“காதலிச்சா? எனக்கெல்லாம் அந்தளவு தைரியம் இல்ல. அதெல்லாம் அவளுக்குத்தான் நல்லா வரும்.” நெஞ்சிலிருக்கும் அத்தனை காதலையும் விழிகளில் நிரப்பி நேசம் பொங்க மனைவியைப் பார்த்தபடி சொன்னான் அதிரூபன்.
அவனது ஒற்றை விரல் அவளின் வரிவடிவத்தைப் போனில் தடவியது.
இப்போதும் அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றமுடியாமல் போயிற்று!
“உங்கட லவ் ஸ்டோரியச் சொல்லுங்கோவன்..” மெல்லக் கேட்டாள் வானதி.
——————————–
அப்போது விரிவுரையாளனாகப் பணிபுரிய ஆரம்பித்திருந்தான் அதிரூபன். பெண் பார்க்கப்போவதாக அம்மா சொல்லவும் அவனுக்குள்ளும் ஆர்வம் பற்றிக்கொண்டது.
அப்பா இல்லாமல், தனி மனுசியாக நின்று வளர்த்த அம்மாவின் போராட்டத்தைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, அவன் மனம் என்றும் பெண்களிடத்தில் அலை பாய்ந்ததில்லை. அப்படியான சிந்தனைகள் வந்ததும் இல்லை. எதிர்காலத் துணை மீதான கற்பனைகள் கூட அம்மா பெண்பார்க்க ஆரம்பித்த பிறகுதான் தொடங்கியது.
அவன் காத்திருக்க ஒருநாள் ஒரு ஃபோட்டோவைக் கொண்டுவந்து கொடுத்தார் கலைவாணி அம்மா.
“இந்தப் பிள்ளை நல்ல வடிவா, துரு துரு எண்டு இருக்கிறாள். பொருத்தமும் நல்லா இருக்குத் தம்பி. என்ன ‘ஏஎல்’லுக்கு மேலே படிக்கேல்லையாம். படிப்புக்கு பெரும் கள்ளியாம்.” என்று சிரித்துக்கொண்டு அவர் சொன்னபோது, அவனுக்கு ஏமாற்றமாய்ப் போயிற்று.
வேலைக்குப் போகிறவள் வேண்டும் என்று நினைக்கவில்லைதான். ஆனால், பெரிதாகப் படிக்காதவளா? ஃபோட்டோவைப் பார்க்கும் ஆர்வமே வடிந்துபோயிற்று.
“நான் உன்னட்ட கேட்டுட்டு முடிவு சொல்லுறன் எண்டு சொன்னனான் அப்பு. அந்தப் பிள்ளைக்கு இன்னும் தெரியாது. உனக்குப் பிடிக்காட்டி அவள் பாவம் எல்லோ. சும்மா ஏன் ஆசையை வளப்பான்?” என்றவர், “ஒருக்கா பார் தம்பி. பாத்துச் சொல்லு!” என்றார் ஆர்வத்தை அடக்க முடியாமல்.
அவரிடம் மறுக்க மனம் வராமல், விருப்பமே இல்லாமல்தான் ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தான். பார்த்தவன் பார்த்துக்கொண்டே இருந்தான். அருகில் அன்னை இருப்பதையும் மறந்துபோனான்.
அந்தக் கண்களாலேயே அப்படியே அவனைக் கட்டி இழுத்தாள் அவள். அந்தளவு உயிரோட்டமான விழிகள். குறுஞ்சிரிப்பு இதழோரம் குடியிருந்து குறும்புக்காரி என்று சொல்ல, அவ்வளவு பிடித்துவிட்டது அவனுக்கு.
“நேர்ல பாத்தீங்களாம்மா?” விழிகள் அவளிடமே இருக்கக் கேட்டான்.
“ஓம் ஐயா.” முகம் மலரச் சொன்னார் கலைவாணி. “அவ்வளவு வடிவா இருக்கிறாள் தம்பி. எனக்குக் கையோட கூட்டிக்கொண்டு வரவேணும் போல இருந்தது. படிக்காட்டி என்ன தம்பி. நீ நல்லா படிச்சிருக்கிறாய் தானே.” மகனுக்கும் பிடித்துவிட்டது என்று தெரிந்ததால் அவரின் சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போயிற்று!
‘மக்கு பேபியா நீங்க. பரவாயில்ல மேடம், நானே எல்லா…த்தையும் சொல்லித்தாறன்.’ கள்ளச் சிரிப்பொன்று அவன் உதட்டோரம் மலர்ந்தது.
தனிமையில் அவளின் முகவடிவை வருடிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். என்ன செய்தாள் அவனை என்றே தெரியவில்லை. ஒற்றைப் புகைப்படத்தில் வந்தவள் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாள்.
சம்பிரதாயமாகப் பெண் பார்க்கும் படலம் கோவிலில் நடந்தபோது, அவன் ஆவலுடன் ஏறிட, சட்டென்று கண்ணடித்துச் சிரித்தாள் அவள். அவனுக்குத்தான் முகம் சிவந்து போயிற்று.
ஆயிரம் கற்பனைகள் ஆசையாய் உள்ளே ஓடினாலும் அவனுக்கெல்லாம் இந்தத் தைரியம் தனிமையில் மட்டுமே வரும். அவளோ அத்தனை பேரையும் வைத்துக்கொண்டு, அன்றைய நிகழ்வின் நாயகியாய் அவளே நின்றுகொண்டு, எவ்வளவு துணிவாகக் கண்ணடிக்கிறாள்? உதட்டோரச் சிரிப்பை மறைக்கவே பெரும்பாடு பட்டுப் போனான் அதிரூபன்.
தன்னையே கண்ணால் காட்டி, ‘பிடிச்சிருக்கா?’ என்று உதட்டசைவில் கேட்டாள்.
எவ்வளவு தைரியம்? அவன் செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவள் அல்லவா செய்துகொண்டிருக்கிறாள்.
பிறகும் அவர்களுக்குத் தனிமை தருவதுபோல் எல்லோரும் மெல்ல மெல்ல விலகிச் செல்ல, “உங்கட நம்பர் சொல்லுங்கோ.” என்று அவள்தான் வாங்கினாள்.
வாங்கியது மட்டுமல்லாமல், அவனுக்கு உடனேயே அழைத்துப் பார்த்தாள். ஸ்க்ரீனில் ஒற்றை ரோஜா மிளிரவும், அவர்கள் இருவரையும் செல்பி எடுத்து அதையே ஸ்க்ரீன் சேர்வராக அவளே மாற்றிவிட்டாள். “இனி இதுதான் இருக்கவேணும்!” என்கிற கட்டளையோடு.
“பின்னேரம் எனக்கு எடுக்கோணும் சரியா? நான் பாத்துக்கொண்டு இருப்பன்!”
“காசு இருக்கா உங்களிட்ட?” அவளின் அருகாமை கொடுத்த மயக்கத்தில் சின்னச் சிரிப்புடன் அவன் பர்ஸை எடுக்கவும், அதைப் பிடுங்கி அதிலிருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து, “உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா உண்டியல்ல போடுவன் எண்டு நேந்தனான்.” என்றபடி அதை உண்டியலில் போட்டுவிட்டுப் பர்ஸை அவனிடம் கொடுத்தாள்.
அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் அவனுக்குள் ஜில் என்று இனித்துக்கொண்டு இறங்கிக் கொண்டிருந்தது.
“எனக்கு உன்னப் பிடிச்சிருக்கா என்ன?” குறுஞ்சிரிப்புடன் கேட்டான்.
“பிடிக்கேல்லையோ? எங்க என்னைப் பாத்து சொல்லுங்க..” அவள் அவனை நெருங்கிவர, பொங்கிய சிரிப்புடன், “ஹேய் மிருணா! ஆரும் பாத்தாலும்..” என்று அவன்தான் தடுமாறிப்போனான்.
அவளோ நிதானமாகச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பட்டென்று அவன் கன்னத்தில் சின்ன முத்தமொன்றைப் பதித்துவிட்டாள்.
வாயில் கைவைக்காத குறையாக அவன் பார்க்க, “இனி ஏதாவது இப்படி ஒரு கத வந்திச்சு.. நேர லிப் டு லிப் தான்!” என்றுவிட்டு ஓடிப்போய்விட்டாள் அவள்.
அதன்பிறகு, அவன் காட்டில் மிருணாவின் காதல் மழைதான். அன்று, எதிர்பாராமல் வாங்கிய சில்லென்று இனித்த முத்தத்துக்காக, இன்று அவன் கன்னம் எதிர்பார்த்துத் துடித்தது.
மகளின் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்குத் தான் எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்று ஒன்றுமே பிடிபடவில்லை. மனைவியோடு அல்லவா கதைத்துக் கொண்டிருந்தான். எங்கே அவள்? அவனுக்கு முத்தம் வேறு தந்தாளே? சுற்றிச் சுற்றித் தவிப்போடு பார்த்தான். அவள் இல்லை என்கிற நிஜத்தில், அவளின் அருகாமையைத் தேடியலைந்து உள்ளே துடித்தது அவனுயிர்.
“செல்லம்மா.. நீ இல்லாம வாழவே பிடிக்கேல்லடி..”
ஒருமுறை ஒரேயொரு முறை அவள் மடி சாய்ந்து தலை கோதிவிடும் அந்த இதத்தை அனுபவிக்க முடியாதா?
அவனுடைய மிருணா இப்போதே இந்த நிமிடமே அவன் கையணைப்புக்குள் வேண்டும். அவனால் முடியவில்லை. வேகமாக எழுந்து அங்கிருந்து விரைந்தான்.
‘அவள் வேணும் வேணும் வேணும்..’ ஆர்ப்பரித்த நெஞ்சின் இரைச்சலைத் தாங்காமல் கண்கள் கசியக் கசிய புகையை உதித் தள்ளினான்.