“அது யாழ்ப்பாணம்.. அம்மாட்டையே போறன்.”
இனியாவது இந்தப் பேச்சை விட்டுவிட்டு நகருவான் என்று பார்க்க, அவனோ அசைந்தானில்லை.
“நல்ல வியம் தானே. அதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம்.”
“பதட்டமா? என்ன பதட்டம்? நான்.. நான் நல்லாத்தான்.. இருக்கிறன்.” சிரிக்க முனைந்தவளின் உதடுகள் நடுங்கிற்று!
ஹாண்ட் பாக்கை இறுகப் பற்றினாள். லொறிக்காரன் என்னவோ கேட்க மலங்க மலங்க விழித்தாள். அவனது பார்வை அகலாமல் அவளையே கூர்ந்தவண்ணம் இருக்கக் கை கால்களில் நடுக்கம் பரவிற்று.
அப்போது, தன்னுடைய விளையாட்டுக் கார்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளிருந்து வந்தான் தாரகன். இவனைக் கண்டதும், “ரூபன் மாமா!” என்று ஓடிவந்தான்.
“தாருக்குட்டி அம்மம்மாட்ட போகப் போறீங்களா..?” என்றபடி அவனைத் தூக்கப்போக, பதறிப்போய்த் தான் பறித்துக்கொண்டாள் வானதி.
அவனோ இவனிடம் தாவிவர, இவள் கொடுக்காமல் மறுக்க, “என்ன வானதி இது? உனக்கு என்ன பிரச்சனை?” என்று அதட்டியபடி தாரகனை வாங்கப் போனான் அவன்.
அவள் மீண்டும் மறுக்க, தாரகனோ அவளிடமிருந்து நழுவி இவனிடம் வரப்பார்த்தான். ஏற்கனவே நடுக்கத்துடன் நின்றவள் தடுமாறி விழப்பார்க்க, அவளது தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஹாண்ட்பாக் நழுவி விழுந்தது.
அதற்குள் இருந்து வெள்ளைக் காகிதங்கள் நிறைய நிலத்தில் விழவும் பதறிப்போனவள் பிள்ளையையும் விட்டு ஹாண்ட்பாக்கையும் விட்டு பத்திரங்களையும் எடுக்க முடியாமல் தடுமாறினாள்.
“ஏய் தாரு கவனம்..” என்றபடி தாரகனைப் பற்றி நிலத்தில் விட்டுவிட்டு, வேகமாக அவளையும் பிடித்து நிறுத்திவிட்டு நிலத்தில் கிடந்த பாத்திரங்களைச் சேமித்தவனின் கண்ணில் பட்டது அந்த சைன்!
அவனது கைகள் ஒருமுறை வேலை நிறுத்தம் செய்தன!
புருவங்கள் முடிச்சிட எடுத்துப் பார்த்தான். அதிலிருந்த திகதி அணுகுண்டாய் அவனைத் தாக்கியது. நிமிர்ந்து அவளைப் பார்க்க அவளோ வேர்வையில் குளித்துவிட்ட உடலுடன் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
பரபரப்புற்று அந்தப் பத்திரங்கள் அத்தனையையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.
படிக்கப்படிக்க அவனுக்குள் பூகம்பம்! வேகமாய் எழுந்தவனின் விழிகள் அவளை உறுத்து விழித்தன!
பயத்தில் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது வானதிக்கு.
“எல்லாத்தையும் இங்கயே திரும்ப இறக்கி வைங்கோ!” பொருட்களை ஏற்றியவர்களிடம் உத்தரவிட்டவன், அவர்களுக்கான பணத்தையும் கொடுத்துவிட்டு வந்தான்.
தாரகனைத் தூக்கிக்கொண்டு மறுகையால் அதிர்ச்சியில் உறைந்து நின்றவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வீதியைக் கடந்தான். அவர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டவனின் கார் அவன் வீடு நோக்கி சீறிப் பாய்ந்தது.
“அம்மா தாரகனை பாத்துக்கொள்ளுங்கோ!” மகனின் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்த கலைவாணியிடம் தாரகனைக் கொடுத்துவிட்டு, வானதியின் பற்றிய கரத்தை விடாமல் இழுத்துக்கொண்டு அறைக்குள் புகுந்து கதவடைத்தான்.
“சொல்லு! நீ ஆரு?”
‘அதை மட்டும் கேக்காதிங்கோ..!’அச்சத்துடன் நோக்கிய அவள் விழிகள் அதிரூபனிடம் இறைஞ்சின.
