“ப்ளீஸ்.. உங்களுக்குத் தெரியாம இனி எங்கயும் போகமாட்டன். அது… முதல்.. பயத்தில.. பிள்ளையைப் பறிச்சுப் போடுவீங்களோ எண்டு.. இனி அங்கேயே இருக்கிறன். வேணுமெண்டால் தாருவ ஒவ்வொருநாளும் இங்க கொண்டுவந்து கொஞ்சநேரம் விடுறன். ப்ளீஸ்.. அவனை என்னட்ட இருந்து பறிச்சுப்போடாதீங்கோ.. எந்தக்குறையும் இல்லாம நல்லா வளப்பன். ப்ளீ….ஸ்.” கன்னங்களை நனைத்த கண்ணீரோடு கண்களில் பரிதவிப்போடு கெஞ்சியவளைக் கண்டு அவன் உள்ளம் கனத்துப் போயிற்று!

அவள் மீது நிறையக் கோபமிருந்தது. ஆத்திரமிருந்தது. அனைத்தும் நினைத்தபடி நடந்திருக்க மிரூணா கூட அவனைவிட்டுப் போயிருக்க மாட்டாள். செல்லடி பட்டுச் சிதைந்துபோன வீட்டினைப்போல் அவன் வாழ்க்கை சிதறிப்போக அவளே ஆரம்பப்புள்ளி என்றும் தெரியாமலில்லை. ஆனால், இந்த விசித்திரமான உறவில் கோபிப்பதால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது? அதிரூபன் ஆழ மூச்சை இழுத்துவிட்டான்.

“நீயே சொல்லிட்டாய் வானதி, நான் அவனுக்கு அப்பா, நீ அம்மா எண்டு. பிறகு என்னெண்டு அவன்ர அம்மா ஒரு வீட்டிலையும் அப்பா இன்னொரு வீட்டிலையும் இருக்கிறது?” என்று சொல்லிவிட்டு, அவன் நகரத் துவங்க அவளுக்கு கைகால்கள் எல்லாம் பதறத் துவங்கியது.

அது எப்படி அவளால் அவனுடைய வீட்டில் தங்க முடியும்? அவன்தான் அவளின் அவன் என்று உணர்ந்த நிமிடத்திலிருந்து அவள் படும் பாடுகள் போதாதா? தன்னோடு தானே அல்லவா போராடிக்கொண்டிருக்கிறாள். “கடைசிவந்தாலும் நான் இங்க இருக்கமாட்டன். அது முறையும் இல்ல.” என்று படபடத்தாள் அவள்.

“முறை பார்த்துச் செய்ய இங்க எதுவுமே முறையா நடக்கேல்ல. உன்னால எப்படி உன்ர மகனை பிரிஞ்சு இருக்க முடியாதோ, அப்படித்தான் எனக்கும் என்ர மகனை பிரிஞ்சு இருக்கேலாது. இப்ப தள்ளு! எனக்கு வேலை இருக்கு!” என்று அதட்டிவிட்டு விரைந்திருந்தான் அவன்.

அவள் திகைத்து நின்றுவிட்டாள். இனி என்ன செய்வது?

எதைச் செய்வதாயிருந்தாலும், செய்யாமலிருந்தாலும், ‘அப்படியா? என் மகனைத் தந்துவிட்டு நீ உன் வீட்டுக்கே போ’ என்று அவன் மிரட்டவில்லை. மனம் நோகும்படி எதையும் சொல்லவில்லை. அவள் செய்தவற்றை அவளிடமே சொல்லிக்காட்டி குறுக வைக்கவில்லை. உன் மகன் என்றானே அது போதும்! கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

கடகடவென்று காரியங்கள் நடந்தன. அவளின் பொருட்கள் இறக்கப்பட, வந்த வாகனமும் மறைந்திருந்தது. இரண்டு அறைகள் கொண்ட அந்த வீட்டில் கலைவாணி அம்மாவின் அறையில் அவரின் கட்டிலருகே இவளது கட்டிலும் குடிபுகுந்தது. அப்படியே அவளின் பொருட்களும். அவனுடைய அறைக்குள் எதுவுமே நுழையவில்லை. கவனித்துக்கொண்டுதான் இருந்தார் கலைவாணி.

அதிரூபனின் மனநிலையை அது உணர்த்தாமலிலை. வானதியைப் பார்த்தார். அவளும் அதைத்தான் விரும்பினாள் என்று தெரிந்தது.

ஒருவழியாக அவளின் பொருட்களும் அந்த வீட்டுக்குள் பொருந்திப்போக, அவளும் பொருந்திக்கொண்டாள். அவள், குழந்தைகள், கலைவாணி அம்மா எல்லோரும் அவரது அறையில் என்றால் எப்போதும்போல அவன் அவனது அறையில். நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன. கலைவாணி அம்மா எதிர்பார்த்த மாற்றம் எதுவும் வரும்போலில்லை. ஆனால், வீடு மாறியே போயிற்று! வீட்டுப் பொறுப்பையும் குழந்தைகளின் பொறுப்பையும் முற்றிலுமாக வானதியே ஏற்றிருந்தாள். எனக்குப் பிறகு யார் என் மகனையும் அவன் மகளையும் பார்த்துக்கொள்வார்கள் என்கிற கவலை அகல, நிம்மதியானார் கலைவாணி. குழந்தைகளின் கொண்டாட்டங்களை ரசிப்பது மட்டுமே அவர் வேலையாகிப் போனது.

அன்றும் அப்படித்தான், அழுக்கு ஆடைகளைத் துவைக்க என்று அள்ளிக்கொண்டவளின் கை, அதிரூபனின் ஆடைகளைத் தொட்டதும் பதறி விலகிக்கொண்டது. இதெப்படி இங்கே வந்தது? நெஞ்சில் படபடப்புத் தொற்றிக்கொள்ள திரும்பிக் கலைவாணி அம்மாவைப் பார்த்தாள். மதிய உணவை முடித்துவிட்டு உண்ட மயக்கத்தில் குழந்தைகளோடு சரிந்திருந்தவர் உறங்கிப் போயிருந்தார்.

முதல்நாள் உறங்கியது தவிர்த்து அவனது அறைக்கு அவள் போனதே இல்லை. அங்கிருக்கும் வாளிக்குள் இருக்கும் அழுக்கு உடைகளை எடுத்ததும் இல்லை. அவர்கள் நால்வரின் உடைகளையும் அவள் கழுவிவிடுவாள். அவனுடையதை மட்டும் கலைவாணி அம்மாதான் துவைத்துப் போடுவார். அவரிடமிருந்து வாங்கிச் செய்யக் கையும் காலும் பரபரக்கும். ஆனாலும் அவனது என்கிற தயக்கத்தில் அதைச் செய்ததேயில்லை.

இது கலைவாணி அம்மாவின் வேலையாக மட்டுமே இருக்கமுடியும்! என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள். அவனுடைய ஜீன்ஸைத் தொட்ட விரல்கள் இன்னும் குறுகுறுத்துக்கொண்டிருந்தது.

என்ன எதிர்பார்க்கிறார் இந்த ஆன்ட்டி? அதுநாள் வரை வயதானவர்களை பொதுவாக அழைப்பதுபோல் ‘அம்மம்மா’ என்று அழைத்த தாரகனை ஒருவழியாக அப்பம்மா என்று அழைக்க வைத்தபோதும் ஒன்றும் சொல்லவில்லை அவள். அதுதானே முறை என்று விட்டுவிட்டாள்.

அதேபோல, ‘ரூபன் அங்கிள்’ என்று அழைத்த தாரகனிடம், என்ன சொல்லி விளங்கப்படுத்தினாரோ தெரியாது, “அவன் உனக்கு அப்பா கண்ணா!” என்று சொல்லிக்கொடுத்து, அவன் இப்போதெல்லாம் அப்பா என்றுதான் அழைக்கிறான்.

முதல்முறை காதில் அது விழுந்தபோது, கைகால்கள் எல்லாம் பதறிப்போயிற்று! அவள் அம்மா அவன் அப்பா என்றால்.. என்று தடுமாறிய மனதை அடக்கப் படாத பாடுபட்டுப்போனாள். இவன் என்ன சொல்லப்போகிறான் என்று அதிரூபனைப் பார்த்தாள். அவனோ, அது வளமை என்பதுபோலக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதை சொன்ன மகனின் மழலையை வெகு தீவிரமாகத் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.

வீட்டின் பின்பக்கம் ஓடிவிட்டாள். தன்னைச் சமாளித்துக்கொள்ள அவளுக்குச் சற்று நேரம் தேவைப்பட்டது. அவன்தானே அப்பா. அவள் அம்மாவாகிப் போனதுதான் விசித்திரம் என்று அப்போதும் மனதைச் சமாதானம் செய்துகொண்டாள்.

அடுத்தகட்டமாகக் கலைவாணி அம்மா கைவைத்தது ரூபிணியின் அழைப்பில். எப்படி இதையெல்லாம் பயிற்றுவிக்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவளை அம்மா என்று அழைக்கத் தொடங்கினாள் ரூபிணி. ஏனோ அதிரவில்லை மனம். கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. “என்னடா செல்லம்!” என்று அள்ளிக் கொஞ்ச மட்டுமே முடிந்தது. தாயில்லாக் குழந்தை அம்மா என்கையில் வேறு என்னதான் செய்ய முடியும்.

எல்லாம் சரிதான். ஒவ்வொன்றுக்கும் நியாயமான காரணங்கள் இருந்ததுதான். ஆனால் இதற்கு? அவனுடைய ஆடைகளை அவளைத் தோய்க்க வைத்து எதை நடாத்திவிட நினைக்கிறார்?

நேசம் கொண்ட மனது, ‘தோய்த்துத்தான் போடேன்!’ என்று ஆசையூட்டியது!