வேலைகள் எல்லாம் மளமளவென்று நடந்தன. வவுனியா வளாகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் மாற்றல் பெறுவது சற்றே சிரமமாய் இருந்தாலும், மாற்றி எடுத்துக்கொண்டான். அவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி திறப்பை தந்துவிட, பொருட்களை ஏற்றிக்கொண்டு அதிரூபனின் குடும்பம் யாழ்பாணத்துக்கே வந்து சேர்ந்தது. கலைவாணி அம்மாவுக்கும் பெரும் மனநிறைவு. என்ன இருந்தாலும், பிறந்து வளர்ந்த ஊர்போல வராதே!
வானதியின் தாயும் சகோதரிகளும் வந்து பார்த்துச் சென்றார்கள். கதிரேசன் மட்டும் வரவேயில்லை. அவரின் வருகையை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. சங்கரிக்கும் சந்தோசமே!
அதிரூபனுக்கு என்னவோ புதிதாகப் பிறந்ததைப்போன்ற உணர்வு! சந்தோசமாக வேலைக்கும் போய்வர ஆரம்பித்திருந்தான்.
அன்று வேலை முடிந்ததும் ஆவலாய் வீடு வந்தவனை வீட்டின் பின்பக்கம் கேட்ட குழந்தைகளின் சத்தம் அங்கே அழைத்துச் சென்றது.
அவர்களின் காணி பெரிது என்பதால், பூங்காவுக்கே போகவேண்டிய அவசியம் இல்லாமல் மூவருமே கொட்டமடிப்பது அங்கேதான். மாமரங்கள், வாழை, தென்னை, நெல்லிக்காய் மரம் என்று கலைவாணி அம்மா இளம் வயதிலிருந்தே பார்த்துப் பார்த்து வளர்த்ததில் மிகவுமே அருமையான தோட்டம் அவர்களது!
அவனும் ஆவலாகப் போக, வானதியைக் காணவிலை. குழந்தைகள் இருவரும் மாமரத்தின் கீழே நின்று, வெகு கவனமாய் மேலே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.
“அம்மா, எனக்குப் போடுங்கோ நான் பிடிக்கிறன்.” என்று தாரகன் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘மரத்திலையா நிக்கிறாள்?’ நம்ப முடியாமல் வேகமாக விரைந்தான் அவன்.
நான்கைந்து மாங்காய்கள் நிலத்தில் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்க, அவள் ஒரு கிளையில் நின்றபடி உயரக் கொப்பில் தொங்கிய மாங்காய் ஒன்றைப் பறிக்க எட்டி முயன்றுகொண்டிருந்தாள்.
பார்த்ததும் சட்டென்று கோபம்தான் வந்தது. “என்ன செய்யிறாய் வானதி?” குழந்தைகள் நின்றதில் அதட்டாதபோதும், அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டான் அவன்.
“வந்திட்டிங்களா?” என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, “இந்த மாங்காய் எட்டுதில்லை ரூபன், பொறுங்கோ வாறன்!” என்றபடி எட்டிப் பறிக்க முயல, அவள் நின்ற கொப்பு ஆடிய ஆட்டத்தைக் கண்டு ஒருகணம் நடுங்கியே போனான் அவன்.
பல்லைக் கடித்தவன் பிள்ளைகளை உள்ளே போகச்சொல்ல, “மாங்காப்பா..” என்று தயங்கிக்கொண்டு நின்றவர்களைக் கண்டு இன்னுமே ஏறியது அவனுக்கு.
‘பிள்ளைகளையும் சேர்த்து கெடுத்து வச்சிருக்கிறாள். இவளை..’ வெளியே கோபத்தைக் காட்டாமல், “அம்மா கொண்டுவருவாள். நீங்க நடவுங்கோ!” என்றான் அழுத்தமாக.
தகப்பனின் அந்தக் குரலுக்குப் பணிந்தே பழக்கப்பட்ட பிள்ளைகள் உள்ளே ஓடிவிட, “பிள்ளையல என்னத்துக்குப் பேசுறீங்கள்!” என்று குரல் கொடுத்தாள் அவள்.
“நீ முதல் இறங்கடி கீழ!” பிள்ளைகள் இல்லாததால் தாராளமாக அதட்டினான் அவன்.
அவள் என்ன அவனுடைய மக்கட் செல்வங்களா அவன் சொல்லைக் கேட்க?
“கொஞ்சம் பொறுங்கோ எண்டு சொன்னால் பொறுக்க மாட்டிங்களா!” அவனுக்கு மேலால் அதட்டிவிட்டு ஒரே எட்டில் ஒற்றைக்காலில் நின்று எட்டிப் பறித்து, “போடுறன் பிடிங்கோ ரூபன்!” என்று அவனிடமே போட்டாள்.
‘விட்டா என்னையும் இவளோட மரத்தில ஏறவைப்பாள்..’ வேறு வழியில்லாமல் மாங்காயைப் பிடிக்கப் பார்க்க, அவனுக்கு இருந்த கோபத்துக்குக் கேட்ச் பிடிக்கவும் முடியவில்லை. ஒருமுறை தவறவிட்டு விழாமல் பிடித்துக் கீழே வைத்தான்.
ஒரு நக்கல் சிரிப்புடன், “ஒரு மங்கா பிடிக்க வழியில்லை..” என்றபடி இறங்கியவளை, அப்படியே தூக்கி மரத்தோடு மரமாகச் சாய்த்தான் அவன்.
