பூவே பூச்சூட வா 9(3)

ஆனால்.. அது முறையல்ல! அவன் மிருணாவின் கணவன்! கூடாது! வேண்டாம்! என்று உருப்போட்டாள். கண்களால் அவனைக் காண்பதிலேயே இரவு உறக்கங்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டாள். இதில் இதுவும் சேர்த்துக்கொண்டால்?

விறுவிறு என்று அவனுடைய ஆடைகளை மட்டும் விட்டுவிட்டு மிகுதியை அள்ளிக்கொண்டுபோய் தோய்த்து கழுவிக் காயப்போட்டுவிட்டு, தானும் குளித்துவிட்டு வந்தாள்.

அவர்கள் இன்னுமே நல்ல உறக்கத்தில் இருக்க, உணவை முடித்துக்கொண்டு தானும் சரிந்துகொண்டாள். ஏனோ அன்று அவன் மார்பில் சாய்ந்தபோது உணர்ந்த அந்தப் பாதுகாப்புக்காக மனம் ஏங்கிற்று! அணைத்து முதுகை வருடிக்கொடுத்தானே, அந்த இதத்துக்காக மனம் தவித்துப் போயிற்று.

காலையில் வேலைக்குத் தயாராகி ஒரு பேராசிரியனாக அவன் நடந்து வருகையில் மனம் மயங்கும். எதிர்பாராமல் அவன் விழிகளோடு அவள் விழிகள் சந்தித்துக்கொண்டால் இதயம் படபடக்கத் துவங்கிவிடும். அவன் அருகாமையைக் கடக்கும்போதே அடிவயிற்றில் என்னவோ செய்யும். உடனேயே மறைந்துவிடுவாள். ஆனாலும், அவன் கவனிக்காத பொழுதுகளில் அவனது சிரிப்பை, பார்வையை, குழந்தைகள் என்ன சொன்னாலும் உன்னிப்பாக அதைக் கேட்டுக்கொள்வதை எல்லாம் வெகுவாக ரசித்து மனப்பெட்டகத்தில் சேகரித்துக்கொள்வாள். இன்றும் கன்னங்களை கண்ணீர் நனைக்க அவன் நினைவுகளிலேயே மூழ்கிப்போனவள் அப்படியே உறங்கியும் போனாள்.

எழுந்து பார்த்தபோது கலைவாணி அம்மா அவனது ஆடைகளைக் கழுவிக் காயப்போட்டுக் கொண்டிருந்தார். மனதில் குற்றவுணர்ச்சி ஆட்கொள்ள, ஒருமாதிரி ஆகிப்போயிற்று. அவளளவில் அவள் செய்தது சரிதான். ஆனால், வயதான ஒரு பெண்மணியை வேலை செய்ய விட்டுவிட்டோமோ? ஏதும் கேட்பாரோ என்று தயக்கத்துடன் காத்திருக்க ஏதும் கேட்டாரில்லை. முகம் மட்டும் பொலிவிழந்து வாடித் தெரிந்தது.

“உடம்புக்கு ஏத்துமா ஆன்ட்டி? தேத்தண்ணி ஊத்தித் தரவா?”

“கொண்டுவாம்மா! கொஞ்சம் குடிச்சா நல்லாத்தான் இருக்கும்!” அவளிடம் நன்றாகத்தான் பேசினார்.

முதல்நாள் அவரோடு சேர்ந்து செய்துவைத்த முறுக்கும் இருக்க, நால்வருக்குமாக ஊற்றிக்கொண்டு வந்தாள்.

அப்போதும் ஏதும் கேட்பாரோ என்று உள்ளுக்குள் அவள் தயங்க அவரோ வாயைத் திறக்கவேயில்லை.

ஆனால், இந்த எதிர்பார்ப்பை வளரவிடக் கூடாது என்று வானதி முடிவு செய்துகொண்டாள்.

அன்றொருநாள் வேலைமுடிந்து வீடு வந்தவன், “எங்கம்மா, வானதியும் பிள்ளைகளும்?” என்று விசாரித்தான்.

“பார்க்குக்கு கூட்டிக்கொண்டு போய்ட்டாள் தம்பி!”

‘ஓ…!’ என்பதுபோல் பார்த்துவிட்டு, அறைக்குச் சென்று முகம் கழுவி உடைமாற்றினான். இலகுவாக அமர்ந்திருந்து, கருப்பு வெள்ளைப் படமொன்றை மிகவும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த அன்னையைக் கண்டபோது மனதுக்கு மிகவும் நிறைவாகவே உணர்ந்தான் அதிரூபன்.

அவரும் இந்த வயதில் வாழ்க்கையை ரசித்து, தனக்குப் பிடித்தமாதிரி வாழும் சூழ்நிலை அமைந்திருக்கிறது. குழந்தைகளைக் கேட்கவே வேண்டாம். வண்ணமயமான உலகில் வாழும் பட்டாம்பூச்சிகளாய் மாறிப்போயினர். அவனும் மனதில் பாரமில்லாமல் பல்கலைக்கழகத்துக்குப் போய்வரத் துவங்கி இருந்தான்.

இதற்கெல்லாம் யார் காரணம் என்று தெரியாதா என்ன?

ஆனால், அந்த அவள் இப்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வரும்போது இருக்கமாட்டாள். குழந்தைகளோடு பார்க்குக்குப் போய்விடுவாள். அவன் தன் பல்கலைக்கழக வேலைகளைப் பார்க்க அறைக்குள் நுழைந்தபிறகுதான் குழந்தைகளின் சத்தம் கேட்கும். அவன் வெளியே வருவதற்குள் அவர்களைக் குளிக்க வைத்து உணவும் கொடுத்து அவனிடம் விட்டுவிட்டு, அவனது தாயை அழைத்துக்கொண்டு நடக்கப் போய்விடுவாள்.

எல்லாமே நல்ல விசயம்தான். ஆனால், சில நாட்களாக அவள் தன்னைக் கவனமெடுத்துத் தவிர்க்கிறாளோ என்று தோன்றிக்கொண்டிருந்தது. காலையில் உணவு வேளையில் காணவே முடிவதில்லை. உடைமாற்றி வெளியே வந்தவனுக்குச் சிற்றுண்டியும் தேநீரும் கொடுத்தார் கலைவாணி.

“இப்படியே இருந்தா எப்படி அப்பு? நீயும் அசையிறாய் இல்ல. அவளும், உன்ர உடுப்பைக்கூட தொடுறாள் இல்லை.” பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் மாற்றம் எதுவும் நிகழாததில் அவனிடமே முறையிட்டார்.

தேநீர் பருகிக்கொண்டிருந்தவன் கேள்வியாகப் பார்க்க, அவர் அப்பம்மாவாக மாறியது, அவன் அப்பாவாகப் பதவியேற்றது, அவள் அம்மாவாக உருவெடுத்தது என்று நடந்தவற்றைச் சொன்னார் கலைவாணி. அவரின் கவலை தோய்ந்த முகத்தையும் தாண்டிக்கொண்டு அவன் உதடுகளில் சின்னப் புன்னகை அரும்பியது. பின்னே, வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு எவ்வளவு பெரிய அரசியலைச் செய்கிறார் அவர்.

ஆனாலும் தாயின் கேள்விக்கு எதையும் உரைத்தானில்லை. “சங்கரி டாக்டர் இண்டைக்கு வாறன் எண்டு சொன்னவா அம்மா. நான் போய் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு வெளியேறினான் அவன்.

பூங்காவுக்குள் நுழைந்தபோது, அங்கே பழைய வானதியைக் கண்டான் அதிரூபன். இவன் வருவான் என்று அறியாததால் குழந்தைகளை நன்றாக விளையாடவைத்துத் தானும் விளையாடிக்கொண்டிருந்தாள். இந்தப் பெண் வீட்டில் மட்டும் எங்கே போய் ஒளிந்துகொள்கிறாள்? அவன் எதுவுமே சொல்வதும் இல்லை, அவளுக்கு இடைஞ்சல் கொடுப்பதுமில்லை.

அன்னையின் செயல்தான் என்று இப்போது தோன்றியது. ஆனால், அவள் மனது என்னவென்று அவனுக்குத் தெரியுமே. இருந்தும் ஒதுங்கித்தான் போகிறாள். அவள் கொண்ட நேசம் நிறைவேறுவதற்குச் சந்தர்ப்பம் இருந்தும் அவனைத் தவிர்ப்பவளை மனதுக்கு ஏனோ பிடித்தது.

அன்றும், தன் வீட்டுக்கே போகத்தானே துடித்தாள். அதனால் தானே அவனால் தன் கோபத்தை அவள் மீது காட்டக்கூட முடியாமல் போயிற்று!

அதைவிட, எந்த உறவுமில்லாமல், எந்த உறவையும் வேண்டாமல் அவன் வீட்டிலிருந்து அத்தனைபேருக்கும் சேவகம் செய்கிறவளை எண்ணி, இப்போதெல்லாம் மனதில் ஒரு குற்றவுணர்ச்சி. என்ன உரிமையில் வீட்டில் வைத்து வேலை வாங்குகிறான்?

சங்கரி சொன்னதுபோல, அவனது மிருணா இனி இல்லை. வானதியும் இன்னொரு வாழ்க்கையைத் தேடப்போவதும் இல்லை. இடையே தாரகனும் மாட்டிக்கொண்டிருக்கிறான். இதற்கான முடிவு அவன் கையில் மட்டுமேயிருக்கிறது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock