அங்கிருந்த கடைகளை அலசி ஆராய்ந்து குட்டி குட்டியாக பொருட்களை வாங்கி முடிப்பதற்குள் நான்கு முறை அழைத்துவிட்டார், நாதன்.
“அண்ணா கத்துறார், இனிக்காணும் வாங்க பஸ் வரப்போகுதாம்.” மாறன் சிடுசிடுத்தபின்னரே அசைந்தார்கள், இளையவர்கள்.
“இந்த பஸ் போனால் அடுத்தில போகலாம் எல்லா நாதன் சித்தப்பா!” அவசரப்படுத்தியதில் வந்த சுணக்கத்தோடு சொன்னாள், கவி.
“அதுதானே! இப்ப விட்டால் பிறகு இதை எங்க வாங்கிறது?” இலக்கியாவும் சேர்ந்துகொண்டாள்.
“அப்பாக்கு எல்லாத்திலும் அவசரம்.” ஆரூரனும் சொல்ல, “சொல்லுவீங்கடா!” முறைத்தார் நாதன்.
“ஃபன்க்கு சித்தப்பா!” என்ற இலக்கியா, தம்மையே பார்த்து நின்ற வேந்தனிடம், “என்ன பாக்கிறீங்க?” ஒரு மாதிரிக்குரலில் கேட்டாள்.
“இல்ல, அவ்வளவு நேரம் நிண்டு என்ன வாங்கினீங்க? ஒண்டையும் காணேல்ல.” சீண்டினான், அவன்.
“நாங்க என்ன வாங்கினம் எண்டதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு? சித்தப்பா பேசாமல் அங்க நிண்டவர், இவர்தான் டிக்கட் எடுப்பம் அது இது எண்டு அவசரப்பட்டுக் கூட்டிக்கொண்டு வந்தவர்.” முறைப்போடு படபடத்தவளை, “என்ன இது இலக்கி?” கண்டித்தார், நாதன்.
சண்டைக்குப் போவதுபோலவே கதைக்கிறாளே என்றிருந்தது எல்லோருக்கும்.
அவளோ, “பச்! வெளிக்கிட்ட நாங்க என்ன எப்ப எண்டு சொல்ல மாட்டமா? இப்ப இதில வந்து நிக்கிறம் தானே? அதுக்கு இன்னும் வடிவாப் பார்த்து வாங்கியிருப்பமே!” வெடுக்கென்று முறைத்தாள், அவனை.
நெஞ்சோடு கரங்களைக் கட்டிக்கொண்டு அங்கிருந்த சுவரோடு சாய்ந்து நின்றுகொண்டிருந்த வேந்தன், “சரி, இனி ஒண்டும் சொல்லேல்ல போதுமா?” என்றான் பார்வை கூர்மையாக அவளிலிருக்க. ‘சீண்டுறாளா அல்லது உண்மையாகவே எரிச்சலோட கதைக்கிறாளா’ மனதுள் சிறு தடுமாற்றம்.
“நீங்க என்ன தம்பி…அவள் விளையாட்டுக்குச் சொல்லுறாள்.” சுகுணா சொல்ல, “அதான் தம்பி சின்னாக்களிண்ட கதைகளப் பெரிசு பண்ணாதீங்க!” என்றிருந்தார் நாதன்.
“ஹா..ஹா…” வாய்விட்டே சிரித்து விட்டான் வேந்தன். எல்லோர் முகத்திலும் முறுவல்.
“இலக்கி அக்கா இது உனக்குத் தேவையா?” ஆரூரன் சீண்ட, “சித்தப்பா நான் ஒண்ணும் சின்னப்பிள்ளையில்ல!” இலக்கியாவின் முகம் சிவந்து போயிற்று.
“வெளிக்கிட்டுக் கொஞ்சநேரத்துக்குப் பிறகு தலையிடி அது இது எண்டு சோர்ந்திருந்த பிள்ளைக்கு எல்லாம் சரியாகிட்டு என்ன!” இலக்கியாவிடம் சொல்லிவிட்டு, “இவள் இப்படித்தான் தம்பி எதையாவது சொல்லி அட்டகாசம் பண்ணிக்கொண்டிருப்பாள், காதில வாங்கிக் கொள்ளாதீங்க!” நாதன் இடையில் விடுவதாயில்லை.
“அதானே? இப்படித்தான் வீரம் கதைச்சிப்போட்டு கொட்டேஜ் போன நேரம் காத்துக்க கானோ எடுத்திட்டுப்போய் என்ன நடந்தது? இதுக்க பிளான் பண்ணினமாம் பிளான்.” நக்கலாகச் சொன்னான், மாறன்.
“சித்தப்பா…இப்ப அந்தக் கதை ஏன்?” என்ற இலக்கியாவின் பார்வை வேந்தனில். அவனும் அவளையே பார்த்திருந்தான்.
நல்ல வெயில் தான் என்றாலும் குப்பென்று வியர்த்தது, அவளுக்கு.
“அதென்ன நடந்தது அங்கிள்? எங்க?”
‘ஒன்றுமே தெரியாத பாவனையில் கேட்கிறானே!’ முறைத்த இலக்கியாவை அவன் பார்க்கவேயில்லை.
