வானதிக்குத் துடைக்கத் துடைக்கப் பெருகியது கண்ணீர். நிலத்தில் அமர்ந்திருந்து புற்களோடு விளையாடிய ரூபினியைப் பார்த்தாள். இந்தப் பிஞ்சுக்குத் தாயில்லையா? பசித்தால் என்ன செய்வாள்? தாயின் சூடு இல்லாமல் எப்படி உறங்குவாள்? அநாதரவாக அவள் உதடு பிதுக்கும் காட்சிகள் வந்து கண்ணீரைச் சொரிய வைத்தன. அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தாள். விட்டுவிடவே மாட்டேன் என்பதுபோல இறுக்கமாக அணைத்துக்கொள்ள ஒருமுறை அவள் முகத்தைப் பார்த்துவிட்டு ரூபிணியும் அவள் மார்பில் வாகாகச் சாய்ந்துகொண்டாள்.
வெடித்த விம்மலை அடக்கப் பெரும் சிரமப்பட்டுப் போனாள் வானதி.
சற்று நேரத்தில், மனப்போராட்டத்தை மறைத்தபடி வந்தான் அதிரூபன். அவள் விழிகளைச் சந்திக்க மறுத்துக் கேசம் கோதியவனைப் பார்த்தாள். அன்புக்கு ஏங்கிப்போய் அநாதரவாற்று நிற்கும் குழந்தையாகத்தான் அவனும் தெரிந்தான். கண்ணீர் கசிந்தது அவளிடம்.
அருகில் வந்துவிட்டவனிடம் சிகரெட் நெடி வீச முகத்தைச் சுளித்தாள். ‘இந்தப் பழக்கமெல்லாம் இருக்கா?’ அவன் மீதான இரக்கம் போய் மெல்லிய அதிர்ச்சி வந்தது.
அதிரூபனுக்கு முகம் கருத்துப் போயிற்று. ரூபிணி அவனது கால்களைக் கட்டிக்கொள்ள, தூக்கி நெற்றியில் உதடுகளைப் பதித்துவிட்டுத் தன்னோடு அணைத்துக்கொண்டான். அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் விருட்டென்று எழுந்து, மகனோடு அங்கிருந்து விரைந்தாள் வானதி.
அவளது திடீர் செய்கையில் புருவங்களைச் சுருக்கினாலும் அதற்குமேல் அதைப்பற்றிச் சிந்திக்க முடியாமல், ஆறிவந்த புண்ணைக் கீறிவிட்டதுபோல் அந்தநாட்களை நினைவு கூர்ந்ததில் அவன் உள்ளம் புண்ணாகிப் போயிற்று!
இரவுணவை முடித்துக்கொண்டு அறைக்குள் அடைந்துகொண்டான். ரூபிணியைக் கேட்டு கலைவாணி அம்மா வர, “இண்டைக்கு என்னோட இருக்கட்டும் அம்மா!” என்றான், மார்பில் உறங்கிப்போயிருந்த மகளின் தலையைத் தடவியபடி.
தன் முகம் பாராமல் சொன்ன விதமே அவனது மனதை உரைத்துவிட, அவருக்கும் பாரமேறிற்று! ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் அவன் மீளவில்லை. இன்னோர் திருமணம் என்கிற கதையைக்கூடி ஆரம்பிக்க முடியாத இடியப்பச் சிக்கலில் அல்லவா அவன் வாழ்க்கை சிக்குண்டு கிடக்கிறது.
“இப்படியே இருந்தா எப்படியப்பு?”
வேதனையில் சுருங்கிப் போயிற்று அவன் முகம். “என்னம்மா செய்யச் சொல்லுறீங்க?” பார்வையைச் சாளரத்தினூடு இருள் சூழ்ந்த வெளிக்குள் புதைத்தபடி கேட்டான்.
“ஒருக்கா யாழ்ப்பாணம் போயிட்டு வா தம்பி.” அன்னையின் குரல் கெஞ்சிற்று.
“அங்கபோய் மட்டும்? என்ன தெரிய வந்திடும் எண்டு நினைக்கிறீங்க?” இயலாமையோடு இயம்பிவிட்டு, மகளைக் கட்டிலில் கிடத்திவிட்டு எழுந்து ஜன்னலோரம் சென்று நின்றுகொண்டான்.
“எதுவும் மாறப்போறேல்லமா. சும்மா கண்டதையும் நினச்சு மனத்தைக் குழப்பாதீங்க.”
‘பிறகு ஏனய்யா நீ குழம்பிப்போய் நிக்கிறாய்?’ என்று கேட்க முடியாமல் வாய்மூடி நின்றார்.
அவன் படும் துயர் விளங்காமலில்லை. ஆனால்.. இந்தப் பாழாய்ப் போன மனது கேட்டால் அல்லவோ? பாசத்தில் கிடந்து துடிக்கிறதே! அவருக்கே இப்படி என்றால் அவனுக்கு? தோல்வியுற்றவராய் கல்யாணி திரும்பிவிடப் பிறகும் உறக்கம் அவனை அண்டவில்லை.
மேசையில் மனைவியின் படத்தின் அருகில் கிடந்து, காற்றில் படபடத்த காகிதம் வேறு, என்னை மறந்தாயோ என்று கண்ணீர் வடிப்பது போலிருந்தது. எந்த விசை அவனை இயக்கியதோ, நடந்து சென்று அதை எடுத்தான்.
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலா… இதுதான் காதலா..?
