மழை, அதுவும் சோவென்று கொட்டும் மழைக்கு மெத்தென்ற இருக்கைக்குள் புதைந்தபடி சுடச்சுட ஏதாவது நொறுக்குத்தீனியோடு ஒரு புத்தகம் வாசித்தால்! படம் பார்த்தால்! ஏன், மிகப்பிடித்த பாடல்களைக் கேட்டால்!
இதையெல்லாமே இவர்கள் வீட்டு இளையவர்கள் செய்ய, “இப்பிடிக் கொட்டுற மழையில நனைஞ்சு கொண்டு டியூசனுக்கு, பள்ளிக்கு எண்டு போயிட்டு, வீட்டுக்கு இறுக்கி சைக்கிள் மிதிக்கேக்க இருக்கிற சுகம் உதுகளில எல்லாம் கிடைக்குமா என்ன?” ஏங்கிப் போவார், கவியின் அன்னை சுகுணா. கூடவே கைகோர்த்து ஏக்கமோட ஊர்க்கதைகளை ஆரம்பித்துவிடுவார், மலர்.
இந்த மாலைப்பொழுது, யாருக்குமே அப்படியெந்த நினைவுகளையும் கொண்டுவரவில்லை. மாறாக, வாகனத்தில் சடசடத்துத் தெறித்த மழை சற்றே அச்சம் உண்டுபண்ணியது. முன் கண்ணாடியிலும் பின் கண்ணாடியிலும் சரக்சரக்கென்று மின்னலாக நகர்ந்துகொண்டிருந்த வைப்பர் சோடிகள் கூடச் சற்றே பயத்தையூட்டின.
“கொஞ்சம் பார்த்துப் போங்க தம்பி!” சுகுணா சொல்ல, முறுவலித்தவன், “ஒண்ணும் யோசிக்க வேணாம் ஆன்ட்டி, ரிலாக்ஸ்சா இருங்க!” சமாதானமாகச் சொல்லிவிட்டு, “பார்க்கில இருக்கேக்க நல்லகாலம் மழை பெய்யேல்ல!” என்றான், நிம்மதியோடு.
“அதென்டா சரிதான் தம்பி, சேறும் சகதியுமா இருந்திருக்கும்.” என்றுவிட்டுப் பின்னால் பார்த்த நாதன், “இவ்வளவு பெரிய பயணம் வெளிக்கிட்டாச்சு, இதுக்கெல்லாமா யோசிக்கிறது அண்ணி?” என்றார், தமையன் மனைவியிடம்.
“அதுக்கில்ல, முழுக்குடும்பமும் போறம்; கொஞ்சம் கவனமா இருக்கலாம்.” சுருதி குறைந்திருந்தாலும் சொன்னார், சுகுணா.
“நீங்க சொல்லுறது சரிதான் ஆன்ட்டி, என்ர குடும்பத்தோட போகேக்க எப்பிடி இருப்பனோ அப்பிடித்தான் இருக்கிறன்; இந்த ரெண்டு கிழமைகளுக்கு எதுக்கும் யோசியாம பயணத்தச் சந்தோசமா அனுபவியுங்க!” என்றவன் பார்வை, மின்னலாகப் பாய்ந்து, கைபேசியில் கவனமாக இருப்பவளைத் தொட்டு, சடக்கென்று நிமிர்ந்தவளின் பார்வையில் சிக்கி விட்டே திரும்பியது. அதுவும், ‘சந்தோசமாக அனுபவியுங்க எண்டு சொல்லி எனக்குத்தான் கடிக்கிறான்.’ என்ற எண்ணத்தோடு உதடுகளைச் சுழித்துப் பழிப்புக் காட்டியதையும் பார்த்துவிட்டே!
வேந்தன் அப்படிச் சொன்னபிறகு எதைச் சொல்வது? ‘பயணமே இப்பத்தான் தொடங்கியிருக்கு, இப்பிடி எவ்வளவப் பார்க்க வேணும்!’ என்ற மலைப்போடு, காலையிலிருந்து அலைந்த அலுப்புச் சிறிதுமின்றி கையிலிருக்கும் டேபில் ‘சப்வே’யில் ஆழ்ந்திருந்த கவின் தலையில் பாசமாக வருடிக்கொண்டே, புகை படிந்த ஓவியமாகக் கடக்கும் வெளிப்புறத்தை நோட்டமிட்டவண்ணம் அமர்ந்திருந்தார், சுகுணா.
கவி, ஆரூரன் தாம் எடுத்த புகைப்படங்கள் வீடியோ என்றிருக்க, அப்பப்போ அவர்களோடு இணைந்திருந்தாலும் இலக்கியாவின் பார்வை கள்ளத்தனமாக அவன் முகம் நோக்கிச் சென்று வந்து கொண்டிருந்தது. வாழ்க ரியர் வியூ மிரரே!
சின்னவர்களோடிணைந்து ரதி, அஜி அப்படியே உறங்கத் தொடங்கியிருந்தார்கள்.
நாதன் வேந்தனோடு கதைத்துக்கொண்டுவர அப்பப்போ தானும் பங்கெடுத்துக் கொண்டான், மாறன்.
“தம்பி ஆட்கள் இங்க வந்து கன காலமோ?” அவன் பற்றி அறிதலைத் தொடர்ந்தார் நாதன்.
“ஓம் அங்கிள், தாத்தா காலத்தில வந்தது. அப்பா ஆக்கள் கனடா, அம்மாவே சான்ஸ்பிரான்ஸ்சிஸ்கோ. நான் பிறந்து வளர்ந்தது படிச்சதெல்லாம் அங்கதான், இப்ப வேலைக்காக இங்க வந்திருக்கிறன்.”
“அக்கா தங்கச்சிகள்.” மாறன் தான் கேட்டான்.
“ரெண்டு அக்காக்கள், கலியாணம் செய்து சான்ஸ்பிரான்ஸ்சிஸ்கோல இருக்கினம்.”
“சரி சரி…” இப்படி, அவன் பற்றிய கதைகளுக்கு இலக்கியாவின் செவிகள் எலிக்காதுகளாகிச் செவிமடுத்து நின்றன.
அப்படியே அவர்கள் பயணம் குறித்துக் கதைக்கத் தொடங்க, “பச்” மீண்டும் கைபேசிக்குத் தாவியது அவள் கவனம். காலையில் அப்படிக் கதைத்துவிட்டதற்கு மன்னிப்போடு குறுஞ்செய்தி போட்டால் என்ன என்றளவு யோசித்துவிட்டு, பட்டென்று கைவிட்டும்விட்டாள்.