“அதேன் தம்பி கேட்கிறீங்க?” என்ற நாதன், “சித்தப்பா…” இலக்கியாவின் முறைப்பையும் மீறி, அங்கு நடந்தைச் சொல்லிவிட்டு, “நல்ல காலம்… அட! யாழ் ட்ராவல்ஸில வேலை செய்யிற பெடி ஒண்டுதான் கானோவையும் இவளையும் கொண்டுவந்து விட்டது. ஒரு தேங்க்ஸ் சொல்லக் கிடைக்கேல்ல. இதுக்க வீரம்!”
இலக்கியாவின் தலையைப் பரிவாக வருடியபடி கிண்டலாகச் சொல்ல, “பச் போங்க சித்தப்பா!” வெடுக்கென்று அப்பால் நகர்ந்தவள், வேந்தன் முகத்தைப் பார்க்கவில்லை. விழிகளும் உதடுகளும் போட்டிபோட பொங்கும் சிரிப்பை அடக்கப் பாடுபடுவானென்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
அவளை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கில் வந்து நின்றது பேருந்து. அதில் சென்று, சுதந்திரச்சிலை வரை செல்லும் படகிலேறி மேல்தளத்தில் சென்று நின்றுகொண்டார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட அப்படகின் மேல்தட்டில் சிறு சிற்றுண்டிச்சாலையுமிருந்தது. இருக்கைகளும் தாராளமாகவே போடப்பட்டிருந்தன. சென்றுவர, ஒருமணித்தியாலத்துக்கும் மேலேயாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
வெளியே பார்க்கும் வகையில் கதிரைகளை இழுத்துப்போட்டுப் பெரியவர்கள் அமர்ந்து கொள்ள, இழுபட்ட கவினொடு விலகிச் சென்றுவிட்டாள், இலக்கியா.
“கவின் கவனம் இலக்கி, கையை விட்டிர வேணாம்.” என்றபடி அமர்ந்துகொண்டான் மாறன்.
“பெரிய கடல் இலக்கிக்கா!” எட்டிப் பார்க்க முனைந்தான், கவின்.
வெயில் சுட்டெரித்தது. ” ‘கேப்’பை போடடா” என்றவள், “இது கடல் இல்ல ஆறு…ஈஸ்ட் ரிவர்.” சொல்லிக்கொடுத்தாள்.
கவினுக்கு அப்படியே தாவி எட்டிப்பார்க்கும் அவா. இலக்கியாவோடு மல்லுக்கட்டினான்.
“டோய் வாங்கோ!” கவினை அப்படியே பின்புறமாகத் தூக்கிக்கொண்டான், வேந்தன்.
“இங்க ஆரும் வால்பிடிச்சுக்கொண்டு வரத் தேவையில்லை.” சிடுசிடுத்தாள் இலக்கியா. அதேவேகத்தில், பின்னால் திரும்பிப் பார்த்தாள். இப்போது அத்தளம் முழுமையாக நிறைந்து படகும் நகரத் தொடங்கிருந்தது. அமர்ந்திருந்தவர்கள் பார்வை இவர்களை எட்டுவது சிரமம் தான். இருந்தாலும், கவியும் ஆரூரனும் இவர்களுக்கு நேரெதிரே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நின்றார்கள்.
“ஆரும் தானே வரக் கூடாது?” கவினை வசதியாகத் தூக்கிக்கொண்டு அருகில் வந்து நின்றான், வேந்தன்.
அவளால் தள்ளி நிற்க முடியவில்லை. மறுபுறமாக ஒரு சைனீஸ் சோடி கட்டிப்பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். இடித்துக்கொண்டாயினும் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டுமென்று நினைக்கையில், “அப்படி மட்டும் ஓடினா பின்னால வருவான் இந்த வேந்தன்.” கண்சிமிட்டினானவன்.
“உங்களுக்கு எத்தின தரம் சொன்னாலும் விளங்காதா?” கவினில் பார்வையிருக்க அடிக்குரலில் சீறினாள், இலக்கி.
கவினுக்கோ அவ்வளவு சந்தோசம். நெருங்கிவரும் பாலத்தைத் தொட்டுவிடும் உயரத்தில் தான் இருப்பது போன்ற பிரேமை! ஒற்றைக்கையால் வேந்தனின் கழுத்தை வளைத்திருந்தவன் பார்வை அந்தப் பாலத்திலிருக்க, மறுகையை அதை நோக்கி உயர்த்தினான்.
இலக்கியாவின் பார்வையைத் தொடர்ந்து தானும் கவினைப் பார்த்தான் வேந்தன். அவன் இவர்களை கவனிக்கவேயில்லை.
” ‘வில்லியம்ஸ்பர்க் பிரிஜ்’ ” அருகில் கதைத்துக்கொண்டார்கள். இவனோ அதையெல்லாம் பார்க்கவில்லை, இவளோடு இன்னமும் நெருங்கி நின்றுகொண்டவன், “நான் சொன்னதுக்கு நீர் பதில் சொல்லேல்ல. சொல்லும் பேசாம இருந்திருவன்.” என்றான், விழிகள் நகைக்க.
