அதன்பின், கதை பேச்சுக்கு நேரமிருக்கவில்லை. புறப்பட்டுக் கீழே வர, “நான் வேந்தன் அண்ணாவின்ட அறையில வெளிக்கிடுறன்.” என்று வந்திருந்த ஆரூரன், “காலச் சாப்பாடு ரெடியா இருக்கு.” என்றபடி எதிர்கொண்டான்.
“இண்டைக்கு நாம பே பண்ண வேணும்.” நாதன் சொல்ல, “அதுதான்!” மாறன் ஆமோதிக்க, “ஓம், அவையள் என்னதான் சொன்னாலும் நீங்க குடுத்திருங்க நாதன்.” என்றார் சுகுணா.
சரிதான் என்று நகர்ந்தவர்களை காலை வணக்கத்தோடு எதிர்கொண்ட மதி, சாப்பாட்டறைக்குள் அழைத்துச் சென்றான்.
கடைசியாக, நுழைந்தாள் இலக்கியா. தயங்கிய கால்களை நகர்த்துவது பெரும் பிரயத்தனமாகவிருந்தது. அங்கே வேந்தன் இருப்பானே! போகாதிருக்க முடிந்தால் என்றும் இருந்தது. அதுவும், முதல் ஆளாகச் சென்ற கவி, அங்கமர்ந்திருந்த வேந்தனுக்கு முன்னாலா சென்றமர வேண்டும்?
“வாங்கோ வாங்கோ!” மலர்வோடு நிமிர்ந்தானவன். மறுநொடி, முகம் சுருங்க சரேலென்று பின்னால் திரும்பியிருந்தான். கணிசமானளவு கோபத்தைத் தாங்கி நின்ற பார்வை இலக்கியாவைத் தேடிப் பாய்ந்தது. இவை அனைத்துமே மிகவும் துல்லியமாக எல்லோருக்கும் புரியும் வண்ணமிருந்தது.
“இண்டைக்கும் இதெல்லாம் என்ன வேந்தன்?” அவன் தோளில் தட்டியபடியே அமர்ந்த நாதன் பார்வை, மேசையிலிருந்த உணவுகளில் இருக்கப் போக இந்த மாற்றங்களைக் கண்டுகொள்ளவில்லை.
கொடுப்புக்குள் நெரிந்த முறுவலோடு சேர்ந்துவந்த மதியின் பார்வையில் வேந்தனின் முகமாற்றம் தப்பாது பட்டது. ‘எல்லாருக்கும் முன்னால வச்சே இப்பிடிப் பாக்கிறானே!’ குழம்பிப் போனானவன். முதல்நாளிரவிலிருந்து அவன் இருந்த மகிழ்வறிந்தவனாச்சே! இப்போ என்னவாகிட்டாம்? யோசனையோடினாலும் சட்டென்று முன்னேறி அவன் தோளில் ஒரு தட்டுத் தட்டிச் சுதாகரிக்க வைத்துவிட்டான்.
இருந்தும் வேந்தனுள் கோபத்தீ கனன்றது. இயல்பாகவிருக்க முடியவேயில்லை. “இருந்து சாப்பிடுங்க, என்ன தேவையெண்டாலும் கேளுங்க, மதி பார்த்துக்கொள்!” என்றவன், “ஒரு முக்கியமான கோல் கதைக்க வேணும், கதைச்சிட்டு வாறன்.” விருட்டென்று வெளியேறுகையில் இலக்கியாவைப் பார்வையாலேயே எரித்துச் சென்றான்.
முதல் நாள் மாலை கடைகளுக்குச் சென்றிருந்தபோது, “நான் அப்பாக்கும் வாங்கிறன்.” முதல் ஆளாக ஆண்கள் பிரிவுக்குள் நுழைந்த இலக்கியா, தகப்பனுக்கு வாங்கிய போதே, கருநீலம் மற்றும் சாணிபச்சையில் இரண்டு டி ஷர்ட்டுகள் வேந்தனுக்கென வாங்கியிருந்தாள், மனதால் அவனுக்கு அணிவித்துப் பார்த்து மிகவும் நன்றாகவிருக்கும் என்ற எண்ணத்தில்.
இப்போது, அவள் வாங்கிப் பரிசளித்த கருநீல நிற டீ சர்ட்டுக்கு ஓஃப் வைட் சோர்ட்ஸ் போட்டுப் புறப்பட்டிருந்தானவன்.
அவளோ? இலக்கியாவின் கண்கள் கலங்கிவிட்டன. பின்னால் சென்று நடந்தைச் சொல்லிச் சமாதானம் செய்விக்க வேண்டும் போலிருந்தது. பரபரத்த உள்ளத்தை அடக்கிக்கொண்டு அங்கமரப் பெரும்பாடுபட்டாலும் அதைத்தான் செய்தாளவள்.
“நேற்று பிரேக் ஃபாஸ்ட் காணாது எண்டு சொன்னீங்களாம், இண்டைக்கு வடிவாச் சாப்பிடுங்க!” அவளையே பார்த்தபடி சொன்னான் மதி. இவள் பகிடிக்குச் சொன்னாளென்று தெரிந்துமே, தானே பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்துவிட்டு, ஆவலோடு அவர்களின் வருகைக்காக காத்திருந்தவன் ஏன் அப்படிச் சென்றானென்ற கேள்வி இவன் மனதுள்.
“அது சும்மா பகிடிக்கு!” என்ற நாதன் பார்வை இலக்கியாவை நோக்கி நகர்ந்தது. முகத்தின் கலக்கத்தை மறைக்க வேண்டுமே! கைபேசியைப் பார்ப்பது போல் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாளவள்.
“இப்பிடி ஃபோன நோண்டிக்கொண்டிருந்திட்டுப் பிறகு சாப்பிடெல்ல, காணாது எண்டு சாட்டு.” மாறன் சொல்ல, “அதுதான், கெதியா அலுவல முடியுங்க பிள்ளைகள்.” என்ற சுகுணா, “வேந்தன் சாப்பிட்டிட்டாரா?” வினவினார்.
“இன்னும் இல்ல ஆன்ட்டி. உங்களத்தான் பாத்துக்கொண்டிருந்தவன், இப்ப வருவான், நீங்க சாப்பிடுங்க.” என்றான் மதி.
இங்கு இப்படியிருக்க, நேரே தம் பகுதிக்குள் நுழைந்த வேந்தன் போட்டிருந்த டீசெர்ட்டை கழட்டிட உன்னிவிட்டு மனம் சம்மதியேன் என்று முறுக்கிக்கொள்ள, டப்பென்று அமர்ந்து கொண்டான்.
எவ்வளவு ஆசையாசையாகப் பார்த்துப் பார்த்து அதுவும் முதல் முதலாக ஒன்றை வாங்கினான். எப்படி அதை அவளிடம் சேர்ப்பிப்பதென்று குழம்பிக்கொண்டிருந்தவன், அவள் வருவாள் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை. வெளியில் வர வைத்துக் கொடுக்கவேண்டியதுதான் என்று நினைத்திருக்க, ஆரூரன், மாறன் சகிதமேயென்றாலும் வந்துவிட்டாளே! அவன் மனமறிந்தே வந்தது போலுணர்ந்தான் அவன்.
குளியலறையோடு இருக்கும் சிறுபகுதியில் தான் வோஷ் மெஷின் வைத்திருந்தார்கள். வந்த வேகத்தில் மாறன் குளியலறைக்குள் சென்றிருக்க, இவள், ஆடைகளை மெஷினுக்குள் போட்டுக் கொண்டிருந்தாள். அருகிலேயே இருக்கும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆரூரனுக்குக் கதை கொடுத்தபடியே வந்திருந்தவன் நொடியில் அவள் கரம் பற்றி அந்தப் பையை வைத்திருந்தான், “நாளைக்குப் போடும்!” என்றபடி. அவள் திடுக்கிட்டுப் போனாலும் சட்டென்று சுதாகரித்து இன்னொரு பையை அவன் கரத்தில் திணித்துவிட்டுப் பார்த்த பார்வையை, அதிலிருந்த நெருக்கம் கலந்த நேசத்தை அவனால் எப்போதுமே மறக்க முடியாது. வாய் திறந்து சொன்னால் தானா? தன்னுள்ளத்தில், இவன் மீதாக இருக்கும் நேசத்தை துல்லியமாக உணர்த்தினாளவள். இதுதானென்று இல்லை, இதுவும் அப்படியொரு தருணம்.


