பூவே பூச்சூட வா 9(1)

அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் வானதி. செய்தது பெரும் பிழையாகவே இருந்தாலும், மன்னிப்பைக் கேட்டுவிட்டு மகனோடு வெளியேறிவிடவேண்டும் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு காத்திருக்க, அவளின் அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்குவது போலிருந்தது அவனது நடவடிக்கை!

அவற்றை இறக்க முதல் தடுக்கவேண்டும். ஓடிப்போய்ச் சொல்லு என்று மனம் உந்தியது. ஆனால், அவன் முகம் பார்த்து, சலனமற்றுக் கதைக்க முடியுமா? என்கிற கேள்வி கால்களைப் பின்னியது. தயங்கி நிற்கும் நேரம் இதுவல்லவே. அவசரமாக ஓடினாள்.

பொருட்களைச் சுமந்துவந்த வாகனம், வீட்டின் வாசலருகே நிற்பதற்கு ஏற்றதாகக் காரை வீட்டின் கரையாகக் கொண்டுசென்று நிறுத்திவிட்டு இறங்கிய அதிரூபன் ஓடிவந்த அவளைக் கேள்வியாக ஏறிட்டான்.

அப்படியே ஓட்டம் நின்றுவிட, அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள் வானதி. மகனின் தகப்பன் என்பதையும் தாண்டிக்கொண்டு, இருக்கிற சிக்கல்கள் அத்தனையையும் மீறிக்கொண்டு அவன்தான் ‘அவளின் அவன்!’ என்று உள்மனது படபடத்துக் கொண்டிருக்கிறதே!

அதைவிட அவள் எழுதிய கடிதம்? அப்போதுதான் மின்னலாய் நினைவில் வந்து அடிவயிற்றில் என்னென்னவோ செய்தது.

அது அவன் கைக்கு கிடைத்திருக்குமா? படித்திருப்பானா? படித்திருந்தால் என்ன நினைப்பான்? முகம் சிவந்து போயிற்று! அசட்டுத்தனத்தில் எழுதியதுமல்லாமல் கொடுத்தனுப்பியும் விட்டாளே! அவன் முகமே பார்க்க முடியவில்லை.

என்ன வேதனை இது? அல்லும் பகலும் காண்போமா என்று ஏங்கிய உருவம் வெகு அருகில். ஆனாலும் யாரோபோல் நெருங்க முடியாத தடைகள் மனம் முழுவதிலும்!

அவனோடான கற்பனைகள் அவளுக்குள் ஆயிரம். அவையில்லாமல் அவளின் பொழுதுகள் கரைந்ததில்லை. அவனைக் காதலனாய் வரித்திருக்கிறாள், கணவனாய்க் கொண்டாடியிருக்கிறாள், இரவுகளில் தலை சாய்த்திருக்கிறாள். அவனது நினைவுகள் தான் அவளைச் சுற்றி அரணாய் நின்றுகொண்டிருக்கிறது. அவன் விழிகள் அவளைக் காதலோடு நோக்கியிருக்கின்றன. கரங்கள் கட்டி அணைத்திருக்கின்றன. இன்னும் என்னென்னவோ நினைவுகளே வெட்கும் கனவுகளை எல்லாம் கண்டிருக்கிறாள்.

நடக்கவே நடக்காது என்று தெரிந்திருந்தாலும், அந்தக் கனவுகள் மட்டும்தானே அவளுக்குச் சொந்தமானவை. அதிலே மட்டும் தானே அவள் வாழவும் முடியும். ஆதலால், நிறைவான ஒரு வாழ்க்கையைத்தான் கனவில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவள் மனதில் அவளுக்கு அவன்தான் கணவன்!

இன்றோ, அந்தக் கற்பனைக் காட்சிகள் அத்தனையும் கண்முன்னே காட்சி தந்துகொண்டிருந்த அந்த உருவத்தோடு இரண்டரக் கலந்திடத் துடியாய்த் துடித்தது.

