என் குழந்தையின் தந்தைக்கு,
என்னை மன்னிக்கவேண்டும். ஒரு இளம் பெண்ணின் மனதையும், உடலையும், வாழ்க்கையையும் முற்றாக மாற்றிப்போடும் வல்லமை கொண்டதுதான் குழந்தைச் செல்வம் என்பதை அறியேன். தன் உயிர்க்கொடியில் சுமக்கும் இன்னோர் உயிரின் மீது பெண்மைக்குள் சுரக்கும் பாசத்தின் ஆழம் எத்தகையது என்றும் அன்று எனக்குத் தெரியாது.
என்னாலான உதவி. உண்மையைச் சொல்லப்போனால், இதன் ஆழம் கூட அறியாமல் விபரீத விளையாட்டினை விளையாடிப்பார்த்தால் என்ன என்கிற ஆர்வக் கோளாறும், என் குடும்பத்துக்காக செய்வோமே என்கிற வயதுக்கு மீறிய நினைப்புமே என்னை இதற்குத் தூண்டியது. வீட்டு நிலைமை பெற்றவர்களின் வாயைக் கட்டிப்போட்டதும் எனக்குச் சாதகமாகப் போயிற்று. முரண்களை நிகழ்த்திவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் முட்டாள் பெருமை எனக்குள்ளும்! விளையாட்டாக எடுத்த முடிவுதான்.
குடும்பத்துக்குப் பணம், எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்று ஆழம் தெரியாமல் காலை விட்ட கதைதான் என் கதையும்.
கருவைக் கர்ப்பப்பைக்குள் வைத்தாயிற்று என்று டாக்டர் சொன்ன அந்தக் கணத்தில் எனக்குள் ஓடிய சிலிர்ப்பிலிருந்து மாற்றங்கள் உருவாகத் துவங்கியது. என் வயிற்றுக்குள் குழந்தை… குழந்தையாக மனம் குதூகலிக்க சிலநாட்கள் புன்னகையோடு கழிந்தன. என் வயிற்றைத் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் சிலிர்ப்பு ஓடிக்கொண்டிருந்தது. மாதவிடாய் நின்றபோது என்னவோ நான் மிகவுமே பெரியவள் ஆகிவிட்டதைப்போல் உணர்ந்தேன். பெரிதாக எதையோ சாதித்த உணர்வு. மெல்லியதாய் என் மணிவயிறு ஊதத் துவங்கிய போதினிலே, சின்னதாய் ஒரு பரபரப்பு. என் வயிற்றுக்குள் ஒரு குழந்தை, என்னால் நம்பவே முடியவில்லை. சிலிர்ப்பும் சிரிப்புமாக அடிக்கடி தடவிக்கொண்டேன்.
முதன் முதலில் என் குழந்தை அசையத் துவங்கிய அன்று ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் அளவில்லாமல் படியத் துவங்கிற்று. மார்பில் பால் சுரப்பதைப்போல பாசம் சுரக்கத் துவங்கியது. கண்ணால் காணாத குழந்தையின் மீது ஓராயிரம் கற்பனைக் கோட்டைகளைக் கட்டிமுடித்தது மனது. பல இரவுகள் உறங்கவேயில்லை. எப்போது அசைவான் என்று முழித்திருந்து பார்த்திருக்கிறேன். வயிற்றில் அசைகையிலேயே இத்தனை ஆனந்தமாய் இருக்கிறதே என் கைகளில் அசைந்தால்? என் மடியில் உறங்கினால், மார்பினில் சாய்ந்தால்? பொக்கை வாய் திறந்து சிரித்தால்? கருவண்டு விழிகளால் என்னைப் பார்த்தால்? அம்மா என்று அழைத்தால்? கற்பனைகள் சிறகின்றிப் பறக்கப் பறக்கப் பாசம் படர்ந்துகொண்டே போயிற்று.
நானே எதிர்பாராத மாற்றம்! என்னையே தூக்கிச் சாப்பிடும் பாசம்! என் பிள்ளை.. என் குழந்தை.. என் மகன்.. நாமம் போல இதைத்தான் என் உதடுகள் உச்சரிக்கின்றன!
என் குழந்தை மீதான கற்பனைகளை அவனே வளர்த்துவிட்டான். பார்த்தீர்களா, உங்களிடமே அவனே என்கிறேன். ஆம் எனக்கு ஆண்பிள்ளை தான் வேண்டும். அவன் எப்படியிருப்பான். யாரைப்போல இருப்பான்? என்னைப் போலவா உங்களைப் போலவா? இப்படித்தான் உங்கள் மகன் உங்களைப் பற்றிய நினைவுகளையும் எனக்குள் ஊட்டிவிட்டான்.
இப்போதெல்லாம் அவனை நினைக்கும் நேரமெல்லாம் உங்களையும் நினைத்துக்கொள்கிறேன். நானும் நீங்களுமாய் அவன் கரத்தை ஆளுக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு நகர்வலம் கூட வரத்துவங்கிவிட்டோம். அம்மாதான் குழந்தைக்கு இவர்தான் உன் அப்பா என்று காட்டுவாளாம். நான் காத்திருக்கிறேன், என் மகனின் அப்பா எப்படி இருப்பார் என்று அவன் சாயலை வைத்து அறிந்துகொள்ள. அதனாலேயே அவன் உங்களைப்போலவே பிறக்கவேண்டும் என்று ஆசையாயிருக்கிறது.
உங்களை என்றும் சந்திக்கமாட்டேன் என்கிற தைரியத்தில், அல்லது சந்தித்தாலும் நீங்கள் தான் என்று அறிய வாய்ப்பில்லாத காரணத்தால் சொல்கிறேன். அவன் வளர வளர, அவன் தன் மீது மட்டுமில்லை உங்கள் மீதும் என் நேசத்தைப் படரவிட்டுவிட்டான்.
இப்போதெல்லாம் என் உள்ளம் உங்களையும் தேடுகிறது. தனியறைக்குள் இருளின் மறைவில் உங்களை எண்ணி என் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டேன். நீங்கள் எப்படி இருப்பீர்கள், எப்படிச் சிரிப்பீர்கள், எப்படி நடப்பீர்கள் என்றெல்லாம் சதா என் உள்ளம் சிந்திக்கிறது. இரவின் போர்வைக்குள் தலைசாய்க்க உங்கள் தோளைத் தேடுகிறது. உங்கள் அன்பினில் குழைந்து, கனிந்து இந்தக் குழந்தை உருவாகியிருந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனைகளெல்லாம் வருகிறது.
தவறு! இது கூடாது. இன்னொரு பெண்ணின் கணவனை இப்படியெல்லாம் நினைக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். முடியாமல் நினைவுகள் மீண்டும் உங்களிடமே ஓடி வருகின்றன. இனிமேல் நினைப்பதில்லை என்று கடுமையாக ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கிறேன். பயங்கரமாகத் தோற்றும் போகிறேன்.
என் வாழ்க்கையில் இனி இன்னொருவருக்கு இடமில்லை என்கிறபோது உங்கள் நினைவுகளின் துணையும் இல்லாமல் எப்படி வாழ்வேன் சொல்லுங்கள்?
அந்த இடத்தில் அழுத்திருக்கிறாள் என்பதற்குச் சான்றாக கண்ணீர் பட்டுச் சிதறிய அடையாளம் தெரிந்தது. மனம் பாரமாக்கிப் போயிற்று அதிரூபனுக்கு.
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லக் கேட்டாளா அவன் மனைவி? இப்போதானால் இன்னோர் பெண்ணின் மனதை அல்லவா கலைத்துவிட்டான். சம்மந்தமே இல்லாத இருவரை சம்மந்தப்படுத்தி விட்டதே இந்த நிகழ்வு!
‘வாடகைத்தாய்’- குழந்தையற்றவர்களுக்காய் வளர்ந்த விஞ்ஞானம் இலகுவாக விடை கண்டுபிடித்துவிட்டது. ஆனால், வாடகைத்தாயாக மாறும் பெண்ணின் மனதுக்கு, அதிலே சுரக்கும் பாசத்துக்கு என்ன பதில் சொல்லுமாம்? பாசம் என்பது கையெழுத்திடும் பத்திரங்களில் இருக்கும் சட்டதிட்டங்களுக்குள் அடங்கிவிடுமா என்ன?


