ரோசி கஜனின் இயற்கை – 14 -2

கிட்டத்தட்ட இரு மணித்தியால ஓட்டம் எப்படிப் போனதென்று தெரியாது. “இதுதான் ‘ரெட் இன் ஹோட்டல்’ ” சொல்லிக்கொண்டே,  அவ்விடுதி முன் வாயிலுக்கருகிலிருந்த நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தியவன், “எதுக்கும் நாம முதல் போய்ப்  பார்த்திட்டு இவையல இறங்கச் சொல்லுவமே அங்கிள்!” என்றான், யோசனையோடு.

“ஏன் தம்பி?” என்ற நாதன், “ஓ! உங்களுக்குப் பெருசாத் திருப்தி இல்ல எண்டு சொன்னனீங்க என்ன?” என்றார் உடனே.

“ம்ம் …நீங்க பே பண்ணியாச்சா?” 

“ஓம் தம்பி, நாயகராக்கும் இதுக்கும் புக் பண்ணேக்கயே குடுத்தாச்சு; மற்றதுகளுக்கு நாம செக்கின் செய்யேக்கத்தான் குடுக்க வேணும்.” என்றவர், “ரெண்டு இரவுக்கு மூன்று குயின்ஸ் பெட் அறைகள் அறுநூற்றிச் சொச்சம் எண்டு நினைக்கிறன். இங்க கிட்டத்தில சரியான காசு! இந்த ஹோட்டலில கொஞ்சம் பரவாயில்ல.”

“அதுதான்…கொஞ்சம் தள்ளியும் போட்டிருக்கலாம் அங்கிள்; பரவாயில்ல வாங்க முதல் போய் அறையப் பார்த்திட்டு வருவம்.” இறங்கியவன், ஒரே தாவலாகப்  போர்ட்டிகோவில் சென்று நின்று கொண்டான். அதற்கிடையில் மழை கணிசமாகவே தழுவிவிட்டிருந்தது. இருக்கரத்தாலும் மாறி மாறி நீரை வழித்துவிட்டவன் பார்வை வாகனத்தின் கடைசிப்பகுதிக்குச் சென்றுவிட்டு அவசரமாகத் திரும்பியது. அவனையே பார்த்துக்கொண்டிருந்த இலக்கியா, “அண்ணா நானும் வாறன்.” என்று எழுந்த மாறனோடு தானும் எழுந்தாள், “சித்தப்பா என்னால இனி முடியாது, உடனே வோஷ் ரூம் போகோணும்.” என்றபடி.

“சரி வா.” என்றுவிட்டு அவன் செல்ல, பின்னால் ஓடினாள், இவள்.

“வானில இருங்க எண்டு சொன்னன் மா.” வேந்தன் இதைத்தான் சொல்ல வர, முந்திக்கொண்டார் நாதன்.

“எனக்கு வோஷ் ரூம் போகோணும் சித்தப்பா.” என்றவள் அவர்களை முந்திச் சென்று வரவேற்பிலிருந்த பெண்ணிடம் கேட்டு அங்கு அருகிலேயே இருந்த கழிப்பறைக்குள் நுழைய முயன்றவள், “அவ்வளவு அவசரம் எண்டா இடையில சொல்லி இருக்கலாமே!” வேந்தன் குரல் கேட்க, நின்று திரும்பியிருந்தாள்.

அவனோ, நாதனிடம் சொல்லிக்கொண்டு நின்று இவள் ஆர்வத்தில் தண்ணி தெளித்திருந்தான்.

“செக்கின் செய்யவா?” விபரம் கேட்ட அப்பெண்ணிடம், “அதுக்கு முதல் ரூம ஒருதரம் பார்க்கலாமா? சின்னவே இருக்கினம், நொன் ஸ்மோக்கிங் ரூம் தானே?” ஆரம்பித்தான் வேந்தன்.

பதிவு செய்த விபரம் பார்த்துவிட்டு, “ஓம்,  மூண்டுமே இங்க கீழ இப்பிடியே போனா கடைசியில் அடுத்தடுத்து இருக்கு.” என்றவள், “செக்கின் செய்துவிட்டே பாருங்க.” என்றாள்.

“ஏன் கீழ, மேல ரூம் இல்லையா?” அவன் அதிருப்தியோடு கேட்க, “இல்ல இவே கேட்டமாதிரி இதுதான் …” இழுத்தாளவள்.

“பிறகென்ன வேந்தன், செக்கின் செய்வம்; இந்த மழைக்க எல்லாரும் நல்லா களைச்சும் போய்ட்டினம்.” என்றான், மாறன். 

கழிப்பறையிலிருந்து வந்த இலக்கியாவோ, “நாதன் சித்தப்பா வோஷ் ரூம் உவக், அப்ப ரூம் எப்பிடி இருக்குமோ!” நுனிக்காலில் நின்று அவள் அபிநயத்த விதத்தில் நாதன் முகத்தில் கோபம்!

“ரோட் ட்ரிப் வெளிக்கிட்ட ஆட்கள் கதைக்கிற கதையோ இது?” அடிக்குரலில் சொல்லவும் செய்தார்.

வேந்தன் முன்னால் திட்டுவாங்கி முகம் கன்றிவிட்டது, அவளுக்கு. “என்னவாவது செய்யுங்க!” முணுமுணுப்போடு  பின்னால் நகர்ந்திட்டாள்.

அதற்குள் யாரையோ இருக்கிறாரா என்று விசாரித்தான் வேந்தன். 

“அவர் வர ஒரு மணித்தியாலமாகும், வெளியில போயிருக்கிறார்.” அப்பெண் சொல்ல, அவரின் இலக்கம் கேட்டு கைபேசியில் அழைத்துக் கதைத்துவிட்டு வைத்தவன், “இது செயின் ஹோட்டல்ஸ் தானே அங்கிள், இந்த ஹோட்டலைப் பொறுப்பாகப் பார்க்கிறவரை எனக்குத் தெரியும்.” என்றுவிட்டு அப் பெண்ணிடம் திரும்ப, அவளுக்கு அழைத்துச் சொல்லியிருந்தான், அந்த மனிதன். 

“சரி நீங்க போய்ப் பாருங்க.” மூன்று அறைகளின் திறப்பையும் எடுத்துக் கொடுத்தாள் அவள்.

சென்று, முதலிருந்த அறையைத் திறந்து உள்ளிட்ட வேகத்தில் வெளிப்பட்டுவிட்டான் மாறன், முகச் சுழிப்போடு!

“என்னண்ணா இப்பிடி மணக்குது? சின்ன ஆக்களோட எப்பிடி? சத்தி மணமோ இப்படிப் புளிச்சு மணக்குது!” அவன் சொன்னதைக் கேட்ட இலக்கியா உள்ளே செல்லவேயில்லை. மூன்று அறைகளையும் பார்த்த நாதனுக்கு வேந்தன் சொன்னதிலுள்ள உண்மை புரிந்தாலும், ‘இப்ப என்ன செய்யிறது? இப்பிடித்தான் இந்த ரெண்டு கிழமையும் போகப் போகுதோ!’ நன்றாகவே குழம்பிப் போனார். 

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock