நான்கு ஆண்மகன்களைப் பெற்ற மலரும், நான்கு மருமக்களிலும் நல்ல பாசம் தான். இருந்தாலும் மாமி மருமக்கள் என்ற ரீதியில் உரசல்கள் வருவதேயில்லை என்றும் சொல்ல முடியாது. அதில்லையென்றால் சுவாரசியமேது? அப்படியான அநேக சந்தர்ப்பங்களில், மற்றவர்கள் அழகாகச் சமாளித்துக் கொள்வார்கள். ராஜி மட்டும் படபடவென்று மனதை மறைக்காது கொட்டிவிட்டுச் சமாதானமும் செய்துவிடுவாள்.
“அடி சக்கை என்றானாம். அப்பவே ‘காலுக்க சரியான நோ, நீங்க போயிட்டு வாங்க வீட்டில இருக்கிறன்.’ எண்டு சொல்ல சொல்ல, ஒரே பிடியா நிண்டு கூட்டிக்கொண்டு வந்தது சமையல் வேலைக்குத்தானா? இங்க பாருங்கடி, இதுக்கு வேற ஆளப் பாருங்க.” என்ற மலர்,
“வந்ததும் வராததுமா உதுல(இதில) கூடி நிண்டு கதைச்சா சாமான்கள் எல்லாம் இறக்கிறது ஆரு? சாமான்கள இறக்கி வச்சிட்டு எல்லாருக்கும் ஒரு கோப்பி போடுங்க பாப்பம்.” என்று வந்த ராஜியின் கணவனை முறைத்தார்.
“ஏண்டா, லீவுக்கு கொட்டேஜ் போவம் எண்டு வெளிக்கிட வேண்டியது. பிறகு தங்கி நிக்கிற நாளுக்கு மூண்டு வேளைக்கும் என்ன சாப்பாடு எண்டு யோசிச்சு விதம் விதமாச் சாமான்களை வாங்கி அடச்சிக்கொண்டு வந்து, இங்க அவள்கள் பாவம் சமைக்க, திண்டுபோட்டு நீங்க நல்ல முஸ்பாத்தி பண்ணி சிரிச்சுக் கதைச்சு எண்டு கூத்தடிக்க வேண்டியது தான். உங்களப் போல வேலைக்குப் போற ஆக்கள் தானே அவையளும். சாமான்கள இறக்கி வச்சியெண்டா உனக்கு உடம்பு நொந்திரும் பார்!” கடிந்துகொண்டார்.
“அப்படிச் சொல்லுங்க மாமி. இவையல் சாமான்கள இறக்கி வச்சிப்போட்டு கோப்பி போட்டா நாங்க குடிக்கவா மாட்டம்.” தன் பங்குக்குச் சொன்னாள், ராஜி.
“அதுதானே? இண்டைக்குப் பாட்டுக்கு இவையல் கோப்பியும் போட்டு, இரவுச் சாப்பாட்டுக்கும் எதையாவது பார்க்கட்டுமன்.” சிரித்துக்கொண்டே சுகுணா சொல்ல, சற்றே தள்ளி நின்ற சுதர்சன் கண்ணாடியை நெற்றியில் ஏற்றிவிட்டு மனைவியை முறைத்தார்.
“உங்கப்பா என்ன பார்வை பாக்கிறார் பாருங்கடி!” பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த இலக்கியாவிடமும் கவியிடமும் சொன்னார் சுகுணா.
“அனேய் அம்மா, எல்லாம் நீங்க குடுக்கிற இடம். உங்களுக்கு நாங்க மகன்களா இவையளா? பெத்த மகன்கள் ஐஞ்சு மணித்தியாலமா காரோட்டி வந்தவங்கள், கொஞ்சம் ஓய்வா இருக்கட்டும் எண்டு அவையளக் கொண்டு வேல வாங்காம, எங்களுக்கே கதை சொல்லுறியள் என்ன?”
