ரோசி கஜனின் ‘இயற்கை’ – 1 (1)

சுறுசுறுப்பான இயக்கத்திலிருந்தது அப்பெரிய அடுக்குமாடிக் கடைத்தொகுதி!

“இந்த ஃபிளோரில டொமி ஷொப் இருக்கா இலக்கியா? டீ சேர்ட்ஸ் பார்ப்பமா?” அத்தளத்திலிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைத்  தொட்டு வந்தன, அஜியின் விழிகள்.

  “கொட்டேஜூக்குப்  போகேக்க அவுட்லெட்டில பார்க்கலாம் சித்தி; இங்க கடைகள்ல உள்ளத விட நல்ல விலைகுறைவாவும் வாங்கலாம்.” குட்டிச் சகோதரனில் கவனமிருக்கச் சொன்னாள், அவள்.

  “ஓ! அப்பிடியெண்டா சரிதான்.” 

  “உங்களுக்கு வேணுமெண்டா இங்கயும் பாருங்கவன். இந்த ஃபிளோரில இல்ல எண்டு நினைக்கிறன், பொறுங்க  பார்ப்பம்.” விழிகளைச் சுழற்றியபடி வந்தவள், “கையப் பிடிச்சுக்கொண்டு வா எண்டா இவனப் பாருங்கவன் சித்தி!” அவள் பிடியை உதறிவிட்டு முன்னாலோடிய நான்கே வயதான கவினைப் பிடிக்க ஓடினாள்.

  “டேய்…வேணாம் நில்லடா! குஞ்சன் எல்லா! நோ…நோ…அங்க எல்லாம் போக வேணாம் கவின், விழுந்திருவீங்க!” ஓட்டமும் நடையுமாக விரைந்தவள் தட்டென்று யாரிலோ மோதினாள், நல்ல மோதல்!

   “பாத்து இலக்கி!” அஜிதான். அவளும் பதற்றத்தோடு ஓடிவந்துகொண்டிருந்தாள். 

   இவளோ, மோதுப்பட்ட வேகத்தில் விழப் பார்த்துச் சுதாகரித்தவள், என்ன ஏதென்று நின்று நிதானித்தால் கவின் நிலை?  மேல் நோக்கி வந்து கொண்டிருக்கும் அசையும் படிகளில் கால் வைத்து… கற்பனை செய்யவும் முடியவில்லை. அவனோ, அப் படியடியை நெருங்கியிருந்தான். இதோ, கால் வைக்கப் போகிறான். 

  “டோய்…நில்லடா! கவின் சொன்னாக் கேள்!”  கத்திக்கொண்டே சென்றவள் எட்டிப் பிடிக்க முதல், அந்தப் பக்கத்தால் வந்த பெண்மணியொருவர் பிடித்துவிட்டார்.  அவனோ, அவர் பிடியில் புழுவாக நெளிந்தான். எப்படியாகிலும் விடுபட்டு நகர்ந்துகொண்டிருக்கும் படியில் கால் வைத்திட முயன்றான்.  முடியவில்லையே! 

  மேலும் கீழுமாகச் சர்சர்ரென்று ஏறியிறங்கும் படிகளில் பார்வையிருக்க, தன்  எண்ணம் நிறைவேறாது போனதில் உதடுகள் பிதுக்கி வெடிக்கத் தயாரான கவின், இலக்கியா நெருங்கியிருக்கவும் பம்மினான்.

   “தாங்யூ!” குட்டிச் சகோதரன் கரத்தைப் பற்றியபடி அந்தப் பெண்மணிக்கு  முறுவலோடு நன்றி சொன்னவளுக்கு மூச்சு வாங்கியது. அதேபோல், மூச்சு வாங்க வந்து நின்ற அஜி, மகனைக் கெட்டியாகப் பற்றியபடி நெருப்புப் பார்வை பார்த்தாள்.   ஆட்கள் நடமாட்டமுள்ள இடமாக இல்லாமல் இருந்திருக்க நச்சென்று ஒரு குட்டுக் குட்டியிருப்பாள். 

   ”இவனக் கூட்டிக்கொண்டு வெளிக்கிட்ட என்னைச் சொல்ல வேணும்!” அவளின் முணுமுணுப்பில் புன்னகைத்தார், அப்பெண்மணி.

   “துடியாட்டமான பிள்ளைகள் எண்டா இப்பிடித்தானே? கொஞ்சம் கவனமாப் பார்த்துக் கொள்ளுங்க!” அவர் நகர, “தேங்க்ஸ் ஆன்ட்டி!” மீண்டும் சொன்னார்கள். தலையாட்டிவிட்டு, கவின் தலையைப் பாசத்தோடு வருடிவிட்டுச் சென்றாரவர். சிறுவனோ, அவரைப் பார்த்துத் தலையைச்  சிலிப்பினான். மீண்டும் அவன் பார்வை அந்த நகரும் படிகளில் தான். 

  “இங்க பார் கவின், இன்னொருதரம் இப்பிடிச் சொல்லுக் கேட்காம ஓடினியோ, அங்க பார் பொலிஸ் நிக்குது, பிடிச்சிருவீனம்.” விழிகளை உருட்டி முகத்தில் கடுமையைக் கொண்டுவர முயன்றபடி எச்சரித்தாள், இலக்கியா. 

 தமக்கை சுட்டிய இடத்தை எட்டிப் பார்த்தான், சிறுவன். கீழ்த்தளத்தில் காவல்துறையினர் நடந்து செல்வது தெரிந்தது. “பொலிஸ்!” உரத்துக் கத்தினான். இப்படிச் சொன்னால் பயந்துவிடுவோமாக்கும். அவன் விழிகளில் விசமம்.

  “அடேய்! அடேய்! இவன் என்ன சித்தி இப்பிடி இருக்கிறான்?”  அவன் வாயை இறுக மூடிக்கொண்டே திடுக்கிடலோடு கேட்க, அஜியோ, “விடம்மா! இவனுக்கு இண்டைக்கு…” மகன்  கரத்தைப் பற்றியவள், யாரும் பார்க்கா வண்ணம் நறுக்கென்று நுள்ளிவிட்டாள். அவன் செய்த வேலைக்கு இதோடு தப்பினானே!

  “அம்மாஆஆ ஆ! நோகுது! இப்ப ஏன் நுள்ளினீங்க?” கால்கள் இரண்டையும் நிலத்தில் உதைத்த சிறுவன், சற்றே பெரிய சத்தத்தில் கத்த, “டேய்..டேய்…சத்தம் போடாதடா! என்ர செல்லக்குட்டிக்கு டோனட் வாங்கித் தரவோ? அங்க ‘டிம் ஹொர்ட்டன்’ இருக்கு, வாங்க வாங்கீட்டு வருவம்.”   இழுத்துக்கொண்டு ஓடினாள், இலக்கியா.

    “இனிமேல்பட்டு இவன எங்கயாவது கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டால் என்ர பெயரே இலக்கியா இல்ல!”  அவள், சிறுவனை முறைத்தபடி முணுமுணுத்ததைக் கேட்டபடி பின்னால் வந்த அஜியின் உதடுகளில் புன்னகை.

  “இதுக்குத்தான் நான் வேணாம் விட்டுட்டு வருவம் என்றனான். அவரிண்ட சிணுங்கலைப் பார்த்துப் பாவமெண்டு கூட்டிக்கொண்டு வந்தது ஆர்?” 

   “அய்யோ சித்தி! நீங்க பெத்த இரத்தினம் இப்பிடி எல்லாம்  ஆட்டம் காட்டுவார் எண்டு ஆருக்குத் தெரியும்?” என்றபடி, அவன் காதில் வலிக்காது முறுக்க, அவனோ சிரித்துக்கொண்டு துள்ளினான். இலக்கியாவின் கையைப் பிடித்தபடி தொங்கி தொங்கிக் குதித்து அவளை ஒரு வழிபண்ணிக்கொண்டு நடந்தான்.

  “இவரைப்பற்றி முழுசா உமக்குத் தெரியாதம்மா. சும்மாவே துடியாட்டம் தான். அதோட இங்க வந்து செல்லம் நல்லாக் கூடிற்று! சின்னவன் எண்டு எல்லாரும் தூக்கிக்கொஞ்ச என்ர சொல்லே கேட்கிறார் இல்ல. வலு கெதியா, தம்பிப்பிள்ள என்னட்ட முறையா வாங்கப் போறார்.” மகனை முறைத்த அஜி, “அக்காண்ட கையில தொங்காமல் நேரா நட குஞ்சு!” அடிக்குரலில் அதட்டலும் போட்டாள்.

   அவன் காதிலும் வாங்கவில்லை. தாயைப் பார்த்துக் கண்கள் சுருங்க வசீகரமாக முறுவலித்தான். தாயின் கோபத்தைப் பஞ்செனப் பறக்கவைத்துவிடும் வழி இதுவென்று அவனுக்குத் தெரியுமே! 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock