காற்றில் கலந்திருந்த மென் குளிரை விரட்டிடும் வேகத்தோடும், கவிந்துவிட்ட இருளைக் கிழிக்கும் ஆவேசத்தோடும் கொழுந்து விட்டெரிந்தது, நெருப்பு! அதைச் சுற்றி, நெருங்கிய வட்டமாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கதிரைகளை நிறைந்திருந்தார்கள், பெரியவர்கள்.
தீயின் வசப்பட்ட மரக்குற்றிகள் சட் டப்பென்று ஒலியெழுப்பிய வண்ணம் மடிந்து கொண்டிருக்க, குற்றிகளை வெற்றிகொண்ட களிப்பில் மத்தாப்பாய்ச் சிதறின நெருப்புப் பொறிகள்.
“கவின் நெருப்புக்குக் கிட்டப் போறதில்ல!” கவியின் ஒரு கை அவனை அடிக்கடி பின்னால் இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தது. அவனோ, தன் சின்னக் கையில் இறுகப் பிடித்திருந்த, மரப்பிடியுடன் கூடிய நீண்டிருந்த கம்பியின் நுனியில் பொருத்தியிருந்த ‘மாஸ்மல்லோ’வை நெருப்பில் உருக்கி எடுத்துவிடும் வேகத்தில் நின்றான்.
“நாங்க செய்து தாறம், குட்டியன் இப்பிடி இருந்து சாப்பிடுங்க.” என்று சொன்ன சகோதர சகோதரிகளிடமிருந்து ஒரு துண்டைக்கூட வாங்கிக் கொள்ளவில்லை, அவன்.
“நானே செய்வன்; கவின் நல்ல பெரிய பெடியன் சரியோ!” வீராப்பாகச் சொல்லிவிட்டுக் களத்தில் இறங்கிவிட்டான்.
“அஜி சித்தி, தம்பியப் பார்த்துக்கொள்ளுங்கோ…நாங்க டான்ஸ் ஆடப் போறம்.”
பிள்ளைகள், பாடல்களை ஒழிக்க விட்டு நடனமாட ஆரம்பிக்கவும், கையிலிருந்த கம்பியைத் தாயின் மடியில் போட்டுவிட்டு அவர்களோடு இணைந்துவிட்டான், கவின். கண்டபடி துள்ளிக் குதித்து ஆடவும் தொடங்கி விட்டான்.
தம் பிள்ளைகளின் மகிழ்வை இரசித்தபடி தேனீரை அருந்திக் கொண்டிருந்தார்கள், பெரியவர்கள்.
என்னதான் பனியோ வெயிலோ எதையும் பொருட்படுத்தாது வருடம் முழுதும் ஓடோடி உழைத்தாலும், இப்படி, இடையிடையில் கிடைக்கும் சந்தோசத்திற்கு விலையேது!
“இப்ப மட்டும் ஒரு பியர் இருக்க வேணும்…இந்த இலேசான குளிருக்கு நல்ல இதமா இருக்கும்.” ஏக்கமோடச் சொன்னான், மாறன்.
“இருக்கும் இருக்கும், அப்பிடியே கொள்ளிக்கட்டையால சூடு வாங்குவீங்க. அதுவும் இதமாத்தான் இருக்கும்.” பட்டென்று சொன்னாள், கவி. இளையவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். பெரியவர்களுக்கும் சிரிப்புத்தான்.
“போங்கடி, உங்கட கதையைப் பார்த்தா நாங்க என்னமோ மொடாக் குடிகாரன்கள் போல எல்லா இருக்கு! எப்பயாவது இருந்திட்டு எல்லாரும் ஒண்டாச் சேரேக்கயோ அல்லது ஒரு பார்ட்டியில மட்டும் தானே? அதுவும் வேணாம் எண்டா?” வெகுவான மனச்சுணக்கத்தோடு இழுத்தான் மாறன்.