ராஜியின் கணவன் சிவா, தாயிடம் கோபமாகச் சொல்வது போல் சொன்னாலும் அதன் பின்னால் அன்பு தான் ஓங்கி நின்றது. தங்களையும் வளர்த்து, தங்கள் பிள்ளைகளையும் வளர்த்து, எல்லா மருமகள்களையும் சமாளித்து, இன்று, பார்ப்போர் எல்லாருமே ஆசையோடு ஏறிடும் குடும்பமாக இதுவுள்ளதென்றால் அதன் அச்சாணி அவர்களின் தாயென்பது பிள்ளைகள் நால்வருக்குமே நன்றாகத் தெரியும்.
“அடேய் அடேய், ஒண்டு எண்டோன்ன பெரிசாத் தூக்கிப் பிடிக்காத! பாவம் பிள்ளைகள் தானே எல்லாம் செய்யிறவை. வேலை, வீட்டு வேலை, பிள்ளையளிண்ட அலுவல் எண்டு பம்பரமா நிக்கிறவள்கள். ஏதோ இண்டைக்குக் காரோட்டி வந்திட்டு பெரிசாக் கதைக்கிறியள்?” என்ற வேகத்தில் சுகுணாவிடம் திரும்பினார், மலர்.
‘பாவம் ஆச்சி பெரியவன்; காருக்க வரேக்கயே சொல்லிக்கொண்டு வந்தவனல்லா, போனோன்ன ஒரு கோப்பி குடிச்சிட்டுத்தான் மற்ற அலுவல் எண்டு; கோப்பி போடன்; இல்லாட்டி வா நான் போடுறன், சாமான்கள எடுத்துத்தா!” என்றார் பாருங்க.
“மாமி பொல்லாத ஆள். எங்களுக்காகக் கதைக்கிறது போல கதைச்சாலும் கடைசியில தன்ர மகன்களுக்காகத்தான் கதைப்பா!” ராஜிதான்.
“ஓமோம், நீ கண்டாய் தான். உன்னட்டையும் ஒரு மகன் இருக்கிறான், அத மறந்திராத. சும்மா சும்மா வாய் காட்டாமல் நட, அலுவலப் பார் முதலில!” அவள் முதுகில் ஒரு தட்டுப் போட்டுவிட்டு, சுகுணாவோடு நடந்தார், மலர்.
“அப்பம்மா உங்கட பெட்டியை எங்கடையோட கொண்டு போறம்.” இலக்கியா சொல்ல, “இல்ல இல்ல, நான் சின்னவன் வீட்டில, அங்க மேல வச்சு…” மலர் முடிக்கவில்லை, “நோ! அப்பம்மா எங்களோட.” ராஜியின் மகளும் மகனும் குறுக்கிட, “நோ கவினோட!” அஜியின் மகன் ஆணித்தரமாகச் சொல்லியிருந்தான்.
“ஒருத்தரோடும் இல்ல, எங்களோட.” ஆரூரன் இடைபுகுந்தான். மாறி மாறி அப்பம்மாவுக்காக சண்டை நடக்க, அதை ஒருகணம் நின்று பார்த்த மலரின் விழிகளில் சந்தோசத்தில் துளிர்த்த நீர்ப்படலம்!
கவினைத் தவிர, மிச்ச ஐந்து பேரப்பிள்ளைகளையும் முழுப்பொறுப்போடு வளர்த்தவர் அவர்தான். அதனால்தான் மருமகள்களும் வேலையென்று நிம்மதியாகச் செல்ல முடிந்தது. அவர் ஊட்டிய பாசம் அப்படியே இன்று அவருக்குக் கிடைக்கிறது. மகன்கள், மருமக்கள் எல்லாரையும் விட, பேரன் பேத்திகள் அன்புக்குத் தனிச் சக்தியுண்டுத்தான்.
“மாமி குடுத்து வச்சவா!” அஜி முணுமுணுக்க, “உண்மதான். நம்மள நம்மட பிள்ளைகள் இப்பிடி வச்சிப் பாக்குங்களா? எதிர்பார்க்கவும் கூடாது.” என்றபடி சேர்த்து நடந்தாள், ராஜி.
*****