காதலா.. இதுதான் காதலா…?
அவள் உயிரை அனுப்பவில்லை. அவன் உயிரைத்தான் பறித்துக்கொண்டாள். இதில் இதுதான் காதலா என்று கேள்வி வேறு! ஆத்திரம் கொள்வானா அழுவானா?
‘எதற்கடி எனக்கிந்தத் தண்டனை?’ முத்துப்பற்கள் மின்ன அவன் கையணைப்பில் நின்றவளிடம் கேட்டான். அவளால் தானே எல்லாம்!
அவனால் முடியவில்லை. தானாடாவிட்டாலும் தசையாடுமாம். அவன் உயிரும் உள்ளமும் ஆடியது. எத்தனை துன்பங்களைத்தான் அவனும் தாங்குவான்? தந்தையின் வேதனை அறியாமல் ரூபிணி சுகமாகக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்க்கப் பார்க்க விழிகளில் நீர் அரும்பியது. பாசம்கொண்ட உள்ளம் தன் உயிருக்காகத் துடித்தது.
‘நாளைக்கு ஒருக்கா யாழ்ப்பாணம் போயிட்டு வரவேணும்!’ முடிவு செய்தபோதிலும் அமைதிகொள்ளவில்லை அவன் உள்ளம்.
அம்மாவும் மகனும் என்று அவர்களின் வாழ்க்கை அமைதியான பெரிதான சலசலப்பில்லாத வாழ்க்கை. அப்போதுதான் மிருணாளினி வந்தாள். அவனுடைய மொத்த சந்தோசத்தையும் தன்னோடு மூட்டை கட்டிக்கொண்டு வந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
அம்மாவோடு சேர்ந்து நாடகம் பார்ப்பதாகட்டும், சமையல் கற்கிறேன் என்று எதையாவது கருக்கி வைப்பதாகட்டும், நாடகம் பார்க்கிறேன் என்று மாமியாரும் மருமகளும் பொங்குவதாகட்டும் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிப்போட்டாள். வீட்டில் பாட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ற அசைவுகளோடு அவள் நடையே ஒரு நடனமாகத்தான் இருக்கும். சிலநேரங்களில் அவனுக்கே சிரிப்பாயிருக்கும். திருமணமாயிற்றே, ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வந்திருக்கிறோமே, பாந்தமாய்ப் பொறுப்பாய் இருப்போம் என்கிற நினைவே அவளுக்கு வராதா என்றெண்ணித் தனக்குள் சிரித்திருக்கிறான். அவளோ எப்போதுமே அவளாயிருந்தாள்.
அந்த அவளிடம் இவன் கரைந்துகொண்டிருந்தான். படித்த பண்பான பெண் வேண்டும் என்று விரும்பினோமே நல்லகாலம் அப்படி அமையவில்லை என்று பலமுறை எண்ணியிருக்கிறான். படித்தவளாக இருந்திருக்க, அவளும் வேலைக்குப் போய், அவனைப்போலவே வரும்போது களைப்போடு வந்து, ஒரு கட்டாயத்தில் மாமியார், வீடு, சமையல் என்று பொழுதைக் கழித்து, அடுத்தநாள் அரக்கப்பரக்க எழுந்து வேலைக்கு ஓடி என்று, பல குடும்பங்களைப்போல இயந்திரத்தனமாய் அவன் வாழ்க்கை ஓடியிருக்கும். இந்த உயிர்ப்பு இருந்திராது.
களைத்துப்போய் அவன் வருகையில் உற்சாகப் பந்தாய்த் துள்ளிக்கொண்டு வந்து நிற்பாள். குளித்துவிட்டுக் களைப்பாறச் சரிந்தால் போதும், பாட்டைப் போட்டுவிட்டுக் கண்றாவி ஆட்டம் ஒன்றை ஆடத் தொடங்கிவிடுவாள். பிறகு எங்கே கொஞ்சமேனும் அவன் கண்ணயர்வது? வயிறு குலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவான். அப்படியே அவளின் உற்சாகம் அவனையும் தொற்றிக்கொள்ளும். தாய் தாரத்தோடு இருந்து நாடகத்தையே பார்க்க வைத்தவள் அவள். அவளும் அம்மாவும் சிலநேரங்களில் கோபத்தில் பொங்குவது கூட அவனுக்குச் சிரிப்பாயிருக்கும்.
முதல் ஒன்றரை வருடங்கள், சொர்க்கமாய்த்தான் போயிற்று! அவளது தமயனின் குழந்தை மெல்ல மெல்ல நடைபழகத் துவங்கிய நாட்களில், இவள் ஆசையாசையாகத் தூக்கிக் கொஞ்சுகையில், “ஏதாவது திட்டம் போட்டு வாழுறீங்களா?” என்று அவளின் அண்ணிதான் ஆரம்பித்து வைத்தாள்.
அன்று வெகு இயல்பாக இல்லை என்று சிரித்துவிட்டு வந்துவிட்டாள். அதன்பிறகு? அந்தக் குழந்தையின் நெஞ்சை அள்ளும் செய்கைகளா, அல்லது, அடுத்தடுத்துச் சுற்றத்திடம் இருந்து வந்த கேள்விகளா, அல்லது, அவளுக்கும் ஆரம்பித்துவிட்ட குழந்தை ஆசையா? மெல்ல மெல்ல அவளே, “எங்களுக்கு எப்பப்பா குழந்தை பிறக்கும்?” என்று அவனிடம் கேட்க ஆரம்பித்தாள்.