நயாகராவைச் சென்றடைய முதலே, அங்கு என்ன என்ன செய்வதென்ற திட்டமிடல் முடிந்திருந்தது. ஏற்கனவே சென்ற இடமென்பதால் எல்லோரும் ஒரேயிடத்தில் நேரம் செலவிடாது, இளையவர்கள் விருப்பத்திற்கேற்ப நேரம் செலவிடலாமென்ற நோக்கில் யார் யார் எங்கு போவதென்று கதைத்துக்கொண்டார்கள்.
மாறன், கவினோடு இளையவர்களில் ஆண்கள் கார் ரேஸிங் செல்வதென்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். நாதனும் அவர்களோடு செல்வதென்றிருந்தார்.
பெண்களில், அஜி நயாகரா வருவது முதல் முறையென்பதால், “என்னதான் அமெரிக்காட பக்கமா போட்டில ஃபோல்ஸ்க்குக் கிட்டப் போறது எண்டாலும் இந்தப் பக்கமிருந்து பார்க்க வேணாமா? நானும் அஜியும் அங்க போறம்.” என்றார், நாதனின் மனைவி ரதி.
“எத்தனை தடவைகள் வந்தாலும் நாங்களும் ஃபோல்ஸ் பார்க்க வருவமே!” கவி, இலக்கியாவையும் சேர்த்துக்கொண்டு சொல்ல, இலக்கியாவோ இவர்களின் எந்தவிதமான உரையாடலிலும் கலக்காது சற்றே தள்ளி நின்றிருந்தாள். அவள் பார்வை, விரைந்து கலகலத்துச் செல்லும் சனத்திரளில் இலக்கின்றி தத்தித் தாவித் திரிந்தது. மிக்க கட்டுப்பாட்டோடு இறுகி நின்றாளவள், ‘மறந்தும் அவனைப் பார்த்துவிடாதே!’ மனதுள் மீண்டும் மீண்டும் கட்டளையிட்டபடி.
தான் அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்ததும் முறைத்தவள்தான், அதன் பின்னர் தன்புறமாகத் திரும்பவேயில்லை என்பதை அவதானிக்காதிருக்குமா வேந்தனின் பார்வை!
சரி, அங்குதான் கண்ணை முடிக்கிடந்தாள்; உண்மையாகவே நித்திரை கொண்டும் இருக்கலாமே; இறங்கிய பிறகும் இப்படி நின்றால்?
முகம் இறுக்கிப் போயிற்று அவனுக்கு! அடுத்த கணமே இயல்பாகிவிட்டான். சில கணங்களேயென்றாலும், அவன் மீதான அவளின் மனதின் தேடலை, விழிகளால், அதில் துளிர்த்த கண்ணீரால் உணர்த்தவில்லையா அவள்?
‘பயப்படுறாள்! நிச்சயம் என்னில்.’ விருப்பமேயில்லையென்றாலும் உண்மை அதுதான் என்றது அவனுள்ளம். அதோடு, மொத்தக் குடும்பமும் கூடியிருக்க, கண்டதும் இவனை விரும்பிவிட்டேன் என்று சொல்ல முடியுமா என்ன?
‘எல்லாருமே உன்னைப்போல இருக்க வேணுமெண்டில்ல வேந்தன்’ அவளுக்காகவே வாதாடியாது, அவனுள்ளம். இருந்தாலும், இதேநிலையில் அவளின் முழு நேசத்தை வாங்கிவிடவேண்டும் என்றும் பிடிவாதம் கொண்டு நின்றதும் அதே உள்ளம் தான்.
“இலக்கி என்ன வாறியா? இல்லாட்டி அம்மா ஆக்களோட அக்குவாரியம் போகப் போறியா?” கவி தோளில் தட்டத் திரும்பியவள், “ஆங்! என்னக்கா?” முழித்தாள்.
“ஏய் என்னடி! உண்மையாவே என்னடி?” கவிதான்.
“அவள் இன்னும் நித்திரையாள எழும்பேல்ல!” தலையில் தட்டிவிட்டு, “அப்ப நாம போவம்.” மகனைக் கையில் பற்றிக்கொண்டான், மாறன்.
“இங்க பாருங்க, எல்லாரும் ஒன்றரை ரெண்டுக்கு இந்த இடத்துக்கு வாற மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்க. அப்பத்தான் இங்கயே சாப்பிட்டுட்டு மூன்றரை போலச் சரி போடர் கடக்கலாம்.” என்ற நாதன், “என்ன தம்பி சொல்லுறீங்க?” வேந்தனிடம் கேட்டார்.
திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருந்தது, இலக்கியாவுக்கு, அந்தத் தம்பியைத் தான். அந்த ஆசைக்கு நச்சென்று குட்டுக் கொடுத்துவிட்டு நகர முயன்றாள்.
“ஓம் அங்கிள், மூன்றரை நாலுக்குச் சரி அங்கால போனால் போட்டிங் போயிட்டு ஹோட்டல் போகலாம்.” என்றவன், “தம்பி நீங்களும் எங்களோட வாங்கோவன்.” என்றவருக்கு, “இல்ல அங்கிள், நீங்க போயிட்டு வாங்க; நான் இதில பக்கத்தில தான் நிப்பன்; இல்லாட்டியும் என்ர நம்பர் உங்களிட்ட இருக்குத் தானே?” என்று சொல்லிவிட்டான்.
“சரி நாமளும் போகலாம்.” இலக்கியாவின் கரத்தைப் பற்றிக்கொண்ட அஜி, “பிள்ள கவனம் மாறன்.” கணவனிடம் சொல்லிவிட்டு நடக்க, கவியும் ரதியும் சேர்ந்து கொண்டார்கள்.
“நாங்களும் போயிட்டு வாறம்.” சிவா ராஜியின் மகள், அக்குவாரியம் செல்ல ஆசைப்படவே சுகுணாவும் அவளுமாக அந்தப் பக்கமாக நடந்தார்கள்.


