“பிரான்ஸ் மக்களால ஐக்கிய அமெரிக்காக்குப் பரிசாக் குடுத்த சிலைதான் இது. 1886 ல இங்க நிறுவினவேயாம்.” ஆரூரனுக்குப் பதிலாகத் தகவல் சொன்னான், வேந்தன்.
“இத கூகிளில தட்டி நாங்களும் பாப்பமே!” இலக்கியாவின் குரல் அவனை மட்டுமல்ல கவி, ஆரூரனையும் அவள் புறம் திருப்பியது.
“ஏண்டி? எப்பப் பார்த்தாலும் வேந்தனோட சீறுர?” அடிக்குரலில் கேட்டாள், கவி.
“நாங்க ஏன் சீறுரம். நாங்க இப்ப தான் வாறமாம், தான் இங்கயே தான் பிறந்து வளர்ந்தவராம். எங்களுக்கு ஒண்ணும் தெரியாதெண்ட கணக்கில எல்லா சொல்லுறார்.”
“அடியேய்! ” கவி தங்கையின் கரத்தில் நுள்ளிவிட்டு, “அது…அவள் சும்மா பகிடிக்கு!” வேந்தனிடம் சமாளிப்பாகச் சொல்ல, “விளங்குது விடுங்க. சின்னப்பிள்ள, நான் பெரிசா எடுக்கேல்ல!” விழிகளால் எக்கச் சக்கமாக நகைத்தான், வேந்தன்.
ஆரூரன் வாய்விட்டே சிரித்தான். “இலக்கிக்கா பேசாமல் இராமல் வாங்கிக்கொண்டே இருக்கிற!” கடித்தவன் “அங்க பாருங்க கிட்ட வந்திட்டம்.” நெருங்கிவரும் சுதந்திரச் சிலைக்குக் கவனத்தைக் கொண்டு சென்றான்.
எதிர்ப்புறம் தெரிந்த நியூயோர்க் நகரமும் மிக அருகில் தெரிந்த சுதந்திரதேவியின் சிலையும் நீல வானமும் அதி அற்புதமான உணர்வைத் தந்தென்றால் மிகையேயில்லை. கதை பேச்சு மறந்து அனைவரும் அச்சூழலை இரசித்தார்கள். புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.
மெல்ல அவ்விடம் கடந்து நகர்ந்த படகு அருகிலிருந்த ‘எல்லிஸ் ஐலண்ட்’ வழியாக ஹட்சன் நதியில் பயணப்பட்டு நியூ ஜெர்சி, கோல்கேட் மணிக்கூண்டு வரை சென்றுவிட்டுத் திரும்பியது.
படகிலிருந்து இறங்கி மீண்டும் அதே பஸ்சில் சென்றிறங்கவும் இவர்கள் வந்த டூர் பஸ் ஒன்று வரவும் சரியாக இருந்தது. ஏறியவர்கள், எம் அண்ட் எம் வேர்ல்ட் ஸ்டொப்பில் வந்து இறங்கிக்கொண்டார்கள்.
“இதுக்கு மேல என்னாலும் முடியாது பசி பசி…” கவி ஆரம்பிக்க, இளையவர்கள் சேர்ந்துகொண்டார்.
“சைனீஸ் ஓகேயா?” கேட்டபடி கைபேசியைத் தட்டியபடி முன்னால் நடந்தான் வேந்தன். நாதனும் மாறனுமே சேர்ந்து கொண்டார்கள்.
“பசிக்கிற பசிக்கு எதுவெண்டாலும் எங்களுக்குச் சரிதான்.” கவி சொல்ல, “எனக்கும் ஒருநாளும் இல்லாமல் இண்டைக்கு பே பசி!” விசமம் கலந்த இலக்கியாவின் குரலில் வேந்தனின் தலை திரும்பியிருந்தது.
“நல்ல அலைச்சல் தானே பிள்ளைகள்… இந்தா சாப்பிடத்தான் போறம் நடவுங்க.” மகள் எங்க வாறாள் என்றறியா சுகுணா இப்படிச் சொல்ல, “அது இல்லம்மா, காலம சாப்பிட்ட சாப்பாடு எந்த மூலைக்குக் காணும் சொல்லுங்க! நாம வெளில வந்து வாங்கிச் சாப்பிட்டிருந்தா வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கலாம்.”
நாதன் நின்றுவிட்டார். “என்னம்மா இலக்கி இது?” கண்டிப்போடு தான்.
“ஐயோப்பா! அது சின்னப்பிள்ள விளையாட்டாக் கதைக்கிறது, வேந்தன் ணா ஒண்ணும் நினைக்க மாட்டார். நான் சொல்லுறது சரிதானே வேந்தன் ணா?” ஆரூரன் வேந்தனை வம்புக்கிழுத்துச் சரிபண்ண முயன்றாலும் இலக்கியா அப்படிச் சொன்னதை யாருமே இரசிக்கவில்லை.
எதையாவது சொல்லித் தன்னை வம்பிழுக்கிறாள் என்றதையுணர்ந்த வேந்தன் முகத்தில் மலர்வுதான்.
“பகிடி சேட்டைக்கும் அளவிருக்கு இலக்கி.” சுகுணாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கவி, ஆரூரன் கூட அவனோடு பகிடியாகக் கதைத்தார்கள் தான். அது பகிடியென்றதே அவர்கள் உடல் மொழி! இவளோ, வேண்டாதவனோடு கதைக்கும் பாவனையில் வெடுக் வெடுக்கென்றல்லவா கதைக்கிறாள்!
“ஆன்ட்டி நான் உண்மையாவே ஒண்ணும் நினைக்கேல்ல விடுங்க. நாளைக்குக் காலம ஸ்பெஷல் சாப்பாட்டுக்கு ஓடர் குடுத்திரலாம்.” சொன்னவன் பார்வை நகைப்பில் சுருங்கிக்கிடந்த இலக்கியின் விழிகளோடு மோதி, “உனக்குச் செய்யிறன் இரு!” சீண்டிவிட்டே நகர்ந்தது.