“ஒரு பர்பிக்கியு, கூழ், அம்மாண்ட ஆட்டிறைச்சிக்கறி எண்டு அதுகளுக்கும் பியர் இல்லாட்டி எப்பிடியாம்?” என்றவன் பாவனை, தான் சொல்லச் சொல்ல முறுவலோடு பார்க்கும் தமையன்மாரை, ‘இதெல்லாம் நியாயமா?’ கேள்வி கேட்டது.
“அது பெரிய திரவியம் பார், இந்தக் கதையை விடு தம்பி!” அலுப்போடு குறுக்கிட்டார், மலர்.
“நீயும் ஏனன? அவேயோட சேர்ந்துகொண்டு…” தாயை முறைத்துப் பார்த்தான் மாறன்.
“சும்மா பிள்ளைகள் கத்தீனம் எண்டு சொல்லி வாங்காமல் வரவேணாம் அண்ணா. நான் அவயளிட்டச் சொல்லுறன், நான் வந்து நிக்கேக்க மட்டும் குடிக்கலாம்.” என்று, தமையன்மாரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் அசையவேயில்லை.
“அதுமட்டும் வேணாம் விடடா. பிள்ளைகள் நோ எண்டா நோ தான்.” என்று சொல்லிவிட்டார்கள்.
மலருக்கோ அது பெரும் சந்தோசம். “நீங்க பெத்த பிள்ளைகள் சொல்லுற அளவுக்கு வச்சதே பிழை, சரி வச்சிட்டீங்க எல்லா? சொல்லுறதக் கேட்டுத்தான் ஆகோணும். அப்ப தானே நாளைக்கு அவையள் ஒரு பிழை செய்யேக்க நீங்களும் சுட்டிக் காட்ட ஏலும், அவேயும் கேட்பீனம்.” என்று அவ்வளவு சொன்ன பிறகும், “சரி சரி, இந்த முறைக்கு மட்டும், செல்லக் குட்டிகள் எல்லா…” கெஞ்சுதலாகக் கேட்டுப் பார்த்தான், மாறன்.
அஜி முறைத்தாள். மனைவியின் பக்கம் திரும்பினால் அல்லவா அதைப் பார்க்க முடியும். “இலக்கியா என்னம்மா சொல்லுறீங்க? நாளைக்குக் கடைக்குப் போயிட்டு வரவோ?” காரியத்தில் கண்ணாக நின்றான், மாறன்.
“அந்தக் கதையே இங்க எடுக்கக் கூடாது. பார்ட்டி எண்டோன்ன பியர் கேஸ் வாங்கிக் குவிக்கிற பழக்கத்த விட வைக்க நாங்க பட்ட பாடு இருக்கே! உங்கட அண்ணாக்களப் பழுதாக்கிறதில்ல சரியோ!” மாறனின் தலையைக் கலைத்துவிட்டபடி சொன்னாள், இலக்கியா.
“நல்ல ஆளிட்ட கேட்ட போ! இவள் தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணின ஆள்.” என்றான், ராஜியின் கணவன், சிவா. குழந்தைகள் முகம் கோணி விட்டால் ஒருத்தராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதோடு மாறனும் அந்தக் கதையை விட்டுவிட்டான் தான். இருந்தாலும், மீண்டுமொருமுறை கேட்டுப் பார்ப்பதில் பிழையேதும் இல்லையே! அதுபார்த்தால் அசைகிறார்கள் இல்லையே!
“போங்கடா!” அலுத்துக்கொண்டவனை, “சித்தப்பா நீங்களும் வந்து ஆடுங்கோ!” இலக்கியா இழுத்துவிட, “என்ர பெஞ்சாதி வந்தால் தான் ஆடுவன்!” காதல் மன்னனாகச் சொன்னவன் முதுகில் இரண்டு போட்டாலும், தானும் இணைந்தாள், அஜி. அவளாக எங்கே இணைந்தாள்? ஒரே இழுவையில் மாறன் பக்கத்தில் கொண்டு வந்துவிட்டிருந்தாள், கவி.
இப்படி, சிரிப்பும் கும்மாளமுமாக நிமிடங்கள் கடந்து கொண்டிருந்த போதுதான், இவர்கள் தங்கியிருந்த விடுமுறை வீட்டிலிருந்து சற்றே தள்ளி, ஆனால், அதே வளவிற்குள்ளிருந்த இன்னொரு வாயிலால் காரொன்று நுழைந்து, அங்கமைந்திருந்த சிறு விடுமுறைக்கால விடுதியினருகில் சென்று நின்றது.
“அந்த வீடும் இந்த வீட்டுக்கார ஆக்களிண்ட போல, ஒரே வளவுக்க இருக்கு.” மூத்த மகனிடம் கேட்டார், மலர்.
“ஓமம்மா, எண்டுதான் காலம திறப்புத்தந்த மனுசி சொன்னவா. அது வாடகைக்கு விடுறதில்லையாம். இந்த வீட்டுச் சொந்தக்காரர் மட்டும் பாவிக்கிறதாம்.” என்றார், சுதர்சன்.
“அதென்ன, வாடகை குடுத்து வந்து தங்கிற எங்களுக்கு கையால வலிக்கிற போட், அவையளுக்கு மட்டும் எஞ்சின் போட்! இப்ப வந்திருக்கிறது வீட்டுக்காரர் போல. நாளைக்கு அவையளிண்ட எஞ்சின் போட்ட கொஞ்சநேரத்துக்குச் சரி கேட்டு வாங்குவமே!” ஆவலோடு கேட்டாள், இலக்கியா.
“அப்படியெல்லாம் கேட்க ஏலாது. முதல் அதென்ன பழக்கம்? இங்க இத்தின போட் கிடக்கு, நமக்குப் போதும். அதோட நாளைக்குக் காலேல நல்ல காத்து வீசுமாம். பெரியாக்களிட்டச் சொல்லாமல் கொள்ளாமல் தனியா ஒருத்தரும் போட் எடுக்கிறதில்ல!” கண்டிப்போடு சொன்னான், சிவா.
“சித்தப்பா எங்கள் எல்லாருக்கும் நீந்தத் தெரியும், கவலைப்படாதீங்க!” இலக்கியா சொல்ல, “நீச்சல் தெரிஞ்சாலும் பெரியாக்கள் இல்லாமல் லைஃப் ஜக்கட் போடாம ஒருவரும் போறதில்ல. நீங்க நினைக்கிறது போல இல்ல. இந்த லேக் நல்ல ஆழம். தெரியாத இடம் வேற. சொல்லுறது விளங்கிது தானே? போன முற போன இடத்தில, நாலு பேராப் போயிட்டுத் திரும்பி வர முடியாம நிண்டு திண்டானினது மறந்திருக்க மாட்டிங்க எண்டு நினைக்கிறன்.” குறுக்கிட்டார், சுதர்சன்.
“அதப்பா இவள் குட்டி பயந்து அழுதவள். அதனால தானே உங்களுக்குப் ஃபோன் பண்ணினம்.” என்றாள், கவி.
அவ்வளவு சந்தோசமாக இப்படி ஏரிகரையோர விடுதிகளுக்கு வருவதே படகுச்சவாரி செய்வதற்குத்தானே!
“சரி சரி இப்பத்தானே வந்திருக்கிறம், அதையெல்லாம் விடிஞ்ச பிறகு பார்ப்பம். நான் ஜூஸ் எடுக்கப் போறன், வேற ஆருக்கு வேணும்?” வீட்டை நோக்கி நகர்ந்தாள், இலக்கியா.
“எனக்கு எனக்கு…” ஒவ்வொருவரும் சொல்ல, “எல்லாருக்கும் கொண்டு வாறன்.” சென்று வாயிலை அண்மித்தவள், “இலக்கி…” சுதர்சனின் குரலில் நின்று, “என்னப்பா?” திரும்பியிருந்தாள்.
“தண்ணிப் போத்தல் ரெண்டும் எடுத்திட்டு வாம்மா!”
“ம்ம்…” என்று உள்ளே நுழைந்து மறைந்தவளை, விழியெடுக்காது பார்த்திருந்தான் அவன், அந்தக் காரில் வந்திருந்தவன்.