“அப்பிடி என்ன சொன்னீங்க பதில் சொல்ல!”
“ஏய்!”
“இங்க பாருங்க, மரியாதையாக் கதைக்கோணும் சரியா?”
“ஓஓ!” அதிகமாகவே வியந்தவன், “அதுக்கு முதல், கானோவையும் இந்த வீராங்கனையும் இழுத்துக்கொண்டு வந்து விட்ட ஹிரோ நான் தான் எண்டு ஏன் சொல்லேல?
“நினைப்பு…பெரிய ஹீரோ எண்டு!” வெட்டும் பார்வையோடு சொல்லிவிட்டு தாம் கடந்து கொண்டிருந்த வில்லியம்ஸ்பர்க் பிரிஜில் விழிகள் படிய, அடுத்தடுத்து ‘மென்ஹட்டன் பிரிஜ்’, ‘புரூக்ளின் பிரிஜ்’ என்று விழிகள் தாவ, “புரூக்ளின் பிரிஜ்! நாம அதால பஸ்ல வந்தம் என்ன?” தன் கைபேசியை உயர்த்திப் பிடித்து வீடியோ எடுத்தபடி அவனிடமே கேட்டாள்.
அக்கணம், அவன் மனத்தில், ‘இந்தப் பயணத்தை முழுமையாக மகிழ்வோடு அனுபவிக்க முடியவில்லை.’ அவள் சொன்ன குற்றசாட்டுத் தான். சட்டென்று நகர முயன்றான். நகரமுடியவில்லை. அவன் டீ ஷர்ட்டின் ஓரத்தை தன் முதலிரு விரல்களாலும் அழுத்தமாகவே பற்றியிருந்தாள், இலக்கியா. அவள் முகம் முறுவல், தவிப்பு எல்லாம் கலந்த கலவையாக இருந்தது. கணத்திலும் குறைவாக அவன் விழிகளோடு உரசிய பார்வை பாய்ந்து விலகினாலும் அவனால் ஒரு இஞ்சியும் விலகிச் செல்ல முடியவில்லை.
“இலக்கியா!” மீண்டும் நெருங்கி நின்றுகொண்டான்.
“இலக்கியா இல்ல, இலக்கியா அக்கா சொல்லோணும் சரியா?” அவன் முகத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து வைத்துச் சத்தமாகவே சொன்னது கவின். அதைக்கேட்ட இலக்கியாவின் முகத்தில் முறுவல். மறுநொடி, வேந்தனைச் சீண்ட வாயெடுத்தவள் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு சற்றே விலகி நின்றுகொண்டாள்.
“என்ன மூணு பேரும் தனியா நிண்டு செய்யிறீங்க?” கவி வர, ஆரூரனும் சேர்ந்து வந்தான். நெருக்கியடித்து இலக்கியாவை நல்லாவே விலத்திவிட்டு வேந்தன் அருகாமையைப் பிடித்துவிட்டார்கள்.
“நீங்க இதுதான் முதல் முறையா?” கவி கேட்க, “நான் இதோட நாலைந்து தடவைகள் வந்திட்டன். நீங்க இதுதான் முதல் முறையா?” தெரிந்தாலும் வேறென்ன செய்வது? கேட்டு வைத்தான், வேந்தன்.
“ஓம் அண்ணா.” என்ற ஆரூரன், “இதில வடிவாத் தெரியுது, அது ‘கவர்னர்ஸ் ஐலண்ட்’ என்ன அண்ணா?” நெருங்கி வரும் சிறு தீவினைக் காட்டிக் கேட்டான்.
“ஓமடா” பதில் சொன்ன கவி, “நாங்க வரவேணும் வரவேணும் எண்டு பிளான் போட்டு எல்லாரும் வளர்ந்த பிறகு போவம் எண்டு இருந்ததில பிந்திட்டு.” என்றவள், “அடுத்த முறை வந்தா ‘லிபர்ட்டி ஐலண்ட்’ மியூசியம் போக வேணும்.” என்றாள்.
“அதோட இப்பிடி நுள்ளான்களை எல்லாம் கூட்டிக்கொண்டு வரவும் கூடாது.” நெளிந்து வளைந்து வேந்தனை ஒருவழி பண்ணிய கவின் வயிற்றில் குத்தினாள்.
“இலக்கியா அக்கா!” அவன் பெரிதாகக் கத்தி, “என்ன கவின்?” என்றபடி தகப்பனையும் வரவழைத்துவிட்டான்.
“அவனை இறக்கி விடுங்க வேந்தன். இல்லாட்டி அப்பாட்ட வாங்க .” மாறன் கைநீட்ட, வேந்தனின் கழுத்தைக் காட்டிக்கொண்டே, “மாட்டன்” ஒரே பதிலாகச் சொல்லிவிட்டான், கவின்.
“இருக்கட்டும் பிரச்சினையில்ல.” வேந்தன்.
படகு நியூயோர்க் மென்ஹாட்டன் துறைமுகத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள லிபர்ட்டி ஐலண்ட் நோக்கி நகர்ந்தது.