அவர்கள் பார்வையில் படும்விதமாக ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். அன்று போலவேதான், பந்து உருள அதைத் தாரகன் எடுத்துவிட்டான். ஆனாலும் தமயனின் மீது விழுந்து உண்டு புரண்டு அதனைக் கைப்பற்ற முனைந்துகொண்டிருந்தாள் ரூபிணி.
“அண்ணாவை விடு ரூபி! அவனுக்குத்தான் பந்து.” என்று சொன்னவள் பேச்சை காதில் விழுத்துவதாகவே இல்லை. சின்ன வண்டு விடவேயில்லாமல் பந்தைப் பறிப்பதிலேயே குறியாக இருக்க பார்த்துக்கொண்டிருந்தவனின் முகத்தில் பெரிதான புன்னகை.
அவர்களின் உலகத்துக்குள் தானும் அடங்கிவிட மாட்டோமா என்று கையும் காலம் பரபரத்தது. ஆனாலும், இவளைப்போல குழந்தையாகவே மாறி, இவர்களை இவ்வளவு சந்தோசமாக வைத்திருக்க தன்னால் முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு.
பார்த்திருக்க அன்றுபோலவே இன்றும் பந்து உருண்டு இவன்புறமாக வந்தது. வானதிதான் ஓடிவந்தாள். தன்னைக் காண்கிறாளா பார்ப்போம் என்று அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, பந்திலேயே கவனமாக இருந்தவள் அதை எடுத்துக்கொண்டு திரும்பி ஓட ஒரு அடி எடுத்துவைத்துவிட்டு, சட்டென்று திரும்பினாள்.
முதன் முதலில் அவனது மோனத்தைக் கலைத்தவள் அவள்தான். இன்று, அவள் மோனம் கலைந்து அதிர்ந்து திரும்பி இவனைப் பார்த்தாள்.
‘இவன் எங்க இங்க?’
அதிர்ச்சியில் விரிந்த அவள் கண்களைக் கண்டவனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு முளைத்தது. என்ன என்றான் புருவங்களை மட்டுமே அசைத்து.
ஆ என்று வாயைப் பிளக்காத குறையாக கண்களை விரித்தாள் வானதி.
ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்க்க, அவளோ அவன் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இருந்தாள்.
கையைப் பிடித்து இழுத்து அருகே அமர்த்தினான் அவன்.
“உனக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” இளம் புன்னகையோடு கேட்டவனைப் பார்த்து அவள் விழிகள் இன்னும் விரிந்தது.
பின்ன.. இவ்வளவு நாளும் சந்நியாசம் வாங்கியவன்போல் இருந்துவிட்டு இன்று குறும்புடன் புருவங்களை உயர்த்தி அவளை வம்பிழுத்தால் அவளுக்கு மயக்கம் வருமா வராதா? இதில் தாடிக் காட்டுக்குள் இருந்து ஒளிக்கீற்று ஒன்று வேறு மின்னிக்கொண்டிருந்தது.
“என்ன வானதி, கதைக்கமாட்டியா?” அவனைக் கண்டுவிட்டு ஓடிவந்து தாவிய குழந்தைகளை ஒருவனாக சமாளித்தபடி கேட்டான்.
அந்தக் காட்சி வெகு நிறைவாய் இருக்க, பேசத் தோன்றாமல் பார்த்துக்கொண்டு மட்டுமிருந்தாள் அவள்.
“இப்பயெல்லாம் நான் வீட்டில இருந்தா நீ ஓடி ஒளியிற மாதிரி இருக்கு. என்ன விசயம்?” இப்போதும் புருவங்களை உயர்த்தி அவன் கேட்க சட்டென்று காது மடல்கள் சூடாவதை உணர்ந்து வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் வானதி.
“நான் என்னத்துக்கு ஒளியவேணும்?” வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்ததுதான். ஆனால், இதயம் உள்ளே பலமாக படபடக்கத் துவங்கி இருந்தது.
‘இவனுக்கு இண்டைக்கு என்ன நடந்தது? வித்தியாசமா கதைக்கிறான், வித்தியாசமா பாக்கிறான்?’ அவளின் இயல்பு தொலைந்து போயிற்று!
“அத என்னைப்பாத்துச் சொல்லு!” என்றவன், அவள் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியும் இருந்தான்.
இவனுக்கு என்னவோ நடந்தேதான் போச்சுது! அதிர்ந்து விழித்தவளிடம், “இப்ப சொல்லு! நீ ஓடி ஒளிஞ்சியா இல்லையா?” என்று கேட்டான்.
அவள் எங்கே பதில் சொல்லும் நிலையில் இருந்தாள்? குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூட முடியாமல் இருந்தாள்.
தன்னுடைய திடீர் செய்கையில் அதிர்ந்துபோயிருக்கிறாள் என்று விளங்கியதுதான். ஆனாலும், மாற்றத்தை உருவாக்க ஆரம்பித்தாயிற்று! அவளோடு சேர்ந்து அவனும் மாறியே ஆகவேண்டும்! எனவே விடாமல் கேட்டான்.
அவளுக்கோ, அவனது தொடுகையோடு சேர்த்து பார்வையும் இரத்த நாளங்களைத் தூண்டிவிட, படக்கென்று முகம் சிவந்து போயிற்று! முகத்தை தளைத்துக்கொண்டவள், “வி..டுங்கோ ப்ளீஸ்…!” என்றாள் தடுமாற்றமாக.
“பதிலைச் சொல்லு, விடுறன்.” அவன் விடாப்பிடியாக நின்றான்.
மெல்லத் தன் கையால் அவன் கையைப் பற்றித் தன் தாடையிலிருந்து எடுத்தாள் வானதி. “பிள்ளைகளையும் வச்சுக்கொண்டு என்ன இது?” மெல்லப் பேச்சு வந்தது அவளுக்கு.
“சரி விடு! பிள்ளைகள் இல்லாத நேரமாப்பாத்து இதைப்பற்றிக் கதைப்பம்!” இலகுவாகச் சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் வானதி.
‘இவ்வளவு நாளும் நல்லாத்தானே இருந்தான்.’ கண்கள் கேட்ட கேள்வியை அவன் படித்துவிட்டான்.
“மாறவேணும் வானதி. நிறைய மாறவேணும்!” இருவருக்கும் பொதுவாகச் சொன்னான் அதிரூபன்.
“பிடிக்குதோ பிடிக்கேல்லையோ சிலதை மாற்றித்தான் ஆகவேணும்.”
அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கேள்வியாகப் பார்க்க, அதற்குமேல் அவனும் அதைப்பற்றி ஒன்றும் கதைக்கவில்லை.
“சங்கரி டாக்டர் இண்டைக்கு வாறா.” என்றான், அவள் முகத்தையே பார்த்தபடி.
அதிர்ந்துபோனாள் வானதி. நம்பி வீட்டில் பெண்ணைப்போல பார்த்தவருக்கு அல்லவா பெரும்பிழை செய்துவிட்டாள். என்ன சொல்வாரோ? அவர் முகத்தை எப்படிப் பார்ப்பாள்? தைரியமாக அனைத்தையும் செய்துவிட்டாள். அதற்கான பலனை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் கண்களில் கலக்கமும் கண்ணீரும் சூழ முகத்தைக் குனிந்தவளைப் பார்க்கப் பாவமாயிருந்தது அவனுக்கு.
அவள் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான். “பயப்படாம வா நான் இருக்கிறன் தானே!” என்றவன், அவளையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.


