“இதுதானா இடம்?” அந்தப் பெரிய வீட்டின் முன்வாயிலோரமாக காரை நிறுத்தினார், சுதர்சன்.
“ஓம் அப்பா. பத்தொன்பது தானே? அந்தா நம்பர் போட்டிருக்குப் பாருங்க.” என்றாள், பின்னாலிருந்த இலக்கியாவின் தமக்கை கவி.
அவர்களின் காரைத் தொடர்ந்து வந்த மிகுதி மூன்று கார்களும் வரிசையாக ஓரம் கட்டின.
“தம்பி, கொட்டேஜ் திறப்பு எங்க வாங்கிறது?” முன்னாலமர்ந்திருந்த மலர், பெரிய மகனிடம் கேட்க, “உள்ளுக்க ஆள் நிப்பீனம்மா.” என்றவாறே இறங்கினார், சுதர்சன்.
“நம்மட ஆக்களிண்ட இடம் தானே தம்பி?” வீட்டைப் பார்த்துக்கொண்டே வினவினார், மலர்.
“ஓமன. ஆனா, நிறைய வருசங்களுக்கு முதலே இங்க வந்த ஆட்கள் போல!” சொல்லிக்கொண்டே சென்றவர், உயர்ந்திருந்த கம்பிக்கதவுகளை அகலத் திறந்துவிட்டு வந்து, காரை உள்ளே செலுத்தி வீட்டின் முன்னால் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினார்.
பின்னால் வந்த கார்களில் இரண்டு மிகுதி இடத்தைப் பிடித்துக்கொள்ள, “பின்னுக்கும் நிப்பாட்டலாம்.” மற்றைய காருக்குச் சொல்லிவிட்டு, சுற்றிலும் பார்த்தபடி வீட்டை நோக்கி நடந்தாரவர்.
அதேநேரம், இவர்கள் வந்த அரவம் கேட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார், வெளிநாட்டுப் பெண்மணியொருவர்.
ஒரே கூரையின் கீழ் நான்கு வீடுகள் கொண்ட விடுமுறைக்கால வதிவிடம் அது. ஒவ்வொன்றிலும் இரு அறைகள், குளியலறை, சமையலறை, கூடம் என்று, மிக நேர்த்தியாக, அடிப்படை வசதிகளோடு முக்கியமாக வெகு சுத்தமாக இருந்தது.
வீட்டைப் பராமரிக்கும் அப்பெண்மணி, சுற்றிக் காண்பித்துவிட்டு ஏதாவது தேவையென்றால் அழைக்கும் படி அலைபேசி எண்ணையும் வழங்கிவிட்டு விடை பெற, பெண்கள் நால்வரும் ஒன்றுகூடிக் கதைத்துத் தம்முள் வீடுகளைப் பிரித்துக் கொண்டார்கள்.
முதன் முறையாக கனடா வந்திருக்கும் அஜிக்கு முற்றிலும் புதிய அனுபவமிது; அவர்களின் திருமணத்தில், கணவனின் மொத்த உறவுகளையும் சந்தித்திருந்தாலும் எல்லாரும் சேர்ந்தெல்லாம் சுற்றித் திரியவில்லை; சுவாரசியமாகப் பார்த்து நின்றாள்.
“கீழ சமைக்கிற அலுவல்களச் செய்வம். ஏனெண்டா அந்தக் கடைசிவீட்டுக் குசினி நல்ல பெரிசா இருக்கு. சாப்பாட்டு அறையும் தான்.” இலக்கியாவின் அன்னை சுகுணா சொல்ல, “ஓமக்கா, பக்கத்தில நானும் அஜி, ராஜி மேல் வீடுகள் ரெண்டிலும். என்ன சொல்லுறீங்க?” என்றார், மலரின் இரண்டாவது மருமகள் ரதி.
“ஓமோம், எப்பிடி எண்டாலும் கீழ உள்ள ஆக்கள் தான் சமையல் சாப்பாடெல்லாம் கவனிக்க வேணும்; எங்களுக்கு டபிள் ஓகே! என்ன அஜி சொல்லுறீர்?” கண்ணடித்தபடி சொன்னது ராஜி.
“இது நல்ல கதைதான். எல்லாருக்கும் தானே லீவு விட்டுக்கிடக்கு? அதென்ன நாங்க மட்டும் சமைக்கிறது? எல்லாரும் சேர்ந்துதான் சமைக்கிறது.” போலிக் கோபம் காட்டிய சுகுணா, மலர் வரவும், “மாமி, நீங்க அஜி வீட்டில தங்கலாம்; அப்ப எல்லாருக்கும் கட்டில்களும் சரியா இருக்கும்.” என்றார்.
“எங்க எண்டாலும் என்ன பிள்ள? என்ர குஞ்சுகளோட நிக்கிறதே எனக்குப் போதும்!” என்ற மலர், “என்ன பெண்டுகள் நாலு பேரும் கூடிக் கதைக்கிறீங்க? நாங்க இளசுகள், மனுசன் பிள்ளைகளோட லீவுக்கு எங்கயாவது போவம் எண்டு வெளிக்கிட்டா, எழுபத்தியஞ்சு வயசில இந்தக் கிழவியும் தொத்திக்கொண்டு வரவே வேணுமெண்டு என்னப்பற்றித்தான் கதைக்கிறியள் போல!” விழிகளில் விசமத்தோடு சொல்ல, “மாமி!” ஒருசேரக் கூவினார்கள், மருமக்கள்.
“அப்பிடியெல்லாம் கதைக்கேல்ல மாமி.” சுகுணா ஆரம்பிக்க, “போட்டு வாங்கிறீங்களோ மாமி? உங்கட செல்லமகன் கடைக்குட்டி எல்லா வந்து நிக்கிறார். உங்கட கையால சமைச்சுச் சாப்பிட ஆசையாயிருக்கும் தானே?” இடையிட்டாள், ராஜி.
“நீ பெரிய ஆள் பார், போட்டு வாங்க!” ராஜிக்குப் பதிலடி கொடுத்த வேகத்தில், “எனக்கும் தான் அவனுக்குச் சமைச்சுக் குடுக்க ஆசை. அது எங்க? இப்பிடி உலகம் சுத்திக்கொண்டிருந்தா எங்கம்மா சமைச்சுக் குடுக்கிறது? வந்த நாளில இருந்து ஒரொரு வீட்டில விருந்து வேற!” அலுத்துக்கொண்டார், மலர்.
“சொந்த பந்தம் எண்டா விருந்துக்குக் கூப்பிடுவீனம் தானே? அதை விடுங்க மாமி. நீங்க இப்பிடிக் கவலைப்படக்கூடாது எண்டுதான் இங்க நிக்கப் போற ஆறு நாட்களுக்கும் முழுச் சமையலும் மாமிண்ட பொறுப்பு எண்டு கதைச்சனாங்கள். என்ன சொல்லுறீங்க?” கண்ணடித்தபடி கேட்டாள், ராஜி.
இவள் பிறந்த குழந்தையிலிருந்து மலரின் கையில் வளர்ந்தவள். யாழ்ப்பாணத்தில், மலர் வீடும் ராஜியின் வீடும் பக்கம் பக்கம். ராஜியின் அம்மாவும் மலரும் நெருங்கிய தோழிகளும் கூட. அதுவோ என்னவோ, மற்ற மருமக்கள் சற்றே தயங்கும் இடங்களிலும் மலருக்குச் சரிக்குச் சமமாகக் கதைத்துவிடுவாள். ஏச்சுப் பேச்சும் தான். அடுத்த நிமிடம், “எங்கட செல்ல மாமி! பெரிய பிகு பண்ணி முகத்த நீட்டாதேங்கோ சரியா? என்ர அம்மா இந்த இடத்தில இருந்தா என்ன சொல்லுவனோ அதத்தான் சொன்னனான்.” என்றபடி, கட்டிப்பிடித்தும் விடுவாள்.