பூவே பூச்சூட வா 8(1)

“உங்கட நல்ல மனதுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எண்டு கனவில கூட நினைக்கேல்ல அதிரூபன்.” மிருணாவின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் முடிந்த பிற்பாடு ஒருநாள் அவன் வீட்டுக்கே வந்து அவனைச் சந்தித்தபோது சொன்னார் சங்கரி.

சிறந்த துணையின் இழப்பு ஒரு கணவனை வேரோடு சாய்க்க வல்லது என்பதற்குச் சான்றாக சந்தோசத்தை இழந்து, தோற்றப் பொலிவிழந்து, தாடி வளர்ந்து, ஒளி குன்றிய விழிகளோடு இருந்தான் அவன்.

“நல்லவனா இருந்து என்ன பிரயோசனம் சொல்லுங்க. பெத்த பிள்ளைகளைக் குறையில்லாம வளக்க வழியில்லையே.” இலக்கின்றி வெறித்தவனின் விழிகளில் விரக்தி.

மகனது வார்த்தைகளைக் கேட்ட கலைவாணி அம்மாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவர் கையை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார் சங்கரி. தன்னைச் சுற்றி நடப்பவற்றை உணரமுடியாத வெறுமைக்குள் கிடந்து தத்தளித்துக்கொண்டிருந்தான் அவன்.

“அவள் இருக்கிற இடம் தெரியாட்டியும் அம்மா வீடு தெரியும். அங்கபோய் கதைப்பமா? அவளின்ர போட்டோ கிடைக்கும் தானே. அதவச்சு விளம்பரம் ஏதும் குடுத்தா கண்டுபிடிக்கலாம்.” என்றவர், அவள் வீட்டு விலாசம் அடங்கிய துண்டை அங்கிருந்த மேசையில் வைத்தார்.

“கண்டுபிடிச்சு?” விரக்தியாய்க் கேட்டான் அவன்.

இதென்ன கேள்வி? பெண்கள் இருவருக்கும் புரியவில்லை. அவனது குழந்தையோடு மறைந்தவளைக் கண்டுபிடித்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாதா?

அதையே அவர்கள் கேட்டபோது, “பிள்ளையைத் தர விருப்பமில்லாம காணாம போனவளிட்ட இருந்து குழந்தையைப் பிடுங்கச் சொல்லுறீங்களா? இங்க ஒரு பிள்ளை அம்மா இல்லாம படுற துன்பம் காணாதா டாகடர்.” என்றான் அவன்.

அவனை விளங்காத பார்வை பார்த்தார் அவர். “பிள்ளையை ஏன் பிடுங்க? அவளை மனைவியாக்கி கூட்டிக்கொண்டு வாங்க!”

“நோ!” ஒற்றை வார்த்தையில் ஆக்ரோசம் காட்டினான் அவன். யாரிடத்தில் யார்? அவள் எழுதிவைத்த கடிதம் வேறு மின்னி மறைந்தது. “கண்டதையும் கதைக்காதீங்க டாகடர்!” உத்தரவாய்ச் சொன்னான்.

சங்கரி அவனது கோபத்தில் நிதானமிழக்கவில்லை.

“வாடகைத்தாய் விசயம் நான் பொறுப்பா கவனிச்சு செய்து தந்திருக்க வேணும். அதுல இருந்து தவறினது நான் செய்த மிகப்பெரிய பிழை. அதுக்குப் பரிகாரமாத்தான் இதைச் சொல்லுறன் அதிரூபன். ஆறுதலா யோசிச்சுப் பார்த்தீங்க என்றால், நான் சொல்லுறதுதான் சரி எண்டு விளங்கும். இப்பயெல்லாம் வாடகைத்தாய் முறையை நான் செய்றேல்ல. குற்ற உணர்ச்சி என்னைக் குத்துது. அவள் கிடைக்கிறவரைக்கும் தேடிக்கொண்டே இருப்பன்.” என்றவர், இனி உன் விருப்பம் என்பதுபோல் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, கலைவாணி அம்மாவிடம் தலையசைப்பால் விடைபெற்றுக்கொண்டு எழுந்து நடந்தார்.

அவனைக் கடக்கும் அந்தக்கணத்தில், “சாரி டாகடர்.” என்றான் அவன்.

அவர் அவன் தோளில் தட்டிக்கொடுத்தார். “உங்கட மன உணர்வுகள் எனக்கு விளங்குது அதிரூபன். மிருணாளினி இருந்தா இந்த விசயத்தை நாங்க கையாளவேண்டிய முறையே வேற. ஆனா இப்ப.. ஏதோ யோசிச்சு செய்ங்கோ. அதுவும் உங்கட பிள்ளைதான். அவளும் ஒரு அழகான நல்ல பிள்ளைதான்.” என்றுவிட்டுப் போனார் அவர்.

அந்தக் காகிதம் அவன் மனதைப்போலவே காற்றில் படபடத்தது. கலைவாணி அம்மாவும் அவனையே கண்ணீரோடு பார்த்திருந்தார். நெஞ்செல்லாம் புண்ணாகிப் போயிருக்கும் மகனிடம் எதையும் வற்புறுத்தும் வலிமை அவரிடமும் இல்லை.

அவனோ அந்தத் துண்டையே பார்த்திருந்தான்.

அதை எடுப்பதா வேண்டாமா? அவனுக்குள் போராட்டம். கடைசிவரை துணையாகக் கூட வருவேன் என்று கரம் பிடித்தவள் நடுவில் விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டுப் பெற நினைத்த குழந்தை எங்கோ நின்றுகொண்டு “என்னைக் காண வரமாட்டாயா அப்பா?” என்று கேட்கிறான். அவனைத் தேடிப்போனால் அவனை மட்டும் காணமுடியாது. அவனோடு அவனது அம்மாவையும் காணவேண்டும்.

அது முடியாது! ஆனாலும், அதனை எடுத்து வைத்துக்கொண்டான். அவ்வளவுதான், அதற்கு அவனாற்றிய எதிர்விசை!

நாட்கள் நகர்ந்தன. அவனால் அந்த இழப்பிலிருந்து மீளவே முடியவில்லை.

மனமெங்கும் பாரம். ஒரு மாற்றம் வேண்டுமாயிருந்தது. “அம்மா, நாங்க ஊர் மாறிப் போவமா?”

“வாழ்ந்த இடத்தைவிட்டு எங்கயப்பு?” கண்கள் கலங்கக் கேட்டார் கலைவாணி.

“எங்கேயெண்டாலும். எனக்கு இங்க தலை வெடிச்சிடும் போல இருக்கு. கொஞ்ச நாளைக்கு மட்டும்.” கெஞ்சிய மகனிடம் மறுக்கும் மனவலிமை அன்னைக்குமில்லை.

“சரி தம்பி. உனக்கு நிம்மதியத் தரும் எண்டால் மாறுவம்.” என்றவர், தயங்கி மெல்லக் கேட்டார்.

“ஏன் அப்பு, அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரிக்கவே இல்லையா நீ?”

தாயின் கேள்வியில் பெரிய நெடிய மூச்சு ஒன்றை வெளியேற்றினான் அவன். “அவளின்ர இடத்துல இன்னொருத்தியை வைக்கேலாமா. அந்தக் கதையை விடுங்க.” என்றவன், அடுத்த மாதமே மாற்றல் வாங்கிக்கொண்டு வவுனியாவுக்கு நகர்ந்தான்.

வவுனியா அவனைச் சற்றே தெளிய வைத்ததுதான். ரூபிணியும் தன் அழகான சின்னச் சின்னச் செய்கைகளால் அவனைக் கவரத் தொடங்கியிருந்தாள். பற்றே இல்லாமலிருந்தவனின் இதயத்தில் பிள்ளைப்பாசம் படரத் தொடங்கியது. அவனது நெஞ்சத்துப் பாசம் முழுவதையும் தனதாக்கிய ரூபிணி அவளின் தமயனை நினைவூட்டிக்கொண்டே இருந்ததில், மனதில் பாரத்தோடு தன் தேடுதலை மெல்ல ஆரம்பித்திருந்தான் அதிரூபன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock