அவர்கள் விடைபெற்று நகர, “அங்கிள், ஆரூரன் நீங்க எல்லாம் இங்க கீழ எங்கட வோஷ் ரூம் பாவிக்கலாம்.” மீண்டும் சொன்னான் வேந்தன்.
“இல்ல இல்ல… தேவையில்ல.” மாறன்.
“இதில என்ன இருக்கு? இவ்வளவு பேருக்கும் ரெண்டு வோஷ் ரூம் காணாது தானே? நீங்க வந்து பாவியுங்க!” சொல்லிக்கொண்டே வரவேற்புக் கவுண்டருக்குள் நுழைந்து தானே ஒரு காரட்டை எடுத்து, “இது எங்கட ரூம் கார்ட்…வச்சிருங்க. இந்தப் பக்கமாப் போனா கடைசியாக இந்த பில்டிங்குக்குப் பின்னால தனியா இருக்கிறதுதான் இடம்.” என்றவனையும் மதியையும் மாறி மாறி எல்லோருமே பார்த்தார்கள்.
என்னதான் நண்பன் என்றாலும் உரிமையாளன் தங்கிற இடத்தைப் பாவிக்கச் சொன்னால்?
மதியின் உதடுகளில் சிரிப்பு நெரிந்தது. ‘டோய் வேந்தன் நீயாடா இது?! கமுக்கமா என்ன எல்லாம் செய்யிற? இருக்கடா உனக்கு!’ மனதுள் சொல்லிக்கொண்டாலும், “ஒரு பிரச்சனையும் இல்ல… நீங்க யார் வேணும் எண்டாலும் வந்து பாவிக்கலாம். ரெண்டு வோஷ் ரூம்ஸ் இருக்கிறதால எங்களுக்கு இடைஞ்சல் எண்டெல்லாம் நினைக்கவும் தேவையில்லை. உடுப்புகள் தோய்க்கிறது எண்டாலும் வசதி இருக்கு.” என்றான்.
“நன்றி தம்பி நன்றி! வேந்தனுக்குத்தான் நன்றி சொல்ல வேணும். என்னதான் வெளிக்கிட்டுட்டாலும் முழுக்குடும்பமாகப் போறமே பத்திரமாய்ப் போக வேணும் எண்டு அடிமனசில ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. தம்பி கூட வந்ததால அது குறைஞ்சிருக்கு!” மனசிலிருந்து சொன்னார் இலக்கியாவின் அன்னை.
“ஒண்ணுக்கும் யோசியாமல் பயணத்தைச் சந்தோசமாக என்ஜோய் பண்ணுங்க ஆன்ட்டி!” வேந்தன். மீண்டும் வம்படியாக இலக்கியாவை உரசி மீண்டது அவன் பார்வை. அவள் முகம் கடுகடுவென்றானது.
முகமாற்றத்தை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கும் பொருட்டு கைப்பையைக் குடைந்தபடி எல்லோரையும் படியேறவிட்டுக் கடைசியாகப் படியேறத் தொடங்கினாள்.
மறுநாள் காலை, இவர்களுக்காகவே விடிந்தது போலிருந்தது. இரவிரவிரவாகக் கொட்டித் தீர்த்த வருணன் ஓய்வெடுத்திருக்க, ஆதவன் உபயத்தில் மஞ்சள் ஆடையில் தகதகத்தது, நீல வானம்.
காலை ஏழரைக்கு முதலே தயாராகி, “இங்கயே சாப்பிட்டுப்போட்டுப் போயிருவம், கரைச்சல் இல்ல.” என்ற முடிவில் உணவகம் செல்கையில், வரவேற்பில், கோப்பிக் கோப்பையுடன் புத்துணர்வோடு அமர்ந்திருந்த வேந்தனைச் கண்டார்கள்.
இவர்களைக் கண்டதும், மலர்வோடு வரிசையாக வந்த காலைவணக்கத்தை ஏற்றுக்கொண்டே எழுந்து, “ஹாய் அங்கிள்!” ஓடிவந்த கவினை, “குட் மோர்னிங் மை பாய்!” தூக்கிக்கொண்டவன், பொதுவாகக் கதைத்தபடி சேர்ந்து நடந்தாலும் ஓரப்பார்வை இலக்கியாவில் தான்.
அவளோ, கைபேசியைத் தட்டியபடி வந்து கொண்டிருந்தாள். பார்க்க மாட்டாளென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இரவு அவள் அனுப்பியிருந்த ‘சொறி’ களுக்கு எந்தவிதமான பதிலும் அனுப்பவில்லை என்ற கோபமிராது போகுமா என்ன?
மாறன், ஆரூரன், நாதன் மூவருமே கீழே அவர்களின் குளியலறைக்குத்தான் சென்று வந்தார்கள்.
“அது ஒரு சின்ன வீடு; மூன்று அறைகள், ரெண்டு வோஷ் ரூம்ஸ், குசினி, வரவேற்பறை எண்டு இருக்கு.” என்றும் சொல்லியிருந்தார்கள்.
“சின்ன வயசில இருந்து மதியும் தானும் ஒண்டாப் படிச்சவையாம். நல்ல பிரெண்ஸாம். படிக்கிற நேரம் லீவு எண்டால் இவையளிட் வேலை செய்யிறவராம் வேந்தன்.” என்றெல்லாம் கதைத்துக் கொண்டார்கள்.
ரதியும் கவியும் மாறனுமாகச் சென்று உடுப்புகளை மெஷினில் போட்டு எடுத்து வந்திருந்தார்கள்.
இலக்கியாவோ, அறைக்குள் நுழைந்த கையோடு ஒரு ‘sorry’ தட்டி விட்டிருந்தாள்.. அங்கிருந்து ஒரு சத்தமும் இல்லை. பார்த்துவிட்டான் என்றது, நீலநிறத்தில் தெரிந்த சரிகள்.
ஏனோ அவன் பதில் தரவில்லையென்றதும் அமைதியாகவும் இருக்கமுடியவில்லை. “நான் முதல்…” குளியலறைக்குள் புகுந்து கொண்டவள், வெளியே வரமுதல் இன்னும் இருதடவைகள் ‘sorry’ அனுப்பிவிட்டிருந்தாள்.
‘ம்க்கும்! கல்லுளிமங்கன் போடா டேய்’ அவன் பதில் தராத எரிச்சலில் யாரோடும் கதைக்கவும் பிடிக்கவில்லை. “எனக்குச் சரியா நித்திர வருது.” ஓரமாகப் போட்டிருந்த ஒற்றை மடக்குக் கட்டிலில் சுருண்டு விட்டாள்.
அந்த எரிச்சல், இப்போது, அவன் மற்றவர்களோடு கலகலப்பாகக் கதைப்பதில் இன்னும் அதிகரித்தது. இருந்தாலும் அவனைப் பார்க்கவில்லை, அவள்.
இளையவர்கள் தமக்குத் தேவையானதை தாமே வாங்கிக் கொள்ளவதாகத்தான் பேச்சு! அந்த வேலையை கவி கையிலெடுத்திருந்தாள். எப்போதும் ஆர்வமாகக் கலந்தாலோசிக்கும் இலக்கியா அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு, பெரிய தமக்கையோடு சேர்ந்து கொண்ட ஆரூரன், யார் யாருக்கு என்ன வேண்டுமென்று மெனு கார்ட் பார்த்துக் கதைத்துக்கொள்ள, மாறனும் நாதனும் தமக்கானதை வாங்கிக்கொள்ள எழுந்தார்கள்.
கவினைச் சிறுவர் ஆசமொன்றில் அமர்த்திவிட்டு அங்குதான் நின்றிருந்தான், வேந்தன்.
