என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உள்ளம் சொல்லிக்கொண்டா ஒருவரை நினைத்துவிடுகிறது? தலைசுற்றலிலும் வாந்தியிலும் சோர்ந்துகிடக்கும் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் தோளைத்தான் தேடுகிறது உள்ளம். தனியறையில் ஒற்றைத் தலையணையில் தலை சாய்க்கையில் அருகில் நீங்கள் வேண்டும் போலிருக்கிறது. என்ன செய்வேன்? இந்த விபரீத பரிசோதனையில் எலியாக நானே மாட்டிக்கொள்வேன் என்று நினைக்கவேயில்லை.
உங்கள் குழந்தையை அபகரிக்கப் போகிறேன். இது பெரும் பிழை. கூடவே கூடாது. சட்டப்படியும் குற்றம் தர்மப்படியும் குற்றம். ஆனால் நீங்களும் இல்லாமல் உங்கள் குழந்தையும் இல்லாமல் சத்தியமாக நான் உயிர்வாழ மாட்டேன். நீங்கள்தான் எனக்கில்லை. உங்கள் நினைவாக அவனாவது என்னோடு இருக்கட்டுமே. தாய்மை இத்தனை அற்புதம் நிறைந்தது என்று எண்ணியே பார்த்ததில்லை. எனக்குள் இவ்வளவு பாசம் சுரக்கும் என்றும் யோசிக்கவில்லை. தெரிந்திருந்தால் சத்தியமாக சம்மதித்திருக்க மாட்டேன்.
குழந்தை பிறக்கும்போது தப்பித்தவறி நான் இறந்துவிட்டால், எங்கள் டாக்ட்டரின் விலாசம் கொடுத்து வைக்கிறேன், அவரிடம் குழந்தையை ஒப்படைக்கவும் சொல்லிவிடுவேன். அதனால் பிள்ளைப் பிறப்பின்போது நான் இறந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
அதோடு, என் மனதில் படறத் துவங்கியிருக்கும் உங்கள் மீதான நேசம் உங்கள் குடும்பத்துக்குள்ளும் சிக்கலை உருவாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நிரந்தரத் தீர்வு, நான் மாயமாவதே. மீண்டும் மீண்டும் கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள்.
எப்பாடு பட்டேனும் உங்கள் குழந்தையை மிகச் சிறப்பாக வளர்ப்பேன்.
ப்ரியங்களுடன் உங்கள் குழந்தையின் தாய்.
அதைப் படித்து முடித்தபோது சிந்திக்கும் திறனை இழந்து உறைந்து போயிருந்தான் அதிரூபன். மூளை விறைத்துப் போயிற்று! அதை மடித்தபோதுதான் பார்த்தான், ஏதோ பாடல் வரிகள்.
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலா… இதுதான் காதலா..?
காதலா.. இதுதான் காதலா…?
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று!
நீயின்றி வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு!
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி!
அலைபாய்ந்து நான் இங்கு வாழ
அவைதானே சாட்சி!
நீயில்லாத நானே
குளிர் நீரில்லாத மீனே..!
நீர் ஓடை போல…. அதோடு நிறுத்தியிருந்தாள்.
அவனுக்குத் தெரியும்; அந்த வரிகள் ‘நீர் ஓடைபோலக் கூடவேண்டுமே’ என்று முடியும். கூடவே முடியாது என்று தெரிந்து அதற்குமேல் எழுதவில்லை அவள்.
என்ன செய்திருக்கிறாள் இந்தப் பெண்? தன் வாழ்க்கையையும் சிக்கலாக்கி, அவனது வாழ்க்கையையும் சிக்கலாக்கி தலையே வெடிக்கும் போலிருந்தது.
கையில் கிடைத்தாள் என்றால் என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று கேட்டு இரண்டு சாத்துச் சாத்திவிடுவான்! அவ்வளவு கோபம் வந்தது; அவள் மீது, இதற்காக அடம் பிடித்த மனைவி மீது, சம்மதித்த தன்மீது. ஆனால் என்ன, பிரயோசனம் இல்லாத கோபம்!
