‘அருமையான பெண்.’ அடிக்கடி நினைத்துக்கொள்வான் அதிரூபன். குழந்தைகளோடு குழந்தையாகத் தானும் விளையாடுவாள். அதேநேரம் தினமும் வரும்போது இரண்டு குழந்தைகளுக்காகவும் ஏதாவது உண்ண, அருந்த என்று கொண்டுவருவாள். சிலநேரங்களில் இவர்களை விட அவளின் விளையாட்டு அதிகமாய் இருக்கும். ஆனாலும், இருவரையுமே கவனமாகப் பார்த்துக்கொள்வாள். யாருடனும் அநாவசியப் பேச்சுக்கள் இல்லை. அதேநேரம் ஒதுங்கியும் இருப்பதில்லை.
எப்போதும் அவளே கொண்டு வருகிறாளே என்று அன்று அவனும் பிஸ்கட் பாக்கெட்டும், குடிக்கக் குழந்தைகளுக்கு ஏற்ற பழக்கலவையும் வாங்கிக்கொண்டு வந்தான்.
சற்றுநேரம் விளையாடியபிறகு கையோடு கொண்டுவந்திருந்த துண்டினை விரித்து மூவருமாக அமர்ந்துகொள்ளவும், தான் கொண்டுவந்ததையும் அவளிடம் நீட்டினான் அவன்.
“நன்றி.” சிரித்த முகமாய் வாங்கிக்கொண்டாள் அவள்.
எப்போதும்போலச் சற்றுத் தள்ளிப்போய்த் தனியாக அமர்ந்துகொண்டான் அதிரூபன். மிருணாவின் நினைவுகளைச் சுமந்தமடி, மகளைக் கண்பார்வையில் வைத்துக்கொண்டு, தனிமையில் இருப்பதில் ஓர் சுகம் அவனுக்கு. அன்றும் அப்படித்தான்.
உடலும் மனமும் களைத்துப்போயிருந்தது. அவள் மடியில் தலைசாய்க்க வேண்டும்போல் எழுந்த உணர்வில் மெல்லக் கண்களை மூடினான். ‘மிருணா..!’ அவனது ஆத்மா மனைவியை ஏக்கத்துடன் அழைத்தது.
‘வரவே முடியாத தூரத்துக்கு ஏனடி போனாய்?’
அவனோடு அருகில் இருந்த ஒருத்தி இனி இல்லை. அவள் முகத்தை அவன் பார்க்கவே முடியாது. ஏற்க மறுத்தது மனது!
“இந்தாங்க அங்கிள்!” ஒரு தட்டைக் கொண்டுவந்து நீட்டினான் சின்னவன். சிரமத்துடன் விழிகளைத் திறந்தான். அவளைப்போலவே அவன் மகனுக்கும் சிரித்த முகம்தான்.
“உனக்கு என்ன பெயர்?”
“என்ர பெயர் தாரகன். அம்மாட பெயர் வானதி.” கேட்காத கேள்விக்கும் பதிலைச் சொன்னான் அவன்.
“தாரகன்… வடிவான பெயர். அப்பாட பெயர் என்ன?”
“தாருக்குட்டி, இங்க வா!” சின்னவன் பதில் சொல்ல முதல் அவசரமாக அழைத்தாள் அவள். ஒருமாதிரி ஆகிப்போயிற்று அதிரூபனுக்கு.
‘ஒண்டும் பிழையா கேக்கேல்லையே நான்..’
அடுத்தவரின் விடயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைப்பது அவன் இயல்பல்ல. அதைவிட, மிருணாவின் மறைவிற்குப் பிறகு யாருடனும் மனமுவந்து பழகவும் முடிவதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இந்தப் பூங்காவுக்கு வருகிறார்கள். இன்னும் அந்தச் சின்னவனின் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்தளவில் பற்றற்ற வாழ்க்கை ஒன்றுதான் அவன் வாழ்ந்துகொண்டிருப்பது. சிரித்த முகமாய் உண்பதற்குக் கொண்டுவந்து தந்த சின்னவனை அப்படியே அனுப்ப மனமில்லாமல் தான் சும்மா பேச்சுக் கொடுத்தான். அவன் தாயின் பெயரையும் சேர்த்துச் சொல்ல, தகப்பனின் பெயரை இயல்பாகவே கேட்டுவிட்டான்.
அதற்கு, உடனே அவள் அவனை அழைத்துவிடவும், என்னவோ அவள் வீட்டு விசயத்துக்குள் அவன் மூக்கை நுழைத்துவிட்டது போலொரு தோற்றம் அவனுக்கு. அவள் கொடுத்துவிட்டதைக்கூட உண்ண முடியவில்லை. மனநிலை கெட்டுவிட அப்படியே அமர்ந்திருந்தான்.