அப்போது காலைவணக்கத்தோடு இவர்களை அணுகினான், மதி. பின்னால் வந்த இருவர் இரு பெரிய தட்டுகளை வைத்துவிட்டுச் சற்றே ஒதுங்கி நின்றார்கள்.
நாதன் கேள்வியாகப் பார்க்க, “என்ன இதெல்லாம்.” முன்னால் நின்ற வேந்தனிடம் கேட்டான், மாறன்.
“இது எங்கட சார்பாக!” முறுவலோடு பதில் சொன்னான், மதி.
“ஆர் ஆருக்குக் குடிக்க என்ன வேணுமெண்டு சொன்னால் கொண்டு வருவீனம். இதெல்லாம் வேந்தன் சொன்னதன் படிதான் கொண்டு வந்திருக்கிறம்.” அதே முறுவலோடு தொடர்ந்தான்.
அவன் இப்படிச் சொல்ல, பெரியவர் சிறியவர் எல்லாருமே ஒருவர் ஒருவரைப் பார்க்க இலக்கியாவின் பார்வை வேந்தனிடம் சென்றது. இயல்பாக அவளைப்பார்த்துவிட்டுப் பார்வையை விலக்கிக் கொண்டானவன்.
‘பெரிய உபசரிப்பு ஆருக்கு வேணும்?’ அவள் மனம் முணுமுணுப்பில் இறங்கியிருந்தது.
“ப்ரேக்பாஸ்ட ஃப்ரியா என்ன? நாங்க கவனிக்கேல்லையே!” எப்படிக் கவனிக்காது விட்டோமென்ற கணக்கில் சொன்னான், ஆரூரன்.
“இல்ல, இது உங்களுக்கு ஸ்பெஷல்…எங்கட வேந்தனோட வந்ததால!” கொடுப்புக்குள் நகைத்தான், மதி.
“வேந்தன் அண்ணா நீங்க இங்க வேலைதானே செய்யிறீங்க? ஏதோ யாழ் ட்ராவல்ஸ் உங்கட போல கவனிப்புப் பலமா இருக்கு!” கண்சிமிட்டியபடி கேட்டான் ஆரூரன்.
அதற்கு, அவன் முதுகில் தட்டிய வேந்தன், “அங்கிள்! எங்கட இடத்தில நீங்க தங்கி இருக்கிற சந்தோசத்தில நாங்க தாறது. இதுக்கு இவ்வளவு யோசிக்கத் தேவையே இல்ல. சாப்பிட்டுப் பாருங்க, நல்லா இருக்கும்.” நாதனைப் பார்த்துச் சொன்னான்.
“இல்ல தம்பி…எண்டாலும் என்ன இதெல்லாம்?”
“அங்கிள் என்ன நீங்க? ரெண்டு கிழமைகள் உங்களோடதானே நான் சாப்பிடப் போறன். வேணாமெண்டு தனிய வாங்கவா போறன்? இல்லையே! சாப்பிடுங்க. நானும் நீங்க வருமட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தன்.” என்றவன், “இருந்து சாப்பிடுங்க அங்கிள்.” நாதனைப் பிடித்து மெல்ல இருத்திவிட்டான்.
“இன்னும் ஏதாவது தேவையெண்டா சொல்லுங்க…மதி நீயும் வாவன்.” என்று, அவ்வளவு இயல்பாக மதியை அழைத்ததில் அவர்களுக்கு வியப்பேதும் இல்லை. அவர்கள்தான் நெருங்கிய நண்பர்கள் என்றிருந்தார்களே!
“நீங்க சாப்பிடுங்க, நான் கொஞ்சத்தில சாப்பிடுறன்.” என்ற மதி, “ட்ரிங்க்ஸ் நாங்க சாப்பிட்டுட்டு வாங்கிறம்.” என்று மாறன் சொன்னதைக் கேட்காது ஒவ்வொருவருக்கும் என்ன என்ன குடிக்க வேண்டுமென்று கேட்டு, பரிமாறுபவர்களிடம் சொல்லிவிட்டு, “என்ன தேவையெண்டாலும் கேளுங்க!” பார்வையால் வேந்தனிடம் விடைபெற்றுக்கொண்டு நகர்ந்தான்.
