மறுநாள், புத்தம் புது மலரெனப் புலர்ந்துகொண்டிருந்த பொழுதோடு போட்டி போட்டுக்கொண்டெழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள், இலக்கியாவும் அவள் குடும்பத்தினரும்.
“நான் முதல்…” குளியலறைக்குள் புகுந்து அடுத்த இருபதாவது நிமிடம், “அக்கா நீங்க போகலாம்.” கைபேசியில் கவனமாகவிருந்த கவியிடம் சொல்லிக்கொண்டே வெளியில் வந்தாள், இலக்கியா.
அறைக்குள்ளிருந்த காஃபி மேக்கரில் கப்பச்சினோ போட்டுவிட்டு, “உனக்குத்தான் இலக்கி, எடுத்துக் குடி!” என்ற சுகுணா, “கவி நீ போகேல்லையா? நான் போகவோ?” என்றதும், “இல்ல…இல்ல…இந்தாப் போறன் மா, டப்பென்று விட்டிருவன்.” எழுந்த கவி, “இதேதடி புதுசா? எப்ப வாங்கினனி? பே வடிவா இருக்கு!” விழிகள் விரியக் கேட்டாள்.
நெஞ்சில் கடும் நீலத்தில் Tommy என்றெழுதியிருக்க, இளம் றோஸ் வண்ணத்தில் டீ சேர்ட்டும் கடும் நீலத்தில் டைட்சும் அணிந்து, அதிகாலைப் பனியில் தோய்ந்த மலரென நின்ற இலக்கியா, வளர்ந்தபின் தமக்கான ஆடைகளைத் தாமே வாங்கிக் கொள்வதால், யாரிடமிருந்தும் இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்கவேயில்லை.
இலக்கியாவின் இதயம் தடதடத்தது. பதில் சொல்ல முடியாது ஒட்டிக்கொண்டது, நாக்கு. அறைக்குள்ளிருந்த அஜி, சுகுணா பார்வையும் அவள் மீதே!
இதை அணிந்துகொள்வதற்காக எடுக்கையிலேயே மனதுள் புதுவகையாக உணர்ந்திருந்தாளே! உறக்கக்கலக்கம் மறையா விழிகள் படபடத்து மயங்க, அப்படியே நெஞ்சோடு அணைத்தெடுத்தபடி குளியலறைக்குள் புகுந்தவள், அதை அணிந்துபார்த்திடும் அவசரத்தில் காலைக்கடன்களையும் விரைந்தே முடித்திருந்தாள்.
இதுநாள்வரை, புத்தம் புது உடையையே காணாதவள் போல் மீண்டும் மீண்டும் பார்த்து இரசித்துவிட்டு அணிந்துகொண்டவள், குளியலறையின் ஒருபக்கச் சுவரைத் தனதாக்கி நின்ற கண்ணாடியில் தன்னையே தான் வெகுவாகவே இரசித்து நின்றாள், வழமைக்கு மாறாக!
அவளே போட்டுப்பார்த்து வாங்கியது போல் அவ்வளவு அளவாக பொருந்தியிருந்தது டீ சேர்ட்டும் டைட்டசும்! முகத்தில் பளிச்சென்று செம்மையடித்தது. இதோடு வாங்கியிருந்த இன்னுமிரு சோடி ஆடைகளையும் போட்டுப் பார்த்திட பரபரத்தது, மனம். அதேகணம், தன்னிரு விழிகளோடு இணைந்து மிதமிஞ்சிய இரசனையில் சிக்கிய இன்னுமிரு விழிகளின் பார்வையை உணர்வது போலிருக்கவே மின்னலாகச் சிலிர்ப்போடியது.
“இலக்கி…உனக்குத் தட்டிட்டடி!” சிரிப்போடு சொன்னபடி நெற்றியில் தட்டிக்கொண்டு முகத்தில் ஒட்டிக்கொண்ட முறுவலோடு தான் வெளிவந்திருந்தாள்.
இப்போதோ…
“ஏய் இலக்கி, என்னடி ஏன் முழுசுற?” கவியின் குரல் பிடித்துலுக்கிற்று!
“இல்லக்கா…நான் வேற எதையோ யோசிச்சுக்கொண்டிருந்தன், என்ன கேட்டிங்க? இதுவா?” தன்னையே பார்க்கும் பாவனையில் சமாளித்துக்கொண்டவள், “கொட்டேஜ் போய்ட்டு வரேக்க மோலில வாங்கினது மறந்திட்டிங்களா?” தமக்கையிடமே கேள்வி கேட்டாள்.
யோசனையோடு பார்த்தாளவள். “ம்ம்… நினைவு இல்லயடி. இந்த டைட்சும் புதுசு என்ன? அங்கயா வாங்கினனி?”