“சொல்லு!” அதிரூபனுக்குத் தெரிந்தே ஆகவேண்டியிருந்தது. முடிவின்றி அலைப்புற்று ஓடிக்கொண்டிருக்கும் அவன் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டுமாயிருந்தது.
“சொல்லு வானதி! இண்டைக்குத் தெரியாம விடமாட்டன்!”
அவனது உலுக்கலில், “உங்கட குழந்தையின்ர அம்மா!” என்று சொல்லும்போதே கேவல் வெடித்தது. இனி என்னவெல்லாம் ஆகுமோ என்கிற பயம் தாக்க தேகமெங்கும் நடுங்கத் தொடங்கிற்று. பிடிப்பற்று அவள் சாய, அந்த ஒற்றை வரி அதிரூபனின் கரங்களை உயர்த்தி, அவளைத் தன் மார்பில் சேர்த்துக்கொள்ள வைத்தது.
தேம்பித் தேம்பி அழுத்தவளை வருடிக்கொடுத்துக்கொண்டு இருந்தான் அதிரூபன். முடிவே தெரியாது, எங்கு முற்றுப்பெறும் என்றும் தெரியாது ஓடிக்கொண்டிருந்த அவளது வாழ்க்கை எனும் ஓட்டம் அவன் காலடியில் வந்து முடிந்திருந்தது.
அழுது ஓய்ந்தவளை கட்டிலுக்கு நடத்திச் சென்று கிடத்த, அவனது கட்டில் என்று கூசி விலக்கியவளை அதிரூபனின் ஒற்றைப் பார்வை அடக்கியது.
“படு!” என்றான் அழுத்தமாக.
அவனிடமிருந்து விழிகளை அகற்றாமல் அவள் சரிய, “எதைப்பற்றியும் யோசிக்காம நித்திரையைக் கொள்!!” என்றான்.
உறக்கத்துக்குக் கூட அவன் பேச்சுக்குக் கட்டுப்படும் சக்தி உண்டுபோலும், அவளை வந்து அணைத்துக்கொண்டது.
அங்கேயே தொப்பென்று அமர்ந்துவிட்டான் அதிரூபன்.
பாராங்கல்லாகக் கனத்த தலையைக் கைகளில் தாங்கியபடி இருந்தவனுக்கு, தன்னை நிதானப்படுத்திக்கொள்ளவும் நேரம் தேவைப் பட்டது. மிருணாவைச் சுமந்திருக்கும் இதயம் பேரோசையுடன் துடித்துக்கொண்டிருந்தது. திரும்பி அவளைப் பார்த்தான். அவனது தேடல் அவள்தான். இனி? படு பயங்கரமாய் அவனை உலுக்கிற்று நிகழ்காலம்.
மிருணா… என்னடி செய்ய? உயிராய் அவளைச் சுமந்திருக்கும் இதயம் துடியாய்த் துடிக்க, எழுந்து வெளியே வந்தான்.
தவிப்போடு காத்திருந்து, அவனைக் கண்டதும் கேள்வியாகப் பார்த்த தாயின் மடியிலேயே உறங்கிவிட்ட மகனை அள்ளி அணைத்தவனின் கண்கள் பனித்துப்போயின. அப்பா என்று வாய் நிறைய அழைக்க வேண்டியவன், மாமா என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். உறங்கிய மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
“என்னப்பு?”
தாயின் கேள்விக்குப் பதிலாக மீண்டும் அவர் மடியில் கிடத்தி, “இவனும் உங்கட பேரன் தான்மா!” என்றான் கரகரத்த குரலில்.
“என்னப்பு சொல்லுறாய்?” ஆனந்தமும் அதிர்ச்சியும் தாக்க, அவருக்கும் தொண்டை அடைத்துப்போனது. நம்ப முடியாமல் மகனை ஏறிட்டார். அவன் அப்படித்தான் என்று தலையசைக்க, அவனது அறையைக் கண்ணால் காட்டிக் கேட்க அதற்கும் தலையசைத்தான்.
அவரால் நம்ப முடியவில்லை. கண்ணீர் பெருகியது. “ஆண்டவரே.. என்ர குடும்பக் குருத்துக்கு ஏன் இவ்வளவு சோதனையைத் தாறாய்..” கண்ணீர் வழிய தன் பேரனை அள்ளி அணைத்துக்கொண்டார்.
“நான் கொஞ்சம் வெளில போயிட்டு வாறனம்மா.” அவரின் பதிலை எதிர்பாராமல் நடக்கும் மகனைக் கண்ணீரோடு பார்த்திருந்தார்.