உயிராய் நேசித்தவள் அருகில் இல்லை. இனி அவன் வாழ்க்கை யாருக்காக நகரப்போகிறது? இந்த இரண்டு குழந்தைகளுக்காகவும் தானே. சோர்வாக எழுந்து நடந்தவனை, “பதில் சொல்லாமாப் போறாய் தம்பி!” என்று வேகமாய் இடைமறித்தார் கலைவாணி.
“எண்டைக்கம்மா என்ர பொறுப்பை நான் தட்டிக் கழிச்சிருக்கிறன்?” என்றுவிட்டுப் போனான் அவன்.
சொல்லிவிட்டுப் போகும் மகனிடம் எப்படிச் சொல்வார் இது பொறுப்பல்ல, உள்ளங்கள் இணையும் உறவென்று. நெஞ்சம் ஆவலாய் ஏற்கும் காலகாலத்து பந்தமென்று. எதுவாயினும் இனி அவளை விடமாட்டான். அதுபோதும்! நாளடைவில் பற்றும் பாசமும் தானாக உருவாகும். அவர் மனம் அமைதியானது!
மனமும் உடலும் சோர அறைக்குள் சென்றவனின் நடை, கட்டிலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த அவளைக் கண்டதும் நின்றது. பார்வையைச் சட்டென்று விலக்கிக்கொண்டான்.
அந்த அறையே அந்நியமாகிப்போக வேகமாக வெளியே வந்து, சத்தமில்லாமல் ஹால் சோபாவுக்குத் தன்னைப் பரிசளித்தான்.
காலையில் பிள்ளைகளின் சத்தத்தில்தான் கண்விழித்தான் அதிரூபன். அவர்களின் கலகல சிரிப்பும் ஓட்டமும் உறக்கத்தைக் கலைத்தபோது மனதுக்கு வெகு இதமாயிருக்க, உதட்டினில் பூத்த புன்னகையோடுதான் கண்களைத் திறந்தான். அதற்காகவே காத்திருந்ததுபோல, “அப்பா!” என்றபடி ரூபிணி ஓடிவந்து அவன் மேலே ஏறிக்கொள்ள, தாரகனையும் தலையசைத்து அழைத்தான். அவனும் ஓடிவந்து தாவிக்கொண்டான். பெற்ற மகனை உச்சி முகர்ந்தான்!
அவர்களோடு விளையாடிக்கொண்டே வீட்டுக்குள் கண்களைச் சுழற்றினான். அப்போது மட்டுமல்ல அவன் வேலைக்குப் புறப்படும் வரையிலுமே பார்வையில் அவள் படவில்லை.
அங்கே வீட்டுக்குப் பின்னால் அமர்ந்திருந்த வானதிக்கு கைகால்களில் எல்லாம் படபடப்பு. செய்த பெருந்தவறு அவளைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து நிற்கவைத்திருந்தது.
உறுதியாகத் தெரியாதபோதே ஊரைவிட்டு ஓடப்பார்த்தவள். ஊர்ஜிதமாகிவிட்ட இப்போதோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவித்துக்கொண்டிருந்தாள். குழந்தையைத் தந்துவிட்டு வெளியேறு என்று விடுவானோ?
அந்த ஒற்றைக் கேள்வியிலேயே நெஞ்சு கிடந்து நடுங்கிக்கொண்டிருந்தது. அதனாலேயே அவனைக் காண்பதைத் தவிர்த்து ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறாள். ஆனால் அவன் வீட்டில் இருந்துகொண்டு எத்தனை நாளைக்கு ஓடி ஒழிய முடியும்?
பெற்றவர்களை விட்டு, பிறந்து வளர்ந்த ஊரை விட்டு கண்காணாமல் தைரியமாக அவள் வந்ததே அவனுக்காகத்தான். தாய்ப்பாசம் அவ்வளவையும் துணிந்து செய்ய வைத்தது. அவனைப் பறித்து விடுவார்களோ? கண்ணீர் கண்களை நனைத்தது. பிறகு அவள் என்ன செய்வாள்? மகன் இல்லாமல் ஒருநொடி கூட வாழமாட்டாள்.
அவன் அப்பாவாக இருக்கலாம். அதற்காக சுமந்து பெற்றவள் அவள் இல்லை என்றாகிவிடுமா? பொத்திப்பொத்தி வளர்த்தாளே. தாரகன்தான் அவளை விட்டுவிட்டு இருந்துவிடுவானா? மனம் கொஞ்சமே கொஞ்சம் திடம்பெறத் தொடங்கியபோது, என்ன சொல்லி அவனைக் கருவில் ஏற்றோம் என்கிற எண்ணம் வந்து அத்தனை வாதங்களையும் பொசுக்கிப் போட்டது!
அதிரூபனின் முன்னே போவதை நினைத்தாலே பயந்தாள். இதில் ஒன்றைக்கூட அவன் முகம் பார்த்து அவளால் சொல்ல முடியுமா? இதில் முதல் நாளிரவு அவன் மார்பில் சாய்ந்து வேறு கதறினாளே.
கலைவாணி அம்மாவின் முகம் எப்படிப் பார்ப்பாள்? அவரிடம் என்ன விளக்கம் சொல்லுவாள்?
இப்படியே எங்காவது ஓடிவிட்டால் என்ன? பிறகு தாரகன்? மகனின் நினைவில் கண்ணீர் போல பொலவென்று உதிர்ந்தோடியது. பறித்துவிடுவார்களோ?
‘இல்ல.. நான் குடுக்கமாட்டன்.. அவன் என்ர மகன்!’ உதடுகள் மந்திரம் போலெ இதைத்தான் உச்சரித்தது. என்ன நடந்தாலும், அவளுக்கு அவர்கள் என்ன தண்டனை தந்தாலும் பிள்ளையை மட்டும் பிரியமாட்டாள்!
“வானதி?” கலைவாணி அம்மாவின் அழைப்பில் அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாலும் அவர் கண்டுகொண்டார்.
“ஏன் இங்க வந்து நிக்கிறாய்?” இதமான விசாரிப்பு மீண்டும் கண்ணீர் சுரப்பிகளைத் திறந்துவிடும் போலிருக்க, அதோடு தான் செய்த தவறும் அவரை நிமிர்ந்து பார்க்கவிட மறுக்க, “நான்.. நான் வீட்டை போகப்போறன் ஆன்ட்டி!” என்றாள் வேகமாக முடிவெடுத்து.
“ஏனம்மா?”
“என்ர வீடு அங்க இருக்கு ஆன்ட்டி!” என்றவள், வீட்டை நோக்கித் திரும்ப, “எதுவா இருந்தாலும் தம்பி வந்தபிறகு சொல்லிப்போட்டுச் செய்!” என்றார் அவர் ஏதும் அறியாதவரைப்போல.
அவளுக்குள் குழப்பம். அவளை ஏன் அவன் அழைத்துவந்தான் என்று கேட்கவேயில்லையே. “உங்..உங்கட மகன் ஒண்டும் சொல்ல இல்லையா ஆன்ட்டி?” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்.
அவளின் மனநிலை அவருக்குப் புரிந்துபோயிற்று. “அவன் என்ன செய்தாலும் சரியாத்தான் இருக்கும். அதால நானும் கேக்கேல்ல. அவனும் சொல்ல இல்ல. நீயும் இதை நம்பினா உனக்கும் நல்லதுதான் நடக்கும்!” என்றார், எதையும் காட்டிக்கொள்ளாமல்.
அவரின் பொருள் பொதிந்த பேச்சை உள்வாங்கி விளங்கிக்கொள்ளும் நிலையில் அவளில்லை.
“நான் போறன், நீங்க சொல்லிவிடுங்கோவன் ஆன்ட்டி!” அவன் வரமுதல் ஓடிவிடுவோம் என்றால், விடுகிறார் இல்லையே! இதில் பூடகப் பேச்சு வேறு என்று தவித்தாள்.
“அவ்வளவு அவசரம் ஏன் வானதி? நானோ என்ர மகனோ அந்தளவுக்கு உனக்கு கெடுதல் ஏதும் செய்தனாங்களோ?” அவரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் அமைதியானாள் வானதி.
ஆனால், என்ன நடந்தாலும் மகனோடு வெளியேறிவிடுவதில் உறுதியாக இருந்தாள். வேலை முடிந்து அதிரூபனும் வந்தான். அவன் பின்னோடு அவள் வீட்டுப் பொருட்களும் கூடவே வந்ததைக் கண்டு அதிர்ந்து நின்றாள் வானதி!