“ஓமக்கா, எல்லாரும் நிறைய வாங்கினத்தில மறந்திட்டிங்க போல!”
“அதானே! எனக்கே என்ன வாங்கினன் எண்டு நினைவில்லை.” குறுக்கிட்டது அஜியின் குரல்.
“சரி சரி, இந்தக் கதைகள பிறகு கதைக்கலாம், நீ கெதியா வெளிக்கிட்டுட்டு பாத்ரூம விடு கவி, மற்றவையும் வெளிக்கிட வேணும். நேரத்துக்கே போவம் என்டெல்லா கதைச்சவே, போய் அலுவல முடி!” சுகுணா சொன்னதை காதில் வாங்கவில்லை, கவி.
“செல்லக்குட்டி! அப்ப இத நீ போட்டுட்டு இந்த ரெண்டையும் எனக்குத் தாவன்.” தனக்கென்று எடுத்து வைத்திருந்த ஆடையை இலக்கியின் முன்னால் நீட்டியபடி சொன்னாள்.
“அக்…கா!” எப்போதும் தமக்கை கேட்டதும் கொடுத்துவிடுபவள் நன்றாகவே தடுமாறிப்போனாள். கொடுக்க முடியுமா என்ன? நெஞ்சு மேலும் அதிகமாக அடித்துக்கொண்டது.
“பச்! அவள் வெளிக்கிட்டுட்டாள் எல்லா கவி? இனி மாறி மாறி நிண்டு நேரத்தக் கடத்தாம அடுத்த முறைக்கு வாங்கிப் போடன்!” சுகுணா.
“போங்கம்மா… தர மாட்டியாடி.” நிச்சயம் தருவாளென்ற நம்பிக்கை தொனிக்கக் கேட்டாள், கவி.
“இல்லக்கா …அப்படியில்ல… நேரம் போய்ட்டு எண்டு தான் நானும் யோசிச்சன்.”
“உடுப்பு மாத்திறத்துக்கு அப்பிடி என்னடி நேரமெடுக்கும்? மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு ரெண்டு நிமிசம். விடு, உனக்கு விருப்பம் இல்லையெண்டு சொல்.” விசுக்கென்று குளியலறைக்குள் நுழைய முயன்றாள், கவி.
எப்போதுமே தன் விருப்பறிந்தால் தந்துவிடும் தங்கையாச்சே! சிலவேளை, “சரிடி இலக்கி, உனக்கும் பிடிச்சிருக்குத்தானே நீயே வச்சிரு!’ என்றாலும், “அதெல்லாம் பரவாயில்ல.” என்று வற்புறுத்தித் தருபவள், இன்று இப்படிச் சொன்னதில் ஒரு மாதிரியாகிற்றுக் கவிக்கு.
தமக்கை முகம் சுருங்க நகர்ந்ததைப் பார்த்த இலக்கியாவால் அவ்வாடையை அணிந்திருக்கவே முடியவில்லை. அதுமட்டுமா? மிகப்பெரிய களவு செய்தவள் போல் குன்றிப் போனாள்.
“கவிக்கா…” ஓரெட்டில், சாத்தத் தொடங்கியிருந்த குளியலறைக் கதவைப் பிடித்து உள்ளே போனவள், “ஒரு நிமிசம் வெளில நில்லுங்க, மாத்திட்டுத் தாறன்.” அவளை வெளியில் இழுத்த வேகத்தில், தன் பைக்குள் மேலாக இருந்த உடையோடு உள்ளே புகுந்து கொண்டாள்.
கடகடவென்று ஆடையை மாற்றியவள் விழிகளால் கண்ணீர் உருண்டு தெறித்தது. சற்றுமுன், இரசித்துப் பார்த்த விழிகளின் சொந்தக்காரன் முகத்தில் எரிச்சலையும் கோபத்தையும் உணர முடிந்தது, அவளாள். தலையை குலுக்கிவிட்டு மீண்டும் முகத்தை கழுவி, பேப்பர் டவலால் அழுந்தத் துடைத்தபடியே வெளியில் வந்தாள்.
“ஆசையா போட்டுக்கொண்டு வந்தவளிட்ட இதெல்லாம் என்ன சின்னப்பிள்ளப் பழக்கம்?” கவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார், சுகுணா.
“அது எங்களுக்குள்ள, நீங்க வரவேணாம் மா!” கவி
“அய்யோம்மா, விடுங்க இதில என்ன இருக்கு?” தமக்கையிடம் உடுப்பைக் கொடுத்த இலக்கியா கப்பசினோவை எடுக்கும் சாட்டில் நகர்ந்துவிட்டாள்.
“தாங்க்ஸ் செல்லக்குட்டி!” கட்டிப்பிடித்துச் சொல்லிவிட்டு, குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் கவி.


