அதே கையோடு, “எல்லாரும் இங்க பாருங்க, நான் செல்ஃபி எடுக்கிறன்.” சட்டென்று ஆயத்தமாகி நின்றான். ஒரே நாளில் எல்லோரோடும் வெகு இயல்பாகப் பழகியிருந்தான் வேந்தன். அதிலும் இலக்கியாவின் சித்தப்பாமாருக்கு அவனை மிகவும் பிடித்துப் போயிற்று! “விசயம் தெரிஞ்ச நல்ல பெடியன்!” என்றும் கதைத்துக்கொண்டார்கள்.
“கெதியா…கவின் இங்க பாருங்க குட்டியன்!”
ஒரு கையில் செல்ஃபி ஸ்டிக், சரசரத்த மழைக்கோட்டினுள் மறைந்து கிடந்த மறுகரம் கள்ளத்தனமாக, கொஞ்சம் கூட மற்றவர்களுக்குச் சந்தேகம் வரா வண்ணம் அருகில் நின்ற இலக்கியின் கரத்தைப் பற்றியிருந்தது, மிக மென்மையாக! யார் எவரென்றில்லாது இயற்கை இரசிகர்களாக நெருங்கி நின்ற உல்லாசப்பயணிகளிடையே இதையெல்லாம் உற்றுப் பார்த்தாலும் கண்டுகொள்ள முடியாதே!
கொஞ்சம் கூட எதிர்பாராத சூழ்நிலையில் வாய் திறந்திருந்தான்; நேசத்தைச் சொல்லியிருந்தான்; ஏற்கனவே கடந்துவிட்ட மணித்துளிகளில் பார்வைகளாலும் செய்கைகளாலும் உணர்த்தியிருந்த நேசத்தை வார்த்தைகளில் கிசுகிசுத்திருந்தான்; அதுவும், இயற்கை அன்னையின் அதியற்புத ஆசிர்வாதத்தோடு! இருந்தாலும், அக்கணத்தை முழுமையாக அனுபவித்திட முடியவில்லையே! அவன் செய்த செயலில் இன்னமும் உறைந்துதான் நின்றிருந்தாள், இலக்கியா.
‘கண்டதும் காதலா?’ வியப்பும் நம்பாத தன்மையும், ஒரு படிமேலே சென்று, ‘இதெல்லாம் நம்பக் கூடியதாகவா இருக்கு? அதெப்படி முன்னப் பின்னத் தெரியாதவர்களிடையே…சான்ஸே இல்ல’ என்று, வரிந்து கட்டிக்கொண்டெல்லாம் வாதாடுபவள் இல்லை அவள். ஆனாலும், அதில் அவ்வளவாக நம்பிக்கையுமில்லை. ‘அதெல்லாம் வாய்ப்பேச்சுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கைக்கு இல்ல’ என எண்ணிவிடுபவள் இப்போதோ, ‘கண்டதும் காதல்’ எனும் ஆழ்துளைக்கிணற்றில் அல்லவா விழுந்து கிடக்கிறாள்.
உண்மையில் எங்கிருந்து வந்தான்? யார் எவரென்றில்லாது அவன் உணர்த்தும் இந்த நேசம் நிகரில்லா ஆயுள் கொண்டதா? அவன், அவள் உள்ளத்தைக் கரைத்தாலும் மிகையாகவே பயமும் தடுமாற்றமும் கொள்ள வைத்தான்.
அப்படி அதிர்ந்து நின்றவளை முழுமையாகச் சுயத்துக்கு இழுத்திட்டதும் அவனின் கைப்பற்றுதல் தான். சில்லிட்டுப் போயிருந்த அவள் உள்ளங்கைகளுள் பொதிந்த அவன் விரல்கள் ஏற்படுத்திய கதகதப்பில் அவள் கண்களால் குபுக்கென்று கண்ணீர் வழிந்துவிட்டது.
தன் வாழ்வில் நடக்கும் இந்தத் திருவிளையாட்டை எப்படி எதிர்கொள்வாள்? அவனிடமிருந்து, ஏன் தன் மனதிடமிருந்து அவள் எப்படி அவளாக நிற்கப் போகிறாள்? அதுவும் மறுபுறமாக உறவென்று சுற்றி நிற்போர் மனம் எவ்விதத்திலும் புண்பட்டுவிடாது.
அவளையும் மீறி நெடிய பெருமூச்சுத்தான் வெளியேறியது. சட்டென்று திரும்பிப் பார்த்தான் வேந்தன். கணத்தில் உரசிய அவள் பார்வை விலகிக் கொண்டது. அவன் பற்றியிருந்த பிடி அப்போதும் தளரவில்லை. இவள்தான் விடுவிக்கப் பார்த்தாள். முடியவில்லை. சற்றே அழுத்தமாகப் பற்றியிருந்தான், இப்போது.
“என்ன இலக்கியா இம்மாம்பெரிய பெருமூச்சு?” மறுபுறமிருந்த அஜி.
“இல்ல…ஒண்ணுமில்ல சித்தி.” பட்டென்று சொல்லிவிட்டு, “சூப்பரா இருந்தது என்ன?” கடந்து போயிருந்த ஹோர் ஷூ ஃபோல்சைப் பார்க்கும் வகையில் திரும்பியவள், “கைய விடுங்க!” கடித்த பற்களிடையே முணுமுணுத்தாள்.
“ஓமப்பா! எனக்கு இப்பவும் இது கனவா எண்டு இருக்கு!” அஜியின் பார்வையும் அச்சுற்றத்தை ஆசையடையுடன் தழுவ, “விடமாட்டன்; நான் சொன்னதுக்குப் பதில் சொல்லு விடுறன்.” அவ்வளவு இயல்பாக முணுமுணுத்தவனை என்ன செய்வதாம்.
மற்றவர் கவனம் கவராவண்ணம் மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தாள். அவன் அசையவேயில்லை. ‘உனக்கு…’ எதிர்பார்ப்போடு நின்றவனை பார்த்துக்கொண்டே அவன் ஒருகாலில் நன்றாக அழுத்தி மிதித்துவிட்டாள், இலக்கியா.
“ஆ ஆ…” கையை விட்டுவிட்டான்.
“என்ன வேந்தன்?” எட்டிக்கேட்டாள் அஜி.
“இல்ல… நான்தான் தவறி காலில மிதிச்சிட்டன். சொறி! நல்லா மிதிப்பட்டுட்டோ!” அவன் முகம் பார்த்துக் கேட்டவள் விழிகளில் மின்னலாக நகைப்போடியதைக் கண்டவன், “உன்ன…” வாய்க்குள் வார்த்தைகளை அரைத்துவிட்டு விழுங்கிக் கொண்டான்.
“லவ் யூ எண்டா காலில இப்பிடி மிதிச்சு வதைக்கிறாள் ராட்சசி!” மீண்டும் முணுமுணுத்தான்.
“பார்த்து இலக்கி… பார் அவருக்கு நல்லா மிதிபட்டுட்டுப் போல!” மாறன் சொல்ல, “இல்ல இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல.” நகர வேண்டிய நிலை வேந்தனுக்கு.
படகு இறங்குதுறையை அண்மிக்க, இலக்கியா அசையாது நின்றுவிட்டாள். மாறன், அவனைத் தொடர்ந்து நாதன் என்று முன்னேற அவர்களோடு சேர்ந்து நகரவேண்டியவனானான், வேந்தன்.
கடைசியாக நின்று தாயோடு ஒட்டிக்கொண்டாள், இலக்கியா.
“என்னம்மா நடந்தது?” தாய் கேட்டுக்கொண்டே படிகளில் இறங்கினார்.
“எது?”
மழைச்சட்டையைக் கழட்டிக்கொண்டு சேர்ந்திறங்கிய இலக்கியாவின் விழிகள் படகை விட்டு வெளியேறிச் சென்றுகொண்டிருக்கும் வேந்தன் முதுகில் படிந்துவிட்டுத் தாயிடம் திரும்பியது.
“இல்ல…என்னமோ மாறன் சொன்னமாதிரி இருந்திச்சு, காலில மிதிப்பட்டதென்று. உன்ர காலிலையோ மிதிப்பட்டது?”
“இல்லம்மா, நான் தான் தவறி மிதிச்சிட்டன்.” சொன்னவளுக்கு உள்ளே நகைப்போடியது.
“ஆரை? பாத்து நிக்கிறதில்லையா பிள்ள?”
“பச்! தவறிம்மா! வேணுமெண்டு யாராவது மிதிப்பினமே!” என்று சொல்லி நகர்ந்தாலும் யார் காலை மிதித்தாய் என்று கேட்டத்துக்குப் பதிலிறுக்கவில்லை.
‘வேந்தன்…பெரிய வேந்தன் எண்ட நினைப்பு! தான் நினைக்கிறது எல்லாம் உடனுக்குடன் நடத்திக்கொள்ள வேணும். அவ்வளவும் தான். மற்றவை பற்றிய கவலையே இருக்காதா இந்தாளுக்கு!’ மெத்தென்று மென்மையாக மலர்ந்திருந்த மனதுள் அவனுக்கு அர்ச்சனைகள் களை கட்டியிருந்தது.
எல்லோரும் வாகனத்தில் ஏறும்பொழுது வாசலில்தான் நின்றுகொண்டிருந்தான், அவன்.
அன்றைய நாளின் மொத்தக் களைப்பும் எல்லோருரையுமே ஆட்கொண்டிருந்ததை பார்த்ததும் புரிந்துகொள்ள முடிந்தது. விறுவிறுவென்று உள்ளே ஏறினார்கள்.
“எனக்கு இரவைக்குச் சாப்பாடே வேணாம் பா!” கவி. தொடர்ந்து பல “எனக்கும் எனக்கும்” இளையவர்களின் குரல்கள்.
“பின்ன? ஏறின நேரம் தொட்டு அரைச்சுக் கொண்டே இருந்தா பசிக்காதுதான்.” என்றபடி ஏறினார் சுகுணா.