புகை மூட்டங்களுக்குள் மறைந்திருந்த உருவத்தைக் கண்டுகொண்டாளே! இதில் நேற்று அறிந்துகொண்ட அவனது அருகாமை, மார்பில் முகம் புதைத்தபோது உணர்ந்த சுகம் எல்லாம் அவளை இன்னுமின்னும் பலகீனப் படுத்திக்கொண்டிருந்தது. தனக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்தாள். இது கூடாது என்று தடுத்தாள். பெரும் வலியொன்று எழுந்து உள்ளத்தைப் பந்தாடினாலும் தடுத்தாள். அவன் மிருணாவின் கணவன். தாரகனின் அப்பா மட்டுமே!

நெஞ்சமே அடங்கு! உனக்குக் கற்பனைகளில் மட்டுமே அவனுடன் வாழ்வதற்கு அனுமதியுண்டு! காலகாலத்துக்கும்! அடைத்த தொண்டையை விழுங்கிக்கொண்டு அவன் முகம் பாராமல் சொன்னாள்.

“ஒண்டையும் இறக்கவேண்டாம். நான் அங்க.. என்ர வீட்டுக்கே போறன்.”

தலைகுனிந்து நின்றவளை ஒருமுறை நிதானமாக அளவிட்டுவிட்டு, கதவைச் சாற்றிக் காரைப் பூட்டிவிட்டுக் கேட்டான்.

“ஏன்?”

இதென்ன கேள்வி. அவன் வீட்டில் அவள் எப்படி இருப்பதாம்? யோசிக்க மாட்டானா? இதையெல்லாம் வாய்விட்டுக் கேட்க தைரியம் வேண்டுமே!

“என்ர வீட்டதானே நான் இருக்கவேணும்.” மெல்லச் சொன்னாள்.

“இனி இதுதான் உன்ர வீடு.”

“விளையாடாதீங்கோ!” பதறிப்போனாள் அவள்.

அவசரமாக நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். சொல்லவருவதைக் கேட்காமல் போகிறானே என்று ஓடிவந்து அவன் முன்னே நின்றாள்.

“கொஞ்சம் நில்லுங்கோவன்! கதைக்கவேணும்.”

கெஞ்சலாய்க் கேட்டாள் வானதி. கலைவாணி அம்மாவின் முன்னே இவற்றையெல்லாம் கதைக்க முடியாதே.

“எனக்கு நேரமில்லை வானதி. எல்லாத்தையும் இறக்கிப்போட்டு வேலையாட்களை அனுப்பவேணும். பிறகு கதைக்கலாம்.” என்று அவன் போகமுயல,

“இறக்கவே வேண்டாம் எண்டு சொல்லுறன். நீங்க இறக்கிறதுக்கு போகவேணும் எண்டு சொன்னா எப்படி?” என்று தடுத்தாள் அவள்.

அவன் கேள்வியாகப் பார்க்க, அந்தக் கண்களைச் சந்திக்க முடியவில்லை. அவள் தலை தானாகவே தாழ்ந்தது.

“நா..ன் நான் செய்தது பிழைதான். பெரிய பிழைதான். அதுக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. உங்க…ட மகன்தான் தாரகன். ஆனா, அவன் எனக்கும் மகன்தான். அவனில்லாமல் என்னால இருக்கேலாது. இந்த உலகத்தில எனக்குச் சொந்தம் எண்டு நினைக்கிறது அவனை மட்டும்தான்..” என்றவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது.

அவனை இழந்துவிடுவோமோ, பறித்துக்கொள்வானோ? நினைக்கக் கூட முடியவில்லை. அவன்தான் அவளுக்கு இல்லவே இல்லை. இதில் தாரகனும் இல்லை என்றால்?

இல்ல.. அதுக்கு விடமாட்டன்! கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக நிமிர்ந்தாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock