யாருக்கும் தெரியாமல் மகனை மட்டுமாவது பார்த்துக்கொள்ளலாமே! வறுமையில் வாடினால் யார் மூலமாவது உதவி செய்யலாமே. எல்லாவற்றுக்கும் முதல் மகனைப் பார்க்கவேண்டும் என்று பெற்றமனம் அரிக்கத் துவங்கியிருந்தது.
சங்கரி தந்த வீட்டு விலாசத்துக்குக் கீழே இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து விசாரித்தவன் அவளின் பணம் பறிக்கும் தகப்பனிடமும் மாட்டிக்கொண்டான். பிள்ளைக்காக அதையும் பொறுத்துக்கொண்டு தேடினான்.
பிள்ளைப்பாசம் அவளை ஓடவைத்தது என்றால் அவனைத் தேடவைத்தது. அவன் தொலைத்த இடத்தில் தேடிக்கொண்டிருக்க, மகனோ கண்முன்னே இருந்திருக்கிறான்.
இனி என்ன செய்யப்போகிறான்? மீண்டும் மீண்டும் அதே கேள்வி.
இறந்தகாலம் அழியாத காயத்தைத் தந்தது என்றால் எதிர்காலம் மிரட்டியது.
‘மிருணா.. என்னடி செய்ய? நம் குழந்தையோட வந்து இருக்கிறவளை என்ன செய்யச் சொல்லுறாய்?’ தனக்குச் சகலதுமாய் இருந்தவளிடமன்றி வேறு யாரிடம் கேட்பான்?
குழந்தையைப் பறித்துக்கொண்டு அனுப்புவானா? இல்லை குழந்தையோடு அவளையும் ஏற்பானா?
‘ரெண்டுமே என்னால முடியாது மிருணா. எதுக்கடி இந்த வேலை பார்த்தாய்?’ தனக்குள்ளேயே துடித்தபடி கிடந்தான்.
தன் குழந்தைதான் என்று தெரிந்தமாத்திரத்தில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டான் தான். இனி?
ஒரு குழந்தை அப்பனில்லாமலும் இன்னொரு குழந்தை அம்மா இல்லாமலும் என்று அவன் பிள்ளைகள் வாங்கிவந்த வரம்தான் என்ன?
அவனைப்போலவே சங்கரியும் அல்லவா அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவள் கிடைத்துவிட்டதை அவருக்கு அழைத்துச் சொன்னான்.
“என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க அதிரூபன்?”
எதுவுமே எடுக்காதவன் என்ன முடிவை என்று சொல்லுவான்? பதிலற்றுப்போக அவனது மனம் புரிந்துபோயிற்று அவருக்கு.
நிதானமாக மென்மையாக தெளிவாகப் பேசினார்.
“எனக்கு உங்கட மனம் விளங்குது அதிரூபன். குடும்பத்துக்கு நல்லது நடக்கும் எண்டால் நமக்குப் பிடிக்காட்டியும் சில முடிவுகளை நாங்க எடுக்கிறதுதான் நல்லது. மிருணாளினி இனி இல்ல. அதைத் தெளிவா உங்கட மனதில பதிய வைங்கோ. ஆனா உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கு. உங்கட அம்மாவுக்கும் வயது போயிற்று. உங்கட அம்மாவை பாக்கிறதுக்கும், பிள்ளைகளை பாக்கிறதுக்கும் ஒரு பொம்பிளை வீட்டுக்கு வேணும். சரியோ பிழையோ.. அவள் உங்கட மகனைத் தன்ர பிள்ளையாத்தான் வளத்திருக்கிறாள். அவளிட்ட இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு வெளில விட்டா அவளும் பாவம் குழந்தையும் பாவம். உங்கட மகளைப் பற்றியும் யோசிங்கோ. இதுவே, உங்கட மனதை கொஞ்சம் சமாதானம் செய்துகொண்டு அவளை நீங்க கட்டினா, எல்லாருக்குமே நல்லதுதான் நடக்கும். இன்னொரு வாழ்க்கையை அவளும் கடைசிவரைக்கும் தேடப்போறது இல்ல. அதுக்கு உங்களோட வாழ்ந்திட்டுப் போவாள் தானே. எல்லாத்துக்கும் நல்ல முடிவு உங்கட மனமாற்றம் மட்டும் தான். அது உங்களுக்கும் நல்ல முடிவுதான். இனி நீங்கதான் யோசிக்கவேணும். நான் ஒருநாளைக்கு வந்து அவளோடையும் கதைக்கிறன்.”
அமைதியாகக் கேட்டுக்கொண்டாலும் பதிலேதும் சொல்லாமல் வைக்கப்போக, “இன்னும் அந்தக் குடும்பத்துக்கு காசு குடுக்கிறீங்களா அதிரூபன்?” என்று அவசரமாகக் கேட்டார் சங்கரி.
“அது நானா விரும்பிச் செய்றது.” என்றான் சுருக்கமாக.
அதுபற்றி எந்தக் கருத்தும் கூறுவதை அவன் விரும்பவில்லை என்று புரிந்துகொண்டார் சங்கரி. என்றாலும், “அவள் சொன்னதை செய்யாதபோதும், சொன்ன காசை நீங்க குடுத்திட்டிங்க. உங்களுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லையென்றால் அவளின்ர குடும்பத்துக்கு தண்டமா காசு கொடுக்கவேண்டிய அவசியமில்லை அதிரூபன். குழந்தைக்காக என்றாலும் காசோட முடியிற கடமையும் இல்ல அந்தக் கடமை. நல்லா யோசியுங்கோ!” என்றுவிட்டு வைத்துவிட்டார் அவர்.
அவரின் வார்த்தைகள் அவன் மனதில் புயலைக் கிளப்பியிருந்தன.
‘மிருணா.. நீ பாத்த வேல உன்னையே என்னட்ட இருந்து பிரிக்கப் பாக்குதேடி..’ நெஞ்சில் பாரத்தோடு எழுந்து வீட்டுக்கு நடந்தான்.
அம்மாவின் அறையில் விளக்கெரியக் கண்டு அங்கே செல்ல, கண்களில் கண்ணீரோடு தன் பேரனையே பார்த்திருந்தார் அவர்.
“படுக்கேல்லையாமா.” மகனின் பெட்சீட்டை இழுத்துவிட்டபடி அவனருகில் அமர்ந்தான் அதிரூபன். பிஞ்சுக் கால்களை திசைக்கு ஒன்றாக எறிந்துவிட்டு உறங்கும் மகன் மீது பாசம் பெருகியது. தலையை வருடிக்கொடுத்தான்.
“என்ர பேரக்குழந்தைய அனாதையா விட்டுடாதையப்பு!” கண்ணீரோடு சொன்ன அன்னையைக் கனிவோடு பார்த்தான்.
அவருக்கும் ஆறுதலும் இல்லை நிம்மதியும் இல்லை. அவன் படுகிற துன்பங்கள் போதாது என்று அவருக்கும் நிம்மதியான உறக்கமும் இல்லை அமைதியான மனமும் இல்லை.
“நான் என்ன செய்தா உங்களுக்குச் சந்தோசமா இருக்கும் அம்மா?”
“அந்தப் பிள்ளையைக் கட்டு தம்பி. கட்டி இந்தக் குழந்தைகளுக்கு ஒரு குடும்பச் சூழலைக் குடு. நீயும் சந்தோசமாய் இருப்பாய்.” என்றபோது, ‘என்ர சந்தோசம் என்னை விட்டுட்டுப் போயிட்டுதே அம்மா..’ மனதால் அன்னையிடம் சொன்னவனின் விழிகள் பிள்ளைகள் மீதே இருக்க, பெற்றவருக்கு விளங்காதா பெற்றெடுத்தவனின் மனம் என்ன நினைக்கிறது என்று.
உள்ளம் கலங்கிப்போக அவனருகில் வந்து அமர்ந்து அவன் முதுகை வருடிக் கொடுத்தார். “ஐயா! அம்மா எண்டைக்கும் உனக்கு கெடுதலான ஒண்டைச் சொல்லமாட்டன். மிருணாவையும் நான்தான் உனக்குக் கட்டிவச்சனான். நீ சந்தோசமா வாழ இல்லையா? அதேமாதிரி இப்பவும் சொல்லுறன், அவளைக் கட்டு. நீயும் நல்லாருப்பாய், அவளும் நல்லாருப்பாள்.” கண்களில் கவலையைத் தேக்கிச் சொன்னார்.
“உங்கட மடில கொஞ்ச நேரம் படுக்கவாம்மா?” ஆறுதல் தேடும் குழந்தையாய் மாறிக் கேட்டவனைக் கண்டு அன்னையின் மனம் உருகிப்போயிற்று.
“படய்யா படு!” என்றவர் மடி சாய்ந்த மகனின் தலையை கோதிக் கொடுத்தார்.
கண்களை மூடி அப்படியே சாய்ந்திருந்தான் அவன். காடு மேடெல்லாம் ஓடிக் களைத்த மனதுக்கு அன்னைமடி பெரும் ஆறுதலாயிருந்தது.
“அப்பாக்குப் பிறகு இன்னொரு வாழ்க்கையைப் பற்றி ஏனம்மா நீங்க யோசிக்கேல்ல?” அமைதியான குரலில் கேட்ட கேள்வியில் சட்டென வேலை நிறுத்தம் செய்தன அவர் கரங்கள். மளுக்கென்று கண்கள் குளமாக, மடியில் கிடந்த மகனைப் பார்த்தார்.
“எனக்காகவாம்மா?” அவர் முகம் பார்த்துக் கேட்டவனிடம் ஆமென்று சொல்லமுடியாமல் வாயடைத்து நின்றார்.
அவனுக்காகவும் தான். ஆனால் அவனுக்காக மட்டுமா என்ன?
“நான் உங்கட மகனம்மா.” என்றவன் எழுந்து அமர்ந்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். ஒற்றைக் கேள்வியில் அவரின் வாயையே அடைத்துவிட்ட மகனைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் கலைவாணி.
அவனோ, எத்தனையோ புதிர்களுக்கு மத்தியில் தான் பிறந்து வளர்ந்திருக்கிறோம் என்று தெரியாமல், தன் தந்தையின் மனம் இந்த நிமிடத்தில் என்ன பாடு பட்டுக்கொண்டிருக்கிறது என்று அறியாமல் ஆழ்ந்த துயிலில் நிம்மதியாக ஆழ்ந்திருந்த மகனைப் பார்த்தான். தமயனின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு தூங்கும் மகளையும் பார்த்தான். நெஞ்சிலிருந்து ஆழ்ந்த மூச்சொன்று வெளியேற அவனுடைய மனது ஏதோ ஒரு புள்ளியில் வந்து நின்றது.