அவரை ஏறவிட்டுப் பின்தங்கி நின்றவளால் அவன் முகம் பாராது உள்ளே செல்ல முடியவில்லை. அவன் பார்வையும் அவளில் தான். மனத்துள் தடுமாறினாள் இலக்கியா. முகம் கூடச் சூடாகிப் போயிற்று!
சில்லென்ற நீர்த்தூவலின் கீழ் வைத்து நேசத்தைச் சொன்ன கணமும், கூடவே, அவன் முணுமுணுப்பும் அப்போது உணர்த்தாததையெல்லாம் இப்போது உணர்த்தி நின்றதில் தன்னையுமறியாது தலையை ஆட்டி கன்னத்தோர கேசங்களை ஒதுக்கிக்கொண்டே பார்வையை விலக்கிக்கொண்டாலும், அமைதியாக மட்டும் ஏறமுடியவில்லை.
அவன் காலை ஒருதரம் பார்த்தவளுக்கு, தான் நன்றாக மிதித்துவிட்டதுபோல் இருந்தது. இன்னொருதடவை மனதார மன்னிப்பை வேண்டிடவேண்டும் போலிருந்தாலும் அதைச் செய்யாது ‘என்ன?’ என்று விழியசைவால் கேட்கவும் அவன் முகம் கோனிப்போனது.
“பதில் சொல்லமாட்டீரா?” அப்பவும் அவன் அதில்தான் நின்றான். இளகிக்கிடந்த முகம் பிடிவாதத்தில் இறுகிப் போக, விசுக்கென்று ஏறி பின் வரிசையில் சென்றமர்ந்து கொண்டாள்.
வேந்தனுக்குத்தான் முகம் தொங்கிற்று! சாரதியாசனத்தை நிறைத்தான். எவ்வளவு ஆசையாக மனதை வெளிப்படுத்தினான். அவளுக்குத் தன்னைப் பிடிக்கும் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும் வாய் வார்த்தையாய்க் கேட்டுவிடும் ஆர்வம், ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்பப்போ பார்வையில் நேசத்தைக் கொட்டுபவளுக்கு வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் என்ன பிரச்சனையாம்?’
மனதுள் சிடுசிடுத்தான். அவள் தன் மனதுள் இடம்பிடித்துவிட்டாள் என்றுணர்ந்த கணமே அவள் பற்றி இயன்றமட்டும் அறிந்துகொண்டிருந்தான். அவளுக்கு அப்படியா? இன்று தானே திரும்பவும் கண்டிருக்கிறாள் எண்டெல்லாம் அவன் துளியும் எண்ணவில்லை.
‘அசையிறாள் இல்லையே! நான் விரும்புறன் எண்டா நீ காலில மிதிப்பியோ!’ மனம் எகிற ரியர் வியூ மிரரைப் பார்த்தால், பாசமலர்களோடு அளவளாவிச் சிரித்து, கைபேசியில் புகைப்படங்கள் பார்த்தென்று அவர்கள் வேறு உலகிலல்லவா இருக்கிறார்கள்!
தொடர்ந்து பின்னால் அவதானிக்க முடியாதபடி நாதன் அருகில் வந்தமர்ந்துவிட, வாகனத்தை உயிர்ப்பித்தான்.
பின்னால் கலகலவென்றிருக்க முன்புறம் மௌனமாகச் சில நிமிடங்கள் கழிந்தன. “இன்னும் ஐஞ்சு நிமிசம் அங்கிள். டின்னருக்கு வேணுமெண்டா இங்க வரலாம்.” கடந்து சென்ற உணவு விடுதியொன்றைக் காட்டினான்.
“ஓம், அங்க பக்கத்தில இருந்தாலும் சரிதான். இங்க வர திரும்ப வாகனம் எடுக்க வேணுமே.”
“அதெல்லாம் பிரச்சனையில்லை அங்கிள்; நீங்க எது எண்டாலும் யோசியாமல் என்னட்டச் சொல்லுங்கோ!”
“பார்ப்பம் தம்பி, அங்க பக்கத்தில இல்லாட்டி வருவம்.” என்றவர், “என்னமாதிரி உங்களுக்கு அறை எல்லாம்…” இழுத்தார்.
“நீங்க தங்கிற ஹோட்டலில புக்கிங் போட்டிருக்கு அங்கிள், பிரச்சனை இல்லை.”
“அப்பச் சரி…நாளைக்கு ஏழு ஏழரைக்கு வெளிக்கிட்டால் சரி என்ன? பென்சில்வேனியா போயிட்டு அப்படியே ஹோட்டலுக்குப் போகலாம்.”
“ஓம், எவ்வளவு நேரத்துக்கு வெளிக்கிடுறமோ நல்லம் அங்கிள்.” என்று கதைத்துக்கொண்டே, “இதுதான் இடம்.” தங்கப்போகும் விடுதியின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தினான்.
“எல்லாரும் தேவையானதை மட்டும் எடுத்து ஆயத்தப்படுத்துங்க…நாங்க செக்கின் செய்திட்டு வாறம்.” நாதன் இறங்க, தானும் சேர்ந்து கொண்டான், வேந்தன்.