பேக்கன், முட்டை மற்றும் சீஸ் சாண்ட்விச், மக் மஃபின், பான்கேக், உலர் திராட்சை கலந்த பாண், வாஃப்ஃபிள், வாட்டிய பாண் என்று, எல்லோருக்கும் போதும் போதுமென்றளவில் வந்திருந்தது காலையுணவு.
எல்லாரும் தமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ள, ” நாங்க என்ன சாப்பிடுறம் எண்டு கவனமாப் பார்த்திருக்கிறீங்க.” என்றபடி, வாட்டிய பாணைத் தனக்காக எடுத்தான், மாறன். சின்னச் சிரிப்பு வேந்தனிடமிருந்து. இலக்கியா இன்னும் எதையும் எடுக்காததைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான்.
“இலக்கி எடுத்துச் சாப்பிடம்மா!” தாய் சொல்ல, “பால் மட்டும்.” என்று கவின் அடம்பிடித்தது போலவே, “எனக்கு ரூமில குடிச்ச கஃபேயே போதும், பிறகு கொஞ்சம் லேட்டா பார்ப்பம்.” ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.
தன்னிலுள்ள கோபத்தில் சாப்பாடு வேண்டாம் என்கிறாளோ என்ற சந்தேகம் வேந்தனுக்கு. அதுவே, திரும்பவும் ஒருதரம், “என்னவாவது சாப்பிடம்மா!” என்று சுகுணா சொல்கையில், “எனக்கு உண்மையா பசிக்கேல்லம்மா; போகேக்க அங்க ஏதாவது பார்ப்பம்.” என்று, அவளுதடுகள் வார்த்தைகளைத் தட்ட, வெட்டும் பார்வையால் தன்னைத் தொட்ட போதே உறுதி செய்து கொண்டான்.
அவளுக்கோ அதிலமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. “நான் வெளில நிக்கிறன் சாப்பிட்டுட்டு வாங்க.” என்று நகர்ந்தவள், கைபேசியின் சிணுக்கத்தில் தயங்கி யாரென்று பார்த்தாள். சரேலென்று திரும்பியுமிருந்தாள்.
பார்ப்பாளென்று எதிர்பார்த்திருந்தவன் விழிகள் மின்னலாகச் சிமிட்டியிருந்தன. மறுநொடியே, எதுவுமறியாத பாவனையில் திரும்பிவிட்டான். இவள்தான் முகம் சூடேற நின்றிருந்தாள்.
“பெரிய லெவல் அடிக்காமல் வந்து இதைச் சாப்பிட்டுப்பார், உண்மையாவே சூப்பரா இருக்கு!” ‘எக் அண்ட் சீஸ் சாண்ட்விச்’சை வாயினுள் திணித்தபடி அழைத்தாள், கவி.
கைபேசியிலோ, ‘சொறி சொறி…ஆயிரம் தடவைகள் சொறி! வந்திருந்து சாப்பிடப்பா’ என்றிருந்தான் வேந்தன். மெல்லத் திரும்பி வந்தவள், “இவ்வளவுக்குக் கெஞ்சிறீங்களே, வாங்கித் தந்தவர் வேற பாத்துக்கொண்டிருக்கிறார் என்றதுக்காகச் சாப்பிடுறன்.” உதடுகளில் ஒளிந்துகொண்ட முறுவலோடு அவனை மின்னலாகப் பார்த்துவிட்டு, தட்டில் ‘மக் மஃபினை’ எடுத்துக்கொண்டமர்ந்தாள்.
வேந்தனும் அதையேதான் உண்டு கொண்டிருந்தான்.