“பரவாயில்லம்மா. ஒரு நாளைக்குத்தானே, நான் பாப்பன். நீ போய்ட்டுவா!” என்று அனுப்பிவைத்தார்.
தொலைபேசியிலேயே முடிக்கக்கூடிய விசயம் தான். இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணித்தான் நேரில் போகச் சொன்னார். மிருணாவை எந்தளவுக்குப் பிடிக்குமோ அவ்வளவுக்கு அவளையும் பிடித்துப்போனது அவருக்கு. உண்மையிலேயே தான் பெறாத குழந்தைகள் மீது மிருணா கூடி இவ்வளவு பாசம் வைப்பாளா தெரியாது! அதோடு, என்ன இருந்தாலும் மகன் வாழ்ந்தவன். அவள் மணமான புதுப்பெண்! கணவனோடான தனிமையை மனம் எதிர்பார்க்கும் என்று உணர்ந்து நடந்தார்.
வானதிக்கும் கணவனோடான பயணம் மிகவுமே பிடித்திருந்தது. அவனது குறும்பும், கேலியும், கிண்டலும், பார்வையாலேயே அவளைச் சிவக்க வைக்கிறவனின் ஆளுமையும் என்று சந்தோசமாகவே யாழ்பாணத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
வீட்டை நெருங்க நெருங்க, அவன் மெல்ல மெல்ல அமைதியானான். அந்த வீதிக்குள் நுழைந்ததுமே அவன் கைகளில் ஒரு நடுக்கம். காரை வீட்டின் முன்னே நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவன் தன்னைக் கட்டுப்படுத்த படுகிற பாட்டைப் பார்த்திருந்த வானதிக்கு அழுகை வந்தது.
“ரூபன்..” மென்மையாக அழைத்து, அவன் கரத்தை ஆதரவாகப் பற்றினாள். அடுத்தகணம் அவளை இழுத்து அணைத்திருந்தான் அவன். தேகமெண்டும் ஒரு நடுக்கம் ஓடியது அவனுக்கு!
அவள் முதுகை வருடிக்கொடுத்து, கேசத்தை கோதிக்கொடுத்து, ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல, சற்றே தெளிந்து, “வா!” என்று அவளையும் அழைத்துக்கொண்டு, இறங்கி உள்ளே நடந்தான்.
“வாங்கோ தம்பி!” என்று வரவேற்று அமரவைத்தது உபசரித்தவர்களின் முகத்தில் சங்கடம்.
“குறையா நினைக்காதிங்கோ தம்பி. தொடந்து இருப்போம் எண்டு சொல்லித்தான் வீடு எடுத்தது. ஆனா, மகளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்திருக்கு. மாமியாரும் மோசம் போய்ட்டா. இன்னொரு பொம்பிளைப் பிள்ளையும் நாலு வயசில இருக்கிறா. தனியாளா மூண்டுபேரையும் கவனிக்க சரியா சிரமப்படுறா மகள். அதுதான் எங்களை அங்க பக்கத்தில வந்திருக்கச் சொல்லிக் கேட்டவா. இங்க சும்மா இருக்கிறதுக்கு அங்க உதவியா இருக்கலாமே எண்டுதான் நாங்களும் யோசிச்சம். வயசும் போயிட்டுது. பேரக்குழந்தைகளுக்கு பக்கத்தில இருக்கத்தான் ஆசையாவும் இருக்கு. அதுதான், உங்களிட்ட கேட்டுப் பாக்கலாம் எண்டு..” என்று, சங்கடத்தோடு பேசியவர்களிடம்,
“பரவாயில்ல. எனக்கு விளங்குது உங்கட நிலைமை. சின்னக் குழந்தைகளோட சிரமம் தானே!” என்று அவர்களின் நிலையை விளங்கிக்கொண்டான் அவன்.
“நீங்கள் வேணுமெண்டால் அட்வான்ஸ்ல மூண்டுமாதக் காசை எடுங்கோ.” என்றார்கள் அவர்கள்.
“இல்ல வேண்டாம். இருக்கிற வரைக்கும் வாடகை தாங்க. நான் அட்வான்ஸ் முழுசா திருப்பித் தாறன்!” என்றதும் அவர்களுக்கு முகம் மலர்ந்து போயிற்று!
எப்போது விடுகிறார்கள், திறப்பு எப்போது தருவார்கள் என்று கேட்டுக்கொண்டு, “வீட்டை ஒருக்கா சுத்திப் பாத்துக்கொண்டு வாறோம்.” என்றபடி அவளோடு தோட்டத்துக்குள் நடந்தான்.
எங்கும் மிருணாவின் நினைவுகள். பார்க்கப் பார்க்க மனம் கனத்தது. அவள் சிரித்தது, விளையாடியது, அவனைச் சீண்டியது என்று அவளோடு வாழ்ந்த நினைவுகள் அவனைப் புரட்டிப்போட அங்கிருந்த கல்லில் அப்படியே அமர்ந்துவிட்டான்.
ஒன்றாக இருந்து, ஒன்றாக உறங்கி, சிரித்து, சாப்பிட்டு, உயிராய் நேசித்து வாழ்ந்த ஒருத்தி திடீரென்று இல்லை என்றால் எப்படி? இனி வாழும் காலத்துக்கும் அவளைப் பார்க்க முடியாது, அவளோடு கதைக்க முடியாது என்றால் எப்படி? நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. காலத்துக்கும் வலியோடு வாழ்ந்து பாரடா என்று சாபமிட்டது போல என்ன வாழ்க்கை இது?
அவனது தவிப்புக்களை காணமுடியாமல் சென்று அவன் தோளில் கையை வைத்தாள் வானதி. திரும்பித் பார்த்தவனின் விழிகளில் பெரும் வலி. “என்ன விட்டுட்டுப் போய்ட்டாள் வானதி! அவளில்லாம நான் எப்படி இருப்பன் எண்டு யோசிக்காம போய்ட்டாள்.” என்றான் துயரோடு.
இவன் வானதியின் கணவனல்ல! அவள் உணர்ந்துகொண்டாள். இவன் மிருணாவின் கணவன். அவளது பிரிவால் துடிக்கும் கணவன்.
என்ன சொல்லித் தேற்றுவாள்? முன்னே வந்து அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள். அவன் துடிப்பதைக் கண்டு அவளுக்கும் அழுகை வந்தது.
“இந்த வீட்டுலதான் அவளோட ஒரு வாழ்க்கை வாழ்ந்தனான் வானதி. அது ஒரு சொர்க்கம். அம்மாவும் நானும் மட்டும் எண்டு இருந்த உலகத்துக்க ஒரு தேவதை மாதிரி வந்தாள். வாழ்க்கை இவ்வளவு சந்தோசமா இருக்குமா எண்டு நான் உணர்ந்த நாட்கள் அது. என்ன மாதிரியான ஆள் அவள்.. எனக்கு சொல்லத் தெரியேல்ல. இவ்வளவு பாசமா அவள் இருக்காம இருந்திருக்கலாம்!” தாங்கமுடியாமல் கொட்டினான்.
அடக்க முடியாமல் இரு துளிக் கண்ணீர் கொட்டியே விட்டது அவளுக்கு.
“ரூபன், நீங்க கவலைப்படுறது அவவுக்கு பிடிக்குமோ?” அவன் கன்னங்களை இரு கரங்களாலும் பற்றி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.