அவளும் கவனித்துவிட்டாள். பிள்ளைகள் விளையாடத் துவங்கியதும் இவனிடம் ஓடிவந்தாள்.
“அப்போத நடந்ததுக்குச் சொறி. ஆனா, அந்தக் கேள்விக்குப் பதில் எனக்கு மட்டும் தான் தெரியும். பதில் தெரியாம தாரு தடுமாறப்போறான் எண்டுதான் கூப்பிட்டனான். நீங்க கேட்டது பிழை எண்டு நினைக்கேல்ல. ப்ளீஸ் அத மறந்திடுங்கோ.” என்றாள் சிரித்துக்கொண்டு.
விளங்கவே விளங்காத புதிர் ஒன்றை விளக்கம் என்கிற பெயரில் சொல்லிவிட்டுச் சிரித்தவளை, விளங்காமல் பார்த்தான் அவன். வாய்விட்டு எதுவும் கேட்காதபோதும், அவனுக்குள் ஏகப்பட்ட குழப்பம் நிறைந்திருந்தது.
“நீங்களும் வாங்கோவன் விளையாட!” சிரித்துக்கொண்டு அழைத்தாள் அவள்.
“நான் என்ன சின்னப்பிள்ளையா?” சிறுபிள்ளைகள் போன்று, கசூரினா பீச்சில் முழுநாளும் உருண்டு பிரண்டு விளையாடி நீரில் நனைந்த காலமெல்லாவற்றையும் தான் மிருணா தன்னோடு கொண்டு சென்றுவிட்டாளே.
“நான் மட்டும் என்ன குழந்தையா?” பட்டென்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“அத நீங்கதான் சொல்லவேணும்.” அவனது பதிலில் முறைத்தாள் வானதி.
இப்போது என்ன சொல்லிவிட்டேன் என்று முறைக்கிறாள்? வேடிக்கையாகப் போயிற்று அவனுக்கு.
“நீங்க கிழவன் எண்டதுக்காக என்னையும் கிழவி ஆக்காதீங்க சரியா? எனக்கு மரியாதை எல்லாம் தேவையில்லை.”
படபடவென்று வந்த பதிலில் சின்னச் சிரிப்பு அரும்பியது அவனது வறண்ட உதடுகளில். ‘நான் என்ன சின்னப்பிள்ளையா?’ என்று கேட்ட ஒற்றைக் கேள்வியை வைத்து அவனைக் கிழவனாக்கிவிட்டாளே.
“சிரிச்சீங்களா என்ன?” குறு குறு என்று அவன் முகத்தையே கூர்ந்தபடி கேட்டாள் அவள்.
அவன் புருவங்களைச் சுருக்க, “இல்ல இந்தத் தாடிக் காட்டுக்குள்ள இடி முழங்கினாலும் தெரியேல்ல. மின்னல் வெட்டினாலும் தெரியேல்ல. அதுதான் மழை வந்ததா இல்லையா எண்டு தெரிஞ்சுகொள்ளக் கேட்டனான்.” என்றாள், வெகு தீவிரமாக அவன் முகத்தை ஆராய்ந்தபடி.
தாடிக் காடா? கரமொன்று உயர்ந்து தாடி மீசையைத் தானாகவே தடவிக் கொடுக்க, அவன் புன்னகை மெய்யாகவே விரிந்தது.
“உன்ர மகனுக்கு என்ர மகளைவிட வயது கூட. தெரியுமோ?” அடக்கிய சிரிப்புடன் கேட்டான் அவன்.
“ஒரே ஒரு வயசுதான் கூட. மாதத்தால கணக்குப் பாத்தா பதினோரு மாதம் தான் பெரியவன். எண்டாலும், நீங்க வயசான காலத்தில பிள்ளையைப் பெத்துப்போட்டு, என்ர பிள்ளைக்கு வயசு கூட என்றபடியால் எனக்கும் கூட எண்டு சொல்லுவீங்களா?” அவன் வயதானவன் என்று அவள் முடிவே கட்டிவிட்டதில் அதிரூபனே சற்று அயர்ந்துதான் போனான்.
‘28 வயசு வயசான காலமா?’ சுவாரசியமான பெண்தான்.
“இப்ப வாறீங்களா இல்லையா?” இவளிடம் பேச ஆரம்பித்ததே பிழை என்பதுபோல் அடம்பிடித்தாள் அவள்.
அவன் இல்லை என்பதாகத் தலையசைக்க, “நீங்க உண்மையாவே ஓல்ட் மேன் தான்!” என்று முறைத்துவிட்டு ஓடிவிட்டாள் அவள்.
போகும் அவளையே சின்னச் சிரிப்புடன் பார்த்திருந்தான் அதிரூபன்.