நயகரா நீர்வீழ்ச்சியின் கனடா எல்லை கடந்து, அமெரிக்கா வந்திருந்தார்கள்.
நேரம் ஐந்து மணி கடந்திருந்தது. அன்றைய நாளுக்கான பணி நேரத்தை முடிக்கும் தருவாயில் மஞ்சளொளி பரப்பி நின்றான், ஆதவன். அதோடு, அவ்விடத்துக்கேயுரிய சிலிர்ப்பும் கலக்க இன்னுமொரு சொர்க்கத்தினுள் நுழையும் உணர்வேற்பட்டது.
பொழுது புலர்கையில் புறப்பட்ட பயணம் தந்த களை ஒவ்வொருவரிலும் தெரிந்தாலும் அதை மீறிய ஆர்வமும் துடிதுடிப்புமாக ஓரிடத்தில் கூடி நிற்க, வள்ளத்திற்கான அனுமதிச்சீட்டுக்களை வாங்கி வரச் சென்றிருந்த நாதனும் மாறனும், “போகலாமா?” அனுமதிச் சீட்டுகளோடு வந்தவர்கள், “வேந்தன் இன்னும் வரேல்லையா?” என்றபடி பார்த்தார்கள்.
“நீங்க போங்க, வாறன்.” என்றுவிட்டுப் பின்தங்கியவனை இலக்கியாவின் விழிகளும் தேடின. ஒருவேளை, தன் பாரா முகம் தான் அவன் வரவைத் தடுத்திருக்குமோவென்ற எண்ணம் வேறு மனதைக் குடைந்தது.
“அந்தா வேந்தன் அண்ணா வாறார்.” சிவா ராஜியின் மகள் சுட்டிக்காட்ட, கைபேசியில் கதைத்தபடி விரைந்து வந்துகொண்டிருந்தானவன்.
‘பெரிய துரை! அவர் வருமட்டும் நாங்க பார்த்துக்கொண்டு நிக்க வேணுமோ!’ வெடுக்கென்று முகம் திருப்பினாலும் அவள் முகத்தில் முறுவல்.
“வெய்ட் பண்ண வச்சிட்டனா? சொறி சொறி … வீட்டில இருந்து அம்மா கதைச்சா அதுதான்.” சமாளிப்பாகச் சொல்லிக்கொண்டே நெருங்க, “அதுக்கென்ன? இப்பத் தான் டிக்கெட் எடுத்திட்டு வந்தம், போவமா?” நடந்தார், நாதன். கடைசியாக மாறனும் கவினும் வேந்தனுமாக வருவது தெரிந்தும் திரும்பாது விறுவிறுவென்று நடந்தாள், இலக்கியா.
படகில் செல்ல, கீழே, நீரவீழ்ச்சி விழும் இடமட்டத்துக்குச் செல்ல வேண்டும். மின்தூக்கியில் அங்கு சென்றவர்கள், நீர்வீழ்ச்சியருகில் செல்கையில் தெப்பலாக நனைந்துவிடுமாகையால் தரப்படும் பொலித்தின் சட்டையையும் அணிந்துகொண்டு வரிசையில் நின்றார்கள். அதுவரையிருந்த பொறுமை பஞ்செனப் பறந்திருக்க மெல்லத் திரும்பிப் பார்த்தாள், இலக்கியா.
அவன் அவளைப் பார்க்கவில்லை; கவின் அவன் கையில் தொத்தியிருக்க, அச்சுற்றம் பார்த்து வெகு சுவாரசியமாக மாறனோடு அளவளாவிக் கொண்டு நின்றான்.
பார்த்ததும் அவன் விழிவீச்சில் பார்வையை விலக்குபவள் இப்போது நன்றாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். எங்கே? அவன் பார்வை அவள் புறம் வரவேயில்லை. முகம் தொங்கீற்று இலக்கியாவுக்கு.
அவனைப் பார்க்கவே கூடாதென்று நினைத்தவளும் அவள் தான்; அதைச் சில மணிநேரமாகக் கடைப்பிடித்தவளும் இவளே தான்; ஆனாலும், ‘அவன் எப்பிடிப் பார்க்காமல் இருக்கலாம்.’ முரண்டியது மனம். கூடவே, அருகில் நின்ற கவியோடும் பல்லைக்காட்டிக்கொண்டு கதைத்தானா? சுறுசுறுவென்று எரிச்சலானது, இவளுக்கு.
சென்றிருந்த படகு வர, இறங்கியவர்கள் ஒரு ஓரமாக வெளியேற இவர்களின் வரிசை நகர்ந்து உள்ளே ஏறியது. அவனைப் பார்ப்பதை விட்டுவிட்டு நகர்ந்தாள், இலக்கியா.
“எல்லாரும் மேல போவம்.” ஆரூரன் படிகளில் ஓடியேற எல்லாரும் தொடர்ந்தார்கள்.
அந்த அந்திவேளையிலும் சனத்திரளுக்குக் குறைவிருக்கவில்லை. படகின் கீழ்ப்பகுதி நிறைந்து மேலேயும் சனம் முட்டி மோதி நின்றார்கள். அந்த நெருக்கடியில் இயற்கையழகை இரசிப்பதா இவன் எங்கேயென்று பார்ப்பதா? திரும்பித் தேடிப்பார்த்தால் அவன் கண்ணிலும் தென்படவில்லை.
‘ஒருவேளை கீழ்த்தட்டில் நின்றுவிட்டானோ!’ மனம் சுணங்கினாலும் அதிலிருந்து கடந்து அக்கணத்தின் மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முயன்றாளவள்.
நீல நிற மழைச்சட்டையணிந்து, உள்ளமெல்லாம் உவகையை அடக்கிக்கொண்டு நிற்கும் மக்களை ஏற்றிக்கொண்டு வெண்ணுரையில் மிதந்து மெல்ல மெல்ல நகர்ந்தது அப் படகு.
முன்னால், கனடாப்பகுதியிலிருந்து இதேமாதிரியொரு படகு சிவப்பு நிற மழைச்சட்டை அணிந்திருந்த உல்லாசப்பயணிகளோடு சென்றுகொண்டிருந்தது.
முதலில் அமெரிக்கன் ஃபோல்ஸ், பிரைடல் வேல் ஃபோல்ஸ் என்று சென்ற படகிலிருந்து பார்க்கையில் அச்சுற்றமே தனி இரம்மியம் தந்து நின்றது.
கனடாப் பக்கமிருந்து பார்க்கையில் ஒரு அழகு! அமெரிக்காப் பக்கத்திலிருந்து ஒரு அழகு! இப்போ… இது ஒருவித அழகு!
சற்றே தள்ளித் தெரிந்த ஹோர்ஸ் ஷூ போல்ஸில் நீர் விழும் வேகத்துக்குப் புகார் எழுந்து மேலே சாம்பல்நிற மேகமாய்த் தரித்து நிற்க, முன்னே கம்பீரமாக உயர்ந்து நின்ற கனடாப் பகுதியின் நவீன கட்டிடங்கள், கனடாவையும் அமெரிக்காவையும் இணைத்து நிற்கும் ‘ரெயின்போ பிரிஞ்’ என, ஒருவகை கம்பீரமளிக்க எத்தனை தடவைகள் வந்தாலும் புத்தம் புதிதாகத் தோற்றம் தரும் இயற்கை பார்ப்போர் விழிகளை நன்றாகவே வசியம் செய்தது.
காணக் கண்கள் கோடி வேண்டும். எல்லாருமே தம்மை மறந்து இரசித்தார்கள். புகைப்படங்கள், செல்பிக்கள், வீடியோக்கள் களை கட்டின.
அக்கணம் வேந்தனை மறந்தே போனாள், இலக்கியா! ஆனால் அவன்?