இனிப் பிள்ளை பிள்ளை என்று நொடிக்கொரு தரம் வார்த்தைக்கு வார்த்தை உச்சரிக்கும் மனைவியிடம் என்ன சொல்லுவான்? அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் மனதுக்குள் புகுந்து நெஞ்சைப் பிசைகிறதே அதற்கு என்ன செய்வான்?
உடனே டாக்டரிடம் விரைந்தான். கேட்டவர் அதிர்ந்துபோனார். யார் என்றே தெரியாதவனிடம் எப்படிக் கடிதத்தைச் சேர்ப்பித்தாள்?
தன் முன்னே கெஞ்சிய நர்ஸின் நினைவில் அதற்குப் பதில் சொல்லவில்லை அதிரூபன்.
“அந்தக் கடிதம் எங்க?” கோபத்தை அடக்கியபடி கேட்டார் சங்கரி.
பின்னே, நம்பி வீட்டில் வைத்திருந்தவள் அவருக்கே தெரியாமல் எவ்வளவு பெரிய வேலைகளையெல்லாம் பார்த்திருக்கிறாள்? பாவப்பட்ட குடும்பம் என்று பார்த்ததற்கு அவர் தலையிலேயே அல்லவா மிளகாய் அரைத்துவிட்டாள்!
“இல்ல டாகடர். அது என்னட்டையே இருக்கட்டும்.” என்றான் அதிரூபன்.
அவள் எழுதியவை அனைத்தும் அவனுக்கும் அவளுக்குமானவை! பிடிக்கிறதோ இல்லையோ அதை இன்னொருவரிடம் பகிர்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
அவனைக் கூர்மையாக அளவிட்டது அவர் விழிகள்.
“டாக்டர் ப்ளீஸ். வித்தியாசமா எதுவுமில்லை. அந்தப் பெட்டை தன் மனதைச் சொல்லி இருக்கிறா. அத நீங்க படிக்க வேண்டாம். விசயம் மட்டும் நான் சொன்னதுதான். பிள்ளைப்பாசம் சொல்லாம கொள்ளாம ஓட வச்சிருக்கு. அதைத்தாண்டி அவா தன்ர பெயரைக் கூடி என்னட்ட சொல்லேல்ல.”
தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் சங்கரி. மேசை இழுப்பறையைத் திறந்து அவருக்கும் அவள் எழுதியிருந்த துண்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.
அதே கையெழுத்து. “என்னை மன்னித்துவிடுங்கள் டாக்டர். நான் செய்வது மகா தவறுதான். ஆனால் முடியவில்லை. என் குழந்தையைப் பிரிந்தால் இறந்துவிடுவேன். நான் போகிறேன்.” என்று எழுதி இருந்தாள்.
அவனை அனுப்பிவிட்டு உடனே பெற்றவர்கள் வீட்டுக்கு விரைந்தார். அவர்களுக்கோ விசயமே தெரியாது. இவர் சொன்னதைக் கேட்டதும் குடிவெறியில் இருந்த அவளது தந்தை, “பாத்தியாடி, வீட்டுக்கு வந்த லச்சுமியை கெடுத்துட்டாள் உன்ர மகள்.” என்று, மனைவியிடம் சண்டைக்குப் போனார். வந்த கோபத்துக்குக் கத்திவிட்டு வந்துவிட்டார் சங்கரி.
என்ன நடக்கப்போகிறதோ என்கிற திகிலோடு அவள் எழுதிய கடிதத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், மிருணாவுக்கு மென்மையாக எடுத்துச் சொன்னான் அதிரூபன். கலவரம் மூளப்போகிறது என்கிற அச்சத்துடன் அவன் காத்திருக்க அவளோ மூச்சும் விடவில்லை. கோர்த்திருந்த கைகளையே பார்த்திருந்தாள். தாய்க்கும் மகனுக்கும் அந்த நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாய்த்தான் கழிந்தது. அவளோ அடுத்த இரண்டு நாட்களும் அதைப்பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை.