இயற்கையால் அவனை முழுமையாக மயக்க முடியவில்லை. எப்போதுமே இங்குவந்துவிட்டால் தன்னை மறந்து இரசித்து நிற்பவன், இப்போதோ, அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்களில் சிறைபிடிப்பதில் பெரும்பாலும் நேரத்தைச் செலவிடுகின்றானே!
மெல்ல மெல்ல யாருமே அவதானிக்காது நகர்ந்து வந்து அவளருகில் நின்றுகொண்டான். தொப்பியை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டான். இயன்றமட்டும் முகத்தை மறைக்கப் பிரயத்தனமெடுத்தானேயொழிய மனதை மறைத்திட முனையவும் இல்லை, முனையும் நோக்கமும் இல்லையே!
முதல், இப்படியெல்லாம் சந்தர்ப்பங்கள் அமையுமென்று அவன் எதிர்பார்த்தெல்லாம் இருக்கவில்லை. இவர்களோடு இந்த இருகிழமைகளுக்கும் சாரதியாகச் செல்வதென்று மட்டுமே முடிவெடுத்திருந்தான். தன்னுள்ளத்து நேசத்துக்குப் பதில் காணும் ஆவல் அதைச் செய்ய வைத்திருந்தது.
ஆஜானுபாகுவான இரு ஆண்கள் – சித்தப்பாக்கள், நெடுநெடுவென்று நிற்கும் அவள் தம்பி ஆரூரன், தாய், சித்திமார், தமக்கை, தம்பிகள், தங்கை என்று, நண்டும் சிண்டுமாக வாலுகள் சுற்றி நின்றவளை அணுகிடக் கிடைக்கும் சிறுசந்தர்ப்பத்தையும் அவன் விடுவதாகவில்லை.
அவளும் சரி சுற்றி நின்ற உறவுகளுமே அவனைக் கவனிக்கவில்லை. எல்லார் பார்வைகளும் எப்போதாவது கிடைக்கும் பொக்கிசமான தருணத்தை முழுமையாகத் தம்முள் அடக்கிக்கொள்ளும் அவாவோடு அங்கே ஒருமித்துக் கிடந்தன.
அவளின் மறுபுறம் நின்றது அஜி. மற்றவர்கள் அஜிக்கு அப்பால்தான் நின்றிருந்தார்கள். அவள், இவனைத் தேடித்தேடி கடைசியாக நின்றுவிட்டதை இவன் கவனித்தானே!
‘இப்ப இவ்வளவு பக்கத்தில வந்து நிக்கிறன் பாக்கிறாளா?’ மெல்ல அவளைப் பார்த்தான்.
இலக்கியா, தலைக்குத் தொப்பியைப் போடவில்லை. நீர் முத்துக்கள் அவள் சிகையை முழுமையாக அலங்கரிப்பதில் முனைந்திருந்தன. சிகையென்றில்லை அவள் வதனம் முழுவதும் நீர் முத்துக்கள். இமைக்குடைகளிரண்டும் மென்மையாகத் தாங்கி நின்ற நீர்திவலைகளில் பெரும் வஞ்சம் கொண்டது, இவனுள்ளம். கேசக்கற்றைகள் சிதறிச் சுருண்டு கிடக்க, எப்போதுமிருக்கும் நிமிர்வு கனிந்து, விழிகளில் இயற்கை எழிலின் எதிரொலி பளிச்சிட நின்றவளை விட்டுப் பார்வையை விலக்கிக் கொள்ளமுடியாது திண்டாடிவிட்டான், அவன்.
“தலையை மூடும் இலக்கி!” சொல்லிக்கொண்டே, கணவன் தூக்கி வைத்திருந்த மகனின் தொப்பியைச் சரிசெய்தாள், அஜி. அப்படியே கணவன் தொப்பியையும். மகன் கணவனோடு நெருங்கி நின்றுகொண்டாள்.
“தேவையில்ல சித்தி. நான் எப்பவும் நனைஞ்சிட்டுத்தான் போறனான்.” குழந்தையாகச் சொல்லிவிட்டு, சோவென்று ஆர்ப்பரிப்போடு பாய்ந்த நீர்விழ்ச்சியையே பார்த்து நின்றாள், இலக்கியா.
போட் ‘ஹோர்ஷூ ஃபோல்சை’ நெருங்க நெருங்க புகையாக இவர்களையும் தழுவிக்கொண்டது, புகார். தெப்பலாக நனைத்துவிடும் அது, ஒரு நிமிடத்துக்கும் குறைவான அனுபவமாக இருக்கும். நீர் விழும் இடத்தை மிகவும் அண்மித்துவிட்டுச் சட்டென்று வெளிவரும் படகு. அந்த வினாடிகள் வேந்தனுக்கு அவன் வாழ்வில் மறக்கவியலா அழகிய தருணமாகிற்று! அப்படியாக்கிட முடிவெடுத்துவிட்டான்!
சட்டென்று தன் தோளடி உயரத்தில் நின்றவளின் காதோரம் குனிந்தான். கை மெல்ல அவள் தோளை வளைத்துக்கொள்ள, “இலக்கியா! லவ் யூ டா! லவ் யூ சோ மச்!” முணுமுணுத்த வேகத்தில் அவள் கன்னத்தில் மிருதுவாக பட்டும் படாமலும் ஒற்றிவந்தன, அவன் உதடுகள்!
மறுகணம் நிமிர்ந்து, நீரால் நனைந்த விழிகளில் அன்பு சொட்டச் சொட்ட நின்றிருந்தான், வேந்தன். சுற்றிலும் சொந்தங்கள். இப்படி ஒருவன் வந்து நேசம் சொல்ல என்ன துணிவு வேணும்?
தூக்கிவாரிப்போட திரும்பியிருந்த இலக்கியாவின் விழிகள் அதிர்வில் குத்திட்டு நின்றன.
“நீ திருப்பிச் சொல்ல மாட்டியா?” அவன் விழிகளில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு.
“சொல்லு இலக்கியா! போட் திரும்பப் போகுது.” அந்த இடத்தில் வைத்தே அவள் பதிலைப் பெற்றுவிடும் அவசரம்.
அது எங்கே? படகு என்ன மொத்த அண்டமுமே இயக்கம் நிறுத்தியிருக்க, லப் டப் ஒலி காதைப் பிழக்கவல்லோ நின்றிருந்தாள், அவள்! படகு நன்றாகவே வெளியே நகர்ந்திருந்தது.
அவன் முகத்தில் வழிந்த நீரில் அடிபட்ட ஏமாற்றத்தின் சாரல் வழிந்தோடியது. ஒருகணம் அவளில் ஊன்றிப் படிந்த பார்வையோடு வழமைக்குத் திரும்பிவிட்டான்.
“நீங்க கீழ நின்றிட்டீங்க என்று நினைச்சன்.” மாறன்.
“கீழ நின்றுட்டுட்டு இப்பத்தான் மேல வந்தன்.” மிக இயல்பாகப் பதில் சொன்னவன் கண்களிரெண்டும், கணநேரம் இரகசிய மொழியோடு படிந்தது, இன்னமும் அதிர்வு விலகாது நின்றவள் விழிகளோடுதான்.