“உனக்கு மண்டைக்க ஒண்டுமே இல்லையா? இவ்வளவு உயரமான மரத்துல ஏறி நிக்கிறாய். நாளைக்கு பிள்ளைகளும் உன்னைப்பாத்து ஏறி விழுந்தா? இல்ல நீ விழுந்தா?” அதட்டியவனைச் சட்டையே செய்யாமல் அவன் கைகளை தன்னிலிருந்து எடுத்து விட்டுவிட்டாள் அவள்.
“அதெல்லாம் பிள்ளைகளுக்கு நான் ட்ரைனிங் குடுத்துத்தான் ஏற விடுவன். வானதியின்ர ட்ரைனிங் சும்மா அந்தமாதிரி இருக்கும் தெரியுமா. உங்களுக்கும் மரம் ஏறத் தெரியாட்டிச் சொல்லுங்கோ, பழக்கி விடுறன். எத்தின மரத்தில ஏறி இருக்கிறன். ஒண்டுல கூட விழ இல்ல. தெரியுமா?” என்றாள் பெருமையாக.
அவனுக்கு அந்த மரத்திலேயே தலையை முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
“நான் என்ன சொல்லுறன் நீ என்ன கதைக்கிறாய் விசரி! பிள்ளைகள் கூட சொல்லுறதைக் கேட்டுக்கொண்டு போகுதுகள்.. நீ திருப்பித் திருப்பிக் கதைச்சுக்கொண்டு!”
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? மரத்தில ஏறினா என்ன? நான் ஏறுவன்!” அவளுக்கும் கோபம் வந்தது.
“இனி ஒருக்கா ஏறிப்பார்! காலை முறிச்சுக் கைல தாறன்!” என்றான் அவன்.
“இப்பவே திரும்ப ஏறுறன், எங்க முறிங்க பாப்பம்!” அவனிடம் சிலுப்பிவிட்டு அவள் மரத்தில் தூக்கிக் காலை வைக்க, இவனுக்குத்தான் நாக்குத் தள்ளியது!
அப்படியே அவளைத் தூக்கியவன் மரக்கிளையில் இருத்தினான். “என்ன ஆளடி நீ? சொல்லுற எதையும் கேக்கமாட்டியா?” அவளின் அருகாமையில் தன் வசம் இழந்துகொண்டிருந்தான் அவன். குரல் குலைந்துகொண்டு வந்தது. பார்வை மாறியது.
“அது.. குணமா வாயில சொன்னாத்தான் கேப்பன்!” நல்லபிள்ளையாகச் சொன்னாள் அவள்.
“வாயில எண்டா எப்படி?” என்றவன், பார்வை மாற அவள் உதட்டினில் அழுத்தமாக முத்தம் வைத்துவிட்டு, “இப்படியா?” என்றான் சிரிப்புடன்.
அவளுக்கு முகம் சிவந்து போயிற்று! இறங்கி ஓடப்பார்க்க, எட்டிப்பிடித்து நிறுத்தி, “நான் நிக்கேக்க மட்டும் ஏறோனும் என்ன!” என்றான் இதமாய்.
தலையை ஆட்டிவிட்டு ஓடியேவிட்டாள் அவள். அந்த மரத்திலேயே சாய்ந்து கண்களை மூடி நின்றுகொண்டான் அதிரூபன்.
அந்த வீடு, தோட்டம் என்று காணுமிடமெங்கும் நிறைந்திருந்தவள் மிருணாதான். இன்றோ மெல்ல மெல்ல அவள் காட்சிகள் இதயப் பெட்டகத்துக்குள் பக்குவமாய் சேமிக்கப்பட, இப்போதெல்லாம் காணுமெங்கும் வானதியின் காட்சிகளே தெரியத் துவங்கின அவனுக்கு!
சுகமான ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து விட்டுவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டுக்குள் அவளைக் காணவில்லை. சமையலறைக்குள் சத்தம் கேட்டது. “பிடுங்கின மாங்காய்க்கு உப்புத்தூள் போட்டுப் பிரட்டுறாள் தம்பி!” கலைவாணி சொல்ல, தன்னவளை எண்ணிச் சிரித்துவிட்டு,
“நான் இல்லாத நேரத்தில அவளை மரம் ஏற விடாதீங்க அம்மா!” என்றான் அவரிடம்.
“நான் சொன்னா கேக்கவா போறாள். இண்டைக்கும் சொன்னேன் தான். தலையை தலையை ஆட்டிப்போட்டு நான் நித்திரையான நேரமா பாத்து ஏறிட்டாள் தம்பி!” சொன்னவருக்கும் முகத்தில் சிரிப்புத்தான்.
அதுசரி! அவன் சொல்லியே கேட்கவில்லை அவள். அவர் சொன்னால் மட்டும் கேட்கவா போறாள். மனதுக்குள் சிரித்தபடி குளிக்கச் சென்றான்.
அன்று பேப்பர் வேலைகள் நிறைய இருக்க, அப்படியே அறையில் அமர்ந்து அதைப் பார்த்துக்கொண்டு இருந்தவனிடம் ஒரு மாங்காய்த் துண்டோடு வந்தாள் வானதி.
“சூப்பரா இருக்கு, சாப்பிட்டுப் பாருங்கோ!” என்று நீட்டினாள்.
“எனக்கு மங்கா விருப்பமில்லை. நீ சாப்பிடு!” வேலையில் கவனம் கலையாமல் சொன்னான் அவன்.