அலைப்புற்ற விழிகளோடு இல்லை என்று தலையசைத்தான் அதிரூபன். “எனக்கு சின்னதா தலைவலி வந்தா கூடி தங்கமாட்டாள்.”
“பிறகு? நீங்க இப்படி கவலைப்பட்டா அவவுக்கு எப்படி இருக்கும்?” என்றாள் இதமாக.
“தாங்கமாட்டாள்!” கலங்கிவிட்ட கண்களோடு கரகரத்த குரலில் சொன்னான்.
தாரகனைப் பார்ப்பது போலிருந்தது அவளுக்கு.
வயிற்றோடு அணைத்து, “இந்த உலகத்தை விட்டு அவா போயிருக்கலாம். ஆனா, காற்றா மாறி உங்களை சுத்தித்தான் இருப்பா. நீங்களும் பிள்ளைகளும் தான் அவவின்ர உலகம். உங்கட சந்தோசம், அழுகை, சிரிப்பு எல்லாத்தையும் அவா பாத்துக்கொண்டு இருப்பா. அப்படியிருக்க நீங்க இப்படித் துடிக்கலாமோ?” என்றாள் ஆதுரமாக அவன் கேசம் கோதி.
மறுத்துத் தலையசைத்தவன் அவள் இடையை இறுக்கி வளைத்தபடி வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான். அவனைத் தேற்றிவிட உள்ளம் துடித்தது அவளுக்கு. மெல்லப் பேசினாள்.
“அவவோட நினைவுகள் நிறைஞ்சிருக்கிற இந்த வீட்டுல வச்சுச் சொல்லுறன் ரூபன், மாமியோட சேர்த்து உங்க மூண்டுபேரையும் நான் நல்லா பாத்துக்கொள்ளுவன். நான் இல்லாம என்ர மனுசனும் பிள்ளைகளும் எப்படி இருப்பீனம் எண்டு, அவவுக்கு அதுதான் கவலையா இருக்கும். ஆனா, நான் இருக்கிறன், அவவின்ர இடத்தில இருந்து தாயா தாரமா எல்லாமா இருந்து பாப்பன். நீங்க கவலைப்படக் கூடாது. நீங்க இப்படி இருக்கிறதை பாக்க என்னாலையும் தாங்க முடியேல்ல ரூபன்!” கண்கள் கலங்க அவனிடம் உரைத்தாலும், அவள் உள்ளம் காற்றில் கலந்திருந்த மிருணாவுக்கு வாக்கு கொடுத்தது.
உள்ளம் உருக கணவனின் நெற்றியில் அழுத்தமாய் தன் இதழ்களை பதித்துமீட்டாள். அப்படியே அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
காதலும் வரவில்லை காமமும் வரவில்லை. பாசம் நெஞ்சில் சுரந்தது. அவன் வேதனைகளைப் போக்கி, அவனுக்கு எல்லாமாக நான் இருக்கவேண்டும் என்கிற அன்பு துளிர்த்தது. அவனுக்கும் தாயின் சிறகுகளுக்குள் புகுந்துகொண்ட உணர்வு, மனைவியின் இடையை இறுக்கி வளைத்துக்கொண்டான். காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து வீடு வந்த உணர்வு அவனுக்குள்!
ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
நேரம் நகர்ந்ததே தவிர, அவன் விலகக் காணோம்.
“ரூபன்..”
“ம்ம்..”
“நேரமாச்சு. போகவேணும். அங்க பிள்ளைகள தனியா மாமி சமாளிக்க மாட்டா.”
“ம்ம்ம்..”
சொன்னானே தவிர அவளை விடவில்லை.
அவளும் அப்படியே நிற்க நிமிர்ந்தான்.
“நாங்க இங்கேயே திரும்ப வந்திடுவோமா?” கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டான்.
“பிறகு உங்களுக்கு.. வேதனையா இருக்காதா?” மிருணாவின் நினைவுகளில் இருந்து விடுபடத்தான் அவன் அங்கே வந்தான் என்று தெரிந்ததால் கேட்டாள்.
“இல்ல வானதி. இப்ப.. இந்த வீட்டுல இருக்கிற இந்த நிமிசம் தான் என்னாலையும் உன்ன எந்த முணுமுணுப்பும் இல்லாம ஏற்றுக்கொள்ள முடியுது. மனம் நிர்ச்சலனமாய் இருக்கு. மிருணா என்ர வாழ்க்கைல இருந்து பிரிக்க முடியாத ஒரு ஜீவன். அதே மாதிரி மிச்ச வாழ்க்கைல நான் பிரியவே விரும்பாத ஒரு சொந்தம் நீ. ரெண்டுபேரும் இல்லாம நான் இல்ல. உனக்கு விளங்குதா?” தவிப்போடு கேட்டான்.
அப்படியே அவனை மீண்டும் அணைத்துக்கொண்டாள் அவள். “நான் உங்களுக்காகத்தான் கேட்டனான் ரூபன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. நாங்க இங்கேயே வருவோம்.. எனக்கும் உங்களோட சண்டை பிடிச்சா அடிக்கடி அம்மா வீட்டை ஓடலாம் எல்லா..” சின்னச் சிரிப்போடு அவனை இலகுவாக்க முயன்றாள்.
அவனோ, “உனக்கு கவலையா இல்லையா? இப்படி அவளையும் நினைச்சுக்கொண்டு உன்னோடையும் வாழ நினைக்கிறன் எண்டு..” என்றவனின் வாயில் விரலை வைத்துத் தடுத்தாள் வானதி.
“நான் வந்ததும் அவவை மறந்தாத்தான் கவலைப்படுவன். உயிரா வாழ்ந்த ஒருத்திய அவ்வளவு இலகுவா மறக்க முடியுமா என்ன? பத்துமாதம் முகமே தெரியாம சுமந்த பிள்ளைக்காகத்தான் நான் எவ்வளவோ செய்தனான். நீங்க உங்களோடு உயிரும் உணர்வுமா வாழ்ந்த மனுசிக்காக இந்தப்பாடு படுறீங்க. அதே இடத்துக்கு வாற என்னிலையும் அவ்வளவு பாசம் வைப்பீங்க தானே. என்னையும் சந்தோசமா பாப்பீங்க தானே? எனக்கு உண்மையா எந்தக் கவலையும் இல்ல!” நெஞ்சிலிருந்து சொன்னவள் மீது, ஆழமான நேசம் பிறந்தது அவனுக்கு.
“இருக்கிறவரைக்கும் என்னை அவ்வளவு சந்தோசமா வச்சிருந்தவளை எப்படி மறக்கிறது சொல்லு?” அதைச் சொல்லும்போது சற்றே தெளிந்திருந்தான் அவன்.
“மிச்சக் காலத்துக்கு நான் சந்தோசமா வச்சிருப்பன்.” என்றாள் அவள் சிரிப்போடு!
“நானும் வச்சிருப்பன்!” அவள் முகம் பார்த்துக் கண்களில் சிரிப்போடு சொன்னவன், முற்றிலுமாக வானதியின் கணவனாக மாறியிருந்தான்.
“சொப்பன சுந்தரியவா?” தலையைச் சரித்து அவள் கேட்க,
“சேச்சே! இந்த சொக்க வைக்கிற சுந்தரியை!” என்றவனுக்கு மனம் இலகுவாகிவிட, அவளோடு சென்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.


