” நியூயோர்க் டவுன்டவுன் சைட் சீயிங் பஸ் டூர் எடுத்து ‘வோல் ஸ்ட்ரீட்’ல இறங்கி, ‘ஸ்டாச்சு ஒஃப் லிபர்ட்டி’ போயிட்டுத் திரும்ப பஸ் எடுத்து எம் அண்ட் எம் வேர்ல்ட் ஸ்டொப். பிறகு லன்ச், சொப்பிங். இண்டையான் பிளான் இதுதானே அங்கிள்? நேற்றுக் கதைச்சதில எந்த மாற்றமுமில்லையே!” எல்லாரும் ஏறிய பின்னரும் மதியோடு நின்று கதைத்துவிட்டு ஓடிவந்து சாரதியாசனத்தில் ஏறியமர்ந்தபடி கேட்டான், வேந்தன்.
“ஒரு மாற்றமும் இல்ல. சொப்பிங் எண்டு மட்டும் கனக்க நேரம் மினக்கடாமல் இருந்தாச் சரிதான்.” முன்புறம் அமர்ந்திருந்த நாதன் முறுவலோடு திரும்பிப் பார்த்தார்.
“ஆங்! அதில கைவைக்க வேணாம்.” பின்புறமிருந்து ஒரேகுரலாகச் சொன்னார்கள்.
“இப்பிடிப் போற இடங்களில வாங்க வேணும் எண்டே நாங்க பெரிசா உடுப்புகள் கொண்டு வரேல்ல நாதன் சித்தப்பா.” கவி சொல்ல, “அப்ப நமக்குப் பின்னேரம் இருக்கு எண்டு சொல்லுங்க. தூங்க வசதியான இடம் கிடைச்சா நல்லம் அண்ணா” கிண்டலாகச் சொன்னான், மாறன்.
“சித்தப்பா!” எச்சரிக்கை, இளையவர்களிடமிருந்து!
“என்ன வாங்கினாலும் வாகனத்தில வைக்கிற அளவுக்கு வாங்கினால் சரிதான், என்ன அங்கிள்.” சேர்ந்துகொண்டான், வேந்தன்.
“அப்பிடி வைக்க இடமில்ல எண்ட நிலை வரேக்க உங்கட பாக்கை வெளில அனுப்பிப் போட்டு அந்த இடத்திலும் வைப்பம்.” கவி சொல்ல, “நல்ல காலம் என்னை வெளில அனுப்புறது எண்டு சொல்லேல்ல!” சொன்னவன் பார்வை, அமைதியாக அமர்ந்திருக்கும் இலக்கியாவைத் தொட்டு, உதடுகளில் நெளிந்த முறுவலில் தரித்து நின்றுவிட்டுத் திரும்பியது.
“அதும் தேவை வந்தால் செய்வம். இங்க உங்களைத் தவிர்த்து எட்டு ட்ரைவர்ஸ் இருக்கீனம் சரியோ! இப்பத்தான் ஓடத் தொடங்கின ஆரூரன விட்டாலும் ஏழு!”
“ஹா…ஹா… அப்ப வாகனம் மட்டும் எடுத்திருக்க வேண்டியதுதானே?”
“அப்பிடி எடுத்திருந்தா உங்களுக்கு வேலை? அதான் பாவமெண்டு ட்ரைவரோட எடுத்தம்.” கவிக்கு அவனோடு வாயடிப்பதில் சுவாரசியம் பிறந்திருந்தது.
“ஓ! நல்ல எண்ணம் தான், தாங்க்யூ தாங்க்யூ!”
“அதோட… எங்களோட சேர்ந்து ஊர் சுத்துறது எண்டா என்ன சும்மா எண்டு நினைச்சீங்களா?”
“அது எண்டா சரிதான், இந்த ரெண்டு கிழமைகளுக்கும் நான்தான் உங்களுக்கு பே பண்ண வேணும்; எவ்வளவு குடுத்தாலும் தகும்!” மீண்டும் அவன் பார்வை பின்னால் பாய்ந்து, இலக்கியாவின் முகத்தைத் தொட்டுவிட்டு, அவள் விழிகளில் வழிந்த நேசத்தில் நனைந்தபடி திரும்புகையில், வம்பிழுக்கும் நோக்கில் குறுஞ்சிரிப்போடு அமர்ந்திருந்த கவியையும் சந்தித்துத் திரும்பியது.
“சும்மா இரு கவி.” இடையிட்டார், சுகுணா.
“பகிடிக்குத் தானேம்மா! அவருக்கு விளங்காதா என்ன? என்ன சொல்லுறீங்க வேந்தன்.” கவிதான்.
“விளங்குது விளங்குது!”
இப்படியே, உற்சாகத்தோடு வாயடித்தபடி கலகலத்தவர்களைத் தாங்கிய வண்ணம் நியூயோர்க்நகர் நோக்கி விரைந்தது, வாகனம்.
இன்று காலை மனச்சுணக்கத்தோடு புலர்ந்திருந்தாலும் மிகுந்த மலர்வோடு இருந்தார்கள், வேந்தனும் இலக்கியாவும். இருந்தாலும், அவன் பார்வை தேவையற்று அவளை நாட முனையவில்லை. இன்னொருமுறை ‘என் மகிழ்வுக்கு இடையூறாக வந்துவிடாதே!’ எனச் சொல்லும் சந்தர்ப்பத்தை வழங்காதிருக்க வேண்டுமென்று கங்கணமே பூண்டிருந்தானவன்.
அது இலக்கியாவுக்கும் விளங்கியியேருந்தது. யோசித்துப் பார்க்கையில் அதுவும் நல்லதென்றே தோன்றிட்டு.
டைம்ஸ் ஸ்கொயரின் கிழக்குப்பகுதியிலிருந்தே டவுன் பஸ் டூர் ஆரம்பமாகின்றது. வாகனத்தை நிறுத்திவிட்டு, அவ்விடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
நியுயோர்க் நகரமென்றாலே உலகில் உயர்ந்த கட்டிடங்களைத் தனதாக்கிக்கொண்ட நகரமென்பதை யாவருமே அறிந்திருப்போம். இணையவெளிகளில், திரைப்படங்களில் பார்த்தே வியப்பை எய்திய சூழல் நேரில் எப்படியிருக்கும்!?
ஆச்சரியம் என்றதை மீறிய பெரும் பிரமிப்பை மனதுள் நிரப்பி, மூச்செடுப்பதை சற்றே நிறுத்தி, பார்வையை சுழற்றிவிட்டு ‘உப்’ என்று மகிழ்வோடு மூச்சுக்காற்றை வெளிவிடும் வகையில் அமைந்திருந்து, அச்சூழல்.
அக்கட்டிடங்களின் கீழே நின்று அண்ணாந்து பார்க்கையில் எழும் வியப்புணர்வை இதயத்துள் பொத்தி வைக்கும் பாக்கியம் கிட்டாதா என்றேங்கி நின்றவர்கள், இன்று அதை அனுபவித்தார்கள். நடக்க நினைத்தாலும் பாதங்கள் ஊர்ந்தன; அந்தளவுக்கு, விழிகள் மனதின் பிடியில் பரபரவென்று அலைந்து கொண்டிருந்தன! அப்பகுதியால் கடந்து செல்லும் ஒவ்வொரு உல்லாசப் பயணிகளுக்குமே இதே நிலைதான்.
” க்ரொஸ்ரோட்ஸ் ஒஃப் த வேல்ட், சென்டர் ஒஃப் த யுனிவேர்ஸ், ஹார்ட் ஒஃப் த கிரேட் வைட் வே, ஹார்ட் ஒஃப் த வேல்ட் எண்டு, எத்தின பேர்கள் இந்த டைம்ஸ் ஸ்கொயருக்கு இல்லையா கவிக்கா?” வினவினாள், கவியோடு நடந்த ராஜியின் மகள்.
“ஓம்! அதுமட்டும் இல்ல, உலகத்தில அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வந்து போற இடமும் இதுதான்.” சொன்னபடி நடந்தாள், கவி.
“வருசத்துக்கு ஐம்பது மில்லியனுக்கும் மேல, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 330000 பேர்கள் இந்த இடங்களால போவீனமாம், இண்டைக்கு அதில நாமளும்!” முன்னால் சென்றுகொண்டிருந்த ஆரூரன் குரலும் உரையாடலுள் நுழைந்தது.
“இரவில அவ்வளவு வடிவா இருக்கும், பளிச்சிடுற நியான் வெளிச்சத்தில சொர்க்கலோகம் போல இருக்கும். நாம திரும்பிப் போகேக்க இந்த வழியால தானே வருவம், அப்பப் பார்க்கலாம்.” ஆவல் பொங்கச் சொன்னாள், இலக்கியா.
“அப்ப, இரவு வரைக்கும் இங்க எண்டு முடிவே செய்தாச்சா?” நின்று கேட்டான் வேந்தன், கேலியாக. என்னதான் என்றாலும் இடையிடை அவளோடு உரையாடக் கிடைத்தால் விட்டுவிடுவதா என்ன! அது தரும் உற்சாகமே தனி!
“சுற்றிப் பாக்கத்தானே வந்திருக்கிறம். இப்ப அதில உங்களுக்கு என்ன பிரச்சின?” விழிகள் சீண்டினாலும், வெடுக்கென்று கேட்டாள்.
“சுத்தி மட்டும் பார்த்தா எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. எல்லா இடமும் சுத்திப்போட்டு மனுசர் துவண்டு போய் நிக்கிற நேரத்தில மோல்களில போய் மணித்தியாலக் கணக்கில நிக்காட்டிச் சரிதான் என்ன வேந்தன்?” மாறன் சொல்ல, “அதத்தான் நானும் சொல்ல வந்தன்.” என்றான், அவன்.
“சித்தப்பா உங்கள …” பின்னால் வந்த மாறனை இடித்தாள், கவி.
“சரி சரி விடுங்க, நாம இவையளை இங்க விட்டுட்டு ஹோட்டல் போய் நாலு மணித்தியாலம் ரெஸ்ட் எடுத்திட்டு வந்து கூட்டிக்கொண்டு போகலாம்.” நகைப்போடே வேந்தன் சொல்ல, பதிலுக்கு மாறி மாறி கடிபட்டவர்கள், எதிர்ப்பட்ட மேக் டொனால்ட்ஸ் கட்டிடத்தினுள் உள்ளிட்டு, அடுத்த அரைமணித்தியாலத்தில் கஃபே, ஐஸ் என்று ஏந்திக்கொண்டு வெளியேறி நடையைத் தொடர்ந்தார்கள்.
எங்கு திரும்பினாலும் பரபரப்புடன் இருந்த நகரை இரசித்தபடியே வந்தவர்கள் புறப்படத்தயாராக இருந்த டூர் பஸ்சின் மேல்தட்டில் ஏறியமர்ந்து கொண்டார்கள்.


